July 14, 2010

எத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு தாமதமான,நீளமான பதிவு

மூன்று நாட்களுக்குப் பின்னர் மிகவும் தாமதமாக ஆனால் நீளமாக வரும் இப்பதிவு பார்த்தவர்களுக்கும் பார்க்காதவர்களுக்கும் சேர்த்தே..
நேரத்துடனும் என் அலுவலக,அன்றாட வேலைகளுடனும் போட்டி போட்டு வெல்வது இந்த நாட்களில் பெரும் சவாலாக உள்ளது.


உலகின் மிக அதிகமான பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்வொன்றை நானும் அதே நேரத்திலே பார்த்தேன் என்ற சாதனை/பெருமை கடந்த ஞாயிறன்று எனக்கும் கிடைத்தது.
உலகக் கிண்ண இறுதிப் போட்டி பார்த்ததை சொன்னேன்.


ஸ்பெய்ன் அணி வெல்லவேண்டும் என்று நினைத்திருந்தாலும் நெதர்லாந்து அணியும் ஒரு நல்ல அணியென்ற விருப்பம் எப்போதுமே எனக்கு அவர்கள் மேல் இருந்தது.
எனக்கு மிகப் பிடித்த ஆர்ஜன் ரொப்பேன் அந்த அணியில் விளையாடுவதும் ஒரு காரணம்.


ஆனால் ஸ்பெய்னுக்கு இந்தக் கிண்ணம் கிடைத்தே ஆகவேண்டும் என்பதற்கு என் மனம் சொன்ன காரணங்கள்....


நியாயமாக நேர்மையாக,முரட்டுத் தனத்தை அதிகம் பாவிக்காமல் வெற்றிகளை வியூகம் வகுத்துப் பெற்ற அணி.
ஒற்றுமையான அணி.

வெற்றியுடன் தாயகம் திரும்பும் வேலையில் உற்சாகத்துடன் விமானத்துக்குள்..


ஒரு கால்பந்தாட்ட அணியின் ஒவ்வொரு நிலைகளிலும் அந்தந்த நிலைகளில் உலகில் விளையாடும் மிகச் சிறந்த வீரர்களைக் கொண்டிருக்கும் அணி.
உலகின் கழக மட்ட அணிகளில் பெரிய கிராக்கி உள்ள வீரர்களான டோரஸ்,பாப்றேகாஸ் போன்ற வீரர்களே ஸ்பெய்ன் அணியின் பிரதான பதினொருவராக விளையாட முடியாமல் இருப்பதில் இருந்து ஸ்பெய்ன் அணியின் வலிமை தெரியும்.


வியா முன்வரிசை, சபியும் இனியெஸ்டாவும் சபி அலோன்சொவும் செர்ஜியோவும் இடை வரிசையில், உறுதியான பின் நிலை சுவராக புயோல்,பிக்கே,கேப்டேவில்லா என்று மூவர், போதாக்குறைக்கு உலகின் மிகச் சிறந்த கோல் காப்பாளர் கசியாஸ். இதைவிட உலகக் கிண்ணம் வெல்ல ஒரு அணிக்கு என்ன வேண்டும்?


ப்ளஸ் உலகின் மிகச் சிறந்த மிக அடக்கமான பயிற்றுவிப்பாளர்.. 


நான் விரும்பிய ஆர்ஜெண்டீன அணி,உலகமே எதிர்பார்த்த பிரேசில் அணி ஆகியவற்றை விட ஸ்பெய்னை என் ஆங்கிலப் பதிவில் எப்போதுமே நான் மேலாக மதித்துக் கருத்திட்டமைக்கான காரணம் ஏனைய எல்லா அணிகளையும் விட ஸ்பெய்ன் சமச்சீர்,சமநிலை பொருந்திய அணி என்பதனாலேயே.


இறுதிப் போட்டியில் எதிர்பார்த்த பதினொருவரே இரு அணிகளிலும் களம் இறங்கி இருந்தனர். 
ஸ்பெய்ன் அணியில் டோறேசுக்குப் பதிலாக அரை இறுதியில் களமிறங்கிய பெட்ரோவே விளையாடினார். ஆனால் அவருக்குப் பதிலாக வேகமாகவும்,லாவகமாகவும் விளையாடக் கூடிய பாப்றேகாசை இறக்கி இருக்கலாம் என்று நான் எண்ணியிருந்தேன்.
அவரும் ஒரு டேவிட் வியா பாணியிலான வீரர் தான்.
இரண்டு வியாக்களை சமாளிக்க முடியாமல் நெதர்லாந்து வீரர்கள் திணறி இருப்பார்கள்.
இரண்டாம் பாதி நேரத்தில் பாப்றேகாஸ் மிகத் தாமதமாக இறக்கப்பட்ட பின்னர் தான் கோள்கள் பெரும் வாய்ப்புக்கள் அதிகளவில் உருவாகின என்பதும், பாப்றேகாஸ் தான் இனியெஸ்டா அடித்த ஒற்றை வெற்றி கோலுக்கான ஒத்தாசையை வழங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கன. 


முன்னைய பதிவுகளில் நான் ஸ்பெய்ன் பற்றி சொன்னது போல எவ்வளவு தான் வேகமான ஆட்டம் ஆடும் அணியாக இருந்தாலும் அந்த அணியின் முன் கள வீரர்களுக்கு தடை,அணை போட்டு தடுத்தாடி அவர்களை முடக்கி தமது வேகத்துக்கு ஆட்டத்தைக் கொண்டு வரும் நுட்பமே ஸ்பெய்னுக்கு வெற்றியளித்து வந்துள்ளது.
தமக்குள்ளே பந்தை வைத்து மாற்றி எதிரணியைக் களைக்க செய்து தருணம் பார்த்து கோல் அடிக்கும் அந்த நுட்பத்தினாலேயே ஸ்பெய்ன் அநேகமாக ஒரு கோல் வித்தியாச வெற்றிகளைப் பெற்று வந்தது.


இந்த வியூகத்தையே நெதர்லாந்துக்கேதிராகவும் பயன்படுத்தியது. ஆவேசமாக எதிரணியைத் தடுமாற வைக்கும் வேகத்துடன் கோல்களை அடித்து வெற்றிகளைப் பெற்றுவந்த நெதர்லாந்து ஸ்பெய்னின் இந்த ஆட்டத்தில் கொஞ்சம் தடுமாறிப் போனது.
ஸ்பெய்ன் இதே வியூகத்துடன் மறுமுனையில் attackஐயும் ஆரம்பித்தவுடன் தான் நெதர்லாந்து மேலும் தடுமாறியது.


இதற்குப் பிறகு தான் தனது முரட்டுத் தனமான Foul ஆட்டத்தை ஆரம்பித்தது நெதர்லாந்து.


இதுவரை உலகக் கிண்ணத்தில் இப்படியொரு மோசமான முரட்டுத்தனம் பார்த்ததில்லை எனும் அளவுக்கு நெதர்லாந்து விளையாடியது.
முக்கியமாக வான் போம்மேல்.. இவர் தான் நெதர்லாந்தின் மிக மோசமான fouling and tackling வீரர்.
டி ஜொங், ஹைடிங்கா ஆகியோரும் பந்தை உதைப்பதை விட ஸ்பெயின் அணி வீரர்களின் கால்களை உதைப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.
டி ஜொங் மிக மோசமாக ஆலோன்சொவை நெஞ்சிலே கராத்தே பாணியில் உதைந்தார். ஆனால் மிகக் கடுமையாக சின்னத் தவறுகளுக்கும் கூட மஞ்சள் அட்டையை எடுத்துக் காட்டி மிரட்டிக் கொண்டிருந்த நடுவர் வெப்பர் இதையும் மஞ்சள் அட்டையோடு தப்ப விட்டார்.
ஆனால் ஸ்பெய்ன் அணியொன்றும் அப்படி புனிதமானவர்கள் அல்ல.. பொறுத்துப் பார்த்து நெதர்லாந்தின் foulகள் தாங்கமுடியாமல் தாங்களும் இழுத்து விழுத்தவும் அடித்து வீழ்த்தவும் ஆரம்பித்தனர்.


ஏட்டிக்குப் போட்டியாக நெதர்லாந்து ஒன்பது மஞ்சள் அட்டைகளையும் (இதில் ஒன்று பின்னர் சிவப்பு அட்டையாக மாறியிருந்தது) ஸ்பெய்ன் ஐந்தையும் பெற்றுக் கொண்டன.
நடுவர் வெப்பர் அவ்வளவு ஸ்ட்ரிக்டு.. 


இந்த இழுபறியாட்டதுக்கு நடுவிலும் சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் சொல்லும் Beautiful Gameஐயும் காணக்கூடியதாக இருந்தது..
ஸ்பெய்ன் பக்கம், 
வியாவின் கோல் பெறும் தொடர் முயற்சிகள்..
இனியெஸ்டாவின் அற்புதமான விளையாட்டுக்கள்
பின் களத்தடுப்பு + கசியாசின் தடுப்பு சாகசங்கள் 


மறுபக்கம் நெதர்லாந்தின்,


ரோப்பேன் மட்டுமே முக்கியமாகத் தெரிந்தார். என்ன ஒரு அற்புத விளையாட்டு. முன்னைய பிரேசிலின் ரொமாரியோ,ரொனால்டோவின் சாகசங்களை ஞாபகப்படுத்தினார்.
மயிரிழையில் இரு கோல் பெறும் வாய்ப்புக்கள் கசியாசின் சாகசங்களால் தடுக்கப்பட்டன.


இவற்றுள் ஒன்று நிச்சயமாக புயோல் ரோப்பெனைப் பிடித்து இழுத்தமைகாக ப்ரீ கிக் வழங்கப்பட்டிருக்க வேண்டியது. புயோலுக்கு எதுவித அட்டையும் வழங்கப்படவில்லை.
இதற்காக ரொப்பேன் போட்டி முடிந்த பின்னரும் நடுவருடன் வாக்குவாதப்பட்டுக் கொண்டே இருந்தார்.
விரக்தியுடனும் களைப்புடனும் என் ஹீரோ ரொப்பேன்.. 


நெதர்லாந்துக்கு ஒரு corner kickஉம் வழங்கப்பட்டிருக்கவில்லை.


அடுத்து நெதர்லாந்தின் அணித் தலைவர் வான் ப்ரோன்கொர்ச்ட்.உயிரைக் கொடுத்து விளையாடி இருந்தார்.
அவர் பிரதியிடப்படும் வரை தன்னைத் தாண்டி ஸ்பெய்ன் வீரர்கள் செல்ல விடவேயில்லை.
தலைவருடன் நெதர்லாந்து வீரர்கள்.. எத்தனை போராடியும் இரண்டாமிடம் தானா?


எனினும் தங்கப் பாதணிக்காகப் போட்டியில் ஈடுபட்ட ஸ்னைடர்,வியா இருவரும் தம் வழமையான ஆட்டத் திறன்களை வெளிப்படுத்தியிருக்கவில்லை. அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்திய அழுத்தமோ?


வழமையான 90 நிமிடங்கள் முடிந்து கோல்கள் ஏதுமில்லாமல், மேலதிக நேரம் போனபோது உண்மையாக இதயங்கள் எகிறியிருந்தன அனைவருக்குமே.
அதற்குள் வியா வெளியே எடுக்கப்பட்டது என்னவோ போலிருந்தது.
அனால் உள் வந்த பாப்றேகாஸ் போட்டிக்கு தனி வேகத்தைக் கொடுத்தார்.
ஏழு நிமிடங்கள் இருக்கையில் பாப்றேகாஸ் தட்டிய பந்தை அன்றைய ஹீரோ இனியெஸ்டா அபாரமாக கோலாக மாற்றினார்.


அதற்குப் பிறகு நெதர்லாந்தின் சவால்களை ஸ்பெய்ன் முறியடித்தது தனி அழகு.
நெதர்லாந்து இறுதிவரை போராடியது.. பாவம் மிக மனமுடைந்து போயினர்.
மூன்றாவது இறுதித் தோல்வி.


ஸ்பெய்ன் உற்சாகத்தில் மிதந்திருந்தது.நீண்ட கால கால்பந்துக் கிண்ணங்களின் வறட்சியைப் போக்கியது 2008 ஐரோப்பியக் கிண்ணம்.இப்போது எல்லாவற்றிலும் உயர்வான உலகக் கிண்ணம்.


பொருத்தமான ஒரு சம்பியனிடம் போய்ச் சேர்ந்துள்ளது உலகக் கிண்ணம்.
விறு விறுப்பான இறுதிப் போட்டியாக இருந்தாலும் இன்னும் சிறப்பான,நேர்த்தியான ஆட்டமாக இருந்திருக்கலாம்.


முதல் தடவையாக ஒரு ஐரோப்பிய அணி வெளிக் கண்டமொன்றில் உலகக் கிண்ணம் வென்றது இம்முறையே.


ஸ்பெய்ன் உலகக் கிண்ணம் வென்ற எட்டாவது நாடாகியுள்ளது.


ஐரோப்பிய சாம்பியனாக இருந்து கொண்டே உலக சாம்பியனாக மாறியதும் ஒரு பெருமையே.


இவ்வளவுக்கும் மிக அடக்கமாகவும் நிதானமாகவும் ஸ்பானியப் பயிற்றுவிப்பாளரும் இளம் வீரர்களும் கூட.
விசென்ட் டெல் பொஸ்கே - இது எமது இளம் வீரர்களின் கடும் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. இன்று அழகான ஆட்டம் ஆடிய நேர்த்தியான அணிக்குக் கிடைத்த வெற்றி (நெதர்லாந்தின் முரட்டுத் தான அணுகுமுறையை தம் வீரர்கள் சமாளித்ததை மறைமுகமாக சொன்னார்)


அணித்தலைவர் கசியாஸ் - என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறோம். சிறு வயதிலிருந்து நம் அனைவரும் கண்டுவந்த கனவு நனவாகியிருக்கிறது.


நீண்ட காலமாக துரதிர்ஷ்டமான அணியாகக் கருதப்பட்டு கழிவிரக்கத்தோடு பார்க்கப்பட்ட அணி இப்போது உலகின் முதற் தர அணியாக(தரப்படுத்தலில் முதலிடம்).. உலக சாம்பியனாக..


மறுபக்கம் நெதர்லாந்து வீரர்கள் எவ்வளவு தான் முரட்டுத் தனமாக மைதானத்திலே நடந்துகொண்டாலும் போட்டியில் தோற்ற பிறகும் அத்தனை விரக்தியிலும் நாகரிகமாக விளையாட்டுக்கே உரிய உன்னதத்துடன் வெற்றியீட்டிய ஸ்பானிய வீரர்களுக்கு கை லாகு கொடுத்தும்,கட்டியணைத்தும் கரகோஷம் செய்தும் பாராட்டி இருந்தனர். 


நெதர்லாந்து பயிற்றுவிப்பாளர் பற்றி ஏற்கெனவே உலகக் கிண்ண இறுதி முன்னோட்டப் பதிவில் சிலாகித்திருந்தேன். அந்த அடக்கமான மனிதர் வான் மர்விஜ்க் தனது நேர்மையைப் போட்டி முடிந்த பின்னர் மன வருத்ததோடு வெளிப்படுத்தினார் - இன்று நெதர்லாந்து விளையாடியவிதம் நிச்சயம் எமது வழக்கமான விளையாட்டு அல்ல. இறுதிப் போட்டி தந்த அழுத்தம் வீரர்களை அதிகம் ஆவேசம் கொள்ளச் செய்து விட்டது.நேர்த்தியாக,விதிகளுக்கமைய விளையாடிய அணிக்கு வெற்றி கிடைத்து விட்டது.


ஸ்பெய்னுக்கு வாழ்த்துக்கள்.


ஆனாலும் இன்னொரு விடயத்தையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
வெப்பர் வழங்கிய 14 மஞ்சள் அட்டைகள் - இவை உலகக் கிண்ண இருதியோன்றில் வழங்கப்பட்ட சாதனை எண்ணிக்கை- ஸ்பெய்னின் ரசிகர்களை சமாதனப்படுத்த என்று வான் மர்விஜ்க் கொஞ்சம் கோபத்தோடு குறிப்பிட்டிருந்தார்.


இதற்கான காரணம் ஸ்பெய்னின் முதல் போட்டியில் அது ச்விட்சர்லாந்திடம் தோற்ற நேரம் வெப்பர் தான் நடுவர். சில பல தீர்ப்புக்களை ஸ்பெய்னுக்கு எதிராக வழங்கி சர்ச்சைகளைத் தொற்றுவித்திருந்தார்.அதற்கு இந்த இறுதிப் போட்டியில் பிராயச்சித்தம் தேடிக் கொண்டார் என்ற பொருள்படவே நெதர்லாந்துப் பயிற்றுவிப்பாளர் சாடி இருந்தார்.


அனால் வெப்பரும் எவ்வளவு அழுத்தங்களைத் தான் தாங்கமுடியும்? 


ஸ்பெய்ன் அணி நேற்று நாடு திரும்பிய வேளையில் கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டது.
முதலில் விமானங்களின் மரியாதை வரவேற்பு,பின்னர் அரண்மனையில் அரச குடும்ப மரியாதை, அதன் பின் பிரதமரின் கௌரவிப்பு.. பின்னர் மக்கள் மத்தியில் கோலாகலம்..
எத்தனை காலக் கனவு?


ஆனால் இதே அளவு மரியாதையும் கௌரவமும் இறுதியில் போராடித் தோற்ற நெதர்லாந்து அணிக்கும் அந்த நாட்டில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் நம் ஆசிய நாடுகளில் கிரிக்கெட் போட்டிகளில் எம் அணிகள் தோற்கும்போது நாம் வழங்கும் மரியாதைகள் குறித்தான பார்வை மீது எம்மை யோசிக்க வைக்கிறதா?


பதிவு ரொம்பவே நீண்டு விட்டது..
ஆனாலும் இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கே.. ;)
பிறகு பார்க்கலாம் என்று மனசு சொன்னாலும் நேரம் உதைக்கும்.


ஒரு முக்கிய விஷயம்.. நேற்று மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகள் ஜெர்மனியில் ஆரம்பமாகியுள்ளன..

8 comments:

எட்வின் said...

திறமையான, ஆர்ப்பாட்டமில்லாத, அற்புதமாக ஆடும் ஒரு அணிக்கு உலகக்கிண்ணம் கிடைத்திருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

பிரேசில் நெதர்லாந்திடம் காட்டிய ஆக்ரோஷ ஆட்டத்தை இறுதிப்போட்டியில் நெதர்லாந்து ஸ்பெயினிடம் காண்பித்தது. தோல்வியும் அடைந்தது.

Unknown said...

உலக கிண்ண கோப்பை பற்றிய முழு விடயங்களையும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தவிடயங்களையும் பதிவு இட்டமைக்கு நன்றிகள்.

நன்றி அண்ணா
பிரேமகுமார்

கன்கொன் || Kangon said...

அவ்வ்வ்வ்....
ஸ்பெயினுக்கு வாழ்த்துக்கள். :))

முழுக்க வாசிச்சன், கிட்டத்தட்ட சிதம்பர சக்கரம், பேய் கதை தான். :P
ஹி ஹி... ;)

பதிவுக்கு நன்றி அண்ணா... :)

Mohamed Faaique said...

திறமையான, ஆர்ப்பாட்டமில்லாத, அற்புதமாக ஆடும் ஒரு அணிக்கு உலகக்கிண்ணம் கிடைத்திருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

பிரேசில் நெதர்லாந்திடம் காட்டிய ஆக்ரோஷ ஆட்டத்தை இறுதிப்போட்டியில் நெதர்லாந்து ஸ்பெயினிடம் காண்பித்தது. தோல்வியும் அடைந்தது.

Sukumar said...

போட்டிகளை பார்க்காவிட்டாலும் தங்களின் கால்பந்து பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்தது, இந்த போட்டித் தொடர் முழுவதையும் தமிழில் சப்டைட்டில் போட்டு பார்த்தது போலிருந்தது. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி....

KUMS said...

"நியாயமாக நேர்மையாக,முரட்டுத் தனத்தை அதிகம் பாவிக்காமல் வெற்றிகளை வியூகம் வகுத்துப் பெற்ற அணி.
ஒற்றுமையான அணி."
உண்மையான கருத்து. ஏனைய அணி வீரர்கள், குறிப்பாக இங்கிலாந்து வீரர்கள் இவர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். கழக போட்டிகளில் ஆடும் போது எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் நாட்டுக்காக ஆடும் போது ஒற்றுமையாக விளையாடி வெற்றி பெற்ற ஸ்பெயின் அணிக்கு வாழ்த்துக்கள்.
இவர்களைப்பார்த்தாவது Gerrard, Terry, Dhoni, Shehwag போன்றவர்கள் திருந்தட்டும்.

anuthinan said...

உண்மையான அணியின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்!!!!!

அண்ணா பதிவு ரொம்ப நீளமாக நன்றாக இருக்கிறது!!!!

அஜுவத் said...

anna casillas commentrator girl ku adicha ichhhh..... cha(kiss) paartheenga thaane.........

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner