இந்தப் பதிவும் விளையாட்டுப் பற்றியதே..
சுருக்க சுருக் என்று சில,பல கிரிக்கெட் விஷயங்கள்..
(நீளமா இல்லாததால் நிம்மதியா நின்று வாசிச்சிட்டுப் போங்கோ..)
கிரிக்கெட் (நீண்ட நாட்களுக்குப் பிறகு) கொஞ்சம் அலுத்து இருந்தது.. கால்பந்தாட்டத்தின் மீது மீண்டும் ஒரு காதல்.
ஆனாலும் உலகக் கிண்ணப் பரபரப்புக்கள் ஓய மீண்டும் முதல் காதல் எட்டிப் பார்க்கிறது :)
இந்தியா vs இலங்கை
இந்தியா இலங்கை வந்த நாளில் இருந்து,ஏதோ இழுபறிப்பட்டு சிக்கல் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
பேசாமல் சீமான் சொன்னது போல வராமலே இருந்திருக்கலாம்னு நேற்று என்னுடைய இந்திய அணியின் ரசிக நண்பர் ஒருத்தர் சொன்னார்.
வர முதலே சகீர் கான் காயப்பட்டுக் கொண்டார்.
வந்திறங்கியவுடன் ஸ்ரீசாந்த் காயம்பட்டு வந்த வேகத்திலேயே திரும்பினார்.
அவரது 'நெருங்கிய' நண்பர் ஹர்பஜன் காய்ச்சலில் படுத்துவிட்டார்.
(முரளி வேற குருவி தலையில் பனங்காய் மாதிரி தன் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புடையவர் இவர் தான் என்று சொல்லிட்டார்.. குளிர் காய்ச்சலோ தெரியல)
இந்திய அணிக்கும் ஏதோ ஒரு காய்ச்சல்..
மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் இன்று மூன்றாவது நாள்.
போட்டி சமநிலையில் முடிந்தாலும் இளைய இலங்கை வீரர்களிடம் இந்தியா வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது.
பந்துவீச்சு படுமோசம். துடுப்பாட்டம் பரவாயில்லை.
இது சும்மா ஜுஜுப்பிப் போட்டி தானே?
டெஸ்ட் போட்டியில் பிளந்து கட்டுறோம் பாருங்கள் என்று தோனி + குழுவினர் சொல்லலாம்..
ஆனால் மிதுன்,ஓஜா போன்ற இளையவர்களுக்கு மன அளவில் ஏற்படும் தாக்கம்??
அதுவும் சும்மா அடியில்லை. முதல் இனின்ங்க்சில் மூன்று சதங்கள் + இரண்டாம் இன்னிங்க்சில் மேலும் ஒரு சதம்.
அந்த இன்னிங்சில் துடுப்பெடுத்தாடக் கிடைக்காத இளைய வீரர்களுக்கு இரண்டாம் இன்னிங்க்சில் வாய்ப்பு.அவர்களும் அடித்து நொறுக்குகிறார்கள்.
அதிலும் முக்கியமாக ஓட்டங்கள் பெறப்படும் வேகம்??
இது தான் உலக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாவது நிலை அணியா?
காலி டெஸ்ட் போட்டியில் பதில் தருவீங்களா சாமிகளா?
ஆனால் ஒரு சின்ன டவுட்..
ஆசியக் கிண்ணப் போட்டியிலும் இப்படித்தான் இறுதிப் போட்டிக்கு முன்னதான போட்டியில் மஹ்ரூபை Hat trick ஹீரோவாக்கி இறுதி அணியில் தெரிவு செய்ய வைத்து வாங்கு வாங்கு என்று வாங்கி இந்தியா கிண்ணத்தையும் தனதாக்கியது.
நேற்று மெண்டிசுக்கு ஆறு விக்கெட்டுக்களைக் கொடுத்திருக்கு..
இதுவரை அவர் டெஸ்ட் குழுவில் இல்லை.
டெஸ்ட் போட்டிகளில் முரளி ஓய்வு பெற்ற பிறகு மெண்டிசை அணிக்குள் எடுத்து கச்சேரி நடத்தும் சூழ்ச்சித் திட்டம் ஏதாவதோ?
இந்தியா குறிப்பாக இந்தியப் பந்துவீச்சாளர்கள் இன்னும் அதிகமாக தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவேண்டும் இன்னும் மூன்று நாட்களுக்குள்.
துடுப்பாட்ட வீரர்கள் சமாளித்துக் கொள்வார்கள்.
ஆனால் இஷாந்த்,ஹர்பஜனை மட்டுமே நம்பியுள்ள பந்துவீச்சு வரிசை?(ஹர்பஜனின் காய்ச்சல் சுகமாகுமா அதற்குள்?)
சதம் அடித்த நான்கு இலங்கையின் நான்கு வீரர்களில் சமரவீர நிச்சயம் டெஸ்ட் அணியில்.. மற்றைய மூவரில் யார் யாருக்கு வாய்ப்பு?
தரங்க?கண்டம்பி? இத் தொடரில் கிடைக்கலாம்.
திரிமன்னே காத்திருக்க வேண்டும்.
திரிமன்னே - கொஞ்சக் காலம் காத்திரு மகனே
இந்தியப் பக்கம் கம்பீரின் கம்பீரம் தொடர்கிறது.
யுவராஜ் சிங் வழமை போல் தன் திறமையை சதத்துடன் காட்டி இருக்கிறார்.
தேவ் வட்மோர் யுவ்ராசுக்குப் பதிலாக புஜாராவை எடுத்திருக்க வேண்டும் என்று பெட்டி கொடுத்த நேரத்திலேயே மனிதர் இங்கே பிளந்து கட்டியுள்ளார்.
சிங்கம் மீண்டும் சிலிர்க்கப் போகிறதா?
அதிலும் முக்கியம் யுவராஜ் மெண்டிசுக்கு ஆட்டமிழக்கவில்லை.
இந்தத் தொடரில் இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகள் அல்லது அதற்கு மேல் தோற்காத வரை அதன் முதலாம் இடத்துக்கு ஆபத்தில்லை.
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
வேகபந்து-துடுப்பாட்டம் இரண்டுக்குமிடையிலான போட்டியாகவே இந்தத் தொடர் ஆரம்பித்துள்ளது.
நிச்சயமாக முடிவுகளைத் தருகிற லண்டன் லோர்ட்ஸ் மைதானம்.
இரு அணிகளிலும் ஆக்ரோஷமாகப் பந்து வீசும் தலா மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள்..
அதிரடியான அப்ரிடி ஒரு பக்கம்.. அனுபவசாலியான பொன்டிங் மறுபக்கம்.
விட்டுக் கொடுக்காமல் விறு விறுப்பாக விளையாடுவார்கள் என்று பார்த்தால் பாகிஸ்தான் கவித்திட்டாங்க.
அவர்களது முதலாவது இன்னிங்க்ஸ் துடுப்பாட்ட சொதப்பலால் ஆஸ்திரேலியாவின் கை மிக வலியதாக ஓங்கிவிட்டது.
இன்று மூன்றாவது நாள்.
இப்போதே முந்நூறை நெருங்கிவிட்டது பாகிஸ்தானின் இலக்கு..
ஆஸ்திரேலியாவின் மும்முனை வேகபந்துவீச்சுக்கு முன்னால் அனுபவம் குறைந்த+அக்கறையற்ற 'டெஸ்ட்' துடுப்பாட்ட வீரர்(?) அப்ரிடி கொண்ட பாகிஸ்தானுக்கு இது இமாலய இலக்கு.
பங்களாதேஷ்??
தமது ஆசிய கிரிக்கெட் அண்ணன்கள் வழியில் வளர்ந்து வரும் தம்பி..
ஒரு போட்டி உற்சாகம்???
ஒரு போட்டியில் இவர்கள் விளையாடுவதைப் பார்த்தால் எதிர்கால உலக சாம்பியன்கள் இவர்கள் தான் என்று நினைக்கத் தோன்றும்.
அடுத்த போட்டியிலேயே நாங்கள் நினைத்ததெல்லாம் தப்போ தப்பு என்று எங்களையே எங்கள் செருப்பால் அடித்துக் கொள்ள வைப்பார்கள்.
இலங்கையிலே நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியில் படு சொதப்பலாக விளையாடி வெளியேறியவர்கள்,இங்கிலாந்திலே இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொண்டு சாதனை படைத்தார்கள்.
(உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளுள் இந்த வெற்றி பெரிதாகப் பேசப்படவில்லை)
அடுத்த போட்டியிலேயே 140க்கும் மேற்பட்ட ஓட்டங்களால் தோல்வி.
இன்று மீண்டும் அயர்லாந்திடம் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
அயர்லாந்துக்கு விரைவில் டெஸ்ட் அந்தஸ்து கொடுத்தே ஆகவேண்டும்.
மிக விரைவாகப் பலமான அத்திவாரம் கொண்ட அணியாக முன்னேறி வருகிறது.
அண்மையில் நெதர்லாந்தில் நடைபெற்ற ஆறு நாடுகளுக்கிடையிலான ICC World Cricket League Division Oneதொடரை இலகுவாக வென்றெடுத்தது.
அதுவும் முக்கியமான நான்கு வீரர்கள் இல்லாமல்.
அந்த நான்கு பேரும் இங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அயர்லாந்து வீரர்கள் தொழில்முறையில் விளையாடி அதன்மூலம் தேசிய அணிக்கு விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டுமானால் கென்யா போன்ற ஒன்றுக்கும் உதவாத ஊழல் இப்போதே ஆரம்பித்துள்ள அணிகளை ஊக்குவிப்பதை விட ஆர்வமும்,உத்வேகமும் கொண்ட அயர்லாந்து,ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளை ஆதரவு கொடுத்து உயர்த்த வேண்டும்.
Billion Rupees Man தோனி
மனைவி வந்த ராசியோ என்னமோ தோனி இந்தியாவின் மிக அதிக பணம் வாங்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் அதிக விளம்பரத்தொகை பெற்ற சர்வதேசக் கிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்கும் ஆளாகிவிட்டார்.வாழ்த்துக்கள்.
சச்சின் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய சாதனைத் தொகையான 1.8 பில்லியன் இந்திய ரூபாய்களை (3 ஆண்டுகளுக்கு)தோனி மேவி இரண்டு ஆண்டுகளில் 2.1 பில்லியன் ரூபாய்களுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
பனப்பாக்கம் சரி.. மனைவி வந்த ராசி போட்டிகளின் பக்கம் எப்படியென்று பார்ப்போம்..
அதுசரி இந்தப் பணத்தையெல்லாம் வைத்து என்னதான் செய்வாங்களோ?
-------------------------
இன்று மதராசபட்டினம் பார்ப்பதாக உள்ளேன்.
பின்னர் நேரமிருந்தால் அது பற்றியும் பார்க்கலாம்..
சொல்ல மறந்திட்டேனே..
இன்னொரு மசாலாப் பதிவும் மனசுக்குள் இருக்கு..