இறுதிப் போட்டிக்குப் போக முடியவில்லையே. இதை வென்றாலென்ன தோற்றாலென்ன என ரசிகர்களும் ஏன் வீரரர்களுமே கொஞ்சம் சலிப்பாகவே இந்தப் போட்டியை நோக்கலாம்.
ஆனாலும் இறுதிப் போட்டியில் விளையாடாத கவலையையும் உலகக் கிண்ணம் வெல்ல முடியாத கவலையையும் போக்கிக்கொள்ளும் ஆறுதல் பரிசாக இன்றைய வெற்றி அமையும்.
ஜெர்மனி வீரர்கள் ஸ்பெய்னிடம் கண்ட அரையிறுதித் தோல்வியினால் மிகத் துவண்டு போயிருப்பது ஒரு பக்கம் என்றால் அந்த அணியின் முக்கிய மூவருக்கும் இன்னும் ஒரு சிலருக்கும் தொற்றியுள்ள வைரஸ் காய்ச்சல் இன்று அவர்களை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.
பயிற்றுவிப்பாளர் ஜோக்கிம் லோவே, தலைவர் பிலிப் லாம், முக்கிய வீரர் லூகாஸ் பொடோல்ஸ்கி ஆகிய மூவரும் இன்று அரங்கத்துக்கே வரமுடியுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறதாம்.
ஏற்கெனவே சில முக்கிய வீரர்களுக்கு இன்று ஒய்வு கொடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க ஜெர்மனி முடிவு செய்திருந்ததாம்.
இப்போது அது தானாக நடக்கவே போகிறது..
ஆனால் மேலும் ஒரு தலைவலி..
ரொனால்டோவின்(பிரேசில் வீரர்) உலகக்கிண்ண சாதனையை(15 கோல்கள்) முறியடிக்க இரு கோல்கள் தேவைப்படும் மிரோஸ்லாவ் க்லோசேயும் இன்று விளையாடுவது சந்தேகமாம்.
காயம் ஒன்றால் அவதிப்படுகிறார் க்லோசே. 32 வயதாகும் க்லோசே அடுத்த உலகக் கிண்ணத்தில் விளையாடுவது சந்தேகமே என்பதால் இம்முறை எப்பாடுபட்டாவது விளையாடுவது,சாதனைக்கு முயல்வது என்ற முனைப்பில் உள்ளார் க்லோசே.
ஜேர்மனிய அணியின் கோல் குவிப்பில் க்லோசே போலவே முக்கிய இடம் வகித்த தாமஸ் முல்லேர் இன்று தடை முடிந்து அணிக்குள் வருகிறார் என்பது ஜெர்மனிக்கு தெம்பு தரக்கூடும்.
ஒவ்வொரு உலகக்கிண்ணத்திலும் FIFAவினால் வழங்கப்படும் மிகச் சிறந்த இளம் வீரர் விருதை இம்முறை வெல்லக் கூடிய வாய்ப்பு முல்லேருக்கு உள்ளது.
முழுமையான விபரங்கள்..
Sneijder and Villa vying for Golden Ball
Favourite For The Golden Ball
அடுத்த சுவாரஸ்யம் கடந்த உலகக் கிண்ணம் (2006) ஜெர்மனியில் நடைபெற்றவேளையிலும் ஜெர்மனி மூன்றாமிடத்தையே பெற்றது.
அந்தப் போட்டியில் போர்த்துக்கலை ஜெர்மனி வென்றிருந்தது.
உலகக்கிண்ணம் கிடைக்காவிட்டால் மூன்றாமிடம் வெல்வதும் பெருமைக்குரியது என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ஜெர்மனியின் தலைவர் லாம்.
ஜெர்மனி இதற்கு முன்னும் மூன்று தடவைகள் (1934,1970,2006) மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
மறுபக்கம் போர்லன் என்ற தலைசிறந்த வீரர் தனதும் தன் அணியினதும் தனித்துவத்தைக் கட்ட இன்றைய மூன்றாமிடத்துக்கான போட்டியை ஒரு காலமாகப் பயன்படுத்துவதில் முனைப்பாக உள்ளார்.
கையால் கானாவை வீட்டுக்கனுப்பியதால் உருகுவேயினால் வீரராக போற்றப்படும் சுவாரெஸ் மீண்டும் அணிக்குள் வருவதும் ஒரு பலம்.
இதையெல்லாம் விட தென் அமேரிக்கா என்ற கால்பந்துக் களஞ்சியத்தின் எஞ்சிய ஒரே அணியான உருகுவே அந்த உத்வேகத்துடன் மூன்றாம் இடத்தைப் பெற முனையும்.
இதுவரை எந்தவொரு மூன்றாமிடப் போட்டியும் சமநிலையில் முடிவுற்று Penaltyக்கு சென்றதில்லை.
இதில் ஒரு சுவாரசியம் இறுதியாக உருகுவே அரையிறுதிக்கு வந்த ஆண்டு 1970.அந்த உலகக்கிண்ணத்தில் மூன்றாமிடத்தை ஜெர்மனி பெற்றபோது உருகுவே தான் தோற்றுப் போனது.
அந்தத் தோல்வியின் பின்னர் தொடர்ந்து ஐரோப்பிய அணிகளிடம் 14 தடவைகள் உலகக் கிண்ணப் போட்டிகளில் உருகுவே வெல்ல முடியாமல் தவிக்கிறது.
இன்று முடியுமா?
தலைவர் லாம், காயமுற்றதால் இம்முறை உலகக் கிண்ணத்தைத் தவறவிட்ட தலைவர் பலாக், பயிற்றுவிப்பாளர் லோவே..
இளைய அணியாக, சாதிக்கப் புறப்பட்ட அணியாக உலகக் கிண்ணத்துக்குள் வந்து அதிக கோல்களை இம்முறை குவித்த ஜெர்மனிக்கு இந்த மூன்றாமிடம் பரிசாகக் கிடைக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்.
-----------------
இன்னும் சில முக்கிய/சுவாரஸ்ய விஷயங்கள்...
டேர்பன் விமான நிலையத்தில் ஏற்பட்ட குளறுபடியினால் பல ஸ்பானிய,ஜெர்மானிய ரசிகர்களால் கடந்த புதன்கிழமை நடந்த அரை இறுதியைப் பார்க்க முடியாமல் போனது.
அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என FIFA அறிவித்துள்ளது.
இந்த அரை இறுதிப் போட்டி ஆரம்பமாக ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் மைதானத்துக்குள் வுவுசெலா வாத்தியத்துடன் ஓடிப் பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர் கைது செய்யப்பட்டார்.
விசாரித்தால் இவர் இத்தாலிய ரசிகராம்.
இரும்படிக்கிற இடத்தில் ஈக்கென்ன வேலை?
ஒருவேளை இத்தாலிய தோல்வியால் ரொம்பவே குழம்பிட்டாரோ?
மற்றுமொரு புதிய சர்ச்சை..
நைஜீரியா விளையாடிய போட்டிகளில் பணமும்,விட்டுக் கொடுத்தாலும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தை சேர்ந்த நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதை ஆரம்பத்தில் மறுத்தாலும், சம்பந்தப்பட்ட அந்தப் போட்டிகள் பற்றிய விசாரணைகளை இப்போது ஆரம்பிக்கவுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற கழக மட்ட, சர்வதேசப் போட்டிகளில் தில்லு முல்லு செய்து, வீரர்கள்,நடுவர்களுக்குப் பணம் கொடுத்துப் போட்டி முடிவுகளை மாற்றி மில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்தமைக்காகக் கைது செய்யப்பட்டு வந்த க்ரோஷிய நாட்டின் ஊழல் பேர்வழி இம்முறை தென் ஆபிரிக்காவில் சர்வசாதாரணமாக பிரபல வீரர்களோடு பழகியதியும் (மெஸ்ஸி போன்ற நட்சத்திரங்களுடனும்) பேசியது,புகைப்படம் எடுத்துக் கொண்டதையும் ஆதாரம் காட்டுகிறார் அந்த நிபுணர்.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் நடுவராக இங்கிலாந்தை சேர்ந்த ஹோவார்ட் வெப்பர் கடமையாற்றவுள்ளார்.
இங்கிலாந்தின் கழகமட்டத்திலான போட்டிகளில் மொட்டைத் தலையுடனும் இறுகிய முகத்துடனும் அங்கும் இங்கும் மைதானத்தில் ஓடுமிவர் வீரர்களின் பெரு மதிப்பைப் பெற்றவர்.
இந்த உலகக் கிண்ணத்தில் இவர் நடுவராக இருந்த மூன்று போட்டிகளில் எந்தவொரு சிவப்பு அட்டையையோ Penalty உதையையோ இவர் வழங்கவில்லை என்பது விசேடம்.
இறுதிப் போட்டிக்காக சேர்த்து வச்சிருக்காரோ தெரியல.
இதே வேளையில் வீரர்கள்,பயிற்றுவிப்பாளர்கள்,விமர்சகர்கள் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட கணிப்பொன்றின் மூலம் இம்முறை வழங்கப்பட்ட நடுவரின் தீர்ப்புக்களில் 96 வீதமானவை சரியானவை எனத் தெரியவந்துள்ளதாக FIFA தெரிவிக்கிறது.
அப்படி தவறாகிப் போன 4 வீத மோசமான தீர்ப்புக்கள் இம்முறை பல அணிகளின் தலைவிதிகளையே மாற்றியுள்ளன.
அவை பற்றி அறிய...
Controversial Refereeing Decisions in World Cup 2010
ஜெர்மனியின் போல் என்ற ஒக்டோபசுக்குப் போட்டியாக சிங்கப்பூரின் மணி கிளி புறப்பட்டது.. இப்போது நெதர்லாந்தில் போலின் என்ற பெண் ஒக்டோபஸ் ஆரூடம் சொல்கிறதாம்..
அது நெதர்லாந்து உலகக் கிண்ணம் வெல்லும் என்று சொல்லியிருக்காம்..
கேட்கிறவங்க ஏதோவா இருந்தா ஒக்டோபஸ் என்ன கிளி என்ன எதுவேணும்னாலும் ஆரூடம் சொல்லும் என்று கிளப்புவாங்க போலிருக்கு..
போங்கைய்யா போலிப் புளுகன்களா..
அதுக்காக போலி ஒழிப்பாளர்.. இதைத் தெளிவாக நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.. போலிகளை ஒழிக்கும் சங்கத்தலைவர் கங்கோன் சொன்னது போல இந்த ஆரூடங்கள் பொய்க்க வேண்டும் என்பதற்காக அந்தந்த அணிகள் தோற்கவேண்டும் என்று கருதுவதும் மூட நம்பிக்கை இல்லையா?
போ.ஒ.ச.தலைவர் கங்கோனின் புதிய திட்ட அறிவிப்பு விரைவில் வெளிவரும்..
அடுத்த பதிவில் உலகக் கிண்ண விருதுகள் பற்றி அறியத் தருகிறேன்..