நேற்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்கம் நடத்திய முத்தமிழ் விழாவுக்கு அழைத்திருந்தார்கள்.
மூன்று மணிக்கு என்று சொல்லியிருந்தார்கள்.. (அழைப்பிதழில் 2.50 என போடப்பட்டிருந்தது)
வாசலிலேயே வரவேற்ற மாணவன் ஒருவரிடம் ஆரம்பிச்சாச்சா? என்று கேட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரம் அண்ணா.. தெரியும் தானே என்றார்.
சிரித்துக்கொண்டே கொழும்பு நேரமா இல்லை கம்பஸ் நேரமா என்றதற்கு இரண்டும் ஒன்று தான் என்றார்.
அரை மணிநேரம் தாமதித்தே ஆரம்பித்தது.
கவிக்கோ அப்துல் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார்.
பல்கலைக்கழக கலை விழாக்களில் நம்பிக் கலந்துகொள்ளலாம். ஏனைய கூத்துக்கள்,களியாட்டம் போல இல்லாமல் சமூகத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதாவது நல்ல தகவல் சொல்லும் அம்சங்கள் ஒன்றாவது அரங்கேறும்.
நேற்றைய முத்தமிழ் விழாவில் ரசித்த & மனதைத் தொட்ட சில விஷயங்கள்..
தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிய அறிவிப்பின்போது காணொளியாக வரவுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து இது. இதற்கும் மரியாதை செலுத்துவோம் என்று அறிவித்தார். ஆகா.. இங்கேயும் செம்மொழியான அலறப்போகிறதா என்று பார்த்தால்..
வாழ்க நிரந்தரம் - மிக அழகாக திரையில் விரிந்தது..
கலைஞர்,ரஹ்மான்,கௌதம் மேனன் மூவருமே இந்தப் பாடலைக் கேட்டுப் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும்.
மகாகவி பாரதியின் வரிகளைக் காயப்படுத்தாத இசை..
பாடக,பாடகிகளை முன்னிலைப்படுத்தாத காணொளி..
இயற்கையான தமிழரின் வாழ்க்கை..
பின்னர் இணையத்தில் கூகிள் இட்டு தேடிப் பார்த்த வேளை இந்தியாவின் மக்கள் தொலைக்காட்சியின் படைப்பு இது என்று தெரிந்தது.
வாழ்த்துக்கள்..
நீங்களும் பார்க்கமலிருந்தால் சுவையுங்களேன்..
அழகாக இதைத் தேடியெடுத்துப் பயன்படுத்திய பல்கலை மாணவருக்கு நன்றிகள்.
பல்கலைக்கழகப் பெரும் பொருளாளரின் உரை..
அந்தப் பெண் விரிவுரையாளரின் குரலில் தொனித்த தமிழ் சமூகம் மீதான ஏக்கமும்,எதிர்கால மாணவர்களுக்குக் கொடுத்த நம்பிக்கையும்,தன் மாணவர்களுக்கு இனி ஆற்றவேண்டிய கடமை பற்றி அவர் வலியுறுத்திய விதமும் பல்கலை மாணவர்கள் சரியான வழிகாட்டிகள் அமையப் பெற்றுள்ளார்கள் என்ற மகிழ்வைத் தந்தது.
முன்னர் தோன்றிய மூத்த குடி..
இந்த நாடகம் பற்றி எழுதவே வேண்டும் எனத் தான் இந்தப் பதிவு.
சமூக நாடகம் என்றால் இப்படித் தான் இருக்கவேண்டும் என்ற அடிப்படைகளைக் கொஞ்சம் மாற்றி புது யுக்திகள் மேடை நாடகங்களில் புகுத்தப்பட்டு அதனூடாக நாட்டு,சமூக நடப்புக்களையும்,சொல்லப்படவேண்டிய விடயங்களையும் வெளிப்படுத்தி வருவதை நான் கொழும்பு கல்லூரிகள் பலவற்றின் நாடகங்களிலும்,பல்கலைக்கழக நாடகங்களிலும் கடந்த பத்தாண்டுகளில் அதிகமாகவே அவதானித்து வந்திருக்கிறேன்.
நேரடியாக விஷயங்களைப் பொது மேடையில் அதுவும் இதுபோன்ற பல்கலை விழா மேடையில் சொல்வது எத்துணை ஆபத்தானது என்பது யாருக்கும் தெரிந்ததே.
அதையே நாசூக்காக,ஆனால் மனதில் உறைக்கும்படி சித்தரிப்பு மூலம் சொல்லியதே 'முன்னர் தோன்றிய மூத்த குடியின்' சிறப்பு.
ஒரு நீதிமன்ற அரங்க அமைப்பு.. வக்கீல் ஒருவர் நீதிபதியின் முன்னால் ஒரு சமூகத்தின் வாழ்வியல் அவலங்கள் பற்றி சொல்கிறார்.
பின்னால் உள்ள திரையில் முதலில் இலங்கை வரைபடம், தொடர்ந்து மாறும் காட்சிகளாக காயமுற்று அவயவங்கள் இழந்த சிறுவர் முதல் பெரியோர் வரை,யுத்த வடுக்கள், இவற்றோடு இந்திய வரைபடம், சீனா,அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வரைபடங்களும் வந்து செல்கின்றன.
சமூகத்தின் அவலங்கள் பற்றி சொல்லும் அதே நேரம், அந்த சமூகத்தின் வாழ்வு முறையின் அடிப்படை குணாம்சங்களையும் விமர்சிப்போடு சொல்கிறார் வக்கீல்.
பின் சாட்சிகளை அழைக்கிறார்.
இருப்பிடம்,சொத்து அனைத்தையும் இழந்து பின் மகனொருத்தனை யுத்தத்தில் இழந்து இன்னொரு மகனைக் காணவில்லையென்று தேடும் பரிதாபத் தந்தை வந்து புலம்புகிறார்.
தொடர்ந்து கணவன் இருக்கிறானா இல்லையா என அறியாமல் கொழும்பிலே இரு குழந்தைகளோடு வாழ வழியில்லாமல் தவிக்கும் ஒரு இளம் பெண்.
உண்மைகளை சொன்னதால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்.
இரு கைகளையும் பறிகொடுத்து துயருறும் இளம் பெண்.
அற்புதமான உருக்கமான நடிப்பு.. தத்ரூபமென்றால் அப்படியொரு தத்ரூபம்.
அரங்கத்தில் அப்படியொரு உணர்ச்சியலை.. சிலர் கண்கலங்கியதையும் அவதானித்தேன்..
எனக்கு ஒரு விழாவில் அல்லாமல் ஒரு அகதிமுகாமிலோ,களத்திலோ நேரடியாக நிற்பது போல் இருந்தது.
(ஆனால் இவ்வளவு உணர்ச்சிமயமான காட்சியின் போதும் பின்னாலிருந்த சில பொறுப்பற்ற விசிலடிச்சான் குஞ்சுகள் மேடையில் நின்ற தம் சக மாணவிகளுக்கு விசிலடித்து தம் அபிமானத்தை வெளிப்படுத்தியது வெறுப்பைத் தந்தது)
இந்த சாட்சிகள் வந்து போகும் இடைவெளிகளில் தலைவர் வாழ்க என்ற இரைச்சலான கோஷங்களுக்கிடையில் குர்தா+வேட்டி அணிந்த ஒருவர் அவசரமாக வந்து மேடையிலிருந்த ஒரு குத்துவிளக்கேற்றி செல்கிறார்.
(அவர் கழுத்தில் துண்டு போட்டிருந்தால் அவ்வளவு தான்.. நாடகத்தையும் பிரசாரமாக்கி,மாணவரையும் சிக்கலில் தள்ளி இருக்கும்)
சாட்சிகள் முடிந்து நீதிபதி தீர்ப்பை வாசிக்க ஆரம்பிக்கிறார்.
இந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிவதாகவும்,அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று வாசித்துக்கொண்டே இருக்கையில், 'தலைவர்' அடாவடித் தனமாக உள்ளே வருகிறார்..
பின்னணியில் மிக சத்தமாக திருமணத்துக்கான மங்கள இசை முழங்குகிறது..
சபையோரை மிகப் பவ்வியமாக பார்த்து "வேறொன்றும் இல்ல.. இங்கே திருமணம் ஒன்று தான் நடக்குது.." என்று சிரித்துக் கொண்டே மேடையின் பக்க வாட்டில் டேய்,அடேய் என்று அதட்டிக் கொண்டே ஒரு ஆணையும் பெண்ணையும் பலவந்தமாகப் பிடித்து இழுத்து திருமணம் முடித்து வைக்கிறார்.
அடாவடிகளுக்கிடையில் "இங்கே திருமணம் தான் நடக்கிறது.. மங்கள காரியம்,அபிவிருத்தி தான் நடக்கிறது" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே திரையையும் பலவந்தமாக இழுத்து மூடுகிறார்.
எங்களுக்கு கொஞ்சம் பெருமூச்சும்,நிறையக் கோபமும் வருகிறது.
அத்தனை பேரின் நடிப்பு,வசன உச்சரிப்புக்கள்,உடல் பாவங்கள் அருமை.
நகைச்சுவை நாடகம்..
ராவணன் என்று பெயர்.
சின்ன சின்ன நகைச்சுவைக் கோர்வைகளால் சிரிக்க வைத்தார்கள்.
அரண்மனை என்று நினைக்குமாறு ஒரு செட்.
ராஜா தேர்தலில் நிற்க ஆசைப்பட்டு தனக்கு ஆள் சேர்க்கிறார்.
ஆஸ்தான குருவாக ரஞ்சிதானந்தா..
நிதியமைச்சராக பிச்சைக்காரி.. நாடு நாடா சென்று கையேந்த உதவுமாம்.
ராஜதந்திரியாக காதலிக்கும் இளம் பெண். (காதலிக்கும் இளம்பெண்கள் தான் மிகச் சிறந்த ராஜதந்திரிகள் என்று காரணங்களோடு வசனம் வேறு)
பெட்டி மாற்றுவது - பணப் பெட்டி வாக்குப் பெட்டி என்று தேர்தலில் வெல்லும்(/வென்ற) முறை பற்றி ஒரு காரமான நக்கல்..
புத்திசாதுரியத்தொடு சமூக,அரசியல் நக்கல்களை நாம் சிரிக்கக்கூடியவாறு வழங்கிய இந்த நாடகத்தை இயக்கிய மாணவன் தான் கழுத்தில் LOGIC என்ற அட்டையுடன் மேடை முழுவதும் ஒவ்வொரு காட்சியிலும் திரிகிறார்.
கேட்டால் இந்த நாடகத்திலே யாரும் Logic இல்லை என்று சொல்லிவிடக் கூடாதாம்.
இதே போல இடையிடையே வரும் பாடல்களுக்கிடையில் Censor அட்டையோடு ஒருவர் திரிகிறார்.
சிரித்து ரசித்தேன்.
கவிக்கோவின் தலைமையில் கவியரங்கம்..
நான்கு ஆண்களும் ஒரு பெண்ணுமாக அறுவர்.
வாருங்கள் வடம் பிடிப்போம் என்ற பொதுத் தலைப்பில், ஆறு உப தலைப்புக்கள்.
கவிக்கோ தனக்கு மண்டபத்துக்கு வந்தபின்னரே தலைப்பு தரப்பட்டதாக சொன்னார். முன்பே தந்திருந்தால் கவிக்கோவிடமிருந்து கலக்கல் கவிதை ஒன்று கிடைத்திருக்கும்.
ஆனால் பல்கலை மாணவ,மாணவியர் சபையோரின் கரகொஷங்களையும் கவிக்கோவின் பாராட்டுகளையும் அள்ளிப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அற்புதமாகக் கவியுரைத்தார்கள்.
தமிழ் கரைபுரண்டோடியது.. கவிநயத்துடன் தமிழரின் வாழ்வு அவலம், புலம்பெயர் பிரிவுகள்,யுத்த அழிவுகள்,சமூக சிக்கல்கள்,செம்மொழி சர்ச்சைகள்.. எந்தவொரு விடயத்தையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.
அந்தக் கவிவரிகளை இங்கே அடுக்கப் போனால் நீளம் போதாது.. எனக்கு நேரம் போதாது.
கவியரங்கம் என்ற பெயரில் அண்மைக்காலத்தில் தனிநபர் புகழ்பாடிக் கேட்ட பின்னர் இதுபோன்ற உணர்வும்,தமிழும், இடையிடையே நகைச்சுவையும் இணைந்த ஒரு அற்புதமான கவியரங்கைக் கேட்டது மன மகிழ்வாக இருந்தது.
பல பல்கலை மாணவ,மாணவியர் என் பதிவுகளையும் வாசிப்பது நான் அறிந்ததே. நேற்று மேலும் தெரிந்துகொண்டேன்.
உங்கள் அறுவரதும் கவிதைகளை எனக்கு மின்னஞ்சலினால் அனுப்பி வைத்தால் பூரிப்போடு பிரசுரிக்கிறேன். (உங்களுக்கு விருப்பமிருந்தால் &சொந்தமாக வலைத்தளங்கள் இல்லாவிட்டால்)
கடைசியாகக் கவிதை வாசித்தவர் நேரத்தை அதிகமாக எடுத்ததும் வேகமாகத் தன் கருத்துக்கள் அத்தனையையும் சொல்லிவிடவேண்டும் என்று வேகமாகக் கவிதை வாசித்ததும் ஒரு குறை என்றால், ஒருவருக்கு காதலிக்க வாருங்கள் வடம்பிடிப்போம் என்று வரிகொடுத்து அவரை அதிகம் பாடவிடாமல் செய்ததும் ஒரு குறை தான்.
கவிக்கோ தயாராக வராத காரணத்தால் தமிழ் மொழியின் சிறப்புப் பற்றி தான் முன்னர் எழுதிய கவிதையொன்று வாசித்தார்.
எனினும் உரையாற்றியபோது வழமையாக இலங்கை வரும்போது அவர் உரையாற்றுவது போலவே இலங்கைத் தமிழையும், ஈழத் தமிழர் தமிழ் மொழியைப் பேணிக் காப்பதையும் பற்றி உணர்ச்சிபூர்வமாக சிலாகித்தார்.
வழமை போல கரகோஷங்கள்.
கவிக்கோவின் உரையில் சில சுவாரஸ்ய விடயங்கள்..
இந்தியாவிலிருந்து இங்கே உணவு வருகிறது.
ஆனால் இலங்கையிலிருந்து தான் எமக்கு உணர்வு வருகிறது.
இங்கே(இலங்கையில்) இனம் அழிகிறது
அங்கே மொழி அழிகிறது.
அடுத்த உலகத் தமிழ் மாநாடு உங்கள் ஏற்பாட்டில் இங்கே நடைபெறும் என நம்புகிறேன்.
இந்த ஒட்டுமொத்த விழாவில் தெரிந்த குறை என நான் நினைத்தது ஒரு நடனம்..
ஒவ்வொரு பீடமும் தம்மால் முடிந்த நடனங்களைத் தந்தன.
அதில் ஒன்று ரஹ்மானின் செம்மொழிப் பாடலுக்குப் பரதத்தோடு ஆரம்பித்து தாஜ்மகால் சொட்ட சொட்ட பாடலுக்கு போய் தாளம் bit song க்கு எல்லாம் ஆடினார்கள்.
ரஹ்மான் பாடல்கள் தமிழ் சரி.. நடனம்?
இன்னுமிரு முக்கிய விடயம்..
மூத்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் வானொலிக் குயில் திருமதி.ராஜேஸ்வரி சண்முகம் அவர்களை பல்கலை தமிழ் சங்கம் கௌரவித்தமை.
முதல் தடவையாக கொழும்பு பல்கலைக் கழகத்தின் தமிழ் சங்கம் சமூகத்தின் பல்வேறு துறையிலும் உள்ள சிலரைக் கௌரவித்தார்கள்.
அதில் சிறந்த வலைப்பதிவருக்கான விருதும் வழங்கப்பட்டது சிறப்பு.
எனக்கு அந்த விருது கிடைத்தது பெரிய மகிழ்ச்சி.
ஒவ்வொரு வருடமும் இந்த விருது எமது பதிவர்களுக்குக் கிடைக்க இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தந்துள்ளார்கள்.
ஒரு அங்கீககரிக்கப்பட்ட சமூகமான பல்கலை மாணவரிடமிருந்து வரும் விருதாக இந்த விருதை வரவேற்போம்.
விருதைப் பெற்ற பின் உரையாற்ற சொன்னபோது
இலங்கைப் பதிவர்கள் அனைவருக்கும் கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதுவதாக எம் அனைவரது சார்பாகவும் நன்றிகளை உரைத்தேன்.
அத்துடன் யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கட்டற்ற மட்டற்ற சுதந்திரத்தை இந்த வலைப்பதிவுகள் பெருகி எமக்கு வழங்கியிருந்தாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்றிருக்கும் நிலையை ஆரோக்கியமாக நாம் அனைவரும் மாற்றவேண்டும் என்றும் குறிப்பிட்டேன்.
அந்த மாணவர்களின் அன்பு,அங்கீகாரம்,தமிழின் மீதான அக்கறைக்கு நன்றிகள்+வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள்.
முத்தமிழ் விழா பற்றி எழுதும் இந்தப் பதிவில் இன்னொரு முக்கிய தமிழ்ப் பெரியார் பற்றியும் நினைவுபடுத்த வேண்டும்.
இன்று முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம்,
யாழ் நூல் தந்த கிழக்கிலங்கையின் தவப்புதல்வரை பெருமையோடு தமிழ்பேசும் உலகம் சார்பாக நினைவுகூருவோம்.