இன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்

ARV Loshan
17


மு.கு - எழுத ஆரம்பித்து பின் முடித்த நேரத்துள் நள்ளிரவு கடந்ததால் நேற்று,இன்று,நாளைகள் குழம்பி இருக்கலாம்.. குழம்பாமல் வாசியுங்கள் நண்பர்ஸ்.. :)


காலி டெஸ்ட் போட்டி மழை காரணமாக நேற்றைய ஒரு முழு நாள் தின்னப்பட்டும் கூட இன்னும் உயிருடன் இருக்கிறது.
ஒரே காரணம் பந்துவீச்சாளர்கள்.


இஷாந்த் ஷர்மா இன்றைய நாளின் ஆரம்பத்தில் இலங்கையின் துடுப்பாட்ட மத்திய வரிசையை சிதறடித்து இந்தியாவுக்கு தெம்பூட்டி இருந்தார்.


இலங்கை நானூறு ஓட்டங்கள் தாண்டவே நாய் படாப்பாடு படவேண்டி இருக்கும்போல என்று எண்ணியவேளையில் தான்(393/7) இலங்கையின் பந்துவீச்சாளர்கள் தமது துடுப்பால் இலங்கையை முதலில் காப்பாற்றி,பின்னர் இந்தியாவைக் காத்திருக்க வைத்துக் கடுப்பாக்கினர்.


வேகமாகத் துடுப்பெடுத்தாட முற்பட்டு பிரசன்னா ஜெயவர்த்தன ஆட்டமிழந்த பிறகு (அண்ணே பிரசன்னா கொஞ்சம் பார்த்து விளையாடுங்க.. அனலிஸ்ட் கங்கோன் சொன்னது போல சந்திமால் பின்னாலேயே வெயிட்டிங்) வழமையான பந்துவீச்சாளர்கள் ரங்கன ஹேரத்தும்,லசித் மாலிங்கவும் துடுப்பாட்ட வீரர்களாக மாறி வெளுத்து வாங்கினர்.
இடத்தும் வலதுமாக 23 ஓவர்களில் 115 ஓட்டங்கள்.
இப்படியொரு அணியும் வாய்ப்பும் கிடைக்குமா?
கிடைக்கிறபோதே அடிச்சுக்கலாம்.. 

இலங்கைக்கான சேவாக்கும் கம்பீருமாய் கொஞ்ச நேரம் இந்திய பந்துவீச்சாளர்களை வதம் செய்திருந்தார்கள்.
இவர்கள் இருவருமே தமது கன்னி அரைச் சதங்களைப் பூர்த்தி செய்துகொண்டார்கள்.


ஏற்கெனவே ஒருநாள் முழுதாகத் தீர்ந்துபோன நிலையில் ஹேரத்தை சங்கா சதம் அடிக்க வாய்ப்புக் கொடுக்கவில்லை.
முரளியின் வாணவேடிக்கை கொஞ்ச நேரம் பார்க்கலாமென்றால் அதுவும் ஏமாற்றம்.
ஆனால் வந்து நின்ற கொஞ்சம் நேரத்தில் தனது Trademark shotகளை கொஞ்சம் கொஞ்சம் sampleகாட்டினார்.
மைதானமெங்கும் விஸ்வரூபமாய் முரளி.. 

முரளி துடுப்பெடுத்தாட வரும்போது இந்தியக் களத்தடுப்பாளர்கள் அனைவரும் வரிசை கட்டி நின்று தம் கௌரவத்தை வழங்கினர்.(இலங்கை இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடாது.. அப்பிடியே ஆடினாலும் முரளிக்கு துடுப்பெடுத்தாடக் கிடைக்காது என்று அவ்வளவு நம்பிக்கையா தோனி & கோ?)
முரளிக்கு மரியாதை...



இன்று பந்துவீச்சாளர்களுக்கான நாள் என்பதை மீண்டும் நிரூபித்தனர் மாலிங்க &முரளி.
மாலிங்க துடுப்பாட்ட வீரர் கம்பீரை LBWஇல் இரண்டே ஓட்டங்களுடன் அனுப்பிவைத்தார்.


சச்சின் இலங்கை ஆடுகளங்களில் தொடர்ந்து தடுமாறி வருவதை முரளி மீண்டும் நிரூபித்தார்.
சாதனை மன்னர் சச்சின் இலங்கையில் வைத்து 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்னும் டெஸ்ட் சதத்தை பெறவில்லை.
ஏன் ஒரு அரைச் சதம் கூட இல்லை.
கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் அவரது டெஸ்ட் சராசரி அண்ணளவாக 15.


ஒரு உலக சாதனையாளரை இன்னொரு உலக சாதனையாளர் வீழ்த்தி இருக்கிறார்.


முரளிக்கு இன்னும் எண்ணூறுக்குத் தேவை ஏழு :)


இன்று கலக்கியிருந்த மற்றுமொரு பந்துவீச்சாளர் அறிமுக வீரர் அபிமன்யு மிதுன்.
நான்கு விக்கெட்டுக்கள்.
இஷாந்த் சர்மாவையே வெளு வெளு என்று விளாசித் தள்ளிய நேரமும் மிதுன் கட்டுப்பாடாக பந்துவீசியிருந்தார்.


ஹேரத்,மாலிங்க தவிர இன்று துடுப்பாட்டத்தில் கலக்கிய இன்னொருவர் பந்துவீச்சிலும் ஒரு விக்கெட் எடுத்த சேவாக்.
நான் முன்பே நினைத்தது,யாரோ ஒருவரின் பதிவில் பின்னூட்டத்தில் சொன்னது போல சேவாக் காலியில் கலக்கி இருக்கிறார்.


தனியோருவராக நின்று அதிரடித்தார்.
முரளியை ஆறு ஒன்றோடு வரவேற்றார்.
அந்த நேரம் தொலைக்காட்சியில் முரளியின் மனைவி மதிமலரின் முகம் போன போக்கு.. அது ஒரு கவிதை :)


98 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்கள். இலங்கை வெல்வதைப் பற்றி எண்ணுவதாக இருந்தால் நாளை ஆட்டம் ஆரம்பித்தவுடனேயே சேவாகை சரித்துவிட வேண்டும்.சதம் அடித்தாரோ பிடிக்க முடியாது.


மழை விட்டுக் கொடுத்தால் இலங்கை வெல்ல இங்கிருந்து முயலலாம்.320 ஓட்டங்களுக்குள் இந்தியாவைக் கட்டுப்படுத்தி Follow on வழங்கி கடுமையாக முயன்றால் மட்டுமே ஒரு முடிவைப் பெறக் கூடிய வாய்ப்பு.
அத்தோடு முரளிக்கும் விடை பெறும்போது 800 தாண்டிய பெருமையும் கிட்டும்.


நாளையும் மழை பெய்யாமல் ஆட்டம் நடந்தால் வியாழன் இறுதிநாள் ஆட்டம் பார்க்க காலி செல்லும் ஐடியா உண்டு.
முரளியின் டெஸ்ட் வாழ்க்கையின் இறுதி நாளில் மைதானத்தில் நிற்க ஆசைப்படுகிறேன்.


-------------------------


இன்று மாலையில் இன்னொரு பரபர விஷயமும் கிடைத்தது..
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கும் வீரர்களுக்கும் இடையில் இருந்துவந்த பேரம்பேசும் போட்டி ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டினால் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.


கிரிக்கெட் வீரர்கள் தமக்கு பத்துவீத ஊதிய உயர்வு வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அது முடியாது ஐந்துவீதம் தான் தரலாம் என்று சபை தெரிவித்திருந்தது.
இப்போது ஐந்துவீதமே வழங்கப்படும். மீதி பிறகு பார்க்கலாம் என்ற இறுதி முடிவு எட்டப்பட்டு விட்டது.


வீரர்கள் ரொம்பவே நல்லவர்கள். மேற்கிந்தியத் தீவுகள் மாதிரி பிடிவாதம் பண்ணி ஸ்ட்ரைக் அடிக்க மாட்டார்கள்.


சும்மா விசாரித்துக் கணக்குப் பண்ணியதில், ஒப்பந்த அடிப்படையில் முதலாம் தரத்துள் வரும் சங்கா,முரளி,மஹேல முதலானோருக்கு மாதமொன்றுக்கு சம்பளம் மட்டும் இலங்கை ரூபாயில் பத்து லட்சம் கிடைக்குமாம்.
போட்டிக்கான ஊதியங்கள்,அலவன்ஸ்,விளம்பரப் பணம் இதெல்லாம் வேறு..


ம்ம்ம்ம் கொடுத்து வைத்த playboys .. sorry players என்று சொன்னேன்..


சின்ன வயதிலேயே cricket practice போன நேரமெல்லாம் படி படி என்று A/L காலத்தில் தடுத்து நிறுத்திய அப்பாவே,அம்மாவே.. இதையும் வாசியுங்கள்..  


Post a Comment

17Comments

Please Select Embedded Mode To show the Comment System.*