July 01, 2010

ஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...



இலங்கையில் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் நடந்து இறுதிப் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றியீட்டிக் கிண்ணத்தையும் நாட்டுக்கு எடுத்து சென்று ஒரு வாரமாகிறது.


கால் பந்து உலகக் கிண்ணத்துடன் பிசியாகவும் ஈடுபாட்டோடும் இருந்த காரணத்தால் எனக்கு தனிப்பட இந்த ஆசியக் கிண்ணம் சுவைக்கவில்லை.
கடைசி இரு போட்டிகளையும், அப்ரிடியின் அதிரடிகளின் தொகுப்பை You Tubeஇலும் பார்த்தேன்.


எனினும் பல நண்பர்கள்,என் பதிவுகளின் தொடர் வாசகர்கள் ஆசியக் கிண்ணம் பற்றி நான் என் பதிவிடவில்லை என்று அன்புக் கேள்விகளை அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்.
நன்றிகள் உங்கள் அன்புக்கும்,என் விளையாட்டுப் பற்றிய பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரத்துக்கும்.


நானும் இந்தப் போட்டிகளைப் பார்க்காவிட்டாலும் முடிவுகளையும் முக்கிய விடயங்களையும் ஆராய்ந்துகொண்டிருந்ததனால் சில கேள்விகளும் பகிர்ந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களும் மனசுக்குள்ளேயே இருந்தன.


பத்தாவது தடவையாக ஆசியக் கிண்ணப் போட்டிகள் இம்முறை நடந்தேறி இருக்கிறது. ஆசியக் கிரிக்கெட் சம்மேளனம்- ACC மற்ற வலய அமையங்களை விட ஆசிய வலயம் பலம் வாய்ந்ததாகவும் ICCஇல் தீர்மானம் எடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டதாகவும் பண வசதி படைத்ததாகவும் இருந்தும் கூட, இந்த ஆசியக் கிண்ணப் போட்டிகளை இன்னமும் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்களுள் ஒன்றாக மாற்ற முடியவில்லையே.




இந்தியா இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றது தோனியின் தலைமைத்துவத்தில் மற்றொரு முக்கிய மைல்கல் வெற்றி.
காரணம் ஆசியக் கிண்ணப் போட்டிகள் கடந்த 15 வருடங்களாக இந்தியாவுக்கு ராசியாக அமையவில்லை.
அத்துடன் இலங்கை அணி அண்மைக் காலத்தில் ஸ்திரமான ஒரு ஒருநாள் அணியாக மாறிக் கொண்டு வந்திருந்தது.குறிப்பாக சொந்த மைதானங்களில் மேலும் சாதகத் தன்மையைக் கொண்ட அணியாக மாறி வந்துள்ளது.


இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முந்திய போட்டியில் இந்தியாவைப் போட்டு உருட்டி எடுத்ததன் பின்னரும், சேவாக் இல்லாத நிலையிலும், இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் தேவையான பொழுதுகளில் கை கொடுக்கிறார்கள் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் இந்த மூன்று குறைகளையுமே தங்கள் பலங்களாக மாற்றி இந்தியா வென்றது தான் இறுதிப் போட்டியின் ஹைலைட் என நான் நினைக்கிறேன்.




கிடைக்கும் வாய்ப்பெல்லாம் சரியாகப் பயன்படுத்தும் தினேஷ் கார்த்திக்,விராட் கொஹ்லி ஆகியோருக்கு இனியாவது இந்தியத் தேர்வாளர்கள் டெஸ்ட் வாய்ப்புக் கொடுக்கலாமே.
அடுத்த இலங்கை சுற்றுலாக்கும் இவர்கள் இருவரும் இல்லை.


என்னைப் பொறுத்தவரை அண்மைக்கால இந்திய அணியின் வேகப் பந்துவீச்சின் அத்திவாரம் பிரவீன் குமார்.இவரை ஒரு நல்ல டெஸ்ட் ஸ்விங் பந்துவீச்சாளராகவும் பரிணமிக்க செய்யலாம்.செய்வார்களா?


இந்திய அணிக்கு மத்திய வரிசைப் பிரச்சினை இன்னும் நீடிக்கவே போகிறது.யுவராஜை மீண்டும் அழைக்கவேன்டியே இருக்கும்.ரோகித் ஷர்மா,விராட் கொஹ்லி ஆகியோர் பிரகாசித்தாலும் ஆக இன்னும் தனித்துப் பிரகாசிக்க காலம் எடுக்கும் போலவே தெரிகிறது.சுரேஷ் ரெய்னாவுக்கு ஆறாம் இலக்கம் பொருந்துகிறதா? மூன்றாம் இலக்கத்திலும் அவரை நிலையாக வைத்துக் கொள்ள முடியாமல் இருக்கும்..


காரணம் சச்சின்,கம்பீர்,சேவாக் மூவருமே விளையாடும் நேரங்களில்?
இவை போல இட சிக்கல் தான் இந்திய அணிக்குள்?
யார் வந்தால் யாரை அனுப்புவது...


இலங்கை அணியும் இன்னும் உலகக் கிண்ணம் நோக்கிய அணிக்கட்டமைப்பை சரியான முறையில் ஸ்திரப்படுத்தவில்லை என்பது இத்தொடரில் தெரிந்தது.
மத்திய வரிசைத் துடுப்பாட்டம் பலவீனமாகவே இருக்கிறது.


சங்கக்கார தொடர்ந்தும் மூன்று அழுத்தங்களையும் தூக்கி சுமக்கப் போகிறாரா?
தலைமைப் பதவி,விக்கெட் காப்பு,மூன்றாம் இலக்கத் துடுப்பாட்டம்.
தினேஷ் சந்திமால் சிம்பாப்வேயில் நல்லாத் தானே செய்தார்? அவரை ஆஸ்திரேலியாவுக்கு A அணி சுற்றுலாவுக்கு அனுப்பியிருப்பதற்குப் பதிலாக இந்தத் தொடரிலே இறக்கி உலகக் கிண்ணத்திற்காக ஒத்திகை பார்த்திருக்கலாம்.


கபுகெடற ஓரளவு தேறி இருந்தாலும் இன்னும் தன் இடத்துக்கான பெறுமதியை நிரூபிக்கவில்லை.
கண்டம்பியா,சமரவீரவா அல்லது இன்னும் ஒருவரை முயலப் போகிறார்களா என்ற கேள்வி இன்னும் தொக்கி நிற்கிறது.


அரவிந்த டீ சில்வா அடுத்த முக்கோணத் தொடரில் இதற்கான தெளிவான விடையை அணித்தெரிவில் தருவார் என நம்பலாம்.


சங்கா,மஹேல மீதான அழுத்தங்களைக் குறைக்கவும் எஞ்சேலோ மத்தியூஸ் ஒவ்வொரு முறையும் ஆபத்பாந்தவராக வந்து காப்பாற்றும் வேலை செய்யாமலும் இருக்க இன்னும் மத்திய வரிசை அல்லது Late Middle order ஸ்திரப்படுத்தப்பட வேண்டும்.


அடுத்து அணியின் பந்துவீச்சாளர்கள்.
மாலிங்க,முரளி,குலசேகர ஆகியோர் நிச்சயம்.மத்தியூசும் தில்ஷானும் சகலதுறை வீரர்களாக இருப்பதால் இன்னும் ஒருவர் நிச்சயம் தேவை.
அதை ஆடுகளத் தன்மையின் அடிப்படையில் முடிவு செய்யலாம் என்று வைத்தாலும் இறுதிப் போட்டியில் செய்த முட்டாள் தனம் போல ஒரு போட்டியைப் பார்த்து அணியைத் தெரிவு செய்தால் அவ்வளவு தான்.


மஹ்ரூப் எடுத்த ஒரு ஹட் ட்றிக்குக்காக அவரை இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யவேண்டி இருந்தது.திட்டமிட்டே அவருக்கு முதல் போட்டியில் விக்கெட்டுக்களைக் கொடுத்தது போல இறுதிப் போட்டியில் போட்டுத் தாக்கித் தாளித்தார்கள்.


A player cannot be decided by a single match. - Famous quote by Geoffrey Boycott








சுராஜ் ரண்டிவ்,ரங்கன ஹேரத்,அஜந்தா மென்டிஸ் ஆகியோருக்கிடையில் நிலவும் சுழற்சி தெரிவையும் இனி நிறுத்தி ஒரே குழாமை உலகக் கிண்ணம் நோக்கி ஸ்திரமாக்கவேண்டியது தேர்வாளரின் கடமை.


பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தேர்வாகாவிட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை இந்தத் தொடர் பல ஆரோக்கியமான,எதிர்காலத்துக்கான நல்ல விஷயங்களைத் தந்திருக்கிறது.
பந்துவீச்சு அக்தாரின் வருகையோடு பலமேறி இருக்கிறது.
எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அப்ரிடியின் சதங்களைப் பார்த்தோம்..
ஆனால் இவர்கள் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடிகளை அடிக்கடி மாற்றுவதை மாற்றவேண்டும்.




பங்களாதேஷ் - இவர்களை என் அழைத்தார்கள்?
இன்னமும் எத்தனை வருடங்களுக்கு நாம் முன்னேறிக் கொண்டே இருக்கிறோம் என்று சொல்லப் போகிறார்கள்?
இல்லாவிட்டால் ஓரிரண்டு போட்டிகளை வென்றுவிட்டு எதிர்கால உலக சாம்பியன் என்று அறிக்கையிடப் போகிறார்கள்?
தமிம் இக்பால்,ஷகிப் அல் ஹசன்,மகமதுல்லா,மோர்தசா தவிர வேறு யாரும் சர்வதேச சவால்களுக்கு முகம் கொடுப்போராகத் தெரியவில்லை..
இதற்குள் இப்போது தலைமையும் மாற்றப்பட்டுள்ளது.


பேசாமல் இவர்களை தரமிறக்கி விட்டு அயர்லாந்துக்கு இந்த அந்தஸ்தைக் கொடுக்கலாம் போல..


அடுத்து தம்புள்ளை மைதானத்தின் மின் விளக்குகள்.


தொலைக்காட்சியில் பார்க்கும்போதே கண்களைக் கஷ்டப்படுத்தும் இந்த மின் விளக்குகளின் கீழ் விளையாடுவது சிரமமாக உள்ளது என்று நான்கு அணிகளினதும் வீரர்களும் புகார் சொல்லிவிட்டார்கள்.


ஆனால் இன்னும் மைதான நிர்வாகிகளும், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரிகளும் தாங்கள் பிடித்த காலுக்கு மூன்றே கால் என்று நிற்கிறார்கள்..
ஆனால் நேரடி ஒளிபரப்பு செய்த தொலைகாட்சி இயக்குனர்களும் இந்த மின் விளக்குகளின் தரம் பற்றிக் குறைப்பட்டனராம்.


இந்த ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரின் முக்கியத்துவத்தை மேலும் குறைப்பதாக அமைந்தது இது நடத்த தீர்மானிக்கப்பட காலப் பகுதி.


எல்லா அணிகளின் வசதியையும் கருதி ஏதோ நடத்தப்படவேண்டும் என்று இடையில் சொருகப்பட்டது போல இடம்பெற்றது.
அதிலும் போட்டி அட்டவணைகளை எந்த அறிவுக் கொழுந்து தயாரித்ததோ?


ஜூன் 25 ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு நீண்ட விடுமுறை வந்தது. எனினும் போட்டிகள் 24 ஆம் திகதியுடன் நிறைவு.
அனேக முக்கிய போட்டிகள் நடந்தது வார நாட்களில்.
எல்லாம் பகல்-இரவுப் போட்டிகளாகவும் வெளியூரான தம்புள்ளையில் நடைபெற்றதனாலும் ஒவ்வொரு முறை இலங்கையில் இவ்வாறான தொடர்கள் இடம்பெற்ற வேளையில் ஒரு போட்டிக்காவது தவறாமல் செல்லும் நானே போக விரும்பவில்லை.
கொழும்பில் உள்ளவர்களும் ஏனைய பிரதேசங்களில் உள்ளோரும் சென்றது குறைந்தது இதனால் தான்.
அதிலும் யாராவது இறுதிப் போட்டிக்கு முன்னதான போட்டியை இறுதிப் போட்டியில் சந்திக்க எதிர்பார்க்கப்படும் அணிகளுக்கிடையில் வைப்பார்களா?
நல்ல காலம் கமெராக்கள் அதிகமாகப் பரிசாக அனுசரணையாளர்கள் வழங்கிய மோட்டார் சைக்கிள்களையும் மொபைல்களையும் காட்டியதனால் ரசிகர்கள் குறைந்தது பெரிதாகத் தொடரவில்லை.


அடுத்த ஆசியக் கிண்ணப் போட்டிகளாவது நேர்த்தியான முறையில் மேலும் பலமான அணிகளுக்கிடையில் உலகில் கிரிக்கெட் ரசிகர்களால் நோக்கப்படும் தொடர்களில் ஒன்றாக நடக்கட்டும்.


ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைமையும் பங்களாதேஷை சேர்ந்த மொஸ்தபா கமலிடம் போயிருக்கிறது.
பங்களாதேஷின் வளர்ச்சியும் ஆப்கானிஸ்தானின் முன்னேற்றத்தையும் பற்றி இவர் கொஞ்சம் கவனம் செலுத்தட்டும்.


ஒரு கிரிக்கெட் ரசிகனாக இவ்விரு அணிகளிடம் நிறையவே நான் எதிர்பார்க்கிறேன்.


பி.கு - இந்திய அரசியல் வாதி சரத் பவார் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜோன் ஹோவார்ட் தனது ஆதரவை படிப்படியாக இழந்து வருகிறார்.
இந்த அரசியல் பற்றி முன்னர் நான் இட்ட இடுகை பார்க்க..



வெற்றிகரமான அரசியல்வாதியாக முரளிதரன்..

கிரிக்கெட்டில் அரசியல் மேலும் அதிகமாகவே புகுந்து விளையாடப் போகிறது.
கிரிக்கெட்டின் முன்னேற்றத்தை பல ஒளியாண்டுகள் பின்னோக்கி இழுக்கும் புதிய அத்தியாயமாக இது மாறும் என மனம் சஞ்சலப்படுகிறது.
இதுவும் கடந்து போகுமா?





12 comments:

கன்கொன் || Kangon said...

ம்...

இந்தியாவிற்கு வாழ்த்துக்கள். :P

பதிவில் ஒரு இடத்தில் மாத்திரம் மாற்றுக்கருத்து.
சந்திமாலை அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பியது சரி என்று நினைக்கிறேன்.

உலகக்கிண்ணப் போட்டிகள் என்னதான் உப்புச்சப்பில்லாத ஆடுகளங்களைக் கொண்ட உபகண்டத்தில் நடைபெற இருந்தாலும் ஏதாவதொரு மைதானம் ஆசியக்கிண்ணப் போட்டி போல ஏதாவது விசேடமாகச் செயற்பட்டால் அதை சமாளிக்கும் திறமை வேண்டும்.
வேகமான அவுஸ்ரேலிய ஆடுகளங்களில் பயிற்சிக்கு அனுப்பினால் அந்த அனுபவம் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்.
கபுகெதரவை நேரடியாக தேசிய அணியில் தொடர்ந்து விளையாட விட்டு அனுபவம் என்று நம்புகிறேன்.

மற்றையது கபுகெதர முன்பைவிட ஓரளவுக்கு பொறுமையான, தேர்ந்த ஆட்டக்காரராக தெரிகிறார்.
முன்னேறினால் அணிக்குத் தேவைப்படும் பின்வரிசை விளாசல்களை செய்ய உதவுவார் என்று நினைக்கிறேன்.

நல்ல ஆய்வு அண்ணா. :))

கன்கொன் || Kangon said...

அடுத்தது மஹ்ரூவ் விடயம்,
மஹ்ரூப்பை கழற்றி விட்டால் அதை ஏற்றுக் கொள்ளுமளவிற்கு எங்கள் கிறிக்கற் அறிவு வளர்ந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
அவுஸ்ரேலியாவில் என்றால் அதை ஏற்றுக் கொள்வார்கள், ஆனால் எங்கள் போன்ற நாடுகளில்?

மஹ்ரூப் இற்கு பதிலாக சுராஜ் ரந்திவையோ அல்லது வெலகெதரவையோ விளையாட வைத்து அவர்கள் பெரிதாகப் பிரகாசிக்காவிடில் 'முதற்போட்டியில் ஹட்ரிக் எடுத்தவனை ஏன் விலக்கினார்கள்' என்று கேள்வி எழுப்ப மாட்டோமா?

ஒரு வகை Catch-22 நிலைமை தான் அது...
பாவம் தேர்வுக்குழுவினர்...

Bavan said...

அய்... கிறிக்கற்..

அப்பாடா எம்புட்டு நாளாச்சு கிறிக்கற் பற்றி பதிவுகளைப்பார்த்து..;)

இந்தியாக்கு டோனி-லக் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது..

அப்டிரி கடிக்க மட்டுமல்ல அடிஅடியென்று அடிக்கவும் தெரியுமென்று மிரட்டுகிறார்.. ஆனால் அவர் மட்டும் அடித்தால் காணுமா?..:)

இலங்கையில் சனத் இல்லாத அணி திருப்தியளிக்கிறது. சந்திமால் மற்றது ரன்டிவ் இருவரையும் உலகக்கிண்ண அணியில் இணைப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.

//சுராஜ் ரண்டிவ்,ரங்கன ஹேரத்,அஜந்தா மென்டிஸ் //

ஐயகோ மென்டிஸ்? வேண்டவே வேண்டாம்..:P

வர்ட்டா...

Subankan said...

பெரும்பாலான இலங்கை அணி பங்குபற்றும் தொடர்களில் ஒரு போட்டியையாவது பார்த்துவிடும் நான் இம்முறை ஒன்றைக்கூடப் பார்க்கவில்லை. உதைபந்தாட்டம் கட்டிப்போட்டுவிட்டது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு கிரிக்கெட் போட்டிகளையும் உதாரணமாக்க் கொள்ளலாம் போல இருக்கிறது. இது எனது கருத்து மட்டுமே.

Anonymous said...

அண்ணா பதிவு வாசித்தேன். இப்போ புகையிரதத்தில் இருப்பதால் நாளை விரிவாக கருத்து போடுகிறேன்:-) anu

யோ வொய்ஸ் (யோகா) said...

///கால் பந்து உலகக் கிண்ணத்துடன் பிசியாகவும் ஈடுபாட்டோடும் இருந்த காரணத்தால் எனக்கு தனிப்பட இந்த ஆசியக் கிண்ணம் சுவைக்கவில்லை/////

Same Blood

/////இந்த ஆசியக் கிண்ணப் போட்டிகளை இன்னமும் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்களுள் ஒன்றாக மாற்ற முடியவில்லையே////

கலைஞருக்கு பாராட்டு விழா எடுப்பது போல் இலங்கை இந்திய அணிகள் மாதத்திற்கு ஒரு தொடரில் சந்தித்தால் யார் ரசிப்பர், ஆஷஸ் போல் அட்டவணை இடம்பெற வேண்டும்

நல்ல அலசல் லோஷன்

Unknown said...

சந்திமாலை அவுஸ்திரேலியா அனுப்பியது சரிதான். இன்னும் ஒரு இரண்டு மூன்று வருடங்களின் பின் அவரை நிலைப்படுத்தப் பார்க்கலாம். (அதைத்தான் செய்வார்கள் என நினைக்கிறேன்). இருந்தும் மெண்டிஸ், ரந்தீவ், ஹேரத் சுழற்சியை நிறுத்தியாகவேண்டும். அதிகமான பரிசோதனையும் உடம்புக்கு ஆகாது என்பது கிரெக் சப்பல் கால இந்தியாவிடமிருந்து எல்லா அணிகளும் கற்க வேண்டிய பாடம் (உ-ம்: சேவாக், சச்சின் இருக்கிற அணியில் பதான், ஊத்தப்பா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள் கங்கூலியோடு)..:))

Unknown said...

கிரிக்கின்ஃபோவில் ரசித்த குறும்பு (சாராம்சம்).. (ஸிம்பாவே தொடர் காலத்தில் எழுதப்பட்டது. இலங்கை இந்தியப் போட்டி ஒன்றின் முன்னோட்டமாக):
இந்தியாவும் இலங்கையும் அடிக்கடி மோதுகிறன. இந்தத் தொடரை அடுத்து ஆசியக் கிண்ணத்தில் விளையாடுகின்றன. அதன் பின் இரு அணிகளும் ஒரு டெஸ்ட் தொடரிலும் ஒரு முக்கோணத்தொடரிலும் இலங்கையில் சந்திக்கின்றன. ஆசியக் கிண்ணத்துக்கும் டெஸ்ட் தொடருக்கும் இடையில் 20 நாள் இடைவெளி இருக்கிறது என்று சத்தமாகச் சொன்னால் யாராவது இரு அணிகளுக்குமிடையில் ஒரு இருமுனை ஒரு நாள் தொடரை ஒழுங்கு செய்துவிடுவார்கள்:))


ஒரு சந்தேகம்..
இப்பப்போய் இவ்வளவு விளையாடுறாங்கள். சச்சினும் முரளியும் அபாரமாக உலகைக் கலக்கிய காலங்களில் ஆடிக்கொருமுறை அமாவாசைக்கொருமுறைதானே ஆடினார்கள்?

Riyas said...

//ஒரு கிரிக்கெட் ரசிகனாக இவ்விரு அணிகளிடம் நிறையவே நான் எதிர்பார்க்கிறேன்.//

நானும்தான்.. பங்களாதேஷ் இன்னும் சிறுபிள்ளத்தனமாகவே விளையாடுகிறது.. தமீம் இக்பாலின் அதிரடி சகீப் அல் ஹசனின் சகல துறை பெறு பேறும் மற்றையவர்களின் நேர்த்தியின்மையால் வீனாகி விடுகின்றன.. நல்ல உதாரணம் அன்மைய இங்கிலாந்து சுற்றுலா.

கன்கொன் || Kangon said...

அண்ணா!

நாங்கள் பங்களாதேஷ் மீது கொஞ்சம் அதிகமாகவே கோபப்படுகிறோமோ என்று தோன்றுகிறது.
எங்கள் நாடுகள் ஆரம்ப காலங்களிலும் இதைத்தானே செய்தன?

இலங்கை அணி தனது ஆரம்ப 15 வருடங்களில்,
பங்குபற்றிய 29 ரெஸ்ற் போட்டிகளில் 2 இல் மட்டும் வென்றிருக்கிறது.
16 தோல்விகள்.
வென்ற இரண்டுமே உள்நாட்டில்.
100 ஒருநாள் போட்டிகளில் வென்றவை 20.
தோற்றவை 76.
வென்றவற்றில் இலங்கையில் 8, இந்தியாவில் 2, பங்களாதேஷில் 3 என்று தான் கணக்குச் செல்கிறது.


மறுபுறத்தில் தனது முதல் 19 வருடங்களில் (1932-1950 வரை) இந்தியா தான் விளையாடி 20 ரெஸ்ற் போட்டிகளில் எதையுமே வெல்லவில்லை.
சமநிலையில் முடிந்த 9 இல் 5 போட்டிகள் இந்தியாவில்.
இத்தனைக்கும் கிறிக்கற் பெரிதாக வளர்ச்சியடையாத காலகட்டம் அது.


பங்களாதேஷ் அணியின் ஒருநாள் முடிவுகள் ஆரம்பநிலைக்குரிய அணிக்கு பரவாயில்லை என்று நம்புகிறேன்.
கிறிக்கற் வளர்ந்து எல்லா இடமும் ஆதிக்கம் செலுத்தும் காலப்பகுதியில் ஓர் புதிய அணி முன்பளவிற்கு இலகுவாக முன்னேற முடியும் என்று நம்பவில்லை.

இங்கிலாந்தில் தொடரைத் தோற்றாலும் இங்கிலாந்து சில இடங்களில் எப்படி விக்கற் எடுப்பது என்று திணறியது உண்மை.
குறிப்பாக முதல் ரெஸ்ற் போட்டியில் இரண்டாவது இனிங்ஸ் இல் காடடிய திறமை அற்புதம்.

அவர்களாக முன்னேறுவார்கள் என்று நம்புகிறேன்.

மற்றையது ஒரு தோற்கும் அணி இருந்தால் தான் இலங்கை, பாகிஸ்தான், இந்தியா போன்ற இரண்டாம்பட்ச கிறிக்கற் விளையாடும் அணிகள் தங்களும் win-loss ration ஐக் காப்பாற்றிக் கொள்ள முடியும். :P :P :P

anuthinan said...

அண்ணா நீண்ட நான்ட்களின் பின்பு கிரிகெட் பதிவு!!! நேற்றே வாசித்தேன்! ஒரு விடயம் மட்டும் சொல்ல விருப்பம்!

சந்திமாலை மேலும் முன்னேற்ற ஆஸ்திரேலியா அனுப்பி இருப்பார்கள் என்பது எனது எண்ணம்!!

Mohamed Faaique said...

அப்ரிடியின் அடி மறக்க முடியாதது.. முதலில் தம்புள்ள மைதானத்தில் 150 ரன் அடித்தாலே வெல்வது கடினமான, பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாக இருந்தது.. அதே எண்ணத்தில் பார்க்க ஆரம்பித்தவன் அப்ரிடியின் அடியில் அசந்து போனேன்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner