ஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்கே இனி கப்பு??
July 04, 2010
11
நேரத்துடன் இன்று போட்டி போட்டு இருந்த வேலைகளாலும், அவதாரம் நிகழ்ச்சியாலும் தோற்று விட்டேன்...
அது மட்டுமா.. என் விருப்பத்துக்குரிய அணியான ஆர்ஜென்டீனாவும் பரிதாபகரமாக தோற்று உலகக் கிண்ணம் விட்டு வெளியேறிவிட்டது.
T 20 உலகக் கிண்ண இறுதியில் ஆஸ்திரேலியா வாங்கிய அதே அடி போல.. ;)
லத்தீன் அமெரிக்காவின் இரு பெரும் கால்பந்து வல்லரசுகளும் அடுத்தடுத்த நாட்களில் வெளியே.
ஜேர்மனி உலகக் கிண்ணம் வெல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ள அணியாக நான் உட்பட அனைவராலும் ஏற்றிப் போற்றப்பட்ட மற்றொரு அணியான ஆர்ஜெண்டீனாவுக்கு ஆப்பு அடித்து வெளியேற்றியுள்ளது.
எல்லா அணிகளுக்கும் தோல்வி என்பது சகஜமானதே.ஆனாலும் தோற்பதற்கும் ஒரு முறை இருக்கிறது அல்லவா?
உலகத் தரம் வாய்ந்த வீரர்களை முன் அடுக்கிலிருந்து கோல் காப்பாளர் வரை வைத்திருந்தும் 4-0 என்று தோற்பது அவமானம்.
மூன்றாம் நிமிடத்தில் முல்லர் மங்களமாக தொடக்கி வைத்த கோல் அடிப்பு மிரோஸ்லாவ் க்லோசேயின் இரண்டு கோல்களோடு நான்காக முடிந்தது..
மெச்சி,ஹட் ட்ரிக் ஹீரோ ஹிகுவீன், டெவேஸ்,வெரோன்,மச்செரோனோ இப்படி உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தும், மரடோனா என்ற சிங்கம் பயிற்றுவிப்பாளராக இருந்தும் இதுவரை உலகக் கிண்ணத்தில் எந்தவொரு போட்டியில் தோற்காமலிருந்தும் இன்று மண் கவ்வியது ஆர்ஜென்டீனா.
மரடோனா பதவி விலகும் முடிவில் இருப்பதாக சற்று முன் கிடைத்த செய்தி சொல்கிறது.
ஜெர்மனியின் இளைய அணிக்கு இது ஒரு அபார வெற்றி. அவர்களது கடும் முயற்சிக்கும் விடாத போராட்டத்துக்கும் பரிசு கிடைத்துள்ளது.
முதல் சுற்றில் செர்பியாவிடம் தோற்றபோது இதோ ஜெர்மனி முடிந்தது என்றே நானும் நினைத்தேன்.
ஆனால் பொடோல்ஸ்கி,ஸ்வைன்ச்டைகர்,க்லோசே போன்ற அனுபவசாலிகளுடன் முல்லர்.ஒட்சில் போன்ற இளையவர்களும் இணைந்த இணைப்பும் தலைவர் லாம்,பயிற்றுவிப்பாளர் லோவே ஆகியோரின் நுட்பங்கள்
இன்று மிகப் பிரமாதமாக வேலை செய்துள்ளன.
இங்கிலாந்துடன் இதற்கு முதல் நான்கு கோல்கள் குவித்த ஜெர்மனி மீண்டும் அதிக கோல்கள் குவிக்கும் தன ஆற்றலைக் காட்டியுள்ளது.
ஜெர்மனியின் இந்த ஆச்சரிய ஆற்றலுக்கு இன்னொரு காரணமும் உள்ளதாக ஒரு கதை உலாவுகிறது..
இந்த உலகக் கிண்ணத்தில் பயன்படுத்தப்படும் ஜபுலானி(Jabulani) பந்துவகைகள் ஜெர்மனியின் உள்ளூர்ப் போட்டிகளில் பரவலாகப் பயன்படுத்தப் படுகின்றனவாம்.
இது எவ்வளவு உண்மையோ தெரியாது.
இன்றிரவு இரண்டாவது போட்டியில் ஸ்பெய்ன் வெற்றிபெறும் என்று நம்பப்படுகிற வேளையில் ஜெர்மனிக்கு அது ஒரு சவாலாக அமையும்.
ஆர்ஜென்டினா - ஸ்பெய்ன் அணிகள் மோதும் விறு விறுப்பான அரையிறுதி பார்க்கக் காத்திருந்த எமக்கு ஏமாற்றமே.
ஆனால் ஆர்ஜெண்டீனவையே அடித்து நொறுக்கி அனுப்பியுள்ள இந்த ஜெர்மனி ஸ்பெய்னுக்கும் சவால் விடுக்க கூடியது போலவே தெரிகிறது.
இன்றைய முதலாவது காலிறுதிப் போட்டியில் சந்தித்த ஆர்ஜென்டீனா மற்றும் ஜெர்மனி அணிகள் எப்போது உலகக் கிண்ணத்திலே சந்தித்தாலும் பரபரப்புக்கு,விறு விறுப்புக்கு குறைவிருக்காது.
முன்பே சந்தித்திருந்தாலும்.. 80களுக்குப் பிறகு தான் இவ்விரு அணிகளுக்குமிடையிலான போட்டிகள் ஒரு கால்பந்து யுத்த யுகத்தைத் தோற்றுவிக்க ஆரம்பித்தன.
1986ஆம் ஆண்டு மெக்சிக்கோவில் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் டீகோ மரடோனா தனியொரு நபராக ஆர்ஜெண்டீனாவை சம்பியனாக்கிக் காட்டியிருந்தார்.(அப்போது மேற்கு ஜேர்மனியாக)
அடுத்த உலகக் கிண்ணம் 1990 இத்தாலியில் இடம்பெற்ற வேளையில் மீண்டும் இறுதிப் போட்டியில் இதே இரு அணிகள். இப்போது ஜெர்மனி பழி தீர்த்துக் கொண்டது.
Previous meetings
Argentina won 8
Germany won 5
Drawn 5
Argentina goals 25
Germany goals 24
இறுதியாக இவ்விரு அணிகளும் சென்ற உலகக் கிண்ணத்தில் சந்தித்தது இதே போன்ற ஒரு காலிறுதிப் போட்டியில் தான்.
1-1 என்று சமப்பட்டிருந்த போட்டியை ஜெர்மனி பெனால்டி உதைகளில் வென்று அரையிறுதிக்கு சென்றது.
இந்த இருஅணிகளும் இதற்கு முன் ஒரு சினேக பூர்வ போட்டியில் இவ்வாண்டு மார்ச் மாதம் சந்தித்தபோது ஹிகுவேய்நின் கோலினால் ஆர்ஜென்டினா வென்றது.
இவ்வாண்டில் தான் விளையாடிய பத்து போட்டிகளிலும் ஆர்ஜெண்டீன வென்றுள்ளது.
ஜெர்மனி இன்றைய போட்டிக்கு முன்னர் விளையாடியுள்ளா ஆறு உலகக் கிண்ணக் காலிறுதிகளிலும் மொத்தமாக நான்கே நான்கு கோல்களைத்தான் அடித்திருந்தது.
எல்லாவற்றுக்கும் சேர்த்து இன்று ஒரே போட்டியில் நான்கு கோல்கள்.அதுவும் பலமான அணியாகத் தெரிந்த ஆர்ஜென்டீன அணிக்கெதிராக.
அதுபோல ஆர்ஜென்டீனா உலகக் கிண்ணப் போட்டிகளில் ஐரோப்பிய அணிகளை சந்தித்த வேளைகளில் 16 போட்டிகளில் நான்கே நான்கில் தான் வென்றுள்ளது (சமநிலைகளை சேர்க்கவில்லை)
அத்துடன் மரடோனாவின் பயிற்றுவிப்பில் ஆர்ஜென்டீனா விளையாடியுள்ள 23 போட்டிகளில் எந்தவொரு போட்டியும் சமநிலையில் முடிவடையவில்லை என்பதும் ஒரு முக்கிய விடயம்.
இந்த இரண்டு அணிகளையும் உலகக் கிண்ணம் ஆரம்பிக்குமுன் விமர்சகர்கள் பெரிதாகக் கணக்கெடுக்கவில்லை.
ஜெர்மனி இளம் அணியாக அதிகம் அனுபவம் இல்லாமலிருந்ததும்,தலைவர் பலாக் காயம் அடைந்து வெளியேறியதும் இதற்கான காரணங்கள்.
அதுபோல மரடோனாவின் ஆர்ஜென்டீனா தென் அமெரிக்க வலயத் தெரிவுப் போட்டிகளில் தட்டுத் தடுமாறித் தெரிவாகியதும் ஒரு காரணம்.
இன்று ஜெர்மனி அடித்த மரண அடி போல ஆர்ஜென்டீனா எப்போதும் உலகக் கிண்ணப் போட்டிகளில் வாங்கிக் கட்டியதில்லை.
இளைய வீரர்கள் காட்டிய உற்சாகத்தோடு அனுபவம் வாய்ந்த மிரோஸ்லாவ் க்லோசே அடித்த இரு கோல்களும் முக்கியமானவை.
க்லோசே இப்போது உலகக் கிண்ணத்தில் அதிக கோல்கள் அடித்தோர் வரிசையில் இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டார்.
14 கோல்கள். இன்று கருப்பு வைரம் பேலேயை முந்திவிட்டார்.
இன்னும் இரு கோல்கள் அடித்தால் பிரேசிலின் ரொனால்டோவின் உலக சாதனையை முறியடித்துவிடுவார்.
அடுத்த போட்டி
ஸ்பெய்ன் - பராகுவே..
ஆர்ஜெண்டீனாவே போனதுக்கு அப்புறம் என்ன உலகக் கிண்ணம் என்ற விரக்தியை எனக்கு இல்லாமல் பண்ண இருக்கும் இரு அணிகளில் ஒன்று ஸ்பெய்ன். (மற்றது நெதர்லாந்து)
நடப்பு ஐரோப்பிய சாம்பியன் - Euro 2008 Champions.
மிகத் திறமை வாய்ந்த, ஒப்பீட்டளவில் ஏனைய அணிகளை விட ஒழுக்கமான அணி.(அனேகமாக விருதும் இம்முறை ஸ்பெய்னுக்கே கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்)
ஸ்பெய்ன் மிக நீண்ட காலமாகவே உலகத்தில் கால்பந்தாட்டத்தின் பெரிய அணிக்கான அங்கீகாரத்துக்காக,ஒரு பெரிய கிண்ணத்துக்காகக் காத்திருக்கிறது.
1950ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் நான்காம் இடம் பிடித்த பின்னர் ஒருதடவை தானும் அரையிறுதியைக் கூட எட்டிப் பார்த்ததில்லை..
இம்முறை கிண்ணம் வெல்லவே சாத்தியமுண்டு என்று கருதும் பலரில் நானும் ஒருவன்.
ஆர்ஜென்டீனாவும் போன பிறகு இந்த ஸ்பெய்ன் அணியே ஒரே கதி..
வியா இருக்கும் வரை வெற்றி நிச்சயம்.. ;)
மிகத் திறமையான வீரர்கள்..David Villa, Torres, Fabregas, Llorente, Puyol,Casillas, Xavi, Xabi Alonso, Ramos, Capedevilla,Iniesta, Pique
முன் களம் மிக வேகமான,அதே வேளை கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரணிகளின் வியூகன்ப்களை சிதறடிக்கும் ஆற்றல் கொண்ட திறனுடையது.
உம் அபாரமான இரு பக்கமும் வேகமாக இயங்கக் கூடியவர்கள்.
பின் வரிசை ஒரு இரும்பு சுவர் போல. அவ்வளவு இலகுவில் எதிரணிகள் புகுந்து கோல் அடிக்க முடியாது.
இதுவரை இவ் உலகக் கிண்ணத்தில் ஒரே ஒரு கோல் தான் எதிரணிகளால் அடிக்கப்பட்டுள்ளது.
கோல் காப்பாளர் உலகின் மிகச் சிறந்த கோல் காப்பாளரான ஐகார் கசியாஸ்.
இதுக்கு மேல் ஸ்பெய்ன் பற்றி சொல்லவேண்டுமா?
பராகுவே அணியைப் பொறுத்தவரை இது அவர்களுக்கு முதலாவது உலகக் கிண்ணக் காலிறுதி.
இதுவே பெரிய சாதனையாக இருந்தாலும் தங்கள் லத்தீன் அமெரிக்க அண்ணன்களான உலக சாம்பியன்கள் பிரேசில்,ஆர்ஜென்டீனா,உருகுவே ஆகியோரைப் போல தாங்களும் பெரிய கால்பந்து வல்லரசாக மாற ஆசைப்படுவது நியாயம் தானே..
இவர்களிடமும் பெயர் குறிப்பிடக் கூடிய மாதிரி, உன்னிப்பாகக் கவனிக்கக் கூடிய நான்கு வீரர்கள் இருக்கிறார்கள்.
Riveros, Valdez, Alcaraz,Cardozo
பராகுவே அணியின் தலைவரும் கோல் காப்பாளருமான வில்லாரின் தன்னம்பிக்கையும் எப்போதும் புன் முறுவல் பூக்கிற அந்த முகமும் எனக்கு மிகப் படித்தவை.
இன்று வில்லார் ஸ்பெய்னுக்கு வில்லன் ஆகமாட்டார் என நம்புவோம்.
எனினும் ஸ்பெய்னின் அதிரடி,அதி வேகம் முன் பராகுவே பதறிக் கலங்கிப் போகும் என நம்புகிறேன்..
பராகுவே வென்றால் என்ன நடக்கும் என்று கேட்பவர்களுக்கு..
பராகுவேயின் பிரபல அழகியும் ஆதரவாளருமான லாரீசா ரிகேல்மே நிர்வாணமாக ஓடவுள்ளாராம்..
அதுக்காக ஸ்பெய்ன் தோற்பதா?
நல்ல கதை..
இன்னொரு புதிய செய்தி..
நேற்று கானாவுக்கு வில்லனான சுவாரெஸ் இனித் தொடர்ந்து உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கெடுக்க முடியாது என FIFA தடை விதித்துள்ளது.
இனி தடை விதித்தென்ன விதிக்காமல் விட்டென்ன?
கானா போனது போனது தானே..
சரி போட்டி ஆரம்பிச்சாச்சு.. நான் பார்க்கப் போகிறேன்..
நண்பர்ஸ்.. நீங்க வாசிச்சிட்டும் பார்க்கலாம்.. பார்த்திட்டும் வாசிக்கலாம்..
30 minutes
Spain 0 Paraguay 0