வெற்றி FM மீது தாக்குதல்
July 30, 2010
50
நான் அறிவிப்பாளர்/முகாமையாளராக கடமையாற்றும் வெற்றி FM வானொலி அடங்கியுள்ள கொழும்பில் அமைந்துள்ள Voice of Asia Networks நிறுவனத்தின் மீது இன்று இனம் தெரியாத ஆயுதம் தாங்கிய காடையர் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் எம் வெற்றி FM செய்திப் பிரிவு முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது.
இன்று அதிகாலை 1.20 அளவில் அலுவலகத்துக்குள் நுழைந்த 15 பேர் அடங்கிய முகம் மறைத்த ஆயுததாரிகள் செய்திப் பிரிவைக் குறிவைத்து,செய்திப் பிரிவு எங்கே உள்ளது என்று கேட்டு கடமையிலிருந்த வெற்றி செய்திப் பிரிவின் இரு செய்தி ஆசிரிய்ரகளைத் தாக்கிய பின் செய்தி அறைக்கு பெட்ரோல் குண்டுகளை எறிந்து, மேலும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்கள்.
அந்த வேளையில் ரஜினிகாந்த்,லெனின் ஆகிய இருவரையும் துப்பாக்கி முனையில் முழந்தாளிட்டு நிறுத்தியுள்ளார்கள்.
அதற்கு முதல் பாதுகாப்பு உத்தியோகத்தரைத் தாக்கிப் பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
வரவேற்பறை,தொலைகாட்சி நிலையத்துக்கான வழி ஆகிய இடங்களிலுள்ள கண்ணாடிகளை நொறுக்கிய பின்னர்,வானொலி கலையகங்கள் இருக்கும் பக்கமாக நுழைய முயன்றபோதும் வாயில்களை சேதப்படுத்திய பின் வெளியேறிவிட்டனர்.
தீயணைப்புப் படையினர் ஒன்றரை மணி நேரத்துக்குள் வந்தபோதும் தீ முற்றாக எரிந்து செய்திப் பிரிவினுள்ளே அனைத்தையும் சாம்பராக்கிவிட்டது.
செய்திகள்,தொலைக்காட்சி செயலிழந்த போதும் வெற்றி FM, Real Radio (ஆங்கிலம்),சியத FM(சிங்களம்) ஆகியன இயங்குகின்றன.
மேலதிக விபரங்கள்,படங்களை பின்னர் பதிவேற்றுகிறேன்.
உடனடியாக செய்திகளை வெளிப்படுத்தி,மக்களுக்கு அறியத் தந்த சக ஊடகங்களுக்கு நன்றிகள்.