July 27, 2010

மரங்களே மன்னியுங்கள்..

நேற்று மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய வேளை,எங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள பெரிய அழகான மூன்று மரங்கள் தறிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.


மனசு ஒரு கணம் நின்றுபோனது போல.. 
கம்பீரமாக நிமிர்ந்து நின்று காற்றுக்கு இலைகளை ஆட்டி அசைக்கும் அந்த மூன்று நண்பர்களும் எங்கள் உறவினர்கள் மாதிரி எனக்கு.
வாகனத்தை அப்படியே மெதுவாக நிறுத்திப் பார்த்தால் ஒரு பெரிய மரம் தரையோடு சாய்ந்திருந்தது.
அடுத்த இரண்டும் வெட்டப்பட்டு பத்திரமாகக் கீழே வீழ்த்தப்படுவதற்காக கயிறுகள் பிணைக்கப்பட்டிருந்தன.




வெட்டிக் கொண்டிருந்தவர்களிடம் (சிங்களத்தில்) "ஏன் வெட்டுகிறீர்கள்? எமது ஒழுங்கையில் நிற்பவை தானே?"என்று கேட்டேன். 


இந்த வீட்டை(எமது ஆறு வீடுகள் அடங்கிய சிறு தொடர்மாடித் தொகுதியை)கட்டும் நாளிலிருந்து இங்கேயே வளர்ந்து நெடிதுயர்ந்து நின்ற இம்மூன்று மரங்களும் அண்மையில் எழும்பிய புதிய தொடர்மாடிக் குடியிருப்பின் முன்னால் உள்ள மதில் சுவருக்கு ஆபத்தாம்.
எங்கள் அடுக்குமாடிக்கு முன்னால் இருந்தால் கூட என்னால் தடுத்து நிறுத்தமுடியும்.. இதற்கு ஒன்றும் செய்ய முடியாது.
மரத்தை வெட்டாமல் எதுவும் செய்ய முடியாதா? என நான் கேட்டபோது என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். 




பெருமூச்சோடு கீழே விழுந்து கிடக்கும் மரத்தையும் மேலே பரிதாபமாக கிளைகளை விரித்து சாவை எதிர்கொண்டிருந்த மரங்களையும் பார்த்தேன்.
மனசு பாரமாகிப் போனது


வீட்டுக்குப் போயும் இருப்புக் கொள்ளவில்லை. பல்கனியில் நின்று கவலையோடு மரங்களின் இறுதிக் கணங்களை அவதானித்துக் கொண்டிருந்தேன்.
என்ன ஆச்சரியம் மனைவியும் இது பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
என் செல்பேசியில் சில இறுதி நேரப் படங்களையும் எடுத்துக்கொண்டேன்.




எட்டு வருடங்களாகப் பழகிப் போன சூழல்.. இந்த மரங்களால் எமது மாலைகள்,பௌர்ணமி இரவுகள்,மழைப் பொழுதுகள்,பனி சாரலுடன் கூடிய காலைகள் எல்லாம் மேலும் அழகு பெறுவதுண்டு.
காற்றுக் கூட எம் வீட்டு ஜன்னல்களினூடு நுழைய முன்னர் இவற்றின் இலைகளை ஸ்பரிசித்து வருவதால் மேலும் இதமாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் மாலையில் நாங்கள் மூவரும் பல்கனியில் நின்று அளவளாவும் நேரத்தில் இந்த மரங்களும் எம்மோடு இணைந்து கொள்வது வழக்கமான ஒன்று.
மகனுக்கு நாங்கள் காட்டுகின்ற காக்கைகள்,கிளிகள்,சில குருவிகள்,அணில்கள் எல்லாம் பூத்துக் காய்த்துக் குலுங்கி நின்ற இந்த மூன்று மரங்களில் தான் தரித்து செல்லும்.


மூன்றில் ஒன்று பட்டர் ப்ருட் மரம், இன்னொன்று தேக்கு, மூன்றாவது அம்பரெல்லா..
யார்க்கும் தனி உரிமையில்லா வீதியில் வளர்ந்து நின்றவை என்பதால் எங்கள் ஒழுங்கையில் உள்ள அனைவருமே இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள்,காய்களை நுகர்வதுண்டு.


இவ்வாறு நேற்று முன்தினம் முன்வீட்டு அக்கா கொடுத்த இரண்டு பட்டர் ப்ருட் பழங்கள் இன்று எங்களுக்கு ஜூஸ் ஆகி இருக்கின்றன.




பார்த்துக் கொண்டிருக்கும்போதே வரிசையாக இரு மரங்களும் அடுத்தடுத்து நிலத்தில் வீழ்ந்தன.
மனதில் இனம்புரியாத கவலை.
நிலத்தில் வீழ்ந்து கிடந்த அவற்றைப் பார்க்கும்போது என் இயலாமையைப் பார்த்து அவை பரிகசிப்பதாகவும் தோன்றியது.


எந்த மதிலுக்கு இந்த மரங்கள் இருப்பதால் ஆபத்து என்று மரங்களைத் தறிக்க முற்பட்டார்களோ அதே மதிலின் மேலேயே மூன்றாவது மரம் விழுந்தது.


எம் நாட்டில் எவ்வளவோ இடம்பெற்றபோது எவ்வாறு எதையும் செய்ய முடியாமல் பார்த்து,பதறி,கவலையுற்று,பின் பதிவுகள் மட்டும் எழுதி மன சோகங்களைக் கொட்டித் தீர்த்தோமோ இம் மூன்று மரங்களின் வீழ்ச்சிக்கும் அவ்வாறே தான் முடிந்துள்ளது.


வீழ்ந்த மரங்கள் தந்த பாரிய இடைவெளி மேற்கில் மறைந்து கொண்டிருந்த மாலை சூரிய ஒளியை வழமையை விட உக்கிரமாக பல்கனியில் நின்ற எங்கள் முகங்களில் தெறிக்கச் செய்தது.
அரை மணி நேரத்துக்குள் மரங்கள் இருந்த சுவடே இல்லாமல் துண்டு துண்டாக அறுக்கப்பட்டு அகற்றப்பட்டு விட்டன.


நேற்று இரவு முழுவதுமே மனசு ஒரு நிலையாக இல்லை.
இன்று அலுவலகத்தில் இருக்கும் வரை அதைப் பற்றி யோசிக்க நேரமும் இருக்கவில்லை.
மாலையில் வீடு திரும்பி வாகனத்தை நிறுத்தும் நேரம் மூன்று மரங்களும் இல்லாத வெறித்துப் போன வீதி மனதை எதுவோ செய்தது.


எங்களுக்காவது மாலையில் நிழலும்,சில பல வேளைகளில் காய்களும் கனிகளும் தந்தவை. ஆனால் அந்தப் பறவைகளும் அணிலும்??
தங்கள் வழமையான இருப்பிடம் தரிப்பிடம் இல்லாமல் எங்கெங்கு தேடி அலைந்து கொண்டிருக்குமோ???


பதிவை இட்டுக் கொண்டே சுவைக்கும் பட்டர் ப்ருட் ஜூஸ் இனிப்பாக இருந்தாலும் தொண்டைக்குள் இறங்காமல் துக்கமாக தொண்டையை இறுக்கிக் கொள்கிறது.


மன்னியுங்கள் மரங்களே.. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

23 comments:

கன்கொன் || Kangon said...

:(

காலையில் வானொலியில் சொல்லும் போதே உங்களைப் பாதித்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன்....

// எந்த மதிலுக்கு இந்த மரங்கள் இருப்பதால் ஆபத்து என்று மரங்களைத் தறிக்க முற்பட்டார்களோ அதே மதிலின் மேலேயே மூன்றாவது மரம் விழுந்தது. //

மரங்கள் கூட அன்றே கொல்லத் தொடங்கிவிட்டன போலும்... :(

Unknown said...

மனதை தொட்ட உணர்வான பதிவு. மரக்கன்று நட முயலுங்கள் சுவருக்கு உள்ளே இடமிருந்தால் ....

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

வன்னி யுத்தம் ஞாபகத்துக்கு வருகிறது... ம்ஹீம்.. :(

Ramesh said...

http://www.lyrics5.com/videos.html?vid=YWeByufure0
இங்கு போய் மரம் காண்க வைரமுத்து
மனம் கொண்டு மரத்துப்போகாமல்
மரம் வளர்த்து மனம் வளர்ப்போம்

anuthinan said...

உண்மைதான் அண்ணா!!! இப்படி பல இடங்களில் நானும் கூட மௌனியாக நின்று இருக்கிறேன்!!! கால ஓட்டத்தில் மற்றவர்கள் மறந்து விடலாம், ஆனால், ஒன்றி உறவாடிய எங்களுக்கு மட்டுமே அதன் வெறுமை தெரியும்!!

//எங்களுக்காவது மாலையில் நிழலும்,சில பல வேளைகளில் காய்களும் கனிகளும் தந்தவை. ஆனால் அந்தப் பறவைகளும் அணிலும்??
தங்கள் வழமையான இருப்பிடம் தரிப்பிடம் இல்லாமல் எங்கெங்கு தேடி அலைந்து கொண்டிருக்குமோ???//

அவை மட்டுமல்ல நாமும் கூடதான் அண்ணா!!

நல்ல பக்திவு அண்ணா

balavasakan said...

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கிறது அண்ணா முன்பு நான் வசித்த வீட்டில் நின்ற மூன்று மாமரங்களையும் வெட்டி சாயத்து விட்டார்கள அண்ணா ஒன்றுமே செய்யமுடியவில்லை

Subankan said...

:(((

Kaviyarangan said...

சின்ன வயதிலிருந்தே ஒட்டி பயன்பெற்ற அம்பரெல்லா (Dwarf Ambarella) மரங்கள் இரண்டை பின்நாளில் நாமும் இழந்திருந்தோம் - இங்கு சீன சந்தைகளில் அம்பரெல்லாங் காயை பெற்று கொள்ளலாம் - அவற்றின் தோலை சீவுகின்ற போது வருகின்ற நுண் மணம் ஏதோ ஒரு ஏக்கத்தையும், சுகத்தையும், மெல்லிய பழையதொரு நினைவையும் தரும் - அவை ஒருகால் உயிரை கொன்றெடுக்கும். நினைவுகளில் இருக்கும் இழப்புகளை திரும்பி பார்க்காது செல்வது கடினம் தான் - இந்த மரங்களுக்கும் என் தாழ்வுகள்.

அஹமட் சுஹைல் said...

//ஒழுங்கையில் உள்ள அனைவருமே இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள்,காய்களை நுகர்வதுண்டு.//

அண்ணா உண்மைய சொல்லுங்க. பலநாற்கள் நிழல் தந்த மரம் தறிக்கப்பட்டது கவலையா...? இல்லை. இனி பழங்கள் காய்கள் கிடைக்காதே என்ற கவலையா..?

//எந்த மதிலுக்கு இந்த மரங்கள் இருப்பதால் ஆபத்து என்று மரங்களைத் தறிக்க முற்பட்டார்களோ அதே மதிலின் மேலேயே மூன்றாவது மரம் விழுந்தது.//

ஹைய்யோ ஹைய்யோ.....

// மூன்று மரங்களும் இல்லாத வெறித்துப் போன வீதி மனதை எதுவோ செய்தது.//
நிச்சயமாக அண்ணா எதோ பண்ணும் எனக்கும் நிறைய அனுபவம் இருக்கிறது.

LIC Agent Chennai said...

இன்று வீட்டிற்கு ஒரு மரம் நட்டாக வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.. அதைவிடுத்து இருக்கும் மரங்களையும் பலகாரணங்களுக்காக வெட்டிவீழ்த்துவது வேதனையளிக்கிறது. இயற்கையை சுத்தமாக அளித்துவிட்டு நாம் நிச்சயம் வாழமுடியாது!

Anonymous said...

மிகவும் உணர்வு பூர்வமான பதிவு....

ஆதிரை said...

இயலாமை...
கவலை...
ஏக்கம்...
:-(

Bavan said...

:(((

KUMS said...

மரங்களைத் தரிப்பவர்களை, அராபிய பாலைவனங்களில் சென்று வசிக்கச் செய்ய வேண்டும். அதுதான் சரியான தண்டனை.

'பரிவை' சே.குமார் said...

மனதை தொட்ட உணர்வான பதிவு.

Riyas said...

//மன்னியுங்கள் மரங்களே.. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.// லோசன் மனசைத்தொட்டது உங்கள் பதிவு..
மரங்களின் அருமை புரியா மனிதர்கள்.

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

Komalan Erampamoorthy said...

ஒருவருடய சுயனலத்துக்காய் மற்றவர்களுடய உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை.............மிதிக்கப்படுகின்றது. உங்கள் மரத்துக்கு ஏற்பட்ட நிலமை தான் ஒவ்வெரு இலங்கை தமிழனது நிலமை.................

yarl said...

படங்களை பார்க்கும்போதே நெஞ்சம் கனக்கிறது. உங்களுக்கு பிடித்த ஒரு மரத்தை நடுங்கள் (இடம் இருக்கா) ? அதை பார்த்தாவது மனம் ஆறலாம்.

அன்புடன் மங்கை

அஜுவத் said...

oh athuthaan vidiyalil thalaippanatho unmayaka nanum ippadi anupavam pattirukkiren.........

siva said...

hai loshan,

good article. but nothing will happen talking and writing about those trees. why can't we make a initiative to grow trees. since your are in media i think i will be good marketing campaign for your organization.

so plan a good marketing campaign for grow trees.

i think i will give a positive publicity to your organization.


now people are also aware about the environmental pollution and government also took some initial work to keep the city clean.

in this situation if you target go for the "green" initiative it may lead every body's focus on your organization



with thanks

siva
siva1810@yahoo.com

siva said...

hai loshan,

good article. but nothing will happen talking and writing about those trees. why can't we make a initiative to grow trees. since your are in media i think i will be good marketing campaign for your organization.

so plan a good marketing campaign for grow trees.

i think i will give a positive publicity to your organization.


now people are also aware about the environmental pollution and government also took some initial work to keep the city clean.

in this situation if you target go for the "green" initiative it may lead every body's focus on your organization



with thanks

siva
siva1810@yahoo.com

Ashwin-WIN said...

மிக உருக்கமான பதிவு.. கண்ணீர் விடுகிறேன்..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner