சரித்திரம் படைக்குமா இலங்கை அணி?

ARV Loshan
9


சங்கக்காரவின் சபதம் நிறைவேறுமா என்பதும், தோனியின் தோல்விகள் துடைக்கப்படுமா என்பதும் - அண்ணன் தம்பியரில் அசத்தப்போவது யார் என்பதும் இன்று காலை இன்னும் சொற்பவேளையிலிருந்து தெரியப்போகிறது.


இறுதியாக இவ்விரு அணிகளும் கடந்த முறை இலங்கையிலே ஒரு டெஸ்ட் தொடரிலே சந்தித்தபோது - இலங்கையிடம் கண்ட தோல்விக்கு பழித்தீர்க்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளது.

இலங்கையிடம் தோல்வி கண்ட அணியிலிருந்த சௌரவ் கங்குலி, தலைமை தாங்கியிருந்த அணில் கும்ப்ளே ஆகியோர் தற்போது இல்லை.

ஓய்வு வேண்டும் என்று (அல்லது வேறு ஏதாவது காரணம் இருந்ததோ தெரியாது) அந்தத்தொடரிலிருந்து விலகியிருந்த தோனி இப்போது தலைவராக...

இந்தியாவுக்கு 2011 உலகக்கிண்ணம் முடியும்வரை வேறு எந்த உள்நாட்டு டெஸ்ட் தொடரும் இல்லாத காரணத்தால் மும்மூர்த்திகளான டெண்டுல்கர், டிராவிட், லக்ஸ்மன் ஆகியோரை ஒன்றாகவோ, தனித்தனியாகவோ போட்டிகளில் பார்க்கும் வாய்ப்பு இந்திய ரசிகர்களுக்கு இதுவே இறுதியாக இருக்கும் எனக் கருதப்பட இடமுண்டு.

இதனால் இம்மூவரில் ஒருவரோ, இருவரோ தமது ஓய்வுபெறும் முடிவை இந்திய ரசிகர்கள் மத்தியில் அறிவிப்பர் என நினைக்கிறேன்.


3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு டுவென்டி டுவென்டி போட்டிகள் அடங்கிய முழுமையான தொடரொன்று விறுவிறுப்பைத் தருவதற்கு உத்தரவாதமளிக்கிறது. நீண்டகாலத்தின் பின்னர் இந்தியாவில் இலங்கை அணிக்கு இவ்வாறானதொரு பூரணமான தொடர் வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி தரும் விடயம்.

அவசர ஏற்பாடுகளாக, ஏதாவதொரு தொடர் ரத்தாகும் நேரத்தில் இரு கிரிக்கெட் சபைகளில் ஒன்று மற்றொன்றைத் தொடர்புகொண்டு இடைக்கால ஏற்பாடாக கிரிக்கெட் தொடரொன்றை ஏற்பாடு செய்வதே அண்மைக்கால வழக்கமாக இருந்துவந்துள்ளது.

அடுத்த உலகக்கிண்ணப் போட்டிகளை நடாத்தும் பிரதான நாடுகளாக இவை இருப்பதனால் இன்றும் முக்கியத்துவத்தையும் இந்தத்தொடர் பெறுகிறது. அதிர்ஷ்டவசமாக டெஸ்ட் தரப்படுத்தல்களில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ள இலங்கை அணிக்கு அந்த இடத்தை ஸ்திரப்படுத்தும் சவாலான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர் என்ற உலகத்துடுப்பாட்ட சாதனையாளர். இலங்கை அணியில் உலகின் பந்துவீச்சு சாதனையாளர் முரளீதரன்.

இருவருமே தத்தம் சாதனைப் பாதைகளில் அத்தனை மைல் கற்களையும் தாண்டிய வண்ணம் தடையின்றி பயணித்த வண்ணமே இருக்கின்றனர். சாதனைகளை மேலும் விஸ்தரித்துக்கொள்ளும் அரிய சந்தர்ப்பம் முரளிக்கும், சச்சினுக்கும்.

மறுபக்கம் ஊசலாடும் கிரிக்கெட் வாழ்க்கையில் தம்மை நிரூபித்து மேலும் கிரிக்கெட் நாட்களை நீடித்துக்கொள்ளப்போராடும் ராகுல் டிராவிட், V.V.S.லக்ஸ்மன் (டெஸ்ட்) & சனத் ஜெயசூரிய (ஒருநாள் & T20).

சமிந்தவாஸை ஒதுக்கியதால் அனுபவமற்ற ஆனால் ஆற்றலுடைய இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள்.
நுவன் குலசேகர, திலின துஷார இருவரும் அண்மைக்காலமாக முன்னேறிவரும் இரு வேகப்பந்து வீச்சாளர்கள். அண்மையில் நியூசிலாந்து அணியை உருட்டியதிலும், முன்னதாக பாகிஸ்தான் அணியைப் பதம் பார்த்ததிலும் தம்மை நிரூபித்தாலும், இந்திய ஆடுகளங்கள் இவர்களை நிச்சயம் சோதிக்கும்.

அதிலும் இந்தியாவின் பலம் வாய்ந்த அச்சுறுத்தும் துடுப்பாட்ட வரிசைக்கெதிராக இவர்கள் எதிர்கொள்ளப்போவது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

இந்தியாவுக்கு சாஹிர்கானின் மீள்வருகை பெரும் பலம் எனினும், அவரோடு இணை சேரப்போகிற இஷாந்த் ஷர்மா அண்மைக்காலமாக பிரகாசிக்கவில்லை; ஸ்ரீசாந்த் என்ன சொல்வார் என்று யாருக்குமே தெரியாது.
நம்பகமான இலங்கையின் துடுப்பாட்டவரிசையின் நால்வர் சரியாக செட் ஆனால் சுழல்பந்து வீச்சாளர்களையே நம்பவேண்டியிருக்கும்.

நால்வர் : குமார் சங்கக்கார, மகேல ஜெயவர்த்தன, திலான் சமரவீர, திலகரட்ண டில்ஷான்

மிக முக்கிய சிறப்பம்சம் இரு அணிகளின் தலைவர்கள். உலகின் தலை சிறந்த, நம்பகமான இரு துடுப்பாட்ட வீரர்களும், விக்கெட் காப்பாளர்களும் தலைவர்களாக ஒரு முழுமையான தொடரில் மோதுகின்ற முதலாவது சந்தர்ப்பம் இது.

இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் காக்காவிட்டாலும் இந்தியத் தலைவர் தோனிக்கு விக்கெட் காப்பு வழங்கும் அதே அழுத்தத்தை சங்ககாரவின் 3ம் இலக்கத் துடுப்பாட்டப்பதவி வழங்கப்போகிறது.

உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வரிசையாகக் கருதப்படும் இந்தியாவின் சேவாக், கம்பீர், லக்ஸ்மன், டெண்டுல்கர், டிராவிட், யுவராஜ்சிங், தோனி என்ற பெயர்களோடு ஒப்பிடும்போது இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை இணையானதாகவும் தெரியவில்லை, அச்சுறுத்துவதாக இல்லை.

எனினும் உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களாகக் கருதப்படக்கூடிய நால்வர் இலங்கை அணியின் துடுப்பாட்டத் தூண்களாக விளங்குவதால் இலங்கை அணியின் திறமையைக் கொஞ்சம் எதிர்பார்த்திருக்கலாம்.

டில்ஷானின் அதிரடி ஆரம்பம், மகேல, சங்கக்காரவின் ஓட்டங்களை மலையாகக் குவிக்கும் நம்பகத்தன்மை, சமரவீரவின் நின்றுபிடித்தல் என்பன இளமையுடன் இணையவிருக்கின்றன.

மறுபக்கம் இந்திய அணியின் சேவாக், கம்பீரின் அதிரடி – சச்சின் என்ற 20 வருட அனுபவ சாதனை, தோனி, யுவராஜின் அதிரடிகளுடன், டிராவிட் லக்ஸ்மன் என்ற அனுபவ ஆட்டக்காரர்களும் சேர்கையில் இந்தியத்துடுப்பாட்டம் ஒப்பீட்டளவில் பலமாகவே தெரிகிறது.

தலைவர் குமார் சங்கக்கார, மகேல ஜெயவர்த்தன, திலகரட்ண டில்ஷான், திலான் சமரவீர என்ற அந்த நால்வரும் ஒரே நேரத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியொன்றைப் பரிசளிக்கலாம்.

எனினும் இந்திய ஆடுகளங்களுக்கேயுரிய சுழல்பந்து வீச்சுக்கான சாதகத்தன்மை இந்தத்தொடரை தீர்மானிக்கும் மிக முக்கியமான விஷயமாக அமையலாம்.

உலகின் தலை சிறந்த சுழல்பந்துவீச்சாளராக முரளீதரன் இருந்தாலும் கூட, இந்திய அணிக்கு எதிராக இந்திய மண்ணில் முரளி பெரிதாக இன்னும் சாதிக்கவில்லை. மற்றொரு ஜாம்பவானும் முரளியின் சமகாலப் போட்டியாளாராக விளங்கியவருமான ஷேன்வோர்னும் இதே போலத்தான். அவர் இறுதிவரை தன்னை இந்தியாவில் வைத்து நிரூபிக்கமுடியாமலே ஓய்வுபெற்றார்.

முரளியால் முடியுமா?

இந்திய மண்ணில் வெளிநாட்டு சுழல்பந்து வீச்சாளர்கள் யாருமே பெரிதாக சாதித்ததில்லை. முரளி, ஷேன் வோர்ன் கூட இதற்கு விதிவிலக்கில்லை. அவ்வளவு தூரம் இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் சுழல்பந்து வீச்சாளர்களை பின்னியெடுத்துவிடுவார்கள்.

முரளிக்கு இதுவே இந்திய மண்ணில் டெஸ்ட் விளையாடக்கூடிய இறுதி சந்தர்ப்பமாக இருப்பதனால் இம்முறையாவது தனது சாதனை முத்திரையைப் பதிக்க விரும்புவார்.

இவ்வாறு முரளியின் சிறப்பான பெறுபேறுகள் வெளிப்படுத்தப்பட்டால், இந்திய மண்ணில் இலங்கை தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை மட்டுமன்றி, தொடர் வெற்றியை பெறவும் சாத்தியமுள்ளது.

மறுபக்கம் இந்தியாவின் துடுப்புச் சீட்டாக சர்ச்சைகளின் மன்னனாக, சர்ச்சைகள், வம்புகளைத் தன் உச்சந் தலையிலேயே முடிந்து வைத்துள்ள ஹர்பஜன் சிங்.

இந்திய மண்ணில் ஹர்பஜன் ஒரு ராஜா! அவரது பந்து ஒவ்வொரு ஆடுகளங்களிலும் பேசி விளையாடும் எனினும் அண்மைக்காலத்தில் ஹர்பஜனின் சர்ச்சைகள் பேசப்படுமளவுக்கு பந்துவீச்சு சாதனைகள் பேசப்படுமளவு இல்லை.


இரண்டாவது சுழல்பந்துவீச்சாளர் தான் இரு அணிகளுக்குமே உள்ள கேள்வி. அமித் மிஷ்ரா, அஜந்த மென்டிஸ் ஆகிய இருவரையும் முந்திக்கொண்டு இடதுகை சுழல்பந்து வீச்சாளர்களான ப்ரக்யான் ஓஜா, ரங்கள ஹேரத் ஆகியோர் அணியிலே இடம்பிடிப்பார்கள் எனக் கருதப்படுகிறது. ப்ராக்யான் ஓஜாவின் முதல் போட்டியாக இது அமையும்.

இலங்கை அணித்தெரிவு பற்றிய மற்றொரு விவாதம் - அடுத்த சுழல்பந்துவீச்சாளர் அஜந்த மென்டிசா, ரங்கன ஹேரத்தா என்பதே!

மென்டிஸ் இந்திய அணியைப் பலதடவை சுருட்டி அள்ளியவர்; எனினும் இறுதியாக இலங்கையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் தொடரில் இந்திய அணியினால் துவம்சம் செய்யப்பட்டவர்.

ஹேரத் அண்மையில் தன்னை வெளிப்படுத்தியவர். இடதுகை சுழல்பந்து வீச்சாளர் என்பதனால் அணியில் தெரிவுசெய்யப்பட வாய்ப்புக்கள் உண்டு.


இந்தியா முன்னர் மென்டிசுக்கு எதிராகத் தடுமாறியிருந்தாலும், இறுதியாக மெண்டியை இலகுவாகக் கையாண்டிருந்தார்கள். அத்துடன் இடதுகை சுழல்பந்து வீச்சாளர்கள் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு சிரமம்கொடுத்து வந்துள்ளார்கள் என்பதும் ஹேரத்துக்கு வாய்ப்பாக அமையலாம்.

இலங்கை குழுவில் உள்ள நான்கு விக்கெட் காப்பாளர்களில் மூவராவது முதல் போட்டியில் விளையாடுவார்கள் என்கிறார் அணித்தலைவர் சங்கக்கார.

எனினும் உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளர் என்று சங்கக்காரவினாலேயே பிரகடனப்படுத்தப்பட்ட பிரசன்ன ஜயவர்தனவுக்கும், முதல் தடவையாக குழுவுக்குத் தெரிவான கௌஷால் சில்வாவுக்கும் இடையில் போட்டி இருப்பதாக சங்கக்கார நேற்று பேட்டி அளித்திருப்பது ஆச்சரியம்.

கௌஷால் சில்வா துடுப்பாட்டத்திலும் வல்லவர்; A அணிப் போட்டிகளிலும், உள்ள10ர் போட்டிகளிலும் தன்னை நிரூபித்தவர்ளூ எனினும் ஜயவர்த்தனவும் துடுப்பெடுத்தாடக் கூடியவராயிற்றே. ஏன் இந்தக்குழப்பம்? துடுப்பாட்டத்தை பலப்படுத்தவா?


அணியின் சமபலத்தைப் பொறுத்து அணியின் உள்ளடக்கத்தில் பிரசன்ன ஜெயவர்த்தன, சகலதுறை வீரர் அன்ஜெலோ மத்தியூஸ் ஆகியோரின் இடங்கள் தீர்மானிக்கப்படும்.

குழாமிலுள்ள ஏனையோர் தேவைகளுக்கேற்ப உள்ளடக்கப்படுவர் என நம்பலாம். மத்திய வரிசையில் திலின கண்டம்பியும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக தரங்க பரண விதாரவையும் - வேகப்பந்து வீச்சாளர்களாக நுவான் குலசேகர மற்றும் திலான் துஷாரவும் தங்கள் இடங்களை எடுத்துக்கொள்வர் என்பது நிச்சயம்.

இந்தத்தொடரில் இலங்கை அணி இன்னொரு சாதனைக்காவும் அதிதீவிர வேட்டையோடு காத்திருக்கிறது. இதுவரை தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் மட்டுமே இலங்கையால் டெஸ்ட் போட்டி ஒன்றிலேனும் வெற்றிபெற முடியவில்லை.

இம்முறையாவது இதைச் சாத்தியமாக்கி சாதிக்க முடிகிறதா பார்க்கலாம்!

இன்னொரு கவனிக்கவேண்டிய விஷயம் - இம்முறை எந்தவொரு போட்டியுமே சென்னையிலோ, தென் பகுதிகளிலோ இல்லை (இலங்கை கிரிக்கெட் சபையின் சிறப்பு வேண்டுகோளுக்கிணங்க என்று கேள்வி)

ஒருநாள் தொடர் ஆரம்பிக்கும் நேரம் இருபதாண்டுகள் கடக்கக் காத்திருக்கும் மற்றொரு சாதனை வீரர் சனத் ஜெயசூரியவை நாம் பார்க்கலாம்.

கணுக்கால் உபாதைக்கு ஆளாகியிருந்த தில்ஷானும் குணமடைந்திருக்கிறார் என்பதும், இந்திய வீரர்கள் எல்லோரும் பூரண சுகம் என்பதும் இரு அணிகளுக்கும் ஆறுதல்.

சங்கா இந்திய மண்ணில் கால்பதித்தவுடன் சொன்னது எனக்கு ஒரு கவிதை போலுள்ளது -

இதுவரை நாம் ஒரு போட்டியிலும் இந்தியாவில் வெல்லவில்லை என்பதால் இறுதிவரை போராடுவோம்;அழுத்தங்கள் இல்லை. இந்தியா இதுவரை தோற்கவில்லை என்பதனால் தோற்காமலிருக்க போராடவேண்டும்;அவர்களுக்கே அழுத்தம் இருக்கிறது.


பிற்சேர்க்கை @ 10:16

ஆரம்பத்திலேயே இலங்கை அணித் தெரிவு மூலமாக ஒரு அதிர்ச்சி..

வழக்கமான ஆரம்ப வேகப்பந்துவேச்சு ஜோடி குலசேகர&துஷாரவுக்குப் பதிலாக அனுபவம் குறைந்த தம்மிக்க பிரசாத்&சானக வெலகெதர அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

வெலகெதர தன்னை அணிக்குள் கொண்டு வந்ததை இன்று இப்போதே எடுத்துள்ள முதல் மூன்று முக்கிய விக்கெட்டுக்கள் மூலமாக நிரூபித்துள்ளார். அவரது line & length அற்புதம்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெலகேதரவை அடுத்த வாஸ் என்று இப்போதே சொல்வது கொஞ்சம் ஓவர் தான் என்ற போதும் கலக்குவார் என்றே தெரிகிறது.
ஆனால் பிரசாத்துக்குப் பதிலாக குலசெகரவையே எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இறுதியாக நடைபெற்ற தொடரில் தொடரின் சிறப்பாட்டக்காரராக தெரிவானவர் குலசேகர.

இந்திய வீரர்கள் புதிய பந்துவீச்சாளர்களுக்கு தடுமாறுவதாலேயே இந்த தெரிவா?
நான் ஊகித்தபடியே ஹேரத் மெண்டிசை முந்திவிட்டார்.

இந்திய துடுப்பாட்ட முன்வரிசை சரிந்துவிட்டது.
சச்சினும் போயே விட்டார். இந்த மைதானத்தில் இலங்கை அணிக்கெதிராக சச்சின் விளையாடியுள்ள நான்கு இன்னிங்க்சில் மொத்தமாகப் பெற்றுள்ளது 54 ஓட்டங்கள் மட்டுமே.

இதே விதமாக இலங்கை தொடர்ந்து பந்துவீசினால்.. இலங்கை சரித்திரம் படைக்கும்..
அடடா.. அடுத்த விக்கெட்டும் போயே போச்சு..

India 32/4...

Post a Comment

9Comments

Please Select Embedded Mode To show the Comment System.*