இருக்கிறம்-அச்சுவலை சந்திப்பு - எனது பார்வை..

ARV Loshan
48







நேற்றைய இருக்கிறமின் அச்சுவலை சந்திப்பு பற்றியே இன்று ஒரே பரபரப்பு..
அனேகமாக அனைவரது பதிவுகளையும் வாசித்துள்ளேன்.. பலபேருக்கு ஏமாற்றம். பல பேருக்கு கோபம்.

தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை எந்தவொரு ஏமாற்றமோ, கோபமோ இல்லை. காரணம் இது இப்படி தான் நடைபெறும் என்பது நான் ஏற்கெனவே எதிர்பார்த்ததும் அறிந்ததும்..

ஆரம்பத்தில் சஞ்சித்(இருக்கிறம் இணை ஆசிரியர்) இப்படி ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதாக சொல்லி பதிவர்களையும் ஊடகத்தினரையும் இணைப்பதாக இந்த சந்திப்பு அமையும் என்றும் ஒரு சந்திப்பு நிகழ்வாக இது அமையுமே தவிர வாத-விவாதங்களுக்கு இடம் அமையாதென சொல்லி இருந்தனர்.

இதனால் தான் நானோ இல்லாவிடில் வந்தியத்தேவனோ இது பற்றி ஆரம்பத்தில் பதிவுகள் இட்டபோது இதை வலைப்பதிவர் சந்திப்பு என்று எந்தவொரு இடத்திலும் குறிப்பிடவில்லை.

தாக சாந்தியும் உண்டு என அவர்கள் சொன்னபோது, நான் அதுபற்றி எந்த மறுப்பும் சொல்லவிரும்பவில்லை.அது அவர்களின் ஏற்பாடு.. விரும்பியோர் குடிக்கலாம்..குளிக்கலாம்.. இல்லை என் போல மறுக்கலாம்..

இது பதிவர்களுக்கான சந்திப்பு இல்லை என்பதாலேயே நான் என் சார்பான கருத்தாக எல்லாருக்கும் அழைப்பு மின்னஞ்சலாகவோ, தனிப்பட்ட அழைப்பாகவோ அனுப்பப்படவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.
நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு பற்றி பேச்சு வந்தபோதும் ஒரு கெட் டு கெதர் போலவே இது இருக்கப் போவதனால் சில பேச்சுகள் இருக்கும், வெளிநாட்டிலிருந்து சிலர் பேசுவர்; வேறு விஷயங்கள் இருக்காது என்று இருக்கிறம் தரப்பில் சொல்லப்பட்டது.

நான் என்னுடைய நெருக்கமான சில நட்புப் பதிவர்களைக் கூட வலியுறுத்தி அழைக்கவில்லை என்பதிலிருந்து கடந்த முறை பதிவர் சந்திப்புக்கும் நேற்றைய அச்சுவலை சந்திப்புக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்ந்திருப்பீர்கள்.


இருக்கிறம் தங்கள் தெளிவான நோக்கத்தை வெளிப்படுத்தியதாகவே நான் உணர்ந்தேன். அவர்களுக்கு பதிவர்கள்,எழுத்தாளர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. இந்த சந்திப்பின் நோக்கம் அதுவே. அதுபோலவே இலத்திரனியல் ஊடகங்களின் ஆதரவும் அவசியம். எம்மிடையே ஏற்படுத்தப்படும் இணைப்பின் மூலம் எல்லாவற்றையும் சாதிக்க நினைத்தார்கள்.
இதில் தவறேதும் இருந்ததாக நான் எண்ணவில்லை.

பல பதிவர்கள் முதல் பதிவர் சந்திப்பை போலவே இதனை எண்ணி நிறைய எதிர்பார்த்ததே ஏமாற்றத்துக்கான காரணம் என நான் எண்ணுகிறேன்.

Cowboy மது நேரடி ஒளிபரப்புக்கான ஆயத்தம் செய்கிறார் என்றவுடனேயே நான் நண்பர் வந்தியிடம் கேட்டது "ஏன் இதற்கு இந்த ஏற்பாடு எல்லாம்??"

எந்தவொரு நிகழ்வையும் நல்லபடி 'பயன்'படுத்தவேண்டும் என்ற கருதுகோள் என்னிடம் எப்போதுமே உண்டு என்பதால் எந்தவொரு ஏமாற்றமும் எனக்கு இல்லை.
அது அது அப்படி எப்படி வருகிறதோ அதன் போக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என நினைப்பவன் நான்..

நண்பர்களை சந்தித்தேன்.. பல புதியவர்களை முதல் தடவை சந்தித்தேன்..
பல நண்பர்களோடு நீண்ட நாட்களுக்குப் பின் உரையாடச்க்கொடிய வாய்ப்பும் கிட்டியது.

என் ஒலிபரப்புத் துறை குருக்களான திரு.எழில்வேந்தன்,திரு.நடராஜசிவம் ஆகியோரை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு, தயானந்தா அண்ணா, என்னுடன் பணியாற்றிய குருபரன் அண்ணா ஆகியோரது குரல்வழியான சந்திப்பு என்று மகிழ்ச்சிக்குரிய பல நிகழ்வுகள்..

வித்தியாதரன் அவர்களின் அனுபவப் பகிர்வுகள் தந்த பயன்..
(எங்கள் செய்தி ஆசிரியர்கள் அனைவரையும் அங்கே வர செய்திருக்கவேண்டும் என்று பின்னர் தான் நினைத்தேன்)

அவரது துணிச்சலுக்காகவும் சில விஷயத் தெளிவுக்காகவும் நான் மிக மரியாதை வைத்துள்ள வித்தியாதரன் அவர்கள் குறிப்பிட்ட பல விஷயங்கள் உண்மையாக இருந்தாலும், இலங்கையில் செய்தி தாள்களில் புதுமை புகுத்துகிறோம் என்று, இந்திய சஞ்சிகைகளின் பாணியில்
"அராலியில் நேற்று டுமீல்", "கொழும்பில் பகீர்" என்று தலைப்பு செய்திகளை வேடிக்கை ஆக்கியவர் என்று எனக்கு அவர் மீது தனிப்பட்ட விமர்சனமும் உள்ளது.

உரையாற்ற பதிவர்கள் எவரையும் அழைக்காதது (வைத்தியரை தவிர.. நான் அழைக்கப்பட்டது ஒலிபரப்பாலனாக.. மருதமூரான் யாழ்தேவி திரட்டி சார்பாக) ஒரு பெரும் குறையாக எனக்கு இப்போது தொடருகிறது. அப்போதே தோன்றி இருந்தால் சன்ஜீத்தை அழைத்து சொல்லி இருப்பேன்.

வைத்தியர் முருகானந்தத்தின் உரையை நான் தாமதமாக சென்றதால் தவற விட்டு விட்டேன்.
மற்றும்படி சில போரடித்த உரைகள், சில இருக்கிறம் பற்றிய கருத்துரைகள் தவிர எல்லா உரைகளையும் அமைதியாக ஓரிடத்தில் இருந்து அவதானிக்க கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

பின்னால் இருந்த ஜல்லிப்புக்கள்,ஜில்லிப்புக்களில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன்.உரைகளின் பின்னர் கல கல உரையாடல்களில் இணைந்து கொண்டபோது பல வேடிக்கைகள்..பல நகைச்சுவைகள்.. (இவை போதுமெனக்கு???)

உறுத்தலாக தோன்றும் சில விஷயங்களை சொல்லாவிட்டால் இன்றிரவு சாப்பிட்ட இடியப்பம் சீரணிக்காது..

கல்யாண வீடுகள் தொடக்கம் கல்லூரி ஒன்றுகூடல் வரை வந்துள்ள தண்ணியடிக் கலாசார ஒன்றுகூடல்களை ஒன்றுமே சொல்லாத சமுதாய சீர்திருத்தவாதிகள் சிலர் அச்சுவலை சந்திப்பைக் காரணம் காட்டி சாடுவது ஏன்?

குடித்து ருசித்த சில நல்லவர்கள் இருக்கிறம் குழுவுக்கு நன்றிப் பதிவுகள் போடாதது ஏன்? (முதலிலேயே சாட்டையடிகள் விழுந்ததாலா?)

இவ்வளவுக்கும் நான் குடிப்பவனல்லன்.. அத்துடன் குடிப்பவர்களை வெறுப்பவனுமல்லன்.

நான் இருக்கிறம் இதழுக்கு ஆக்கங்கள் வரைந்தாலும் இடித்துரைக்க என்றும் தயங்காதவன்.. எனினும் ஒருவராவது கருத்துரை பகிரும் நேரத்தில் இது பற்றி அங்கு எடுத்துரைக்கவோ,கேள்வி கேட்கவோ இல்லை.. அது ஏன்?
நாகரிக நோக்கமோ?

ஆனாலும் இறுதியாக என்னுடன் பயணித்த சில நண்பர்களுக்கும் முன்பு என்னுடன் பேசிக் கொண்டிருந்த சிலருக்கும் முன்பே சொன்னேன்..
கடுமையான விமர்சனப் பதிவுகள் வரும் பாருங்கள் என்று..

தாக சாந்தி பற்றி பதிவுகளில் போட்டபோது பின்னூட்டங்களில் அதற்காகவே வருவோம் என்று சொன்ன பலர் ஞாபகம் வருகிறார்கள்.. அவர்களும் சேர்ந்து இருக்கிறமைக் கும்முவது எனக்கு பதிவுலக நியாயமாகப் படவில்லை.

மு.மயூரன், Cowboyமது, கோபி, யோகா, அருண், கீர்த்தி - சிந்தனை சிறகினிலே போன்றோரின் பதிவுகளின் நியாயமான சில ஆதங்கங்களை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் யாரும் இதை இருக்கிறம் ஏற்பாடு செய்த நிகழ்வு என்ற பின்னணி தாற்பரியத்தை உள்வாங்காததன் காரணம் 'சந்திப்பு' என்ற வார்த்தையா எனத் தெரியவில்லை..

எனினும் அனைவர் சார்பாகவும் இருக்கிறம் குழுவுக்கும், நிறுவனத்துக்கும் நன்றிகள்.. ஏற்பாட்டுக்கு..

பரபரப்பிலே, பதிவுகளின் சூட்டிலேயும் இருக்கிறமுக்கு விளம்பரம் வந்துவிட்டது.. அது பதிவுலகின் ஒரு கைங்கர்யமாக அமையட்டும்..

ஊர் இரண்டு.. கூத்தாடிகள் சிரிக்கிறார்கள்..

மழை, சேறு, சகதி, ஈரம், தண்ணி, போதை, இழுபறி, தொழினுட்பத் தடங்கல், எதிர்பார்த்த ஆரோக்கிய விவாதங்கள்,கருத்துப் பரிமாறல்கள் இல்லாமை போன்ற பல குறைகள் இருந்தாலும் (இவற்றை எல்லாம் விலாவாரியாக பல பதிவர்கள் சொல்லி விட்டார்கள்) ஒரு முக்கிய தேவைப்பாட்டை எல்லா இலங்கைப் பதிவர்களும் உணர்ந்துள்ளார்கள் என்பது தெளிவு.

இரண்டாவது பதிவர் சந்திப்பே அது... யார் எங்கே நடத்தப் போகிறார்கள்? போகிறோம் என்பது கேள்வி..

யார் எங்கே எப்போது ஏற்பாடு செய்தாலும் ஒரு விஷயம்..

அனைவரும் எம்மைக் கூர்ந்து நோக்குகிறார்கள்..

அடுத்த பதிவர் சந்திப்பை (கவனியுங்கள் பதிவர் சந்திப்பு) ஏற்பாடு செய்வோர் மிக நுணுக்கமாக, அனைத்து விஷயங்களையும் கவனித்து,உள்வாங்கி, விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனத் திடத்தோடு ஏற்பாடு செய்ய வேண்டும்.



Post a Comment

48Comments

Please Select Embedded Mode To show the Comment System.*