அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடர் தந்த தோல்வியிலிருந்து இந்திய அணி பாடங்கள் கற்றதோ இல்லையோ, இலங்கை அணியை எப்படியாவது தோற்கடித்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் டெஸ்ட் போட்டிகள் இடம்பெறுவதால் உடனடியாக அணிக்கட்டமைப்பை மாற்றக்கூடிய வாய்ப்பும் தேவையும் இந்திய அணிக்கு.
இலங்கை அணியும் தமது அணியைக் கொஞ்சம் மெருகேற்றிக்கொள்ளவேண்டும். எனினும் மும்பை புயலும், மழையும் இலங்கையின் பயிற்சிகளை இன்றுவரை அனுமதிக்கவில்லை.
இந்திய டெஸ்ட் அணியைப் பொறுத்தவரையில் ஒருநாள் அணியைப் போலல்லாமல், உறுதியான, மாற்றங்கள் தேவையில்லாத அணி.
இந்திய வேகப்பந்து வீச்சுத் துருப்புச்சீட்டான சஹிர் கானும் சுகத்துடன் மீண்டும் அணிக்குத் திரும்புவதால் பந்துவீச்சாளர்களிலும் மாற்றங்கள் தேவையில்லை.
தேர்வாளருக்கு அணியின் பதினோருவரைத் தெரிவு செய்வதில் எந்த சிரமும் இல்லைத் தான்.எனினும் பெயருக்காவது பதினைந்து பேரை தெரிவு செய்ய வேண்டுமே.
அங்கே தான் குழம்பி இருக்கிறார்கள்.குழப்பியும் இருக்கிறார்கள்.
இறுதியாக இந்தியாவில் இடம்பெற்ற டெஸ்ட் சுற்றுலாவான இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுலாவுக்கு அறிவித்த இந்தியக் குழுவிலிருந்து ஒரே ஒரு மாற்றம் தான் செய்துள்ளார்கள்.
முனாப் படேலை வெளியே அனுப்பி யாரும் எதிர்பாராதவகையில் ஸ்ரீசாந்த் என்ற குழப்படிகார பையனை அணிக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.
முனாபை வெளியே அனுப்பியதில் இந்திய ரசிகர்கள் பூரண திருப்தியாக இருப்பார்கள்.என்னதான் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்தாலும் சர்வதேச மட்டத்தில் சொதப்புவதில் அவருக்கு நிகர் அவரே தான்.
ஆனால் ஸ்ரீசாந்த்?
என்ன சாதித்துள்ளார்? ஏன் எடுத்தார்கள்? வேறு யாருமே இல்லையா?
இறுதியாக இந்திய அணிக்கு ஸ்ரீசாந்த் விளையாடி 19 மாதங்களாகின்றன.
இந்த இடைவெளியில் பத்து போட்டிகளில் வெறும் 28 விக்கேட்டுக்களையே வீழ்த்தியுள்ளார். இறுதியாக விளையாடிய முதல்தர போட்டியில் 23 ஓவர்கள் பந்துவீசியும் விக்கெட் எதனையும் எடுக்கவில்லை.
ஹர்பஜனிடம் அறை வாங்கியதும், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி இந்திய கிரிக்கெட் சபையிடம் இறுதி எச்சரிக்கை வாங்கியதையும் தவிர ஸ்ரீசாந்த் என்ற வீணாய்ப்போன விளையாட்டு வீரர் செய்த சாதனைகள் எவையும் இல்லை.
மீள்வருகையில் ஒருநாள் போட்டிகளில் சாதித்த ஆஷிஷ் நெஹ்ராவையோ, சிங், தியாகி அல்லது பிரவீன் குமார் ஆகியோரில் ஒருவருக்காவது வாய்ப்பை வழங்கி இருக்கலாம்.
இன்னும் ஒரு தடவை பிரச்சினையில் மாட்டினால் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அரோகரா.
அணியில் நிச்சயமான இடம் உள்ளவர்களைத் தவிர ஏனையோரான தமிழக வீரர்கள் சுப்பிரமணியம் பத்ரிநாத், முரளி விஜய், பிரக்யான் ஓஜா, ஸ்ரீசாந்த் ஆகியோர் நிச்சயமாக விளையாடுவது சந்தேகமே.(யாராவது காயமடைந்தால் அல்லது இறுதி நேர சுகவீனம் ஏற்பட்டால் தவிர )
இந்த நிலையில் தமிழக வீரர்கள் இருவரினதும் தெரிவு பற்றி சில அதிருப்திகள் நிலவுகிறது.
இருவருமே ஓட்டங்களை மலையாகக் குவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.நிச்சயமாக அணிக்குள் அடுத்து வரவேண்டியவர்கள்.
ஆனால் இறுதி அணியில் விளையாட முடியாது.. மேலதிக வீரர்களாக களத்தடுப்பில் ஈடுபட மட்டுமே தேவை என்ற நிலையில் இவர்களை அஹ்மேதாபாத் வரை அழைத்து செல்வதில் அர்த்தமென்ன?
நான் பத்ரியின் ரசிகன் என்ற வகையில் இந்திய அணியில் விளையாடினால் மகிழ்ச்சி தான்.. ஆனால் வாய்ப்பில்லாமல் சும்மா குழுவில் மட்டும் சேர்த்துக் கொண்டு திரிவதில் என்ன இருக்கப் போகிறது?
முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான அணி இது என்பது இங்கு முக்கியமானது.
இந்தவேளையில் தமிழக அணி ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் முக்கியமான இரு அணிகளை சந்திக்கிறது.
முதலாம் டெஸ்ட் போட்டி நேரத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை பஞ்சாபிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் காலப்பகுதியில் ஹிமாச்சலப் பிரதேச அணியை ஹிமாச்சலத்திலும் சந்திக்கிறது.
தமிழக அணியின் முக்கிய தூண்களை (இருவரும் இப்போது நடைபெறுகின்ற குஜராத் அணிக்கெதிரான போட்டியிலும் அரை சதங்களை எடுத்துள்ளார்கள்) இல்லாமல் செய்வது ஒரு வகை சதியோ என்றும் தமிழக கிரிக்கெட் நிர்வாகிகள் சிலர் முனுமுனுத்ததாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன.
ஆனால் ஸ்ரீக்காந்த் தேர்வாளர் குழுவின் தலைவராச்சே.. எப்படி?
சிலவேளை சேவாக்,கம்பீர்,யுவராஜ் மூவரும் காயங்களைக் காவிக்கொண்டே திரிவதால் எங்கே உடைந்து விழுவார்களோ என்ற பயத்தினாலேயே இவர்கள் குழுவுக்குள் உள்வாங்கப்பட்டார்களோ தெரியாது...
சிலவேளைகளில் போட்டி ஆரம்பிப்பதற்கு முதல் நாள் பன்னிரண்டு பேரை மட்டுமே வைத்துக் கொண்டு ஏனைய மூவரையும் தத்தம் பிராந்திய அணிகளுக்கு விளையாட அனுப்புவார்கள் என்ற ஊகமும் இருக்கிறது.
ரஞ்சி கிண்ணப் பக்கமிருந்து இன்னும் சில முக்கிய சுவாரஸ்யத் தகவல்கள்..
'சுவர்' திராவிட், வங்க இளவரசர் கங்குலி, இந்திய அணிக்குள் வருவதும் போவதுமாக உள்ள தினேஷ் கார்த்திக் ஆகியோர் அரை சதங்களை அடித்துள்ளார்கள்.
மீண்டும் தேர்வாளரை ஈர்க்கும் முயற்சியில் உள்ள சீகார் தவான், பார்த்தீவ் படேல், வாசிம் ஜப்பர் ஆகியோர் சதங்களை அற்புதமாகப் பெற்றுள்ளார்கள்.
இலங்கை அணிக்கு தான் துரதிர்ஷ்டம். மும்பையில் மூன்று நாட்களும் மழை பயிற்சி செய்யவிடாமல் செய்ய, உள்ளக பயிற்சியில் ஈடுபடும்போது அதிரடி வீரர் டில்ஷான் கணுக்கால் உபாதைக்கு உள்ளாகியுள்ளார். ஆனால் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவரை விளையாட விடாமல் செய்யும் அளவுக்கு இது மோசமில்லை என்ற தகவல் இலங்கை ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதல்.
திங்கள் டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கு முன்னர் டெஸ்ட் தொடர் பற்றிய முன்னோட்டம் பதிவாக வரும்..
(என்ன ராசியோ தொடர்ந்து கிரிக்கெட் பதிவாகவே கொஞ்ச நாளைக்கு இருக்கப் போகிறது)