November 09, 2009

ஆஸ்திரேலியா வெற்றி - இந்தியாவின் தோல்வி- சொல்பவை என்ன?நேற்றைய கௌகாதி வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளை தொடர்ச்சியாக வென்று தொடரையும் தனதாக்கியுள்ளது.

யாரும் இந்த ஆஸ்திரேலிய தொடர் வெற்றியை எதிர்பார்த்திருக்க் மாட்டார்கள் என்பது நிச்சயம்.

காயங்களால் பல முக்கிய, சிரேஷ்ட வீரர்களை இழந்து விளையாடக்கூடிய பதினோரு வீர்களையே தேடிப் பிடிக்கவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ள ஆஸ்திரேலிய அணி இதை சாதித்திருப்பது ஒரு பெரிய பாராட்டப்படக்கூடிய விடயம் தான்.

இருபத்து மூன்று ஆண்டுகளாக இந்திய அணியினால் சாதிக்க முடியாதிருக்கும் ஒரு விஷயம் இன்னும் முடியாமலே போயுள்ளது.

ஆமாம், கபில் தேவின் தலைமையில் 1986ஆம் ஆண்டு இந்தியாவில் வைத்து ஒருநாள் தொடர் ஒன்றில் ஆஸ்திரேலியாவை வென்றதற்குப் பின் இதுவரைக்கும் இந்தியாவால் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த ஒருநாள் தொடர்களிலே வெல்லவே முடியாமல் போயுள்ளது.

இம்முறை பலவீனமான, அனுபவம் குறைந்த ஆஸ்திரேலிய அணி கிடைத்தும் தோனியின் தலைமையிலான ஜாம்பவான்களினால் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாமலே போயுள்ளது.

இதன்மூலம், அபாயத்திலிருந்த தங்களின் தரப்படுத்தல் முதலாம் இடத்தினை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது ஆஸ்திரேலியா.

இங்கிலாந்தில், சாம்பியன்ஸ் கிண்ணத்தில், இப்போது இந்தியாவில் என்று ஒரு நாள் போட்டிகள் எனும் காட்டில் ஆஸ்திரேலியாவுக்கு ஒரே மழை தான்..

இந்த தொடரில் ஆஸ்திரேலியா எப்படி வென்றதென்றும் இந்தியா என் தோற்றதென்றும் கேட்டால் ஒரே விதமான பதில் தான்..

தன் பலவீனங்களைஎல்லாம் பலமாக மாற்றிக் கொண்டது ஆஸ்திரேலியா..
தன் பலங்களையெல்லாம் பலவீனமாகவே உருவாக்கிக் கொண்டது இந்தியா..

கிளார்க், பிராக்கென், ஹட்டின் பின்னர் லீ, ஹோப்ஸ், சிடிள் என்று முக்கியமான வீரர்களை எல்லாம் இழந்த பின்னரும் புதிய வீரகளை நம்பிக்கையோடி விளையாட செய்து தானும் தூணாக நின்று வெற்றிக்கு வழி சமைத்த பொண்டிங்குக்கு பாராட்டுக்கள் கோடி கோடி..

விமர்சனங்களுக்கு பொண்டிங்கும், டெண்டுல்கரும் இந்தத் தொடரில் கொடுத்த பதிலடி ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் பாடம்.

புதிய வீரர்கள் என்றாலே அடித்து,துவைத்து, கிழித்து தொங்கபடும் இந்தியாவின் பலம் வாய்ந்த அணிவரிசை இம்முறை இந்த அனுபவம் குறைந்த ஆஸ்திரேலிய அணியிடம் வாங்கிக் கட்டியது தான் ஆச்சரியம்.


என்னுடைய முன்னைய பதிவிலே
(இந்தியா vs ஆஸ்திரேலியா & சச்சின் vs பொன்டிங்) எதிர்வுகூறியதைப் போலவே ஆஸ்திரேலிய இளம்வீரர்கள் பலர் தம் சர்வதேச வருகையை மிகப் பிரசித்தமாக அறிவித்துள்ளார்கள்.
சிலர் தம் மீள்வருகையை மிக உற்சாகமாக அறிவித்துள்ளார்கள்.

இதோ வெளியே அனுப்பப்போகிறோம் என்று தேர்வாளர்களால் பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட மைக் ஹசி தான் இந்தத் தொடரில் அதிக்கூடிய ஓட்டங்கள் பெற்றவர்.
அடித்து சொல்லி இருக்கிறார் தான் யார் என்று..

அணிக்குள் அடிக்கடி கொண்டுவரப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்த டக் போல்லின்கர் தான் இந்தத் தொடரில் இரண்டாவது கூடிய விக்கெட்டுக்களை இதுவரை வீழ்த்தியவர்.
நேற்று இந்திய அணியை சுருட்டி உருட்டியவரும் இவரே. ஐந்து விக்கெட்டுக்கள்.

ஏற்கெனவே ஆஸ்திரேலிய A அணியின் இந்திய சுற்றுப் பிரயாணத்தின்போது இந்திய A அணியின் இளைய வீரர்களை திக்குமுக்காட வைத்திருந்தவர்.இப்போது தான் அவுஸ்திரேலியாவின் தேர்வாளர்களை முழுதாக நம்பச் செய்துள்ளார்.

காயம் காரணமாக பிரெட் லீ நாடு திரும்பியிராவிட்டால் போல்லின்கர் விளையாடியே இரார்.

போல்லிங்கரின் துல்லியமான இடது கைப் பந்து வீச்சும், துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும் தொடர்ச்சியான வேகமும் சாதுரியமான அணுகுமுறைகளும் இவருக்கு ஆஸ்திரேலிய அணியில் நிரந்தர இடத்தைப் பெற்றுத் தரும் என்று நம்பிக்கை தருகின்றன.

கிடைத்த வாய்ப்பைக் கைப்பற்றியிருக்கும் இன்னொருவர் ஷோன் மார்ஷ்.
ஆஸ்திரேலிய அணியில் சிறிது காலம் நம்பகமான ஒருநாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வலம்வந்தாலும் காயம் காரணமாக அணியிலிருந்து வெளிஏறியவருக்கு மீண்டும் அணியில் இடம்கிடைப்பது சிரமமாகிப் போனது.

வொட்சன், ஹோப்ஸ், ஹடின், பின்னர் பெயின் என்று மாறி மாறி ஒவ்வொருவராக ஆரம்பத் துடுப்பாட்ட வீரருக்கான இடங்களை எடுத்தபோது மார்ஷ் எப்படி அணிக்குள் வருவார் என்று கேள்வி எழுந்தது..
ஆனால் வாய்ப்பொன்று கிடைத்தநேரம் ஹைதேராபாத் போட்டியில் சதமடித்து தன்னைக் காட்டி இருக்கிறார்..

கமேரோன் வைட், ஷேன் வொட்சன் ஆகியோரும் தம்மை நிரூபித்துள்ளார்கள்.

பல வாய்ப்புக்கள் வழங்கியும் நிரந்தரமான இடம் பிடித்துக் கொள்ளாமல் இருந்த வைட், தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்தும் ஒரு நம்பகமான வீரராக இந்தத் தொடர் எல்லாம் வெளிப்பட்டுள்ளார்.

வொட்சன் சகலதுறை வீரராக விஸ்வரூபம் எடுத்துள்ளார். சச்சின் தனித்து தெரிந்த போட்டியிலும் கூட, 93 ஓட்டங்களையும் மூன்று விக்கெட்டுக்களையும் எடுத்து பிரகாசித்தவர் வொட்சன். காயங்கள் இனியும் இவரை துரத்தாவிட்டால், உலகின் மற்றொரு தலைசிறந்த சகலதுறை வீரராக மிளிர்வார்.

என்னுடைய முன்னைய பதிவில் பொன்டிங் vs சச்சின் என்று குறிப்பிட்டு இருந்தேன்..
ஓரளவுக்கு அது நடந்தே இருந்தது..

பொன்டிங் பிரகாசித்தவேளை எல்லாம் அவுஸ்திரேலியா ஜெயித்துள்ளது.
பாவம் சச்சின் ஹைதேராபாத் போட்டியில் அணியின் ஓட்டங்களில் பாதிக்கு மேல் பெற்றும் அணி தோற்றது.
நடுவர் ஒரு தடவை சச்சினைப் பதம் பார்த்தார்.
ஆனால் சிங்கங்கள் இரண்டும் இன்னும் கர்ஜிக்கின்றன.

தான் விளையாட ஆரம்பித்து இருபதாவது ஆண்டை அடுத்தவாரம் பூர்த்தி செய்ய உள்ள சச்சின் மற்றொரு மைல்கல்லையும் இத் தொடரில் அடைந்துள்ளார். 17000 ஓட்டங்களைப் பெற்றுள்ள அவரைப் பின்னாலேயே தொடரும் சனத் ஜெயசூரியவுக்கு இலங்கை தேர்வாளர்கள் எச்சரிக்கைக் கொடி காட்டி இறக்கியுள்ளார்கள்.ஆனால் பொன்டிங் முழு வேகத்தோடு துரத்துகிறார்.

பொன்டிங் தனது பலவீனமான அணியோடு சிறப்பான வழிநடத்தலையும் வெளிப்படுத்தியுள்ளார். அவுஸ்திரேலியா அணியின் அடுத்தகட்ட வீரர்களின் பலம் Bench power தெரிகிறது. மற்ற அணிகளுக்கு இது ஒரு பாடம்.

மறுபக்கம் இந்திய அணி.. என்ன நடந்தது?

சாகீர் கானைத் தவிர எல்லோருமே பூரண சுகத்தோடு இருக்கிறார்கள்..
இரண்டு போட்டிகள் வெற்றி வாய்ப்புக்கள் கிட்ட வந்து கை நழுவிப் போனாலும், தோல்விகள் தோல்விகளே..

அளவுகடந்த நம்பிக்கையோ? அவதானமின்மையோ? அணியின் சமச்சீர் தன்மை இல்லையோ? இல்லை ஆடுகளங்களை சரியாக அறிந்து கொள்ளவில்லையோ? எதிர்வரும் காலங்களுக்கு தோனிக்கும் குழுவினருக்கும் நல்ல ஒரு பாடம்..

பெரிய பெயர்கள் எல்லாம் தொடர்ந்து பிரகாசிக்காமல் போனது தான் தொடர்தொல்விக்கான நேரடிக் காரணம்..

ஒவ்வொரு போட்டிகளிலே சச்சினும், ஜடேஜாவும், இரண்டு போட்டிகளிலே பிரவீன் குமாரும், ஹர்பஜனும், கம்பீரும் மட்டும் பிரகாசித்து எப்படி வெற்றி பெறுவது?

யுவராஜ், சேவாக், இஷாந்த், மூவரும் எதிர்பார்த்தளவு பிரகாசிக்காமல் சருக்கியதும் களத்தடுப்பு மோசமும் இந்தியாவின் பெரிய குறைகள்.

தோனியும், ரெய்னாவும் மட்டுமே தொடர் முழுவதும் சிறப்பாக செய்துள்ளார்கள்.
இந்தியா சாதனை ஓட்டங்கள் குவித்த போட்டி யாருக்கு மறக்கும்?
தோனியின் அதிரடி முகத்தை மீண்டும் காட்டிய போட்டி அது..

பிரவீன் குமாரும் ஹர்பஜனும் தம் துடுப்பாட்டத்தில் காட்டிய திறமையை பந்துவீச்சில் முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்பது முக்கியமானது.

நேத்ராவும் ஹர்பஜனும் முறையே ஏழு,எட்டு என்று விக்கெட்டுக்களை வீழ்த்தி இருந்தாலும் அவை முக்கியமான நேரங்களில் வீழ்த்தப்படவில்லை.

தோனியின் துரித சிந்தனையாற்றளும், அதிகமாக அவருக்கு கைகொடுக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இம்முறை காலைவாரி விட்டது.

இந்தியா இரண்டு விஷயங்களை சிரத்தையாகக் கவனிக்கவேண்டும்..
பிரவீன் குமாரின் துடுப்பாட்டம்.. அவரின் துடுப்பாட்டப் பிரயோகங்களில் நல்ல நேர்த்தி தெரிகிறது. அதை சரியான முறையில் பயன்படுத்தி பழக்கி எடுத்து தேவையான நேரங்களில் கையாண்டால் அருமையானதொரு சகலதுறை வீரரை உருவாக்கலாம். ஹர்பஜனின் கண்மூடித்தனமான அதிரடியைவிட பிரவீன் குமாரின் நேர்த்தியான துடுப்பாட்டம் இந்திய அணிக்கு அவசியமானது.

ஜடேஜாவின் வளர்ச்சி.. பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என்று மூன்றுமே அருமையாக வருகிறது இவருக்கு.. நிதானம், முதிர்ச்சியும் இருக்கிறது. நல்லபடி பராமரித்து கையாளப்பட்டால் இந்தியாவின் எதிர்கால சகலதுறை நட்சத்திரம் தயார். டெஸ்ட் போட்டிகளுக்கும் ஏற்ற மனப்பாங்கு இருக்கிறது.

தேவையான நேரத்தில் நிதானம்,பொறுமை இன்மை இந்திய அணிக்கு பல தோல்விகளைக் கொடுத்தாலும் இன்னும் பாடம் கற்றுக்கொள்வதாயில்லை. அணியில் யாரையும் மாற்றவேண்டிய தேவயில்லை.. முனாப் படேல் தவிர. இவரையெல்லாம் மீண்டும் மீண்டும் ஏன் நம்பி எடுக்கிறார்களோ?

ஆனால் இருப்பவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும்..

இல்லை எனில் இலங்கை அணி இருபத்தேழு வருடங்களில் தனது முதலாவது டெஸ்ட் வெற்றியையும், ஒரு நாள் தொடர் வெற்றியையும் இந்தியாவில் இம்முறை பெற்று வெற்றிவாகை சூடும்.

==================

நண்பர், பதிவுலக சிரேஷ்டர்களில் ஒருவர்.. மனதாலும் சிரிப்பாலும் பாலகனாகவும், சிந்தனையாலும் எழுத்தாலும் வயதாலும் மூத்தவரான (ஹீ ஹீ) மஜா,முத்தப் பதிவர் வந்தியத்தேவன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.. (வயது எத்தனை என்ற வில்லங்கமான கேள்வி இங்கே கேட்கப்படக் கூடாது)
கமல் ரசிகரான அவருக்கு கமலின் பிறந்தநாளின் இரண்டு நாளில் பிறந்தநாள் வந்துள்ளது,..
எனது மன நிறைவான பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..

இந்த வயது அவருக்கு வாழ்வில் நிறைய வசந்தங்களை அள்ளிவருகிறது.. வாழ்வு வளம்பெற்று,முழு நிறைவு பெறட்டும்..


18 comments:

Unknown said...

//இம்முறை பலவீனமான, அனுபவம் குறைந்த ஆஸ்திரேலிய அணி கிடைத்தும் //

தவறு என்று நம்புகிறேன்...
அனுபவமற்ற அணி என்று மட்டும் தான் வரவேண்டும்...

ஆனால் என்னைப் பொறுத்தவரை அவுஸ்ரேலியர்கள் மற்றைய வீரர்களை விட அதிகமாக அணிக்காக விளையாடுவார்கள்.. அணிக்கு விளையாடுவதைப் பாதிக்கும் என்பதால் IPL இலிருந்து பல வீரர்கள் விலகிக் கொண்டது ஓர் சிறந்த உதாரணம்.
அவுஸ்ரெலியர்கள் ஒன்றை நிரூபித்திருக்கிறார்கள், தாங்கள் உண்மையான சம்பியன்கள் என்பதை.

ஹர்பஜன், இசாந் சர்மா ஆகியோர் ஒருநாள்ப் பொட்டிகளில் அண்மைக்காலமாக சறுக்கித் தான் வருகிறார்கள்.
ஹர்பஜனுக்குப் பதில் அமித் மிர்சாவை அணிக்குள் கொண்டுவந்து பார்க்கலாம்.

அவுஸ்ரேலிய அணி தோற்றது என்பதைவிட இந்திய அணி தொற்றத தான் எனக்கு மகிழ்ச்சி...
ஹி ஹி.....

இரா பிரஜீவ் said...

இந்த தொடர் சொல்லும் நீதி: தோல்வியென்பது யாருக்கும் வரலாம், புத்திசலிகள் தோல்விகளில் படித்து வெற்றி பெறுவார்கள், முட்டாள்கள் வெற்றியின் மிதப்பில் தோல்வியடைவார்கள்! அவுஷ்திரேலிய அணியின் பலமே அவர்கள் தோல்வியென்றாலும் வெற்றியடைந்தாலும் அதைஒரு பாடமாக்குவதுதான்.

Unknown said...

பிரவீன் குமார் உள்ளூர்ப் போட்டிகளில் முன்வரிசையில் களமிறங்குவார் என்று எங்கோ பார்த்த ஞாபகம்...
உண்மையா?

sanjeevan said...

//ஹர்பஜனின் கண்மூடித்தனமான அதிரடியைவிட பிரவீன் குமாரின் நேர்த்தியான துடுப்பாட்டம் இந்திய அணிக்கு அவசியமானது. //
ஒருநாள் போட்டிகளில் தான் சதம் பெறும் காலம் வந்துவிட்டதாக அண்மையில் குறிப்பிட்ட ஒரு வீரரை இப்படி விமர்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.:)

sanjeevan said...

//இந்த வயது அவருக்கு வாழ்வில் நிறைய வசந்தங்களை அள்ளிவருகிறது///
அண்ணாக்கு பொண்ணு மாட்டீட்டுது எண்டு சொல்லுங்கோ.

Anonymous said...

எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடந்தது

யோ வொய்ஸ் (யோகா) said...

நான் ஏற்கனவே கூறியதுபோல் சிங்கம் என்றுமே சிங்கம் தான். அவுஸ்திரேலியா போல் இலங்கை அல்லது இந்திய அணி முக்கிய வீரர்கள் 9 பேர் இல்லாமல் போயிருந்தால் நிலைமை யோசித்து பார்க்கவே முடியாது.

இதே போல் ஒரு அணியிருக்கிறது முக்கிய வீரர்கள் இல்லாமலும் சிறப்பாக விளையாடகூடியவர்கள். ஆனால் அவர்களது பிரச்சினை தொடர்ந்து சிறப்பாக ஆடமாட்டார்கள். அந்த அணி எது?

Anonymous said...

நக்கலா உங்களுக்கு

ஆட்டங்கள் சிறப்பானதாக இருந்தது என்று எதை வைத்து சொல்கிறீர்கள் இரு அணிகளுமே தேமே என்று ஆடியது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா

போட்டிகள் சுவாரசியமற்ற நிலையில் இருந்ததே என்ன காரணம்?

துவக்க ஆட்டக்காரர் சேவாக் அடுத்த நிலை ஆட்டக்காரராக இறங்கிய காம்பீரும் என்ன செய்தார்கள் . . .

சச்சினும் என்னதான் செய்தார் . ஒரு ஆட்டத்தில் அடித்தால் போச்சா?

தோனியின் கவனமின்மையும் குழுவாக செயல்படாததும் காரணமாக இருக்கலாம்

அவுஸ்திரேலியா அணி சிறப்பாக ஆடியது என்றெல்லாம் சொல்லமுடியாது / /

இப்படி தவறுகளை செய்து ஆடும் அணிக்கு எதிராக ஆடும் எந்த அணியும் வெற்றி பெறும் அதிலும் அவுஸ்திரேலியா திணறித்தான் வெற்றி பெற்றது என்பதை மறந்து இருக்க மாட்டீங்கள்

உங்கள் மனப்போக்கையும் இப்பதிவு தெளிவுபடுத்தியது . . அதற்கெல்லாம் அனுபவிக்க போகிறீர்கள் வரும் தொடரில் . .அப்போ பார்க்கலாம் உங்கள் பதிவை . . .(ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கேனோ)

அஜுவத் said...

Yuvraj thodarnthu sarukkukirar anna........

root said...

//இல்லை எனில் இலங்கை அணி இருபத்தேழு வருடங்களில் தனது முதலாவது டெஸ்ட் வெற்றியையும், ஒரு நாள் தொடர் வெற்றியையும் இந்தியாவில் இம்முறை பெற்று வெற்றிவாகை சூடும்.//
Day Dream??
Night Dream??
Light Dream??
Power Dream??
எப்படி சொல்வது....
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் உங்க விருப்பத்துக்கு Dream இக்கு முன்னுக்கு எதாவது போடுங்க...
இந்தியாவுக்கும் நான் எதிர் தான் ஆனால்.......
இலங்கை எந்த team ஒட விளையாடினாலும் நான் இலங்கைக்கு support பண்ண மாட்டேன்...

//கமல் ரசிகரான அவருக்கு கமலின் பிறந்தநாளின் இரண்டு நாளில் பிறந்தநாள் வந்துள்ளது,..
எனது மன நிறைவான பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..//
November இல் தான் நிறைய famous ஆன ஆக்கள் பிறந்து இருக்காங்கள்..
எங்கள் வந்தி ------ or sorry அண்ணன் ஓட சேர்த்து...

balavasakan said...

ஹய்யா .....உங்கள் இந்த பதிவை ரொம்பவும் எதிர்பார்த்தேன்....
எல்லாம் சரி ஆனால் 5 வது போட்டியில் ஜடேஜா கேவலமாக ரன்அவுட் ஆனது தான் பொறுக்க முடியவில்லை...

ஒன்று சொல்ல மறந்து விட்டீர்கள் என்ன தான் புதிய வீர்ரஃகள் அசத்தினாலும் அந்த இரண்டு போட்டிகளிலும்அவுஸ்திரேலியா அணியின் வெற்றியின் ரகசியம் அவர்களது களத்தடுப்புதான் இதை பொண்டிங்கும் குறிப்பிட்டிருந்தார்...

திவா said...

root said...

//இலங்கை எந்த team ஒட விளையாடினாலும் நான் இலங்கைக்கு support பண்ண மாட்டேன்...//

நன்றாக உருப்படும் நாடு, உங்களைப்போல் இன்னும்சிலர் இருந்தால்.!!

Unknown said...

// Anonymous said...
நக்கலா உங்களுக்கு

ஆட்டங்கள் சிறப்பானதாக இருந்தது என்று எதை வைத்து சொல்கிறீர்கள் இரு அணிகளுமே தேமே என்று ஆடியது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா

போட்டிகள் சுவாரசியமற்ற நிலையில் இருந்ததே என்ன காரணம்? //

மனுசன் கடைசிப் போட்டியில அவுஸ்ரேலியா 350 அடிக்க இந்தியா கடைசிவரை போராடி 3 ஓட்டங்களால் தோற்றதை கேள்விப்படேலப் போல....

எங்க லோஷன் அண்ணா இப்பிடியான வாசகர்களப் பிடிக்கிறியள்?

தர்ஷன் said...

வந்தியதேவனுக்கு வாழ்த்துக்கள்
தொடரை மிகச்சிறப்பாக அலசி உள்ளீர்கள்.

Unknown said...

//போட்டிகள் சுவாரசியமற்ற நிலையில் இருந்ததே என்ன காரணம்?///
i think u didnt watch 1st and 5th ODI.
//அவுஸ்திரேலியா அணி சிறப்பாக ஆடியது என்றெல்லாம் சொல்லமுடியாது//
அணி வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள்.
அணி ஆடியதென்பது தவறு தான்.ஹி ஹி.

நீங்க முடிவா என்ன சொல்ல வாரீங்க

ஆதிரை said...

பாவம் சச்சின்... :)


வந்திக்கு வாழ்த்துக்கள்.

வந்தியத்தேவன் said...

பரவாயில்லை தேசிய அணியில் கிரிக்கெட் விளையாட முடியாவிட்டாலும் ஒரு கிரிக்கெட் பதிவுடன் என்னையும் வாழ்த்தியதற்க்கு நண்பர் லோஷனுக்கு நன்றிகள். அத்துடன் இந்தப் பச்சிளம் பாலகனை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மூத்தவர்களுக்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகள்.

நாச்சியாதீவு பர்வீன். said...

ஹாய் லோசன் நல்ல பதிவு, ஆஸ்திரேலியாவின் பலமே தன்னம்பிக்கை தான், இந்திய அணி எந்த வகையிலும் ஆஸ்திரேலியாவுக்கு குறைந்ததில்லை ஆனால் ஓவர் ஸ்மார்ட் இதுதான் அவர்களின் பலவீனம், இதையும் தாண்டி நல்ல துடுப்பாட்ட வரிசை இருந்தும் இந்திய அணி வாங்கிக் கட்டிக்கொண்டதற்கு காரணம் பொறுப்பில்லாத ஆட்டம் தான். அது தவிர வேறொன்றுமில்லை

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner