November 30, 2009

சாகித்திய விருது & விழா - சாதனை,சந்தோசம் & சங்கடங்கள்+சலிப்புக்கள்


மேல்மாகாணத்தின் முதலாவது சாகித்திய விழா கடந்த செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.
இலங்கையின் ஏனைய மாகாணங்களில் சாகித்திய விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும் அனைத்துவிதமான தமிழ்பேசும் மக்களும் வாழ்கின்ற மேல்மாகாணத்தில் என்ன காரணமோ இவ்வாறான சாகித்திய விழா இடம்பெறவேயில்லை.

தற்செயலாக அன்றொரு நாள் ஒரு பொதுவிடத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரனை சந்தித்தபோது அவர் தான் எனக்கு சொன்னார் இவ்வாறு தாங்கள் ஒன்றுபட்டு தமிழ் சாகித்திய விழாவை மேல்மாகாணத்தில் நடாத்தவிருப்பதாக.
அரசியல்ரீதியாக தெரிவு செய்யாதீர்கள் என்று எனது கோரிக்கையை முன்வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

சிலவாரங்களில் எனக்கு மாகாணசபை உறுப்பினர் பிரபா கணேசனின் செயலாளர் மூலமாக அறிவிக்கப்பட்டது எனக்கும் விருது இருப்பதாக.
உள்ளூர சந்தோசம் இருந்தாலும் வேறு யார் யாருக்கு விருதுகள் கிடைக்கின்றன என அறிய ஆவலாக இருந்தது.
(அப்போது தானே தெரிவுகளின் அடிப்படை பற்றி அறியலாம்)

எனினும் எனக்கு உறுதியாக விருதுகள் பற்றி தெரிந்தது கடந்த திங்கட்கிழமை பத்திரிக்கை பார்த்த பிறகு தான்.. ஊடகவியலாளர்கள்,கலைஞர்கள்,சமூக சேவையாளர்கள் என்று 41 பேர் கௌரவிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நம்ம பெயரும் இருப்பது கண்ட பின் தான் வீட்டுக்கே சொன்னேன்.. (ஒரு முன் ஜாக்கிரதை தான்)

ஆனால் பத்திரிகையிலும் சரி, பிறகு தரப்பட்ட நினைவு சின்னம், சான்றிதழிலும் எனது பெயர் தவறான முதல் எழுத்துடன் தரப்பட்டது எனக்கு வழமையாகவே நடக்கும் கொடுமை தான்..
வாமலோசனன் என்ற பெயரை வாமலோஷன் என மாற்றியதோடு, அப்பாவின் பெயரை இரண்டாக்கி அதில் ஆங்கில Bயை தமிழில் எழுதி மகா ரணகளமாக்கி விட்டார்கள்.

நல்ல காலம் எனது பெயர் நிறையப் பேருக்குள்ள ஒரு பொதுவான பெயராக இல்லை.. இல்லாவிட்டால் யாரும் நம்ப மாட்டார்கள் போலும்....

எனக்கு 2006ஆம் ஆண்டே சாகித்திய விருதொன்று கிடைத்தது.. அது மத்திய மாகாண சபையினால் ஊடகம் மூலமாக நான் மலையக மக்களின் அபிவிருத்தி,கல்வி மேம்பாடு,அரசியல் விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்தியமைக்காக வழங்கப்பட்டதாகவே அறிவிக்கப்பட்டது.

அந்தவேளை இந்த விருதை மிக இளவயதில் பெற்றவன் என்ற பெருமையும் எனக்குக் கிடைத்தது.
அத்துடன் மலையகத்தில் பிறக்காத,வசிக்காத ஒருவனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது சரியா என்று அதிருப்திகளும் எழுந்தது வேறு கதை..

விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவேண்டிய பலரின் பெயர்கள் இருந்தன. அவர்களுள் சிலருக்கு விருதுகள் பெருமை தராமல், அவர்கள் வந்து விருதுகள் பெறுவதால் விழா பெருமையடையும் என்று எனக்குத் தோன்றியது.

விருது கிடைப்பது பற்றி உறுதியாகத் தெரியவந்ததும் - என் அலுவலகத்தில் அறிவித்ததுமே நிறுவனத்தின் அத்தனை உயர் அதிகாரிகளும் பாராட்டு மழையில் குளிர்வித்துவிட்டார்கள். அதற்குள் நமது பதிவுலக நண்பர் வந்தியத்தேவன் விருதுகிடைத்த தகவல் பற்றி வாழ்த்துப்பதிவும் போட்டுவிட, வாழ்த்துக்கள் பலவேறு.

விருது விழாவுக்கு அடுத்த நாள் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவிருப்பதாக எனக்கு ஒரு அழைப்பு கிடைத்திருந்தது. எனினும் விருதுபெறும் விழாவிற்கு எந்த அழைப்பிதழும் அனுப்பப்பட்டிருக்கவில்லை.

எனவே 3 மணிக்கு ஆரம்பமாவதாக சொல்லப்பட்ட விழா, விருது வழங்கல் மற்றும் சில பேச்சுக்கள், நிகழ்ச்சிகளோடு இரண்டு, மூன்று மணித்தியாலங்களில் நிகழ்ச்சி முடிந்துவிடும் என்று பெற்றோர், மனைவியுடன் மகனையும் (ஒரே இடத்தில் இருப்பதாக இருந்தால் அவன் சகிப்பு நேரத்தின் அளவு ஆகக்கூடியது 2,3 மணித்தியாலங்கள் தான்) கூட்டிப்போனால் நடந்ததோ வேறு!

நேரத்துக்கே விழா ஆரம்பித்து சிறப்பு, பல அரசியல் அதிதிகள், மாகாண சபையின் 3 உறுப்பினர்களே இணைந்து – (இவர்கள் மூவருமே மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள்) மேல்மாகாண கலாசார அமைச்சின் அனுசரணையில் தம் சொந்த ஒதுக்கீட்டில் செய்ததுடன், அவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து இருந்துக்கொண்டு இந்த முயற்சியை எடுத்ததும் சில பல குறைகளை மறந்துவிடக்கூடியது.

ஆளும் கட்சியிலிருந்தும் உதவிகளைப் பெற முடிந்தும் செய்யாமல் போன பலர் ஞாபகம் வந்தார்கள்.

ஆளும் தரப்பின் அனுசரணையோ என்னவோ வரவேற்புரை சிங்களத்தில்.. அதிக மொழிப்பெயர்ப்புக்கள். பல சிங்கள் உரைகள், முகத்துதிகள்.

அளவுக்கதிகமான உரைகள், பல கலை நிகழ்ச்சிகள் என்று நிகழ்ச்சி இழுத்துக்கொண்டே போக, பொறுமையிழந்து போன பலரின் சலசலப்பு தானாகவே தெரிந்தது. இதற்கிடையில் வருவோர் போவோர் என்று பலபேர் ஒலிவாங்கியை கையிலெடுத்து, அறிவிப்பு என்று முகத்துதிகள் பல செய்து எமது உயிர் வாங்கியது மிகக்கொடுமை.

மேடையேறிய மேல்மாகாண கலாசார பண்பாட்டு அலுவல்கள் அமைச்சரும், பிரதம அதிதியாக வருகை தரவிருந்த ஆளுநர் அலவி மௌலானாவுக்குப் பதிலாக வந்திருந்த ஜனாதிபதியின் ஆலோசகர் A.H.M.அஸ்வரும் - அரசின் புகழ்பாடி, சமாதானத்தை வலியுறுத்தியதோடு, மனோ கணேசனையும் அவரது கட்சியையும் அரசுக்கு அழைத்ததும் - பின்னர் மேடையேறிய மனோ கணேசன் தனது கட்சியின் வளர்ச்சி, நோக்கம், தன் கட்சி உறுப்பினர்களின் முயற்சியால் இந்த விழா முன்னெடுக்கப்பட்டது பற்றிச்சொல்லி, பின்னர் அரசுடனும், ஜனாதிபதியுடனும் தான் இணைவதாக இருந்தால் முன் வைக்கின்ற நிபந்தனைகள் பற்றி சொன்னதும் சாகித்திய விழாவில் அரசியல் வாசத்தைப் பூசின.

தமிழ்த் தரப்பின் நியாயத்தை வலியுறுத்தி, அரசியல் ரீதியான தேர்வு ஒன்றை ஜனாதிபதி பெற்றுத் தருவதாக உறுதியளித்தால்.. நடைமுறைப்படுத்தினால்... என்ற இன்னும் நாம் அடிக்கடி கேட்கின்ற கோரிக்கைகளை முன்வைத்து.. இவை எல்லாம் நடந்தால் அரசுப் பக்கம் வரத் தயார் என்று மனோ கணேஷன் மேடையில் சொல்லி இருந்தார்.

அடுத்த நாளே தமிழ் தரப்பின் போதுவேட்பாளர் பற்றியும் அதன் பின் வெள்ளிக்கிழமை சரத் பொன்சேக்காவுடன் மனோ கணேஷன் பேச்சு நடத்தியதாக செய்தி வந்ததும் புதிய விஷயங்கள்.

சிறப்புரை ஆற்றிய கம்பவாரிதி இ.ஜெயராஜ் 'இலங்கையின் அனைத்து தமிழ் மக்களினதும் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒரு தலைவராக மனோ கணேஷன் வளர்ந்து வருகிறார்' என்று பாராட்டியது ஒரு கவனிக்கக் கூடிய விஷயம்.

அத்துடன் தமிழுக்கு 'அன்பு' என்ற அர்த்தம் உள்ளதெனவும் விளக்கம் கொடுத்தார்.

அடுத்ததாக உரையாற்றிய கொழும்பு பல்கலைப் பேராசிரியர் கீதபொன்கலன் (இவர் சிறப்புரையாற்றுவதாக இருந்தபோதும் - நேரம் இழுத்துக்கொண்டு போன நிலையறிந்து – சபையோரின் பொறுமையிழந்த நிலையறிந்து 5 நிமிடங்களுள் தனது பேச்சை முடித்தார் என்பது சிறப்பு) கம்பவாரிதியாரை சாடைமாடையாக ஒருபிடிபிடித்து 'தமிழ் அன்பு, பெருமை என்று பழங்கதை பேசிக்கொண்டிருக்காமல் உண்மை நிலையறிந்து அடுத்த கட்டம் பற்றி யோசிக்க வேண்டும். உலகில் மிகப் பின்தங்கிய இனம் தமிழினம். மற்ற இனங்களைவிட ஜம்பது வருடமாவது பின்தங்கா இருக்கிறோம்' என்று காரத்தைக் கொட்டிப்போனார்.

இடையே பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள், கிண்ணங்கள் வழங்கப்பட்டன. நல்ல முயற்சி அது.

41 சாகித்திய விருது பெற்றவர்களைத்தவிர – 5 பேருக்கு சிறப்புப் பாராட்டு வழங்கப்பட்டது.

சமூக சேவைக்காக - புரவலர் ஹாஷிம் உமர்
கலைப்பணிக்காக - பிரபல நடன ஆசிரியை திருமதி. வாசுகி ஜெகதீஸ்வரன்
கல்வித்துறைக்காக - பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன்
கலைத்துறைக்காக - பிரபல நாடகக்கலைஞர் கலைச்செல்வன்
எழுத்துப்பணிக்காக - துப்பறியும் கதை எழுத்தாளர் மொழிவாணன்


நான் பெரிதும் மதிக்கின்ற, தத்தம் துறைகள் மூலம் தமிழுக்கும் சமூகத்துக்கும் உண்மையான சேவையாற்றிய பலரோடு சேர்ந்து எனக்கும் விருது கிடைத்ததில் உண்மையில் மனம் நிறைவாய் உணர்ந்தேன்.

இலங்கை ஒலிபரப்புத்துறையில் நாடகத்துறை ஜாம்பவனான திரு.M.அஷ்ரப்கான், நான்கு தசாப்தகாலமாக வானொலி நாடகங்களில் நடித்துவரும் திருமதி.செல்வம் பெர்னான்டோ, இலங்கையின் சிரேஷ்ட மெல்லிசை, திரையிசைப் பாடகர் முத்தழகு, எனது தாத்தாவின் காலத்திலிருந்து எழுத்துப்பணியில் ஈடுபட்டுவரும் திரு.மானா மக்கீன், மொழிபெயர்ப்புத்துறையில் கரை கண்ட நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர் திரு.எம்.கே.ராகுலன், பிரபல செய்தியாசிரியர் வீரகேசரியின் பொறுப்பாசிரியர் ஆர்.பிரபாகரன், பிரபல கல்வியாளரும், நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலய அதிபரும், எம்மூர்க்காருமான திரு.நா.கணேசலிங்கம், சகபதிவரும், பிரபல கவிஞருமான, நீண்டகால இலக்கியப் பணியாளர் மேமன்கவி, தினகரன் ஊடகவியலாளர் – ஒலி ஒளி விமர்சனம் மூலம் அடிக்கடி எமது குறை நிறைகளைத் தொட்டுக்காட்டும் திரு.அருள் சத்தியநாதன், எமது சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர்களான அண்ணன்மார் M.N.ராஜா, P.சீதாராமன், நேரடி வர்ணனை, சமய நிகழ்ச்சிகள், எழுத்து என்று புலமைவாய்ந்த திரு.ஸ்ரீதயாளன், சிரேஷ்ட எழுத்தாளர்கள் திரு.அந்தனி ஜீவா, திரு.பீ.முத்தையா, என்னுடன் சூரியனில் பணிபுரிந்த, திறமையான, நேர்மையான, செம்மையான செய்தி ஆசிரியர் இந்திரஜித் (இப்போது சூரியன்செய்தி முகாமையாளர்), தம் திறமைகளை இலங்கை இசைத்துறையில் பதித்துவரும் இளம் இசையமைப்பாளர்கள் ஸ்ருதி பிரபா, செந்தூரன் ஆகியோர் உண்மையில் சரியான தெரிவுகள்.

ஆனால் நாமெல்லாம் இந்தத்துறைக்குள் இறங்க முன்னரே தமக்கான எல்லா விருதுகளையும் பெறக்கூடிய தகைமை, புலமை, ஆற்றல் கொண்டிருந்த இலக்கியப் படைப்பாளிகள் டொமினிக் ஜீவா, தெளிவத்தை ஜோஸப் ஆகியோருக்கும் எம்முடன் சாகித்திய விருதுகளை வழங்கியதை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.

மிகப்பொருத்தமானவர்கள் தெரிவுசெய்யப்படாதது, யாரென்றே பலரால் அறியப்படாதவர்கள் தெரிவுசெய்யப்பட்டது என்று சில குறைகள் இருந்தாலும் ஆக்கபூர்வமான முதல் முயற்சியை எடுத்த பிரதான ஏற்பாட்டாளர் மாகாண சபை உறுப்பினர் ராஜேந்திரனுக்கும் சக மாகாண சபை உறுப்பினர்கள் பிரபா கணேஷன், குமரகுருபரன் ஆகியோருக்கும் நன்றிகள்.

நேரம் நீடித்து – பலரை சங்கடப்படுத்தியதும் (நானாவது இடையிடையே தூங்கி வழிந்தேன்; பலபேர் குறட்டையுடன் தூக்கம்) அவசர ஏற்பாடுகளினால் கொஞ்சம் சொதப்பியதும் (இதற்கான காரணம் ராஜேந்திரன் தனது பிறந்தநாள் அன்று தான் - செவ்வாய் - இதை நடாத்த விரும்பியுள்ளார்) அரசியல் காரணங்களும், ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் வராததும் தவிர எதிர்வரும் வருடங்களில் நடைபெறவுள்ள மேல்மாகாண சாகித்திய விழாக்களுக்கு இது நல்லதொரு ஆரம்பம் என் நம்பலாம்.



அன்பான வேண்டுகோள் -ஏற்கனவே விருதுபெற்றமைக்கு அன்போடு நீங்கள் வாழ்த்தி இருப்பதனால் - முன்பே வாழ்த்தியிருப்பவர்கள் பின்னூட்டங்களில் வாழ்த்தவேண்டாம்.

மீண்டும் வாழ்த்தினால்..... வேறொன்றுமில்லை. நன்றி சொல்லமாட்டேன்.

20 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

சரி நாங்க வாழ்த்தவில்லை, ஆனால் விருது வாங்கிய மற்றையவர்களுக்கு வாழ்த்துக்கள்

மு. மயூரன் said...

நான் ஏற்கனவே வாழ்த்தவில்லை என்றபடியா இங்கே வாழ்த்துவதற்கு தகுதி உள்ளவனாகின்றேன்.

விருதுகளுக்கு எப்போதுமே அவற்றுக்கேயான அரசியல் உண்டு. நோபல் பரிசு தொடக்கம் சாகித்திய விருது வரைக்கும்.

விருதுகள் கிடைத்தாலென்ன; பல்வேறு காரணங்களால் கிடைக்காமற்போனாலென்ன உங்கள் வாய்ப்புக்களினூடு உங்களால் முடிந்த அளவில் எம் மக்களுக்குத் தேவையானதை வழங்கவும் எம் மக்களை தாழ் நிலைகளுக்கல்லாமல் மேலும் மேலும் வளர் நிலைகளுக்கு அழைத்துச்செல்லவும் உழைப்பீர்கள் என்று நம்புகிறேன். அதுவே என் வாழ்த்தும்.


விருது விழா பற்றிய தகவல்களை இங்கே அழகாகப் பதிவு செய்தமைக்கு நன்றிகள்.

//சிறப்புரை ஆற்றிய கம்பவாரிதி இ.ஜெயராஜ் 'இலங்கையின் அனைத்து தமிழ் மக்களினதும் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒரு தலைவராக மனோ கணேஷன் வளர்ந்து வருகிறார்' என்று பாராட்டியது ஒரு கவனிக்கக் கூடிய விஷயம்//

கவனிக்கவேண்டிய விசயம் தான். "கவனித்தோம்; கவனிப்போம்"

:)

Subankan said...

இனி இதெல்லாம் சகஜம்தானே? விருதுபெற்ற ஏனயோருக்கு வாழ்த்துகள்

A.V.Roy said...

_ஆளும் தரப்பின் அனுசரணையோ என்னவோ வரவேற்புரை சிங்களத்தில்.. அதிக மொழிப்பெயர்ப்புக்கள். பல சிங்கள் உரைகள், முகத்துதிகள்._

(சிரிப்பதா அழுவதா..??? ஆயினும் வாழ்த்துக்கள்...)

balavasakan said...

:-)...இது ஓகேவா...

என்.கே.அஷோக்பரன் said...

உங்களது விருது தொடர்பில் மகிழ்ச்சியே - வாழ்த்துக்கள் (இன்று ஆக்கபூர்வமாக, தனித்துவமாக வானொலி ஊடகம் நடத்த முனையும் உங்களுக்கு கட்டாயம் விருத வழங்கப்பட வேண்டும்)!!! இருப்பினும் அதை ஒரு சாஹித்திய விழாவாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை - விருதுகளுக்கப்பால் சாஹித்திய விழாவில் இருக்க வேண்டிய அம்சங்கள் இருக்கவில்லை அதை ஒரு கலை விழாவாக அல்லது இராஜேந்திரனின் பிறந்தநாள் விழாவாக ஏற்றுக் கொள்ளலாமே தவிர சாஹித்திய விழாவாக ஏற்க என் “தமிழ்” மனம் மறுக்கிறது.

எனக்கு விளங்குகிறது - இதே ஆதங்கங்கள் உங்களுக்கும் இருக்கும் ஆனால் சில தர்மங்கள் நிமித்தம் இங்கு பதியவில்லை என்று.

இந்த விழா தொடர்பில் நிறைய முரண்பாடுகளுடன் நான் - சில தர்மங்கள் (ethics) நிமித்தம் சொல்ல முடியாமலும் நானே!

வந்தியத்தேவன் said...

நண்பர் அசோக்பரனின் கருத்தை வழிமொழிகின்றேன். ஆனாலும் சாகித்திய விருது மேடையை அரசியலாக்கியது நடத்தியவர்களுக்கு சிறப்பல்ல.

என்.கே.அஷோக்பரன் said...

வந்தியத்தேவன் சொல்வத உண்மை. அது சாஹித்திய விழாவாக ஏற்க முடியாமைக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று தமிழறிஞர்கள் பேச வேண்டியதற்குப் பதில் பல அரசியல்வாதிகள் பேசியது. விழாவின் ஒன்று அல்லது இரண்டு முக்கிய அதிதி பேசலாம் ஆனால் அதைவிட அதிகமாக அறிஞர்களின் ஆய்வரங்குகள் - விவாதங்கள் - இலக்கிய அரங்குகள் - கவி முழக்கங்கள் என்பன இடம் பெற்றிருக்க வேண்டும். வெறும் ஆடலும் பாடலும் சாஹித்திய விழாவாகாது.

Unknown said...

உங்களுக்கும் விருதுபெற்ற மற்றைய பெரியவர்களுக்கும் வாழ்த்துக்கள்....
(நாங்களெல்லாம் நன்றியை எதிர்பார்த்து வாழ்த்துவதில்லை. :P)

ஆரம்பமுயற்சிக்கு நிச்சயமாக பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்...


ஆனால் கலைவிழாக்கள் அரசியலாகாமல் பார்த்துக்கொள்வது ஏற்பாடு செய்வதைவிட முக்கியமானது...

இன்றைய பிழைகள் நாளைய அனுபவங்களாக மாறட்டும்....

அடுத்தமுறை அரசியல் கலப்பின்றி உண்மையான கலையை மட்டும் கொண்டதாக அமையட்டும்...

அரசியலில் நேரடியாக சம்பந்தமில்லாத சிலரும் அரசியலைப் பற்றிக் கதைத்ததாக அறியவது விரும்பக்கூடியதாக இல்லை....

மீண்டும் உங்களுக்கும் ஏனைய பெரியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.....

Elanthi said...

வாழ்த்துக்கள் அண்ணரே!
இன்னும் பல சாதனைகள் செய்யனும்னு உங்களை வேண்டி கொள்கிறேன்.
(கடவுள் நம்பிக்கை இருந்தால் அவரிடம் வேண்டி இருப்பேன்)
சக்தில தொடங்கி வெற்றி வரை கேட்டிடு தான் இருக்கேன். நல்ல தான் இருக்கு.
எனக்கும் சின்ன வயசில இருந்து ஒரு ஆசை இருந்தது நான் ஒரு தொலைகாட்சி துறையில் வேலை செய்யணும் என்று.
அதுவும் உங்களை ஒரு முறை வெள்ளவத்தே ல கண்ட பின் இன்னும் கூடிடு. அது ஏன் எண்டு அறியணுமா? அடுத்த பின்னுட்டத்தில போடுறேங்க ....
மீண்டும் வாழ்த்துக்கள்.......

Sinthu said...

வாழ்த்துக்கள் அண்ணா...
இன்னும் எவ்வளவோ இருக்கு உங்களுக்கு...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

KANA VARO said...

பொதுவாக விருது வழங்கும் நிகழ்வுகள் இலங்கையில் குறைவு (வெறும் எஸ் எம் எஸ் உடனேயே அவை முடிந்து விடும்) விருதுகளை வழங்க கூடிய நிறுவனங்கள் , அமைப்புக்கள் சம்பந்தப்பட்ட பல்துறை கலைஞர்களை பாராட்டி கௌரவியுங்கள் ... வெற்றி எப் எம் ஆளும் முடியும் (எஸ் எம் எஸ் வேண்டாம் பிளீஸ் )

//சிறப்புரை ஆற்றிய கம்பவாரிதி இ.ஜெயராஜ் 'இலங்கையின் அனைத்து தமிழ் மக்களினதும் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒரு தலைவராக மனோ கணேஷன் வளர்ந்து வருகிறார்' என்று பாராட்டியது ஒரு கவனிக்கக் கூடிய விஷயம்//

ஏனோ தெரியவில்லை எனக்கும் அவரது கொள்கைகள், (ஸ்டைல்) பிடிக்கும்

Midas said...

விருது பெற்ற ஏனையோரின் பெயர்களைத் தந்தததுக்கு நன்றி.

Midas said...

விருது பெற்ற ஏனையோரின் பெயர்களைத் தந்தததுக்கு நன்றி.

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

மு.மயூரன் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.

:)

ஆதித்தன் said...

வாழ்த்துக்கள் லோஷன். உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும்.

Vathees Varunan said...

வாழ்த்துக்கள்அண்ணா. விருது கிடைத்த காலப்பகுதியில் நான் இங்கு இல்லாத காரணத்ததல் இன்றுதான் இதுபற்றி எனக்கு அறியக்கிடைத்தது. மேலும் பல விருதுகள் பெற்று சிறக்க எனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் லோஷன்..!

PPattian said...

வாழ்த்துகள் லோஷன்.. உங்கள் தொண்டு சிறக்க.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner