பாகிஸ்தான் - திருந்தவே மாட்டார்களா?

ARV Loshan
19

இலகுவாக அடையக் கூடிய வெற்றிகளை எதிரணியே எதிர்பார்க்காத விதத்தில் தாரைவார்த்து அதிர்ச்சி கொடுக்கும் அணியொன்று உள்ளதென்றால் அது பாகிஸ்தான் மட்டுமே..

இலகுவான போட்டிகளை பரிசளித்து விட்டு, பார்த்தவர்களையும் ரசிகர்களையும் விமர்சகர்களையும் இது கிரிக்கெட் சூதாட்ட விவகாரமா என்று மண்டையைக் கசக்கவைப்பதிலும் அவர்களை மிஞ்ச வேறு யாரும் கிடையாது.

இதனால் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவி அந்த நாட்டின் பிரதமர் பதவி போலவே எப்போதும் நிரந்தரமில்லாதது.தொடர்ந்து இரண்டு வருடங்களாவது தலைவராக இருந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்..

சங்கீதக்கதிரை போல அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பார்கள்..

இப்போதும் யூனிஸ் கானின் தலைக்கு குறி வைக்கப்பட்டே இருக்கிறது..

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கு பின்னர் யூனிஸ் கானுக்கு கண்டம் வந்து சில ஸ்டன்ட்கள், சில பேச்சுக்களுக்குப் பிறகு நிலை தற்காலிகமாகத் தணிந்தது..

எனினும் அப்ரிடியைத் தலைவராக்குமாறு குரல்கள் எழுந்தவண்ணமே இருக்கின்றன.
தானும் யூநிசும் நல்ல நண்பர்கள் என்றும் தமக்குள்ளே எந்தப் பகையும் இல்லை என்றும் பூம் பூம் (மாடு அல்ல.. )அப்ரிடி பகிரங்கமாக அறிக்கை விட்டு ஊடகவியலாளர் முன்னால் யூனிசும் தானும் கை பிடித்துக் கொண்டு வந்தாலும் உள்ளே இன்னும் புகைகிறது.

சோயிப் மாலிக் தனது ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு போய் கிரிக்கெட் சபைத் தலைவரை சந்தித்து யூனிசைப் பதவி விலக்குமாறு கோரியதாகவும் ஒரு கதை உலவியது..
முள்ளில்லாத ரோஜாவும் இல்லை – முறுகல் இல்லாத பாகிஸ்தான் அணியும் இல்லை!

ஏற்கெனவே ட்வென்டி ட்வென்டி அணியின் தலைவராக நியமனம் பெற்றுள்ள அப்ரிடி அடிக்கடி அறிக்கைவிடுவதும் யூனிஸ்கான் மீது அழுத்தங்களை தந்துகொண்டே இருக்கிறது.

இவற்றுடன் நியூ சீலாந்து அணிக்கெதிரான தோல்வியும் சேர்ந்துகொண்டுள்ளது.
மிக சிறப்பான பந்துவீச்சால் எட்டக்கூடிய ஒரு ஓட்ட எண்ணிக்கைக்குள் நியூ சீலாந்தைக் கட்டுப்படுத்திய பிறகு படு மோசமாக துடுப்பெடுத்தாடி சொதப்பியது பாகிஸ்தான்.

ஆமீர் - அஜ்மல் இணைப்பாட்டம் (103 ஓட்டங்கள்) பாகிஸ்தானின் பத்தாவது விக்கெட்டுக்கான சாதனை இணைப்பாட்டம். இதற்கு பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் அப்துல் ரசாக்கும் வக்கார் யூனுசும் இணைந்து பெற்ற 72 ஓட்டங்களே சாதனையாக இருந்தது.

எனினும் பத்தாவது விக்கெட்டுக்கான உலக சாதனை இணைப்பாட்டத்தை மூன்று ஓட்டங்களால் இந்தப் புதிய சாதனை தவற விட்டது.

இருபத்தைந்து ஆண்டுகாலமாக மேற்கிந்தியத்தீவுகளின் விவ் ரிச்சர்ட்சும் ஹோல்டிங்கும் இணைந்து இங்கிலாந்து அணிக்கெதிராக 106 ஓட்டங்களைப் பெற்றதே நிலைத்து நிற்கிறது.

இந்த வாரமே இணைப்பாட்ட வாரம் போலுள்ளது.. ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் ஜிம்பாப்வேயின் டைபுவும் மட்சிக்கிநெரியும் இணைந்து 188 ஓட்டங்களை எடுத்து தென் ஆபிரிக்க அணியை வறுத்தெடுத்தார்கள் ..

நேற்று முன்தினம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தந்த இறுதி விக்கெட்டுக்கான சத இணைப்பாட்டம்.
இந்த பத்தாம் பதினோராம் இலக்க வீரர்களாலேயே நின்று பிடித்து பொறுமையாக ஆடமுடியும் என்றால் என் பிரபல,முன்னணி வீரர்களால் முடியாமல் போனது?
பொறுப்பின்மை? சதி? சூதாட்டம்?

இனி இனி பல்வேறுபட்ட ஊகங்கள் சந்தேகம் எழலாம்..

நல்ல காலம் இளங்கன்று ஆமீரும், சயீத் அஜ்மலும் சாதனை இணைப்பாட்டம் புரிந்து கொஞ்சமாவது பாகிஸ்தானுக்கு கௌரவத்தை தந்தார்கள்.
இல்லாவிடில் யூனிஸ் கானினதும் இன்னும் பல பாகிஸ்தானிய வீரர்களும் வீடுகள் கல்லெறியால் சேதப்பட்டிருக்கும்.

பத்தாம் இலக்க வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஒருநாள் ஆட்டம் என்ற சாதனையையும் நிலைநாட்டியுள்ளார் மொகமட் ஆமீர்.

இந்தத்தொடர் முழுவதும் யூனிஸ்கான் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதும், பாகிஸ்தான் வெற்றியீட்டிய முதலாவது போட்டியில் சயீட் அப்ரிடி அதிரடியாட்டம் ஆடியதும், இனித் தொடர இருக்கும் டுவென்டி டுவென்டி போட்டிகளும் யூனிஸ்கானுக்கு வெகுவிரைவில் தலைமைப்பதவி பறிபோகும் என்றே தெரிகிறது.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகுமா என்பதைப்போல டெஸ்ட் அணியின் தலைமைப் பதவியும் சேர்ந்தே போகப்போகிறதா என்பது இம்மாதம் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்குப் பின் தெரியும்!

ஒரு சுவாரஸ்யத்துக்காக கடந்த 20 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கிரிக்கெட் அணித்தலைவர்களாக இருந்தோர் –

இம்ரான் கான்
ஜாவெத் மியான்டாட்
சலீம் மாலிக்
வசீம் அக்ரம்
ரமீஸ் ராஜா
அமீர் சொஹைல்
வக்கார் யூனிஸ்
ரஷீட் லடீஃப்
மொயின் கான்
சயீட் அன்வர்
இன்சமாம் உல் ஹக்
மொகமட் யூசுப்
ஷொயிப் மலிக்
யூனிஸ்கான்

இது தவிர இன்றும் பலபேர் அடிக்கடி உபதலைவர்களாகத் தெரிவு செய்யப்படுவதும் மாற்றப்படுவதுமாக இருந்திருக்கிறார்கள்.

இப்படியொரு சாதனை வேறெந்த அணிக்காவது இருக்குமா?

பாகிஸ்தான் - திருந்தவே மாட்டார்களா?

இப்படி இருந்தும் இந்தக் காலகட்டத்தில் ஒரு உலகக் கிண்ணத்தையும்(92) ஒரு ட்வென்டி ட்வென்டி உலகக் கிண்ணத்தையும்(2009) வென்றதும் சாதனை தான்..

உள்வீட்டுக்குள்ளே அடிபட்டுக் கொண்டே ஒற்றுமையாய் இருக்கிறோம் என்று காட்டிக் கொண்டே தொடர்ந்து ஆட எப்பிடித் தான் முடியுதோ???


குறிப்பு - இலங்கையர் பலருக்கே தெரியாத இலங்கையின் புதிய கிரிக்கெட் மைதானம் பற்றியும், இந்திய தேர்வாளர் தந்த ஆச்சரியம் பற்றியும் அடுத்த பதிவு வருகிறது..




Post a Comment

19Comments

Please Select Embedded Mode To show the Comment System.*