அரசியல் விளையாட்டுக்களும், அரசியலும் விளையாட்டும்

ARV Loshan
16

அரசியல் - தலைவர் vs தளபதி

இலங்கை அரசியலே ஒரு விளையாட்டு போலத்தான்!

அது கால்பந்தாக இருந்தால் பந்து - மக்கள்
கிரிக்கெட்டாக இருந்தாலும் பந்து நாம்தான்!

சில மாதங்களுக்கு முன் மிகத் தெளிவாக இருந்த இலங்கை அரசியல் வானிலை இப்போது மிகக் குழம்பியுள்ளது. அடுத்து மழையா, புயலா என யாருக்குமே ஊகிக்கமுடியாதுள்ளது.

இராணுவ வெற்றிகளின் அத்திவாரத்தில் உறுதியாக தனது அரசாங்கக் கட்டடத்தை பெரிதாக விஸ்தரித்து வந்த இலங்கை ஜனாதிபதிக்கு – அத்திவாரத்திலிருந்தே சிக்கல் ஆரம்பித்துள்ளது.

அரசியல் vs இராணுவம்
ஜனாதிபதி vs முப்படைகளின் பிரதானி

என்று அடுத்த வருட ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டான கணிப்புக்கள், கருத்துக்கள் கடந்த வாரம் முழுவதுமே பரபரப்பைத் தந்திருந்தன.

தலைவராக, தளபதியாக.. இப்போது நேருக்கு நேர்..

இராணுவப்புரட்சி
பொதுவேட்பாளர்
இராஜினாமா
இந்திய உறவு
சீன ஆதரவு
பாகிஸ்தான் பின்னணி

இவைதான் இந்த சிலநாட்களில் அதிகம் பேசப்பட்ட, எழுதப்பட்ட. கேட்ட, வாசித்த வார்த்தைகள்.

சரத் பொன்சேகா அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறாரோ இல்லையோ ஊடகங்களும் , சில எதிர்க்கட்சிகளும் அவரை உசுப்பேற்றி உசுப்பேற்றியே இறக்கி விட்டு விடும் போல் தெரிகிறது.
விடும் என்ன விட்டாச்சு..

பொன்செக்காவுக்கு ஆதரவாக,எதிர்ப்பாக என்று பல அமைப்புக்கள்,குழுக்கள்,இணைய ஊது குழல்கள் ஒருபக்கம்..
ஜனாதிபதியை ஆதரிக்கும் குரல்கள் ஒருபக்கம்..
அவருக்கு ஆதரவாக அரச இயந்திரங்கள் முழுமூச்சில்..
யுத்தவெற்றியின் பின் காரணமாக இப்போது ஜனாதிபதியைக் காட்டும் பெருமுயற்சி வேறு..

இலங்கை அரசியல் மந்தநிலை தாண்டி களைகட்டி நிற்கிறது.
பாவம் ரணில் தான் மறக்கப் பட்டவராக ஒதுக்கப்பட்டு நிற்கிறார்.

அத்தோடு முகாமில் உள்ளோரின் மீள் குடியேற்றும் கதையும் கொஞ்சம் அடிபட்டு பின் தள்ளப்பட்டு நிற்கிறது.

எம்மவரும் பொன்சேக்கா தாம் சொல்லும் சிலவிஷயங்களை ஒத்துக் கொண்டால் ஆதரவளிப்பது பற்றி யோசிக்கலாம் என்று சொல்வது வேடிக்கையாக இல்லை?

கடந்த முறை தேர்தலில் வாக்களிக்காமல் இருந்ததன் விளைவு இன்று தெரிகிறது. இம்முறை என்ன செய்யப் போகிறார்கள் தமிழ் மக்கள்?

தெரிந்த ரட்சகரா? இல்லை தெரியாத புதிய சமாதான தூதுவரா?

சிங்களவர் இந்த புதிய பொன்சேகா அலையில் முற்று முழுதாக மாறுவார்கள் என நான் நினைக்கவில்லை.
தீர்மானிக்கும் மற்றொரு சக்தியான முஸ்லிம்களும் ஜனாதிபதியைக் கைவிடுவார்கள் எனத் தோன்றவில்லை.

ஜனாதிபதியும் சரத் பொன்சேகா கொஞ்சம் பரபரப்பாக எழுந்து நிற்கும் வேளையில் அவசரப்பட்டு தேர்தல் வைத்து தனக்கு தானே குழிவெட்டப் பார்க்கார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் வைத்து தேர்தல்/தேர்தல்கள் திகதியை/களை அறிவிக்கப் போகிறார் என்ற பரபரப்பு இருந்தாலும், வந்திருந்தோரைக் கைதூக்க வைத்துவிட்டு அந்த எதிர்பார்ப்பை எல்லாம் புஸ்ஸ் ஆக்கி விட்டார் ஜனாதிபதி.

அத்துடன் தனது உரையில் தேசத் துரோகி என்று மறைமுகமாக சரத் பொன்சேக்காவை சாடியதும்,(இம்முறையும் தமிழில் உரையாற்றியிருந்தார்.. உணர்ச்சி இருந்த போதும், உச்சரிப்பு உதித் நாராயணனை விட மோசம்) ஜனாதிபதியின் செயலாளர் ஜனாதிபதி,அரசாங்கத்தின் நம்பிக்கையை சரத் பொன்சேக்கா இழந்ததனாலேயே அவரது பதவி விலகலை உடனே ஏற்றதாக பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டிகளில் சொல்லி இருப்பதும் சரத் பொன்சேக்கா இனி மிக அவதானமாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.

இதற்குள் இந்தியா நேரடியாகவே தனது சரத் பொன்சேக்கா மீதான தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

பிரணாப் முகர்ஜியின் விஜயம் இங்கு நடைபெறும்போதே இணை அமைச்சர் சஷி தரூர் இந்தியாவிடம் ஆயுத உதவிகளை வழங்குமாறு இலங்கை கேட்டதாக பொன்சேக்கா சொன்னது பொய்யான தகவல் என்று சொல்லி தங்கள் ஆதரவு என்றும் மகிந்தருக்கே என்று குறி காட்டிவிட்டார்கள்.

இன்று தனது பிரியாவிடை உரையை ஆற்றி உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்று முழுநேர 'பொது' பணியில் ஈடுபட ஆயத்தமாகிவிட்டார் முன்னாள் முப்படைகளின் பிரதானி சரத் பொன்சேக்கா..

அத்துடன் அவரது போட்டியாளராக எதிர்காலத்தில் இருக்கக் கூடிய ஜனாதிபதியுடன் ஒரு மணிநேர சந்திப்பையும் நிகழ்த்திப் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார்..

எனக்கொரு டவுட்டு..

அப்பிடி ரெண்டு பெரும் என்ன பேசியிருப்பினம்?

அப்போதே பின்னாலிருந்து பார்க்கும் பார்வை சொல்வதென்ன?

தலைவரும் தளபதியுமாக இருந்தவர்களை இப்போது நேரெதிராக மோதவிட்டு காலம் ஆடும் ஆட்டத்தைப் பாரீர்..
இன்னும் பல விஷயங்கள் அரங்கேறும்..
பல விளையாட்டுக்கள் பலரால் விளையாடப் பட இருக்கின்றன.

எனக்கென்ன நான் ஓரமா இருந்து எல்லாம் பார்க்கப் போகிறேன்..
நான் தான் விளையாட்டுப் பிள்ளை/விளையாட்டுப் பிரியனாச்சே..

================

விளையாட்டு 1 - அதிரடி ஆட்டம்

நேற்று வீட்டில் இருந்ததால் தென் ஆபிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ட்வென்டி ட்வென்டி போட்டியைப் பார்த்தேன்.

ஸ்மித்-பொஸ்மன் இணைப்பாட்டம் உலக சாதனை..(170 for the 1st wicket) பத்து ஓவர்களுக்குள் பறந்த சிக்சர்களும் பவுண்டரிகளும் இதென்ன ஹைலைட்டா பார்க்கிறேன் என்று எண்ணவைத்தது.

பொஸ்மனின் அதிரடியாட்டம் பார்த்தால் ஹெர்ஷல் கிப்சுக்கு இனி தென் ஆபிரிக்க அணியில் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.

ட்வென்டி ட்வென்டி சரித்திரத்தில் இரண்டாவது சதம் பெறும் வாய்ப்பு பொஸ்மனுக்கு இருந்தபோதும் அந்த கருப்பு சிங்கம் 94 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது சோகம்.

நல்ல காலம் இலங்கையின் சாதனை இருபது ஓட்டங்களால் தப்பியது.

இந்த அதிரடிக்குப் பிறகு இங்கிலாந்தின் பதிலடியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்ததால் வேறு அலைவரிசை மாற்றிவிட்டேன்.

தென் ஆபிரிக்க தேர்வாளர்கள் நல்லதொரு விஷயம் செய்கிறார்கள்.தமது அடுத்த கட்டத்தை தயார்படுத்துகிறார்கள்.
இந்த இரு போட்டிகளில் எதிர்காலத்துக்குரிய வீரர்களான ரயான் மக்லறேன், ஹெய்னோ குன், புகழ் யூசுப் அப்துல்லா ஆகியோரைக் களம் இறக்கியுள்ளார்கள்.

===============

விளையாட்டு 2 - மாட்டிக் கொண்ட மரடோனா

அர்ஜென்டீன அணியின் கால்பந்து பயிற்றுவிப்பாளர் டீகோ மரடோனா சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால்(FIFA) இரு மாத காலம் தடை செய்யப்பட்டுள்ளார்.

என்னைப் போல அர்ஜென்டீன ரசிகர் எல்லாம் அண்மைக்காலமாக அர்ஜென்டீனா தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள அடுத்தவருட உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறுமா என்று தவித்திருந்தவேளையில், கால்பந்து வெறியரான அர்ஜென்டீன ரசிகர்கள் மரடோனா ஒழுங்காக பயிற்றுவிக்கிறார் இல்லை என அவர் மீது வெறியோடு திட்டி தீர்த்தும், வசை பாடியும் கொண்டிருந்தார்கள்.

எனினும் உருகுவே அணிக்கெதிரான வெற்றியோடு அர்ஜென்டீனா தகுதி பெற்றது.
அந்த வெற்றியைப் பெற்ற பின்னர் மரடோனா ஆவேசமாக நடந்து கொண்ட விதமும், ரசிகர்களையும் தொலைகாட்சி கமேராக்களையும் பார்த்து செய்த மகிழ்ச்சி ஆரவாரங்களுமே FIFAஇன் இந்த தண்டனை விதிப்புக்க் காரணம்.

இப்படித் தான் மரடோனா ஆவேசமாகக் கொண்டாடினார்..


தோத்தாலும் திட்டுறாங்க.. வென்றாலும் தண்டிக்கிறாங்க.. என்ன நியாயம்டா இது என்று மரடோனா புலம்புறாராம்..

நல்ல காலம் இப்பவே தண்டனை கிடைத்தது.. இல்லேன்னா பிறகு உலகக் கிண்ணத்துக்கு மரடோனாவின் சேவை அர்ஜென்டீனாவுக்கு கிடைக்காமல் போயிருக்கும்..



Post a Comment

16Comments

Please Select Embedded Mode To show the Comment System.*