சச்சின் டெண்டுல்கர் - 20

ARV Loshan
16

நாளைய தினத்தோடு சச்சின் டெண்டுல்கர் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளை விளையாட ஆரம்பித்து இருபது வருடங்களைப் பூர்த்தி செய்கிறார்.அதை முன்னிட்டான ஒரு பார்வை..

சச்சின் டெண்டுல்கர் - 20

எந்தத்துறையில் வேண்டுமானாலும் இருபதாண்டுகள் இருந்துவிட்டும் போகலாம்; 20 ஆண்டுகளையுமே சாதிக்கும் ஆண்டுகளாக மாற்றலாம் ஆனால் விளையாட்டுத்துறையில் 20 ஆண்டுகள் என்பது இரு தசாப்தகாலம் இரண்டு தலைமுறைக்கான காலம்.

10 ஆண்டுகள் ஒரு விளையாட்டில் நீடிப்பது என்பது பெரிய விஷயமாகிவிட்ட இந்த காலப்பகுதியில் 20 வருடங்கள் அதுவும் சறுக்காமல் பயணிப்பது என்பது இமாலய சாதனையே தான்!

1990களிலிருந்து இன்று வரை சச்சின் டெண்டுல்கர் என்ற பெயர் இல்லாமல் கிரிக்கெட்டை யோசிக்க முடிகிறதா?

அவரது ஒவ்வொரு ஆட்டங்களும், சதங்களும், அபார ஆட்டங்களும் மறக்கமுடியா விம்பங்களாக மனதில் நிற்பவை. யாரும் எந்த அணியின் ரசிகராக இருந்தாலும் சச்சினை ரசிக்கிறாரோ இல்லையோ, சச்சினின் ஆட்டங்களை துடுப்பாட்டப் பிரயோகங்களை ரசிக்காமல் இருக்கமாட்டார்கள்.

அந்த MRF துடுப்பு.. இப்போது Adidasஆக மாறிவிட்டது.
இந்திய கொடி பொறித்த ஹெல்மட்..
பந்துகளை பறக்கவைக்கும் துடுப்பாட்ட அடிகள்..
சுருள் சுருளான கற்றை முடி..
சீரான பல்வரிசையுடனான பளீர் புன்னகை..
பணிவு தொனிக்கும் பெண் தன்மை கலந்த பேச்சு..
கிரிக்கெட்டின் இரு தசாப்த கால மறக்க முடியா பிம்பங்களின் அடையாளங்கள் இவை..
16 வயதில் பள்ளி பருவத்துப் பாலகனாக சர்வதேசக்கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர் இன்று கிரிக்கெட் சரித்திரத்தில் துடுப்பாட்ட சாதனைகளில் மிக பெரும்பான்மையானவற்றுக்கு உரிமையாளராக விளங்குகின்றார்.

உலகத்தில் மிக சிறந்த கிரிக்கெட் துடுப்பாட்ட வீரராகவும், விளம்பரங்களில் வசூல் சக்கரவர்த்தியாகவும் கிரிக்கெட் உலகத்தில் அத்தனை பேரினதும் மதிப்பையும் பெற்ற ஒருவராக சச்சின் டெண்டுல்கர் விளங்குகின்றார்.

சாதனைகள் சிறுவயதில் இருந்தே பழகப்பட்டதோ என்னவோ அடக்கமே உருவானவராகவும் சர்ச்சைகள் குறைவானவராகவும் சச்சின் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

1988 – 1989 பருவ காலத்தில் பாடசாலைகளில் படித்துக்கொண்டிருந்த போதே பாடசாலை கால நண்பரான வினோத் கம்ப்ளியுடனான துடுப்பாட்ட இணைப்பாட்டம் மூலமாக உலகப்புகழ் பெற்ற சச்சின், அந்த வருடமே மும்பாய் பிராந்திய அணிக்கு தெரிவுசெய்யப்படுகிறார்.
இவர் தெரிவுசெய்யப்பட்டது ஒரு சுவாரஸ்யமான கதை.


மும்பாய் அணியின் பயிற்சி குழாமில் இவரும் இணைந்திருந்த வேளையில் வீரர்களுக்கு பந்து வீசிக்கொண்டிருந்த அப்போதைய இந்திய அணியின் சகல துறை வீரர் கபில்தேவின் பந்துகளை இவர் கையாண்ட விதத்தைப் பார்த்து ஈர்ப்புக்குள்ளான அப்போதைய மும்பாய் அணியின் வீரரும் முன்னாள் இந்திய அணியின் தலைவரான துலீப் வென்சாக்கர் சச்சின் டெண்டுல்கரை மும்பாய் அணியில் இணைக்க, முதல் போட்டியிலே குஜராத் அணிக்கு எதிராக சதம் அடித்து மிக இளவயதிலேயே முதல்தர போட்டி ஒன்றில் அறிமுகத்தில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை பதித்து கிரிக்கெட் உலகை தன் பக்கம் திரும்ப வைத்தவர் சச்சின்.

இதையடுத்து யாரும் எதிர்பாராத வகையில் ஒரு வருடத்திற்குள்ளாகவே சச்சினுக்கு சர்வதேச அறிமுகத்திற்கான அழைப்பு கிடைத்தது. அதுவும் இந்தியாவின் பரம வைரிகளான பாகிஸ்தானிய அணிக்கெதிராக பாகிஸ்தானிய மண்ணில் இடம்பெற்ற சுற்றுலாவிற்கு சச்சின் அழைத்து செல்லப்பட்டதும், அங்கு தன்னை பாலகன் என்று கேலி செய்தவர்களுக்கு துடுப்பினால் பாடம் கற்பித்ததும் உலகத்தில் மறக்கமுடியாத கிரிக்கெட் வரலாற்று நிகழ்வு.

பின்னாளில் உலகையே அச்சுறுத்திய பந்துவீச்சாளராக மாறிய பாகிஸ்தானிய வேகப்பந்து வீச்சாளர் வக்கா யூனிஸ் அறிமுகமானதும் இதே தொடரில். இதுபோல இந்த தொடரில் எழுபதுகளில் அறிமுகமான நட்சத்திரங்களான கபில்தேவ், இம்ரான்கான், ஜவட் மியன்டான் ஆகியோரும் 80களில், 90களில் உலகை கலக்கிய பல வீரர்களும் இன்று வரை கிரிக்கெட்டில் சாதனையாளராக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் இணைந்துகொண்டது, தலைமுறை இடைவெளிகளை தாண்டிய ஒரு தொடராக இது அமைந்தது. அத்தோடு இளவயதாக இருந்தாலும் சச்சின் டெண்டுல்கர் காட்டிய நிதானம். முதிர்ச்சி ஆகியன பல கிரிக்கெட் வீரர்களையும் விமர்சகர்களையும் சச்சினை அப்போதே எதிர்காலத்துக்கான வீரராக கணிக்க வைத்தது.

அறிமுக டெஸ்ட் தொடரின்போது வக்கார் யூனிஸின் அதிவேக பந்து வீச்சில் சச்சினின் முகத்தில் காயம்பட்டு இரத்தம் வடிந்தபோதும் இரத்தம் தோய்ந்த மேலாடையோடு துடுப்பெடுத்தாடி போராடியது இன்றுவரை பல கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நிறைந்திருக்கும் ஒரு மறக்கமுடியாத விடயம்.

ஒவ்வொரு போட்டியாக ஒவ்வொரு தொடராக ஒவ்வொரு ஆண்டாக சச்சின் தன்னை நிரூபித்துக்கொண்டே வந்தார்.

இந்திய தெரிவாளர்களின் அரசியல் தெரிவுகள், தெரிவு அரசியல், வெட்டுக்கொத்துகளை தாண்டிய ஒருவாரக சச்சின் இத்தனை வருடங்கள் நிலைத்து நிற்பதற்கு ஒரே காரணம் என்றால் அவரது திறமை மட்டுமே.

இந்திய அணிக்குள்ளும், உலகத்தில் பிரபலமான வீரராகவும் சச்சினின் வளர்ச்சி மிக நேர்த்தியானதாகவும் பிரமிக்கத்தக்கதாகவும் அமைந்திருந்தது.

துடுப்பாட்டத்தில் நிதானம், அத்தனை விதமான துடுப்பாட்ட பிரயோகங்களையும் மிக நேர்த்தியாக கையாள தெரிந்த பாங்கு, அவராலேயே உருவாக்கப்பட்ட சில புதிய வகை துடுப்பாட்ட பாணிகள் (Improvised shots), எந்த ஒரு பந்தையும் எந்த சூழ்நிலைகளிலும் அடித்து ஆடக்கூடிய அணுகுமுறை, சிகரம் தொட்டப்பின்னும் பயிற்சிகளை தவறாமல் கடைப்பிடிப்பது என்ற பண்புகள் சச்சினின் வெற்றியின் பிரதான தாரக மந்திரங்கள்.
(எனக்கு அண்மையில் வந்த மின்னஞ்சல் ஒன்றில் சச்சினுக்கு சர்வதேச ரீதியில் சாதனைகள் சொந்தமாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.)

சச்சின் உலகத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரராக தன்னை நிரூபித்த முதலாவது சந்தர்ப்பம் 17 வயதில் இங்கிலாந்தில் ஓல்ட் ட்ரபொர்ட்(Old Trafford) மைதானத்தில் பெற்றுக்கொண்ட அவரின் முதலாவது சதம். அதைத்தொடர்ந்து உலகத்தின் அதிவேக மைதானத்தில் ஒன்றான அவுஸ்திரேலியாவின் பேர்த்(Perth) மைதானத்தில் பெற்ற அபாரமான சதம். இந்த சதத்தை பார்த்த கிரிக்கெட் உலகின் பிதாமகர் சேர்.டொனால்ட் பிராட்மன் சச்சினின் துடுப்பாட்ட பாணி இளவயதில் தான் ஆடிய ஆட்டங்களை ஞாபகப்படுத்துவதாக பெருமையோடு சொல்லியிருந்தார்.

அத்துடன் Little Master என்று முன்பு பிரபலமாக அழைக்கப்பட்ட சுனில் கவாஸ்கரின் செல்லப் பிள்ளையாக ஆனார் Little Master புதிய சச்சின்.

ஆனால் சொந்த மண் இந்தியாவில் வைத்து சதமடிக்க சச்சினுக்கு நான்கு வருடங்கள் எடுத்தன.

தனது 25வது வயதிற்குள்ளாகவே 16 டெஸ்ட் சதங்களை பூர்த்தி செய்திருந்தார் சச்சின் டெண்டுல்கர்.
எனினும் இப்போது ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனையை சச்சின் வசம் இருப்பது உண்மையில் ஒரு ஆச்சரியமான விஷயமே. காரணம் சச்சின் தனது முதலாவது ஒருநாள் சதத்தைப்பெற்றது தனது 79வது போட்டியில்தான் ஆனால் (இலங்கையில் வைத்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக) அதற்கு பிறகு வேகம் எடுத்த சச்சின் ஒருநாள் சர்வதேச போட்டியில் மிக சிறந்த வீரராக தன்னை நிலைநிறுத்தியதோடு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு தனது இமாலய சாதனைகளை படைத்துவிட்டு இன்னும் பயணித்துக்கொண்டு இருக்கிறார்.

சர்வதேச ரீதியில் 87 சதங்களும், முதலாம் தர போட்டிகளையும் சேர்த்தால் 125 சதங்களையும் பெற்றுள்ள சச்சினின் சாதனைகளை முறியடிப்பதென்றால் இனி ஒரு குழந்தையை 12 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் அரங்குக்கு கொண்டு வந்து எந்த வித காயமும் இல்லாமல் 25 வருடங்களாவது விளையாட விடவேண்டும்.


எத்தனையோ போட்டிகளில் தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றி நம்பமுடியாத வெற்றிகளை பெற்றுத்தந்திருந்தும் கூட, சச்சின் தனித்து நின்று போராடி மற்றைய இந்திய துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பற்ற தனமாக ஆடி தோற்ற போட்டிகள் எத்தனையோ இருந்தும் கூட இன்னும் சச்சினை பலர் சுயநலவாதி என்று முத்திரை குத்துவது எவ்வளவு நியாயமான விஷயம் என்று தென்படவில்லை.

சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் தனிப்பட்ட பல சாதனைகள் இருந்தும் இன்னமும் சச்சின் விளையாடும் காலத்தில் இந்தியாவால் உலகக்கிண்ணம் ஒன்றை வெற்றி பெற முடியாமல் போனதும் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக்கொள்ளாமல் போனதும் அவர் ஓய்வு பெற்ற பின்பும் அவரது நிறைவேறாத ஆசைகளின் நிழலாக இருக்கும் என்பது நிச்சயம்.

சாதனைகளின் நாயகனாக சச்சின் வலம் வந்து கொண்டு இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக சச்சினால் பிரகாசிக்க முடியாமல் போனது. அந்த காலகட்டத்தில் அவரின் தனிப்பட்ட துடுப்பாட்டமும் சோபை இழந்து காணப்பட்டது.

இரு தடவைகள் தலைவராக அவர் பதவி வகித்தும் கூட, இரண்டுமே வெற்றிகளைவிட அதிகமான தோல்விகளையே பெற்றுத் தந்தன.

டெஸ்ட் போட்டிகளில் இருபத்தைந்தில் நான்கில் மட்டுமே வெற்றியைக் கண்ட சச்சின், ஒன்பதில் தோல்விகளையே பெற்றார்.

73 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 43 தோல்விகளையும் 23 வெற்றிகளையும் பெற்றுள்ளார்.

இதற்கு சச்சினின் தலைமையை மட்டும் விமர்சிக்க முடியாது.
அந்த நேரம் அசாருதீன் சூதாட்ட சிக்கலில் சிக்கி அணியே தளம்பிக் கொண்டிருந்ததும், பின்னர் தேர்வாளர்கள் வீரர்களை மாற்றி மாற்றி விளையாடியதும் கூட காரணங்களாக இருக்கலாம்.

சச்சின் மிக இளம் வயதில் தலைமையை ஏற்றுக் கொண்டதும் அவர் மீது அதிக அழுத்தங்களைக் கொண்டுவந்திருக்கலாம்.

இவை அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் சில கறுப்பு புள்ளிகள்.

கிரிக்கெட் உலகில் சச்சினின் சாதனைகளை பட்டியலிட்டால் அதை வைத்துக்கொண்டே பல கிரிக்கெட் மைதானங்களின் சுற்றளவை உருவாக்கமுடியும்.

இத்தனை சாதனைகள் இருந்தும் அவர் தனது பெயரை கெடுத்துக்கொள்ளும் அளவிற்கு தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கவில்லை. இது அவரின் கனவான் தன்மைக்கு மிகச்சிறந்த உதாரணம்.

சச்சினின் இன்னொரு அதிகம் பேசப்படா திறமை அவரது சாதுரியமான, சகல வித திறமைகளும் அடங்கிய பந்துவீச்சு..
எத்தனை வித்தைகள் அவரது பந்துவீச்சிலே..

எனினும் என்ன காரணமோ அவரது பந்துவீச்சு அதிகம் பயன்படுத்தப்படாத ஒன்றாகவே இருந்துவருகிறது.
அசாருதீன் அணித் தலைவராக இருந்தபோது சச்சினை ஒரு பந்துவீச்சாளராகப் பயன்படுத்தி வெற்றிகண்ட போட்டிகள் பல.
எனினும் பின்னர் வந்த கங்குலியோ, அல்லது சச்சின் தானாகவோ சச்சினைப் பயன்படுத்தவில்லை.இப்போது அடிக்கடி தொல்லை கொடுக்கும் அவரது முழங்கை அவரை பந்துவீச அனுமதிப்பதில்லை.
இதனால் கிரிக்கெட் உலகு சகலவிதமாகவும் பந்துவீசக் கூடிய அற்புதப் பந்துவீச்சாளர் ஒருவரை இழந்துள்ளது.


இதுபோல 20 வருடங்களாக உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்துள்ள சச்சின் தன் நீண்டகால கிரிக்கெட் பயணத்தை திட்டமிட்டு உறுதிப்படுத்திக் கொண்டது இவ்வகையான தகுந்த பேணி காத்தல் நடவடிக்கை மூலமாக தான். இந்தக்கால இளைய வீரர்களுக்கு இது ஒரு தகுந்த வழிகாட்டலாக அமைகிறது. அளவுக்கதிகமான பணம், விளம்பரம் மூலமாக வந்து சேர்ந்தாலும் கிரிக்கெட் உலகு சச்சினை கடவுளாக மதித்தாலும் அந்த தலைக்கனம் தலையில் ஏறாதவாறும் சக வீரர்களோடும் மிக எளிமையாக பழகி நடந்துகொள்வதும் சச்சினை இன்னமும் இந்திய அணியின் ஒரு முக்கிய தூணாக வைத்திருக்கிறது.

கிரிக்கெட்டை எவ்வளவு அர்ப்பணிப்போடு சச்சின் நோக்கினார் என்பதற்கு பல உதாரணங்கள்..
அவற்றுள் இரண்டு -
1999 உலகக் கிண்ணப் போட்டிகளின் போது தந்தையார் இறந்துவிட, வந்து இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டுவிட்டு அடுத்த நாளே புறப்பட்டு மீண்டும் இந்திய அணிக்காக மாபெரும் சதம் ஒன்றை அடித்தது அதை தந்தைக்கு அர்ப்பணம் செய்தது.

ஓய்வு என்று எந்தவொரு தொடரிலிருந்தும் விலகியதில்லை.. (இப்போது வந்த நண்டு சுண்டானேல்லாம் ஒரு வருடத்துக்குள்ளேயே ஓய்வு என்று சில தொடர்களில் இருந்து கழன்று கொள்வதைப் பார்க்கும்போது சச்சின் உண்மையில் கடவுள் தான்)


தனது சர்வதேச கிரிக்கெட் ஆயுள்காலத்தை மேலும் அதிகரிப்பதற்காக Twenty 20 சர்வதேச போட்டிகளில் தானாக விலகிக்கொண்ட சச்சின் அடிக்கடி அண்மை காலமாக உபாதைகள் வந்திருந்தாலும் அதிலிருந்து மீண்டு தன்னை புதுப்பிப்பதிலும் சச்சின் இனி அவ்வளவு தான் என்று அவர் இருக்கும் ஒருசில போட்டிகளுக்குப் பின்பு எழும் விமர்சனங்களுக்கு துடுப்பினாலேயே பதில் சொல்வதிலும் சச்சின் டெண்டுல்கர் தான் ஓய்வுபெறும் காலம் இப்போதைக்கு இல்லை என்பது மிக தெளிவாகவும் உறுதியானதாகவும் காட்டுகிறது.

20 வருடங்களை நாளையோடு சர்வதேச கிரிக்கெட்டில் பூர்த்தி செய்யும் சச்சின் குறைந்த பட்சம் 2011இல் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரையாவது விளையாடுவார் என்பது சச்சினின் மனக்கணக்காகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்துவருகின்றது.

காலம் இதற்கு பதில் சொல்லும்.

இந்தப் பதிவு எமது வெற்றி வானொலியில் அவதாரம் என்ற விளையாட்டு சஞ்சிகை நிகழ்ச்சியில் இன்று ஒலிபரப்பாகி இருந்தது.


சச்சினை நாம் வழமையாகப் பார்த்ததாக இல்லாமல் அரிய பல புகைப்படங்களைப் பார்க்க,பரவசமடைய..




Post a Comment

16Comments

Please Select Embedded Mode To show the Comment System.*