இலங்கையின் கிரிக்கெட் சுவரும், சாதனைகள் பலவும்..

ARV Loshan
16


இதை நான் பதிவிட ஆரம்பிக்கும்போது இலங்கை அணிக்கு ஒரு மகத்தான கன்னி டெஸ்ட் வெற்றியை இந்தியாவில் பெறும் வாய்ப்பு அஹ்மேதாபாதில் கிடைத்துக் கொண்டு இருக்கிறது.

நாளைய இறுதி நாளில் இன்னும் எட்டு இந்திய விக்கெட்டுக்களை எடுக்கவேண்டும்.. ஆனால் ஆடுகளத்தில் படுத்துக் கிடந்தது இலங்கையின் வெற்றியைத் தடுக்கக்கூடிய டிராவிட் காலி..

எந்தப் பந்துவீச்சாளருக்கும் உதவி,ஒத்தாசை தராத ஒரு (flat pitch) ஆடுகளமாக இருந்தபோதும் (சுனில் கவாஸ்கர் குஜராத் அரசுக்கு வீதிகளை சீராக, செப்பனாக அமைக்க இந்த மைதானப் பராமரிப்பாளரை அணுகச் சொல்லி பகிரங்க நக்கலடித்திருந்தார்) இன்று கொஞ்சம் அதிகமாகவே பந்து திரும்புவதையும், மேலெழும் தன்மை மாறுபடுவதையும் (variable bounce) பார்த்தால் நாளை ஆடுகளம் முரளி,ஹேரத் சொல்வதைக் கேட்கும் ஆடுகளமாக மாறலாம் என் நினைக்கிறேன்.

இன்று மிஸ்ராவின் சில பந்துகளும்,நேற்று சச்சினின் பந்தும் திரும்பிய கோணங்களைப் பார்த்த்திருந்தால் முரளி நிச்சயம் மகிழ்ந்திருப்பார். ஆனால் வழக்கத்தை விடக் கொஞ்சம் வேகமாகப் பந்தை தள்ளிவிடவேண்டி இருக்கும். இல்லாவிட்டால் மிக மெதுவான இந்த ஆடுகளத்தில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் குந்தி இருந்து படையல் எடுப்பார்கள்.

இனி போட்டியில் இலங்கை வெல்வதும், சமநிலையில் போட்டி நிறைவடைவதும் முரளி,ஹேரத் ஆகியோரின் கைகளிலும், இந்திய துடுப்பாட்ட வீரர்களின் பொறுமையிலும் தான் தங்கியுள்ளது.

இலங்கை அணிக்கு இன்னும் ஓவர்கள் இருக்கின்றன இந்திய அணியை அள்ளி சுருட்டுவதற்கு..முடியுமா?

அண்மைக் காலமாக 'பழைய' பயங்கரமான முரளியைப் பார்க்காத எமக்கு ஒரு வாய்ப்பு.. இதுவரை காலமும் இந்திய மண்ணில் பெரியளவில் பிரகாசிக்காத முரளிக்கும் தன்னை இறுதியாக ஒருமுறை நிரூபிக்க அருமையான வாய்ப்பு.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மகேல ஜெயவர்த்தன ஆடுகளத்தில் நின்ற நேரம் வரை எத்தனை சாதனைகள் உடைந்து விழுந்திருக்கின்றன.

இது போல ஆடுகளங்களில் இதெல்லாம் சகஜமப்பா என்று யாராவது சப்பைக் கட்டு கட்டுவீர்களாக இருந்தால், உலகில் தற்போதுள்ள எல்லா ஆடுகளங்களின் தன்மைகளையும் பரீட்சித்துவிட்டு வருமாறு அனுப்பிவைக்கிறேன்..
தென் ஆபிரிக்கா,மேற்கிந்தியத்தீவுகள்,பாகிஸ்தான் ஆடுகளங்கள் கூட இப்படித் தான்..

எனவே எல்லோராலும் முடியாது இது போல துடுப்பெடுத்தாட..
டிராவிட், மஹேல போன்ற நேர்த்தியான,நுணுக்கமறிந்த துடுப்பாட்ட சிற்பிகளால் தான் இவ்வாறான அருமையான ஆட்டங்களைக் கட்டியெழுப்ப முடிகிறது.

முச்சதங்களை இரண்டு தரம் பெற்ற மூவரோடு நாலாமவராக (அந்த மூவர் பிரட்மன், லாரா, சேவாக்)இணையும் வாய்ப்பை தவறவிட்ட மகேல பல்வேறு ஏனைய மைல் கற்களையும், சாதனைகளையும் தாண்டி இருக்கிறார்.

சத்தமில்லாமல் சாதனைகளைப் படித்துக் கொண்டிருக்கும் இருவராக நான் கிரிக்கெட்டில் கருதும் மூன்று எளிமையான,அமைதியான கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் - மகேல, டிராவிட், சந்தர்போல்..

மற்றவர்களின் அதிரடி,ஆர்ப்பாட்டங்கள் வெளியே அவர்களை ஹீரோக்களாக்க இவர்கள் அணிக்கு பின்னணியாக,தூணாக இருந்து தேவையானபோது காப்பாற்றவும்,தேவையானபோது வென்றுகொடுக்கவும் துணை நிற்கிற ஆணிவேர்கள்.

இரு சுவர்கள்.. கிரிக்கெட் இன்னும் கனவான்களின் ஆட்டம் தான்..

டிராவிடை இந்திய சுவர்(wall) என்று சொல்வது போல, மகெலவை இலங்கையின் சுவர் என்று சொன்னால் அது மிகப்பொருத்தமே.

இப்போது வந்த பொடிசுகள் வெளியே பிரம்மாண்டமாகக் காட்டப்படும் இன்றைய நவீன விளம்பர விளையாட்டுலகில், எத்தனை பேருக்கு மஹேல,டிராவிட் ஆகிய இருவரும் டெஸ்ட் போட்டிகளில் சதங்கள் பெற்றிருப்பது தெரியும்?

இருவரும் இப்போது ஒரே போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் சரித்திரப் பிரசித்திபெற்ற சேர்.கார்பீல்ட் சொபெர்சை முந்தியுள்ளனர்.

டிராவிட் 11000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையைப் பெற்ற அதே போட்டியில் மஹேல 9000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்துள்ளார்.

இவருக்கு முன்னர் எட்டு பேர் மாத்திரமே ஒன்பதாயிரம் டெஸ்ட் ஓட்டங்கள் தாண்டியவர்கள்.

கடந்த வருட வரலாற்றில் இந்திய மண்ணில் இலங்கை வீரர் யாரும் பெற்றிராத இரட்டை சதத்தை மஹேல அடைந்துள்ளார்.
அத்துடன் யூனுஸ் கான் வைத்திருந்த, இந்திய மண்ணில் ஒரு வெளி வீரர் வைத்திருந்த அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை (267 ) என்ற சாதனையும் மகேலவினால் மேவப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பதினோரு வருடங்களாக இந்திய மண்ணில் இலங்கை வீரர் ஒருவரும் சதம் பெற்றிராத குறையினை டில்ஷான் தீர்த்துவைத்தார்.. மஹேல மேலும் அதிகமாக சென்று இரட்டை சதத்தையும், விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜெயவர்த்தன 150ஐயும் பெற்றுக் கொண்டார்.

எனது முன்னைய இந்தத் தொடர் பற்றிய முன்னோட்டப் பதிவில் நான் குறிப்பிட்டது போல, பிரசன்ன தன துடுப்பாட்ட ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சங்கா இனியும் சந்தேகம் வேண்டாமே..

ஆனால் பாவம் பிரசன்ன, தனது அற்புதமான திறமையை இன்றைய நாளில் காட்டினாலும், மகேலவின் அற்புதத்தின் முன்னாள் பிரசன்னவின் சதம் அதிகம் பேசப்பட்டு பொருளாக மாறமுடியாமல் போயிற்று.

பிரசன்ன - மகேலவின் இணைப்பாட்டமும் (351 )ஒரு சரித்திரம் ஆகியுள்ளது.72 வருட காலம் நிலைத்திருந்த டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தின் ஆறாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்தை முறியடித்துள்ளார்கள் இந்த ஜெயவர்த்தனேக்கள். (இதற்கு முன்னர் பிரட்மனும், பிங்கில்டனும் இந்த சாதனையை தம் வசம் வைத்திருந்தனர்)

இதுமட்டுமன்றி இந்த இணைப்பாட்டம் எந்த ஒரு அணியினாலும் இந்திய அணிக்கேதிராகப் பெறப்பட்ட மூன்றாவது பெரிய இணைப்பாட்டமாகும்.

மொத்த ஓட்ட எண்ணிக்கையிலும் ஒரு அதிசயிக்கத்தக்க சாதனை.. இந்திய மண்ணில் பெறப்பட்ட மிகக் கூடுதலான ஓட்ட எண்ணிக்கை இதுவே..
இதற்கு முன் இந்திய அணி 23 வருடங்களுக்கு முன் இலங்கை அணிக்கெதிராக 676 ஓட்டங்களைக் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

அத்துடன் இலங்கை அணியினால் வெளிநாடொன்றில் பெறப்பட்ட மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையும் இதுவே.

மஹேல - ஆர்ப்பாட்டம் இல்லாத அசத்தல்

மகேலவைப் பலரும் உள்நாட்டில் மட்டும் ஓட்டங்கள் குவிப்பவர்;வெளிநாடுகளில் சறுக்குபவர் என்று கண்மூடித்தனமாகக் கருத்துக் கூறும் நிலையில், அவரது சில சாதனைக் குறிப்புக்களைக் கவனத்தில் எடுப்பது நல்லது..

கடைசியாக அவர் விளையாடிய முப்பது டெஸ்ட் போட்டிகளில், 3706 ஓட்டங்களை 77 .45 என்ற சராசரியில் குவித்துள்ளார்..
இதில் 15 சதங்கள், 7 அரை சதங்கள்.. இந்த சத்தங்களில் ஏழு வெளிநாடுகளில் பெறப்பட்டவை.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டில்..
இதுவரை மஹேல சதம் குவிக்காத ஒரே நாடு தென் ஆபிரிக்கா மட்டுமே..
இது போதுமா?

இது மட்டுமன்றி இந்திய அணிக்கெதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் மகேலவின் சராசரி ஐந்து சதங்களோடு 79.77.
இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவராகவும் மஹேல மாறியுள்ளார்.

உலக சாதனையாளர் சச்சின் 28 இன்னிங்க்சில் பெற்ற 1412 ஓட்டங்களை, மஹேல 19 இன்னிங்க்சில் முந்தியுள்ளார்.

இன்னொரு சுவாரஸ்ய சாதனை..

அதிக இரட்டை சதங்களைப் பெற்றோர்..
பிரட்மன் 12 , லாரா 9 , ஹம்மன்ட் 7 .. என்ற வரிசையில் ஆறு இரட்டை சதங்கள் பெற்ற நால்வரில் மூவர் இலங்கை வீரர்கள்.

பாகிஸ்தானின் ஜாவேத் மியன்டாட் தவிர, மார்வன் அத்தப்பத்து, குமார் சங்கக்கார மற்றும் தற்போதைய ஹீரோ மஹேல.

இப்படியே மஹேல தொடர்ந்து பிரகாசித்தால் அவருக்கு இப்போது தான் 32 வயதாவதால், சச்சின், பொன்டிங் ஆகியோருக்கு ஒரு ஆரோக்கியமான போட்டியைக் கொடுக்கலாம்.. ஆனால் சர்வதேச கிரிக்கெட் பேரவை தான் இலங்கைக்கு அதிக டெஸ்ட் போட்டிகளை வழங்காத சாபக்கேடும் தொடர்கிறதே..

இலங்கை வீரர்கள் இத்தனை சாதனை படைத்த இன்றைய நாளில், இந்தப் போட்டியில் இந்திய வீரர்களுக்கு பல வேண்டாத அவமானங்கள் வந்து சேர்ந்துள்ளன.

இந்திய சுழல் பந்துவீச்சாளர்களால் வழங்கப்பட்ட மூன்றாவது அதிகூட்டிய ஓட்டங்கள் இவை (495 ). இலங்கை உலக சாதனை படைத்தபோது இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் எழுநூறு ஓட்டங்களை கொடுத்திருந்தார்கள்.

இந்திய மண்ணில் ஒரு இந்திய சுழல்பந்துவீச்சாளர் கொடுத்த அதிக ஓட்டங்களை கொடுத்தார் அமித் மிஸ்ரா.. 61 வருடங்களுக்கு முன்னர் வினு மன்கட் கொடுத்திருந்த ஓட்டங்களை இன்று முந்திக் கொண்டார்.

ஹர்பஜனின் மோசமான பந்துவீச்சுப் பெறுதி இது தான்.. (இன்னுமா உலகம் இவரை நம்பிக்கிட்டு இருக்கு? என் சார்பாக இலங்கை அணி இவர் முகத்தில் குத்தியுள்ளது சந்தோசமே..)

நான்கு இந்தியப் பந்து வீச்சாளர்கள் இந்திய மண்ணில் ஒரே இன்னிங்க்சில் நூறு ஓட்டங்களுக்கு மேல் வழங்கிய நான்காவது சந்தர்ப்பம் இது.

ஒரே டெஸ்டில் இரு அணியினதும் விக்கெட் காப்பாளர்கள் சதமடித்த இரண்டாவது சந்தர்ப்பம் இது.
இதற்கு முன்னரும் இந்தியா சம்பந்தப்பட்ட போட்டி ஒன்றிலேயே இந்த அதிசயம் நிகழ்ந்தது.
2001 இல் இந்தியாவின் அஜய் ரத்ராவும், மேற்கிந்தியத் தீவுகளின் ரிட்லி ஜகொப்சும் சதங்கள் பெற்றனர்.

நாளை ஒரு தீர்க்கமான நாள். இந்திய வீரர்கள் பொறுமையோடும்,நிதானத்தோடும் ஆடினால் தோல்வியிலிருந்து தப்பலாம்.

இலங்கை அணி தகுந்த நெருக்கடிகளை வழங்கினால் மேலும் துல்லியமாகவும், சமயோசிதமாகவும் பந்துவீசினால் புதிய சரித்திரம் படைக்கலாம்.

எத்தனை தடவை முற்கூட்டியே ஊகம் சொல்லி மூக்குடைபட்டாலும் அதில் ஒரு சுவாரஸ்யமும் த்ரில்லும் தான்..

இம்முறையும் அந்த வகையில் நான் சொல்வது..ஆடுகளம்,இந்தியாவின் நம்பகமான துடுப்பாட்ட வரிசை என்று பல காரணங்கள் இருந்தும் என்னைப் பொறுத்தவரை இலங்கை அணிக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
அஹ்மேதாபாத் இலங்கையின் கிரிக்கெட்டின் புதிய சரித்திரத்தை எழுதும் என நம்புகிறேன். (சங்கா +முரளி குழுவினரே..மறுபடி கரி பூசாதீங்கப்பா..)

இந்திய அணிக்கு நாளை காவல் தெய்வங்களாக கம்பீர், சச்சின், தோனி ஆகியோர் தான் இருக்கக் கூடும்.. லக்ஸ்மன்,யுவராஜ் மீது எனக்கென்னவோ நம்பிக்கை வைக்க தோன்றவில்லை.

அதிலும் இந்திய வீரர்கள் இவ்வாறான நெருக்கடியான நேரங்களில் மனம் தளர்ந்து போவதும்,பதற்றமடைவதும் இலங்கை அணிக்கு சாதகமான விஷயங்கள்

ஆனால் முரளி தனது மாயாஜாலங்களை காலை முதலே காட்டாவிட்டால்.. மதியத்துக்குப் பிறகு நாம் கொட்டாவி விட்டுக் கொண்டே வேறு அலைவரிசைகளை மாற்றி படமோ,பாட்டோ பார்க்கலாம்..

போட்டியில் இலங்கை சிலசமயம் வெல்லாவிட்டாலும் மஹேல என்றொரு இலங்கையின் சுவர் தன்னை விஸ்வரூபப் படுத்தி மீண்டும் காட்டி இருப்பது பெருமையான விஷயமே..

Post a Comment

16Comments

Please Select Embedded Mode To show the Comment System.*