சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்லோருக்கும்!
கொண்டாடுகிறீர்களோ இல்லையோ, வாழ்த்துக்கள் சொல்வதில் நான் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை.
வழமைபோல் நான் கொண்டாடப்போவதில்லை – எதையாவது கொண்டாடக்கூடிய நிலையிலேயோ, நாட்டிலேயோவா நாமிருக்கிறோம்.
முகத்தில் சிரிப்பையே கண்டு பலநாளாகி, வயிற்றுக்கு உணவு சென்றே பலநாளாகி, உயிருக்கே உத்தரவாதமின்றி, உறவுகள் தொலைந்து பலபேர் வாழும் பூமியில் புதுவருடம் மட்டும்தான் இல்லாத குறை!
வானொலிக்காக மட்டும் வாழ்த்துக்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் வழங்குவதாய் எண்ணம். (என்ன செய்ய போர்வீரன் என்றால் களமும், ஒலிபரப்பாளன் என்றால் மகிழ்ச்சியும், பாடல், வாழ்த்துக்களும் நிதமும் என்பது விதியானதே)
இன்று இருக்கும் வேலைகளுடன் பதிவு போடுவதாய் எண்ணமிருக்கவில்லை! நாளைய புதுவருடத்துக்கான நிகழ்ச்சிகள், விடுமுறை என்பதால் நேரத்துக்கு வீட்டுக்கு செல்லவேண்டும் என்று பல விஷயங்கள்.
============
அப்படியிருப்பினும் நேற்று முன்தினம் இரண்டுபேரின் பதிவுகளை வாசித்த பிறகு இன்று எழுதியே ஆகவேண்டும் போல இருந்தது.
ஒன்று நான் பதிவராக மாறும் முன்பிருந்தே அதிகம் வாசித்து ரசிக்கும் லக்கிலூக். நான் மிக மதிக்கும் பதிவர்களிலொருவர்.
அடுத்தவர் கொழுவி – சில விஷயங்களை 'படும்' விதத்தில் சொல்பவர் என்பதனால் நான் ரசிக்கும் இன்னொருவர்.
இந்த இரண்டு பதிவுகளுக்குமே பின்னூட்டம் போட்டாலும் - ஒரு பதிவு போட்டே தீரவேண்டும் என்பதனாலேயே இது!
=============
லக்கிலூக் கலைஞரின் அரசியல் - ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிய பார்வை போன்றவற்றை விரிவாக நேர்மையாக ஆராய்ந்த பின்னர் ஒரு இடத்தில்
இன்று இணையத்தில் கலைஞரை வசைபாடும் ஈழத்தமிழர்களும் அம்மா ஆட்சிக்கு வருவதையே விரும்பியிருப்பார்கள் என்பதையும் புரிந்துகொள்ள இயலுகிறது. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் வைகோ அம்மாவோடு இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக இணையத்தில் திமுக எதிர்ப்பினை கடுமையாக கடைப்பிடித்தவர்கள் தான் இவர்கள்
என்று குறிப்பிடுகிறார்.
தமிழக முதல்வர் கலைஞர் ஈழத்தமிழர் விவகாரத்தில் அசமந்தமாக இருக்கிறார்.. நேரத்திற்கு ஒரு விதமாக நடக்கிறார்... லக்கியாரே சொல்லியிருப்பது போல வீராவேசம் பேச்சு மட்டும்தான் - செயலளவில் பூச்சியமாகவே இருக்கிறார் என்றெல்லாம் ஈழத்தமிழ்ப் பதிவர்கள் மட்டுமல்லாமல் பல இந்தியத்தமிழ்ப் பதிவர்களே எழுதிவருகின்றனர்.
இதற்காக எழுதும் ஒட்டுமொத்தப் பேரும் கலைஞர் கருணாதியை வெறுப்பவர்கள் என்றோ, கலைஞருக்கும் பதிலாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருந்தால் ஈழத்தமிழர் விவகாரத்தில் நல்ல முடிவை, இலங்கைத் தமிழருக்கு தீர்வொன்றைத் தந்திருப்பார் என்று முட்டாள்தனமாக சிந்திக்கின்றோம் என்று அறியாமையாக நினைத்துக்கொள்வது சரியாகுமா?
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக அரசியல் பற்றி அறிந்துகொள்ளாமல் இருக்கும் அறிவிலிகளா நாம்?
தமிழினத் தலைவர் என்று பெருமைப்படுத்தப்படுகின்ற கலைஞரே இவ்வாறு எடுத்ததற்கெல்லாம் மத்திய அரசுக்கும். தன் கழக / குடும்ப ஆட்சியின் இருப்புக்காக கோழையாக மாறும்போது
விடுதலைப்புலிகளையும் - அதன் காரணமாக ஒட்டுமொத்த ஈழத்தமிழரையும் முன்பிலிருந்தே எதிர்த்து வந்திருக்கும் ஜெயலலிதா இந்த இடத்தில் என்ன செய்திருப்பார் என்று தெரியாதா?
இலங்கையின் அரசியல் பற்றி ஆர்வமில்லாவிட்டாலும் இலங்கையிலுள்ள தழிழர்களுக்கு இந்திய அரசியல் மீது, குறிப்பாக தமிழக அரசியல் மீது ஆர்வமம், அவதானிப்பும் எப்போதுமே அதிகம்.
இலங்கையிலே தந்தை S.J.V.செல்வநாயகம், அமிர்தலிங்கம், பின் காலஞ்சென்ற தொண்டமான் அவர்களோடு பெரும்பாலும் இலங்கைத் தமிழரின் அரசியல் தலைமைத்துவங்கள் அமிழ்ந்துவிட்டதாகவே கருதலாம். (முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவமும் கூட M.H.M.அஷ்ரப்புடன் அடங்கிவிட்டது)
இப்போது தமிழரின் அரசியல், போராட்டம் இரண்டின் மையப்புள்ளியும் ஒரே இடத்திலேயே இருப்பதை உலகமறியும்.
எனவே தான் அரசியல் - நாடாளுமன்ற வாக்கு மைய அரசியல் என்றவுடனேயே தமிழகம் தான் ஈழத்தமிழருக்கு முன்னிடம் பெறுகிறது. வாசிப்பது, பார்ப்பது, கேட்பது என்று அனைத்தின் மூலமாகவுமே தமிழக அரசியலின் நாளாந்த விஷயங்களைவ வருடக் கணக்காகத் தெரிந்து வைத்திருக்கிறோமே.
எங்களுக்குத் தெரியாதா யாரால் யாருக்கு என்ன செய்யமுடியுமென்று? எண்பதுகளில் M.G.R செய்த உதவிகளும் - 90களில் கலைஞரின் ஆவேசமும் - 90களின் பிற்பாதியில் ஜெயலலிதாவின் குரோதமும் துரோகமும் - வைகோவின் ஆரம்ப உண்மை உணர்வுகள் - இப்போது அவர் அடங்கி அடைக்கலமாயிருப்பது என்று அநேகமாக அத்தனை விஷயமும் தெரியும்.
(இதை வெளிக்கொண்டு வருவதில் வந்ததில் தமிழக வலைப்பதிவர்களுக்கும் தனியான பங்குண்டு)
காரண காரியங்களை (கழக ஆட்சி தங்கி தொக்கி இருக்க) லக்கியார் அருமையாக சொல்லி இருந்தாலும், அவர் போன்ற உண்மையான பல தி.மு.க தொண்டர்களின் ஆதங்கங்களை பல பதிவுகளில் நான் படித்திருந்தாலும் அநேகரின் கருத்து கலைஞர் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே செய்திருக்கலாம்.. குறைந்த பட்சம் முயற்சியாவது எடுத்திருக்கலாம் என்பதே..
தமிழினத் தலைவர் என்ற பெயருக்கிணங்க அவரிடம் அதிகம் எதிர்பார்த்து நடவாததனாலேயே அதிகமாக அவர் எம்மால் சாடப் படுகிறார்.. சபிக்கப் படுகிறார்..
இதைத்தான் கொழுவியும் சாட்டையடி கொடுத்திருக்கிறார். லக்கிலுக்கின் பதிவின் பின்னூட்டத்தில் நானும், சயந்தனும் சொன்னதையும் பல தமிழகப் பதிவுலக நண்பர்களும் ஆமோதித்திருக்கிறார்கள்.
இதற்குள் மானஸ்தன் நம்ம மொக்கை,கும்மிகளை சாடி இருக்கிறார்.. நியாயமான ஆதங்கம்.. எங்களால் முடிந்தவை இவ்வளவு தான்யா.. (முடியுமானவரை மொக்கைகளிநூடு கூட சில விஷயங்களை சொல்ல முயல்கிறேன்)
இந்திய, தமிழக அரசியல் சூழலில் இப்போது ஏன் இலங்கைப் பிரச்சினையில் காத்திரமானதொரு முடிவு எடுக்க முடியாமலுள்ளது என்பது குறித்தும் ஓரளவு தெளிவுள்ளதாலேயே (பார்க்க என்னுடைய முன்னைய பதிவுகள்) யாரையும் நான் கண்டித்து – ஆதரவு கோரி – குரலெழுப்புங்கள் என்று அண்மைக்காலத்தில் பதிவிடவில்லை.
பார்க்க என்னுடைய முன்னைய பதிவுகள்
உரிமையோடு தமிழக உறவுகளிடம் எங்களுக்காக குரல் கொடுங்கள்,ஆதரவுக் கரம் நீட்டுங்கள் என்று நாம் கோரிக்கை விடுத்தாலும் கூட அதில் ஒரு அளவு,வரையறை,சில நியதி,நியாயங்கள் இருப்பதையும் நான் அறிவேன்/நாம் அறிவோம்.. தார்மீகக் கடமை என்றாலும் கூட தமிழக மக்கள் எவ்வளவு தூரம் எமக்காக பரிந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாமறிவோம்..
எங்களால் கொடுமைகளையும், கோரங்களையும்,அடக்குமுறைகளையும் அலசி ஆராய முடியாமல் தான் இங்கிருந்து எழுதுவோரில் பாதிப்பேருக்கு மேல் மொக்கைப் பதிவர்களாக மாறியிருக்கிறோம்.. சொந்தப்பெயரில் எழுதும் பொது பல் விஷய்னக்ளை நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது அல்லவா?
எத்தனை கொடுமைகளின்,ரணங்களின் மத்தியில் சிரித்துக் கொண்டே ரசிக்க வேண்டிய பொழுதுகளை நாம் ரசித்துக் கொண்டே இருக்கிறோம்..
தமிழக மக்களுக்கே இவர்களால் பெரும்பாலான தீர்வுகள் வழங்கப்படவில்லை. இதற்குள் இவர்களா இனிமேலுமாவது ஈழத்தமிழர்களைக் காப்பாற்றப் போகிறார்கள்?
எத்தனையோ முடிந்து இறுதிக்கட்டம் இது என்று இலங்கை அரசு சொல்கிறது. இன்றும் ஒரு சொற்பப் பேரே – மீதியானோர் புலம்பெயர்ந்து அகதிமுகாம்களில்!
இனி நடவடிக்கை எடுத்துத் தான் என்ன ஆகப்போகிறது?
பார்க்கப் போனால் இத்தனை அழிவுகளுக்குப் பிறகும் தமிழ் மக்கள் 'மகிழ்ச்சியுடன்' புதுவருடம் கொண்டாட இரு நாட்கள் யுத்த நிறுத்தம் அறிவித்திருக்கும் மாண்புமிகு இலங்கை ஜனாதிபதி போற்றுதலுக்குரியவர்.
போங்கைய்யா – போய் தேர்தல் வேலைகளைப் பாருங்க.... நாற்பதில் முடியுமானவரை சுருட்டிக்கொள்ளுங்க. நாங்கள், எங்கள் பிரச்சினையும் ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்கு வாக்கு சேர்க்க உதவுவோம். எங்கள் சகோதர அப்பாவி தமிழ் மக்கள் போல.
தி.மு.க ஆண்டால் என்ன அ.தி.மு.க ஆண்டால் என்ன ....
அழிவு அழிவுதான்.
மத்தியில் காங்கிரசுக்குப் பதில் அத்வானியின் பா.ஜ.க வந்தால் ஏதாவது மாறுமா?
வழமையான ஏமாளி ஈழத்தமிழன் ஒருவனின் நப்பாசை தான்!