யார் அந்த மர்ம,அனானி வலைப்பதிவர்?

ARV Loshan
18

இம்முறை IPLஇன் பளபளக்கும் அணிகளாக முதல் வாரத்தில் டெல்லி டெயார் டெவில்சும், டெக்கான் சார்ஜர்சும வலம் வந்தாலும், பரபரப்பு அணியாக வலம் வருவதென்னவோ பொலிவூட் மன்னனான ஷாருக்கானின் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் தான்!

IPL திருவிழா ஆரம்பமாகு முன்னரே கொல்கத்தா நைட் ரைடர்சின் திருவிழா களைகட்டிவிட்டது.

தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஜோன் புக்கனனின் 5 தலைவர்கள் என்ற Multiple captaincy முறை பல்வேறு வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பி - இந்த புதிய முறை சரி வருமா வராதா என கிரிக்கெட் பிரபலங்கள் தொடக்கம் சாதாரண பிஸ்கோத்துக்கள் வரை எல்லோரையும் மண்டை காய வைத்தது.

அதற்குள் புக்கனன் 'கொல்கத்தா ராஜா' – தாதா கங்குலியைக் கழற்றிவிட்டு பிரெண்டன் மக்கலத்தைத் தலைவராக அறிவிக்க இன்னுமொரு பரபரப்பு!

Loshan
கவாஸ்கர் - ஷாருக்கான் வாய்த்தர்க்கம் - 'வாயை மூடு' – 'எனது அணி என்ன வேண்டுமானாலும் செய்வேன். முடிந்தால் ஒரு அணியை வாங்கி நடாத்திக்காட்டு' என்ற மோதலெல்லாம் போய் - 

கவாஸ்கரிடம் - ஷாருக்கான் மன்னிப்பு கேட்க அந்த நாடகம் முடிந்தது.

மீண்டும் மற்றொரு முன்னாள் இந்திய நட்சத்திர வீரர் ரவிசாஸ்திரி இந்தப் பல தலைவர்கள் system பற்றி ஏதோ கமெண்ட் அடிக்க ஷாருக்கான் 'நேர் முக வர்ணனையாளர்கள் புத்திசாலிகள் போல ஏதாவது சொல்லுவார்கள்ளூ அதையெல்லாம் பொருட்படுத்தக்கூடாது' என்றும் ' எனது அணி வெல்லவேண்டுமாயின் 30 பேரைக் கூடத் தலைவராக்குவேன்' என்றும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்தப் பரபரப்புக்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு வரும் அளவுக்கு பிரமாண்டமான பரபரப்பு ஒன்று KKR என்று அழைக்கப்படும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸின் முகாமின் உள்ளிருந்தே கிளம்பியிருக்கிறது.

fakeiplplayer.blogspot.com என்ற பெயரில் KKR அணியின் உள்வீட்டு இரகசியங்களை உடைத்துக்கொண்டிருக்கின்ற மர்மமான, அனானி வலைத்தளமே இத்தனை பரபரப்புக்கும் காரணம்.

பின்னூட்டங்களிலேயே வழமையாக அனானிகள் பிரபலமாகப் பேசப்படுவதுண்டு! இது என்னவென்றால் வலைப்பதிவரே ஒரு அனானி!


தன்னையும் ஒரு கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் என்று அறிமுகப்படுத்தியுள்ள இந்தப் பதிவர், ஒவ்வொரு நாளின் சம்பவங்களையும் சிறு சிறு பதிவுகளாகப் புட்டு புட்டு வைக்கிறார். (இவற்றுள் எத்தனை உண்மை – எத்தனை புருடா என்பது KKR வீரர்களுக்கும், SRK (ஷாருக்)க்கும், அனானி பதிவருக்குமே வெளிச்சம்)


இந்த மர்ம வலைத்தளத்தை இன்று வரை பின் தொடர்வோரை அறிந்தீர்கள் என்றால் பதிவர்களே நீங்கள் எல்லாம் மூச்சு விட மறந்து போவீர்கள்... 2588 !!!! ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் 100 பேராவது அதிகரிக்கிறார்கள்.. (பின்னே மற்றவன் ரகசியம் அறிவதில் தானே எங்களுக்கெல்லாம் மோட்சம்)

ஷாருக் கானை ஒன்றுக்கும் இயலாதவர் (எதைப் பத்தி சொல்லுறார் என்று வாசிச்சுப் பார்த்து தெரிஞ்சு கொள்ளுங்களேன்) என்று வர்ணிக்கும் இவர் , கங்குலியைக் கடவுள் என்றும் வர்ணிக்கிறவர், சர்ச்சைக்குரிய பயிற்றுவிப்பாளரான புக்கனனை முட்டாள் பயல் என்றும் குறிப்பிடுகிறார். 

ஒவ்வொரு சிறு சிறு சம்பவங்களையும் புள்ளி விபரங்களோடு தரும் இந்த வலைப்பதிவரை நம்புவதா, நம்பாமல் இருப்பதா என்று தெரியவில்லை..

யார் இந்த மர்ம அனானி வலைப்பதிவர் என்பதை ஊகிக்கவும் முடியவில்லை.. கொல்கட்டா அணியை சேர்ந்தவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாத போது எங்களால் எம்மாத்திரம்?
(ஒரு வேளை கங்குலி இல்லாவிட்டால் கங்குலியின் ஆதரவாளரான வீரராக இருக்குமோ??? எனக்கு முரளி கார்த்திக் மீதும் சந்தேகம் இருக்கிறது)

இந்த வலைப்பதிவைத் தடுப்பதற்கும், மர்ம வலைப்பதிவரைக் கண்டறிவதற்கும் பல்வேறு முயற்சிகள் நடந்திருக்கின்றன.. Ipl Fake player இதைப் பற்றியும் இந்த வலைப் பதிவில் சொல்கிறார். 

நானே நீட்டி முழக்கிறதை விட நீங்களே வாசிச்சுப் பார்த்தீங்கன்னா சுவாரஸ்யமா இருக்கும்.. (வாசிச்சிட்டு மறுபடி வந்து எனக்கு வோட்டும், கமெண்ட்டும் போட்டிட்டு போங்க)

எனக்கென்னவோ ஷாருக் கானின் நண்பர்களே சேர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு (KKR) பரபரப்பு பப்ளிசிடி கொடுப்பதற்கு இப்படி ஒரு blogஐத் தொடங்கினார்களோ என்று ஒரு குறுக்கு சந்தேகமும் வந்திருக்கு.. 

பார்ப்போம் கத்தரிக்காய் மலிஞ்சா சந்தைக்கு வரும் தானே?

என்ன செய்தும் என்ன.. KKRக்கு வெற்றி மட்டும் கிடைப்பதாயில்லை..

மழையும், கெய்லும் சேர்ந்து பஞ்சாபுக்கு எதிராகப் பெற்றுக் கொடுத்த ஒரு வெற்றியைத் தவிர கையில் கிடைக்கும் வெற்றிகளையும் மற்ற அணிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததே இது வரை நடந்திருக்கிறது..

குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிராக அபாரமாக கோட்டை விட்டது கொல்கத்தாவின் அணித்தலைவரினதும்,பயிற்றுவிப்பாளரினதும் முட்டாள் தனமா இல்லை வோர்னின் மாயாஜாலமா என்பதை பார்த்த ஒவ்வொருவரினதும் தீர்மானமாக இருக்கட்டும்.

மக்கலம் பார்க்கப் போனால் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் போலத் தான் தெரிகிறார்.. அப்படியானால் சோனியா காந்தி யாருன்னு தெரிந்திருக்குமே.. ;)

இன்றிரவும் KKR வெல்லப் போவதில்லை என்பது CSK ரசிகனான எனது நம்பிக்கை.. (விருப்பம்னும் சொல்லலாம்).. இனியாவது புக்கனனும் ஷாருக்கும் தாதாவை மீள நியமிப்பார்களா? (ராஜஸ்தான் ரோயல்சுக்கு எதிராக தனித்து நின்று போராடிய தன்னம்பிக்கையைப் பார்த்த பிறகும் கங்குலி மீது நம்பிக்கை யாருக்குத் தான் வராது?)  



Post a Comment

18Comments

Please Select Embedded Mode To show the Comment System.*