ஆச்சரியம் ஆனால் உண்மை. நம்மவர்களில் பலர் திருந்திவிட்டார்கள்.
வடக்கிலோ, கிழக்கிலோ, வன்னியிலோ என்ன அவலம் நடந்தாலும் - வெடி, வேட்டு, பட்டாசு, பலகாரம் என்று படோடபமாக, பளபளப்பாக பொங்கல், புதுவருஷம், தீபாவளி என்று கொண்டாடி வந்த கொழும்பிலுள்ள தமிழர் நேற்று ரொம்பவுமே அமைதி!
பட்டாசுச் சத்தம் கேட்கவில்லை எனலாம்.
புத்தாடை விற்பனைகளோ, பலகாரத்துக்கான பலசரக்கு விற்பனைகளோ வழமைபோல் பரபரப்பாக இருக்கவில்லை என்று ஏற்கனவே கடை உரிமையாளர்களான சில நண்பர்கள் சொல்லியிருந்தனர்.
கோவில் போவதென்றாலே கொஞ்சம் அலர்ஜியான நான் கோவில் போவதைத் தவிர்ப்பதற்காகவே பண்டிகை நாளில் கொஞ்சம் கூடுதல் நேரம் வேலை செய்வதுண்டு. எனினும் அம்மா, மனைவி சென்டிமென்டுக்காக கூட்டம் அதிகமில்லாத கோவிலொன்றுக்கு (பம்பலபிட்டி – வஜிர பிள்ளையார் – பழைய கதிரேசன் ), அதிக கூட்டம் இல்லாத நேரத்தில் கூட்டிப்போவதுண்டு.
நேற்றும் அப்படித்தான், எனினும் வழமையை விடக் கூட்டம் மிகமிகக் குறைவு. அதிலும் புத்தாடை அணிந்தோர் இன்னும் குறைவு. முகத்திலும் மகிழ்ச்சியோ. எதிர்பார்ப்போ இல்லை.
தற்செயலா இரண்டு பெரியவர்கள் (நடுத்தரவயதுகாரர்) பேசிய உரையாடல்:
"எப்படி புதுவருஷமெல்லாம்..."
"என்ன புதுவருஷம்.. ஒரு மண்ணுமில்லை.. இனியென்ன கொண்டாட இருக்கு"
"ஏன் காணும்... இனித்தான் A9 திறந்திடுவாங்களே.. பிசினஸ் களை கட்டும்"
"ஓமோம் நம்பிக்கொண்டிரும்...வவுனியாவிலை எங்கடை சனம் படுற பாட்டில இதையும் நம்பவேணுமே. நம்பிக்கொண்டிரும்.. வடக்கில வசந்தம் வரும்"
"அது சரி இன்னும் 2 நாளில் எல்லாம் சரியாமே.."
"உஷ்.. சத்தமாக கதைக்காதையும்... எத்தனை நாளைக்குத்தான் நாள் கணக்கு சொல்லப்போறாங்கள்"
.................................................................................
அது சரி கலைஞர் தான் தமிழகத்தில் தமிழுக்குத் தை முதல் திகதி நாள் பொங்கலும் புதுவருஷமும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும் ( உண்மையிலேயே நடைமுறையிலிருக்கா) சித்திரைத் திங்கள் தொலைக்காட்சிகளில் களைகட்டுதே. மார்க்கெட்டிங் வியாபார நோக்கம் மட்டும் தானா? அல்லது இலங்கையில் போல தமிழகத்திலும் இன்னும் சித்திரையிலும் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுகிறார்களா?
இல்லை நம்ம நண்பர் கஞ்சிபாய் சொல்வது போல "தமிழர் எமக்கு 3 புதுவருஷம்... ஜனவரி1, ஜனவரி14, ஏப்ரல்14" தான் சரியா?
இலங்கைப் பதிவர்கள் தான் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை நேற்று தங்கள் பதிவுகளில் சொல்லி இருந்தார்கள் என்று பார்த்தால் தமிழகப் பதிவர்களும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துப் பதிவுகள் போட்டிருக்கிறார்கள்..
என்னாச்சு? (கருணாநிதியும் அவர் தம் அபிமானிகளும் தமிழினத் துரோகிகள் என்று இவர்களை சொல்லிடுவாங்கலாம் என்று இன்னும் சில நண்பர்கள் ஜோக்கடிக்கிறாங்க.. என்ன தான் நடக்குது உண்மையில?
நண்பர்களே தெளிவு படுத்துங்க..
----------------
விருந்தினர் தொல்லையோ, வேலைத்தொல்லையோ இல்லாத காரணத்தினால் நேற்று முழுநாளும் வீட்டிலே தொலைக்காட்சியிலேயே பொழுதைத் தொலைக்கவேண்டிய புண்ணியம் கிடைத்தது.
பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று இதுவரை தவறிக்கொண்டு சென்ற 'அஞ்சாதே' பார்க்கக் கிடைத்தது.
ஆரம்பம் முதல் இறுதி வரை இதுதான் திரைக்கதை என்ற நேர்ப்போக்கிலிருந்து விலகாத தெளிவான ஓட்டம், விறுவிறுப்பான, வேகமான படம். கொஞசம் நீளமெனினும் தொய்வில்லாத திரைப்படம்.
விளம்பரங்களின் தொடர்ச்சியான தொல்லைகளோடு முழுசாப் பார்த்து முடிச்சதும் ஏதோ ஒரு திருப்தி!
ஆனால் பாருங்கள் திறமையான கதை சொல்லும் உத்தி தெரிந்து பிரபல நட்சத்திரங்கள் இல்லாமலே களமிறங்கிய மிஷ்கினுக்கும் இரண்டு குத்துப்பாடல்களும், கத்தாழைக் கண்ணழகி ஸ்நிகிதாவும் தேவைப்பட்டுள்ளார்கள்.
.............................................................
கிடைத்த நேரங்களில் Channel மாற்றியபோது ராமன் தேடிய சீதையும், மலைக்கோட்டையும் மற்ற channelகளில் போன வேறுசில நிகழ்ச்சிகளும் பார்த்தேன்.
சிலம்பாட்டம் போட்ட நம்ம நேத்ரா TV பக்கமே தலை வைக்கலை! ஒரு தடவைக்கு மேல தாங்காது.
என்னதான் மசாலா என்றாலும்...புதிய திறமைகளை முன்னிறுத்தி, தங்கள் Reality shows மூலமே பண்டிகை நாட்களை அலங்கரித்துவிடும் விஜய் TVக்கு ஒரு சபாஷ்.
நேற்று தற்செயலாக channel மாற்றிய போது பாடகர்கள் நடனமாடியும், நடனக்கலைஞர்கள் பாடியும் கொண்டிருந்த 'மாத்தியோசி' (நல்லா யோசிச்சிருக்காங்கப்பா ) விஜய் TVயில் பார்த்தேன்.
பிரேம் கோபால் என்றொருவர் (இவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவில் ஆடுபவர்) பாடிக்கொண்டிருந்தார்.
வரிகளைக் கூர்ந்து கவனித்தால் 'இளம்புயல்' என்ற வந்த சுவடே தெரியாத ஒரு படத்தின் பாடல்! இலங்கையர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட இந்திய/வெளிநாட்டுப்படம். அந்தப்பாடலின் பல வரிகளில் ஈழம், தமிழ் ஈழம், அப்படி இப்படி பல சொற்கள் வருவதால் இலங்கையில் சுயதணிக்கை செய்யப்பட்ட பாடல்.
இவ்வளவு காலமும் இந்தியாவின் வேறு மாநிலத்தைச் சேர்ந்த தமிழரல்லாத ஒருவர் என எம்மிற் பலர் நினைத்திருந்த பிரேம் கோபால் இலங்கைத் தமிழ் இளைஞன்.
அந்தப்பாடல் மூலமாக ஈழத்தமிழர் படும் வேதனையை உலகுக்கு வெளிப்படுத்தவே முயன்றதாகச் சொன்ன பிரேம் கோபால் - 'தமிழ் ஈழம்' என்ற வார்த்தையை உச்சரித்தபோது வேதனையும், பெருமையும், இயலாமையும் கலந்த ஒரு கலவை உணர்வு!