நாளைய தினம் இலங்கையில் முக்கியமான மாகாணசபைத் தேர்தல். தலைநகரும் உள்ளடங்கிய மேல்மாகாணசபைத் தேர்தலுக்கான அத்தனை பிரசாரங்களும் (இலத்திரன் ஊடகம் தவிர்ந்த) நிறைவடைந்திருக்கின்றன.
யுத்த களத்தின் வெற்றிகள், பலவீனமான எதிர்க்கட்சி, சிங்களவர் மத்தியில் ஒரு சக்ரவர்த்தி போல் விஸ்வரூபம் எடுத்துள்ள ஜனாதிபதியின் புகழ் என்று ஒட்டுமொத்தமாக ஆளுங்கட்சிக் கூட்டமைப்புக்கு (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) வெற்றிலையில் வைத்து வெற்றி கொடுக்கப்படும் என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது.
(வெற்றிலை தான் ஆளுங்கட்சியின் தேர்தல் சின்னம்)
இந்த நிலையில் தான் ஆளுங்கட்சி சார்பாக போட்டியிடத் தெரிவுசெய்யப்பட்டார் இலங்கையின் முன்னணி செல்வந்தர், தொழிலதிபர்களில் ஒருவரும், முன்னாள் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவருமான திலங்க சுமதிபால.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்கு பெருமளவில் காரணமான சுமதிபால (பல்வேறு ஊழல்களிலும் இவர் பெயர் அடிபட்டபோதிலும்) தம்புள்ளவில் புதிய சர்வதேச மைதானம் அமைப்பதிலும், சர்வதேச அரங்கில் இலங்கை கிரிக்கெட் புகழ்பெறவும் காரணமாக இருந்தவர்.
முன்னைய ஆட்சியில் (சந்திரிகா) ஒதுக்கப்பட்டிருந்த சுமதிபாலவை, அவரது பரமவைரியான முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவரும், பிரதி அமைச்சரும், அண்மையில் கிரிக்கெட் சபையின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு – அதிருப்தியடைந்திருப்பவருமான அர்ஜீன ரணதுங்கவைப் பின் தள்ள இந்த மாகாணசபைத் தேர்தல் மூலமாக அரசியலரங்குக்குக் கொண்டுவரப்பட்டார்.
பணத்தை அள்ளி வீசிப் பிரம்மாண்டபிரசாரத்தில் இறங்கியுள்ளார் சுமதிபால.
கொழும்பின் பிரதான வீதியில் (Galle road) சுமதி பத்திரிகை குழுமம் என்ற சுமதிபாலவுக்கு சொந்தமான நிறுவனத்தின் 4மாடிக் கட்டடம் ஒன்றில் தொங்க விடப்பட்டுள்ள பிரம்மாண்ட flex பதாதை/சுவரொட்டியே இது!
திலங்கவின் சாதனைகளில் முக்கியமானதெனக் காட்டப்படும் தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானமே இந்த விளம்பரத்திலும் முன்னிறுத்த / பின்னிறுத்தப்பட்டுள்ளது.
விளம்பரத்தில் காணப்படும் சிங்கள வாசகங்கள் -
- வேலை செய்கிற திலங்க
- கொழும்பு மாவட்டத்திலிருந்து மேல் மாகாண சபைக்கு
- மேல்மாகாணத்தை புதிதாக்குவோம்..
படங்களை எடுத்தவர் நண்பர் விமல்..
விளம்பரங்களும், வீசப்படும் பணமும் திலங்கவின் வெற்றியை உறுதி செய்துவிடும்!
பணம் இருந்தால் நான்கு மாடிக்கென்ன 40 மாடிக்கும் விளம்பரப் பதாதை தொங்கவிடலாம்!