நேற்று பல பரபரப்பு நிகழ்வுகள் -
சில இணையத்தளங்களில் எரிந்த உடலங்கள் பார்த்து மனம் வெந்தது.
சிதம்பரம் மீதான செருப்படி தந்த கலவை உணர்வுகள்.
இந்திய கிரிக்கெட் அணியின் சரித்திரப்பூர்வ தொடர் வெற்றி
இவற்றுள் பின்னிரண்டு பற்றிப் பலரும் பதிவிட்டுவிட்டார்கள்
முதல் விஷயம் படங்களைப் பார்த்தவுடனேயே மனிதாபிமானமுள்ள மனம் பதறும்.
என் பதிவை நேற்றுப்பார்த்த இத்தனை நெஞ்சங்கள் பதறியபோது எனக்கே ஒரு மாதிரியாகப் போனது. 'உயிராபத்து' என்பதே அப்போது தான் புரிந்தது போல...
ஏனடா எழுதினோம் என்ற மாதிரி ஒரு சங்கடம்.. நான் கூட என்னைப் பற்றி இவ்வளவு அக்கறைப்பட மாட்டேன்..
சரி இதெல்லாத்தையும் விட்டிட்டு நம்ம ஏரியாவுக்குள் வரலாமே-
IPL கிரிக்கெட்டைப் பலிகடா ஆக்குகிறதா?
IPL இன் ஏகப்பட்ட கெடுபிடிகள் காரணமாக மீண்டும் ஒரு தடவை பிரபலமான, முக்கியமான ஊடகநிறுவனங்கள் பல இவ்வாண்டு IPL ஐப் பகிஷ்கரிக்கப்போவதாக எச்சிரித்திருக்கின்றன. கடந்த ஆண்டும் இவ்வாறே IPL இலிருந்து இவை வெளிநடப்பு செய்திருந்தன.
கிரிக்கெட் பற்றிய பல இணையத்தளங்கள், பத்திரிகைள், தொலைக்காட்சிகளுக்கு IPL போட்டிகளின் புகைப்படங்கள், செய்திகளை வெளியிடுவதற்கு லலித் மோடி குழுவினர் விதித்த அதிக இறுக்கமான கட்டுப்பாடுகளே இந்தப் பகிஷ்கரிப்புக்கான காரணம்.
கடந்த வருடமும் இதேபோல The News Media Coalition என்ற அமைப்பே போர்க்கொடி தூக்கியிருந்தது. இந்த அமைப்பின் கீழ்தான் உலகின் பிரபல செய்தி ஏஜென்சிகளான Reuters, AFP, AP, Getty Images போன்றவை இயங்குகின்றன.
IPL நிறுவனத் தலைவர் லலித்மோடி ஒரே இணையத்தளத்துக்கே IPL T-20 போட்டிகளின் செய்திகளையும், படங்களையும் வழங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்துச் செய்யவோ அதில் மாற்றங்கள் செய்யவோ மறுத்துவிட்டார்.
கடந்த வருடம் இந்த ஏஜென்சிக்கள் போலவே இந்தியாவின் செய்தித்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளும் ஆரம்பத்தில் IPL போட்டிகளைப் பகிஷ்கரித்தும் பின்னர் அவற்றின் சில முக்கிய கோரிக்கைகளை IPL ஏற்பாட்டாளர்கள் ஏற்றதன் பின்னர் அவை IPL புகழ் பாட ஆரம்பித்ததும் நினைவுபடுத்தத்தக்கது.
தகவல் : CRICINFO
இப்போ கேள்வி என்னவென்றால் - அனுசரணையாளாகள், மில்லியன் கணக்கான பணம் என்பவற்றுக்கு முன்னால் கிரிக்கெட்டின் சகல தாற்பரியங்களும் அடிபட்டுப் போகப் போகின்றதா?
IPL வீரர்களுக்கான வரமாக இருந்தாலும் - கிரிக்கெட்டுக்கான சாபமாக மாறுகிறதா?
முதலில் நாட்டுக்காக கிரிக்கெட் ஆடிய வீரர்கள் எல்லோரும் IPLஐயும் மில்லியன் டொலர்களையும் அதிகம் நேசிக்க, கிரிக்கெட்டின் கட்டுக்களே மாறிப்போய் - கிரிக்கெட் சபைகளே கேலிக்கூத்தாகிப் போகின.
கடந்த வருடம் போலவே இப்போது இந்த வருடமும் தகவல்கள் அறியும் உரிமைகளையும் Exclusive Rights என்ற பெயரில் மறுக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்?
ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான கோடிக்கு சோனி மக்ஸ்க்கு தொலைக்காட்சி உரிமை வழங்கியாயிற்று.
வீரர்களைக் கொத்தடிமைகளாக franchisesக்கு விலை பேசியாயிற்று. (அவுஸ்திரேலிய வீரர்கள் தமது நாட்டிற்கும், ஆஷஸிற்கும் அளித்த முக்கியத்துவத்துக்காக உண்மையில் தலை வணங்குகின்றேன்.)
அந்தப் பணமும் தான் விலை கொடுத்து வாங்கிய அணியும், வீரர்களும், பயிற்றுவிப்பாளரும் இருக்கும் துணிவில் - உலகில் பலராலும் மதிக்கப்படும் ஒரு சிரேஷ்ட முன்னாள் வீரரான கவாஸ்கரையே 'வாயை மூடு' என்கிறார் சினிமா நட்சத்திரம் ஷாருக்கான்.
போகிற போக்கில் பணம் கொழிக்கும் விளையாட்டாக இருக்கும் கிரிக்கெட் பணத்தால் பிய்த்து தின்னப்படும் ஒரு ஆட்டமாக மாறப் போகிறது.. ஒரு கட்டத்தில் பந்தயக்காரர்களால் கிரிக்கெட் சீரழிகிறது என்று புலம்பியவர்கள் எல்லாரும் பண வியாபாரிகளிடம் கிரிக்கெட்டை விற்று விட்டார்களா?
TWENTY 20 வந்து டெஸ்ட்டையும்,ஒரு நாள் ஆட்டத்தையும் கொன்று விட பணமும்,அனுசரணை வியாபாரமும் IPLஇல் ஆரம்பித்து கிரிக்கெட்டை பலிஎடுக்கப் போகிறதா? மீட்சி எப்படி?