அயன் - நான் guarantee !!! ஒரு முழுமை விமர்சனம்

ARV Loshan
32
Loshan


'அயன்' திரைப்படம் வந்தவுடனேயே இரண்டாவது காட்சியே பார்த்துவிட வேண்டும் (முதல் காட்சி எப்படியும் பார்க்க முடிந்திருக்காது) என்று நான் முடிவெடுக்க ஒன்றல்ல – பல காரணங்கள் 
அண்மைக்காலத்தைய சூர்யா படங்கள் கொடுத்த திருப்தியும் நல்ல ரசனையும்,'அயன்' படப்பாடல்கள் அத்தனையுமே பிடித்தமானதாக இருந்ததும்,அசினுக்குப் பிறகு நம்ம ரசனைக்குரியவராக அண்மைக்காலமாக தமனா மாறியிருப்பதுவும்,கே.வி.ஆனந்தின் முன்னைய 'கனாக் கண்டேன்'கொடுத்த நம்பிக்கையும் தான்.

படத்தின் ஆரம்ப எழுத்தோட்டத்திலேயே பல நாடுகளில் எடுக்கப்பட்ட படம் என்பதை மிகத் தெளிவாக,நுட்பமாகக் காட்டிவிடுகிறார் ஆனந்த்.அசத்தலான பிரமாண்டம் அது! 

stylish ஆன சூர்யாவின் அறிமுகமும் அதிலேயே corporate கம்பெனிகளுக்கு கொடுக்கும் சாட்டையடியும்,பொன்வண்ணன் - பிரபு போன்றோர் அறிமுகமாவதுமே திரைப்படம் ஒரு வித்தியாசமான பாதையில் செல்லப்போகிறது என்ற நம்பிக்கையைத் தந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

                                       Loshan
அப்படியே பரபர வேகம்... 'பளபள' பாடலும் பரபரக்கிறது. நடனக்காட்சி அமைப்புக்கள்,நடன அமைப்புக்கள்,குறிப்பாக பல்வேறு கெட் அப்பில் வரும் சூர்யாவும்,பல நாடுகளில் எடுக்கப்பட்ட காட்சிகளும் அசத்துகிறது.

கோங்கோ நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் அப்படியொரு இயல்பு!

முதல் தடவையாக தமிழ் சினிமாவின் கமெரா படாத ஆபிரிக்க மண்ணைத் தொட்ட ஆனந்தின் கமெராவுக்கு வாழ்த்துக்கள்.. (ஆனால் படத்தில் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார் M.S.பிரபு - திருத்தம் நன்றி இரா.பிரஜீவ்) 

குறிப்பாக அந்த துப்பாக்கிச் சூட்டுக் காட்சியில் எனக்கொரு கணம் எம் நாட்டின் நினைவு வந்து போனது.  
ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றுக்கும் எங்கள் நாட்டுக்குமிடையில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்பது உண்மைதான்.

வசனங்களிலேயே பல விஷயம் சொல்லி விடுகிறார். இன்னும் கொஞ்சம் நீண்டிருந்தாலும் சலிப்பைத் தந்துவிடக் கூடிய அபாயத்தை புரிந்து கொண்டு காட்சிகளின் வேகத்தினால் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

கதை,திரைக்கதை சுபா என்றால் இது போல இருக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே.. பரபர வேகத்துக்கு ஆனந்தின் ஒளிப்பதிவும்,அண்டனியின் படத்தொகுப்பும் பெரும் பங்காற்றியிருக்கின்றன.. 

பிரபு - கம்பீரம் திரைப்படத்தின் தூண்களில் ஒருவர். சூர்யா கொஞ்சம் வேகம் - கொஞ்சம் விளையாட்டு என்றிருப்பதனால் பிரபுதான் திரைப்படத்தின் மையம் என்று பலவிடயங்களில் தோன்றுகிறது. உனக்கும் எனக்கும்,பில்லாவுக்கு பிறகு பிரபு பெருமைப்படக் கூடிய ஒரு பாத்திரம்! கண்களிலேயே பேசும் போது தந்தையார் சிவாஜி தெரிகிறார்.

எனினும் பிரபு ஒரு கடத்தல் பெரும்புள்ளியாக இருந்தும் இரு அடியாட்களோடு மட்டும் அவரை உலவ விட்டு சொதப்பி இருக்கிறார் இயக்குனர்.. ஏன் ஏன் ஏன்?

வில்லனை நல்லவேளை 'சேட்' ஆக காட்டியது! நிறைய பெண்களையே பொறாமைப்பட வைக்குமளவுக்கு அழகான நேரான முடி! 
மனிதர் கலக்குகிறார்! மிரளவும் வைக்கிறார். எனினும் வித்தியாசம் என்று எதுவுமில்லை.

கனாக்கண்டேனில் - பிருதிவிராஜ் வந்த அளவுக்கு மீண்டும் கே.வி.ஆனந்திடம் எதிர்பார்த்து என் தப்புத்தான்!
தாய் ரேணுகா பாத்திரம் மூலமாக நிற்கிறார்.. பிரபுவை வையும் இடமெல்லாம் எங்கே flashback போட்டு அறுக்கப் போகிறார்களோ பார்த்தால் நல்ல காலாம் அப்படி எதுவும் செய்து சொதப்பவில்லை..  

ஜெகன் தன் 'வீட்டிற்கு' கூட்டிப் போவது கலகல கலாட்டா!
ஆனால் கூத்துப்பட்டறையின் திறமையான கலைராணிக்கு ஒரு டப்பா பாத்திரம்.. ஏன் இந்தக் கொடுமை?

முதல் தரம் பட்ட 'பலான' அனுபவத்தையே சூர்யா இரண்டாவது தடவை உண்மை வீட்டிலே காட்டுமிடத்தில் இதுவரை எந்த கதாநாயகிக்கும் இல்லாத அறிமுகக் காட்சி தமன்னாவுக்கு! 
அது ஒரு வித்தியாசமான டூ பீஸ்! (ஜொள்ளர்களே படம் பாருங்க ... )

அசின் மும்பை பக்கமே போனால் அவர் வெற்றிடம் நிச்சயம் தமன்னாவுக்குப் போகும் என்று அடித்து சொல்லும் முதல் நபராக நானும் இருப்பேன்! குறும்பு காதல் சோகம் கோபம் அவற்றுடன் கவர்ச்சியும் தேவையான அளவு பொருத்தமான இடங்களில் வெளிப்படுகிறார்.

                                           Loshan

நல்லா மேலே வாங்கக்கா!

(ஆனால் ஏதோ ஒரு minus இருப்பதாக மனசு சொல்லுது என்னவென்று சரியாகக் கண்டுபிடிச்சு எனக்கு மின்னஞ்சலில் அனுப்புவோருக்கு என் சார்பில் நண்பர் காலாண்டி பரிசு கொடுப்பார்.)

தமிழ்த்திரைப்பட இயக்குனர்களுக்கு 'பில்லா' வின் பிறகு மலேசிய மேனியா பிடிச்சிருக்கு போல – 'அயன்'இலும் பாடல்களுடன் மட்டுமல்லாமல் ஜெகனை சாகடிக்கவென்றே மலேசியாவுக்கு கூட்டிப்போகிறார்கள். எனினும் ஆபிரிக்காவில் அசத்தும் காட்சிகள் போல மலேசியக் காட்சிகள் இல்லை!

விஜய் டிவி புகழ் ஜெகனுக்கு முதல் முறையாக ஒரு நல்ல நீண்டநேரம் வரக்கூடிய பாத்திரம் ஜெகனின் ஜொலிக்கிறார்.

                                   
                                      Loshan
ஜெகனுக்கு இனிமேலாவது நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்!  சூர்யா gap விடும் இடமெல்லாம் மனிதர் பட்டை கிளப்புகிறார்! அவரது timing sense of humour அபாரம்! சீனியர் கருணாவையும் ஓரங்கட்டி விடுகிறார்.
ஜெகன் தன் தங்கையை சூர்யா லவ்வும்போது மாமாவாக மாறிப்போவது நல்ல காமெடி.. நல்ல காலம் எனக்கும் தங்கைகள் இல்லை. எனது நெருங்கிய நண்பர்கள் யாருக்குமே தங்கைமார்,அக்காமார் இல்லை.. ;)

ஜெகன் பற்றி எனது முன்னைய பதிவொன்றுக்கு இங்கே சொடுக்குங்கோவ்..

சூர்யா – smart & class ! அவரது துள்ளல்,துடிப்பு,நடிப்பு நகைச்சுவை அனைத்துக்குமேற்ற மற்றுமொரு படம்! பல இடங்களில் விஜய்,அஜித் பட formulaக்கள் தெரிந்தாலும் சூர்யாவின் தனித்துவம் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறது.


                                     Loshan
சூர்யா பார்க்கும் போது சில நேரங்களில் தோனி போல இருக்கிறார். எந்த ஒரு கெட் அப்பும்,ஆடைகளும் அவருக்கு பொருந்தி விடுகிறது.. இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால் சிலவேளை போலிவூடில் ஷாருக்கான்,சல்மான் கான்,ஆமிர்கானுக்கெல்லாம் சவால் விட்டிருப்பார்..

'குருவி' விஜய் மாதிரியே பறக்கிறார்; பாய்கிறார்..சில இடங்களில் காதில் பூச்சுற்றினாலும் விஜய்க்கும் அவருக்கும் ஒரே வித்தியாசம் - அவருக்கு எவ்வளவு பாய்ந்தாலும் காயம் வராது - இவருக்கு காயமும் வருதே!

அக்ஷன் காட்சிகளில் அசத்தும் அதே அளவுக்கு ஆட்டம் ஒட்டம் தமன்னாவுடன் காதல் பொன்வண்ணனிடம் பதுங்கலிலும் பின்னி மினுங்குகிறார்.

தனக்கென்று தனி formulaவை வைத்துக் கொள்ளாமல் இப்படியே வேறுபட்ட கதைகளை மாற்றி மாற்றி எடுத்தால் என்ன வேடத்தில் சூர்யா நடித்தாலும் யாரும் ஏற்றுக்கொள்வார்கள்.

அந்த நகைக்கடை முதலாளி நம்ம S.P.முத்துராமனா? மனிதர் இணை தயாரிப்பாளர் என்று பெயரையும் போட்டுக் கொண்டதோடு பார்ட் டைமாக இனி நடிக்கவும் ஆரம்பிக்கலாம்.. 

ஹரிஸ் ஜெயராஜ் பாடல்கள் போலவே பின்னணி இசையிலுத் பிளந்து கட்டினாலும் ஒரு சில இடங்களில் சொதப்புகிறார்.. எனினும் பல இடங்களில் இவரை விட்டால் ரஹ்மானையும் மிஞ்சிவிடும் அபாரம்!

'விழிமூடி' பாடல் டச்சிங் ரகம் என்றால்,'அய்யய்யோ' - அட்டகாசம்; 'நெஞ்சே' காட்சிகளின் ரம்மியம். ஹரிஸின் இசையை அனுபவித்து –பாடல் வரிகளை ரசித்து ஆழ்நது படமாக்கியிருக்கிறார்கள்.

                                   Loshan
80களில் சகலகலாவல்லவன்,முரட்டுக்காளை பின்னர் அண்மையில் ஜெமினி என்று அடிக்கடி தமிழ் திரையுலகின் போக்குகளை மாற்றி வந்துள்ள AVM நிறுவனம் அயன் மூலமாக மேலும் ஒரு மாற்றம் கொண்டுவரும் போலுள்ளது..

படத்தை பார்த்துக் கொண்டு போகும் போது எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த மெக்சிகனோ அல்லது ஸ்பானியப் படமோ ஞாபகம் வந்தது.

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் DVD சுட்டு படமாக்குகிறார்கள் என்று விலாவாரியாகக் காட்டியதும் உங்களையும் சேர்த்தா K.V.ஆனந்த்?

அதிலும் வில்லனும் வில்லனின் காட்சிகளின் ஸ்பானிய பாணி பின்னணி இசையும் ஆபிரிக்காவின் சில காட்சிகளும் பல கடத்தல் காட்சிகளும் அந்த ஒரிஜினல் படத்தையே அடிக்கடி ஞாபகப்படுத்துது. 
ஆனால் பெயர் மட்டும் வருவதில்லையே!

கடத்தலில் இப்படி இப்படியெல்லாம் வழிகளுண்டா?

சுங்கத்தினரும் கடத்தல்காரர்களும் அயனுக்கும் ஆனந்துக்கும் நன்றி சொல்வார்கள் - அல்லது வெளில வாய்யா வச்சுக்கிறோம் என்பார்கள் -

வேறெந்நத் தமிழ்படத்திலும் இதுவரை பார்க்காதளவுக்கு கடத்தலை அக்குவேறு ஆணிவேறாகப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் - ஒருவேளை அனுபவமோ?

கிளைமாக்ஸ் காட்சி கூட பல ஹொலிவூட் படங்களை ஞாபகப்படுத்தியது.  நிறைய LOGIC ஓட்டைகள் இருந்தாலும் கூட சுவாரஸ்யத்தில் ஒன்றுமே உறுத்தவில்லை.

பாடல்காட்சிகளில் நேர்த்தி & நயம்.ஒவ்வொன்றிலுமே கலைநயம்,வெளிநாட்டுப் பயணம்,பணச் செழுமை தெரிகிறது.

அறிவுரை சொல்லும் காட்சியொன்றில் இயக்குனர் சங்கரையும் வருகிறார்!  

ஆனால் அண்மைக்காலத்தில் நான் பார்த்த படங்களின் தொடக்கம் முதல் முடிவு வரை தொய்வில்லாமல் ரசித்த ஒரு படம் அயன்!

ஜாலியாக ஒரு 2 ½ மணிநேரத்தை ரசிக்க 'அயன்' Jolly guarantee ! 

டிஸ்கி - படம் முடிந்து வெளியே வரும் நேரம் அடை மழைக்கிடையில் சூர்யாவின் ஸ்டாண்டை விட நானும் நண்பர்களும் ஓடி பாய்ந்து நனையாமல் என் வாகனத்தை தேடி ஏறியது,எந்த ஒரு HOLLYWOOD படத்திலுமே இதுவரை வந்திருக்காது.. ஆனால் ஒன்றிரண்டு பெண்கள் மாத்திரமே படம் பார்க்க வந்திருந்தது கொடுமை என்று நண்பர் காலாண்டி முணுமுணுத்தது இன்னும் எதிரொலிக்கிறது..   





Post a Comment

32Comments

Please Select Embedded Mode To show the Comment System.*