நேற்று கலைஞர் ஐயா அவர்கள் (ரொம்ப மரியாதை கொடுத்துள்ளேன்)உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற உடனே யோசித்தேன் என்னடா இது ஏதாவது மிகப் பெரும் புரட்சி வெடிக்க போகுதோ என்று!
அவர் உண்ணாவிரதம் இருந்தவிதம் & பின்னணி பற்றி எல்லாம் பல வலைப்பதிவுகள்/பதிவர்கள் பின்னிப் பிளந்து,பிரிச்சு மேய்ந்து,கிண்டி கிழங்கெடுத்திருப்பதனால் அது பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை.
கொஞ்ச நேரத்திலேயே பெரும் களேபரம் பரபரப்பு..
இலங்கையில் யுத்த நிறுத்தம்..
கலைஞர் உண்ணாவிரம் முடிவு..
என்று கலைஞர் டிவி பிரமாண்ட அறிவிப்பு.
(கலைஞர் உண்ணாவிரதம் முடிவு - இலங்கையில் யுத்த நிறுத்த அறிவிப்பு என்று எழுதினாலேயே சரியாக இருக்குமா?)
அப்படியா? என்று இங்கே இலங்கை அரசிடம் உத்தியோகபூர்வமாக விசாரித்தால் அப்படி எதுவுமே இல்லை.
என்னடா நடக்குது என்று பார்த்தால் இரண்டொரு மணிநேரத்துக்குப் பின்னர் கீழ் காணும் அறிவித்தல் வெளியானது.
பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக சனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அரசாங்கத்தின் அறிக்கை வருமாறு:-
போர் நடவடிக்கைகள் அவற்றின் முடிவை எட்டியிருப்பதாக இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கணரக ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை பயன்படுத்துவதையும் ஆகாயமார்க்கமான தாக்குதல்களை மேற்கொள்வதையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புப்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புப்படையினர் பணயமாக வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளோடு தங்களது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்வதோடு பொதுமக்களின் பாதுகாப்பு விடயத்திற்கு மிகுந்த முன்னுரிமை வழங்குவர்.
போர் நடவடிக்கைகள் அவற்றின் முடிவை எட்டியிருப்பதாக இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கணரக ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை பயன்படுத்துவதையும் ஆகாயமார்க்கமான தாக்குதல்களை மேற்கொள்வதையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புப்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புப்படையினர் பணயமாக வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளோடு தங்களது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்வதோடு பொதுமக்களின் பாதுகாப்பு விடயத்திற்கு மிகுந்த முன்னுரிமை வழங்குவர்.
ஐயாமாரே - இது தான் உங்கள் பார்வையில்,உங்கள் விளக்கத்தில் யுத்த நிறுத்தமா?
கலைஞரின் உடன் பிறப்புக்கள் பலபேருக்கு – (பல பிரபல பதிவர்கள் உட்பட) இந்த உண்மையை சொன்னால் கோபம் வருகிறது!
யுத்த நிறுத்தம் என்பது வேறு - இந்த அறிவித்தல் வேறு!
கனரக ஆயுதங்கள் பயன்படுத்தாமலும் யுத்தம் நடத்தலாம் என்பது யுத்த சூழலுக்குள்ளேயே மூழ்கியுள்ள எமக்கு நன்கு அனுபவமானது!
'மக்கள் மீட்பு' நடவடிக்கை என்றால் என்னுவென்று இலங்கைப் பத்திரிகைகள்,இணையத்தளங்கள், செய்திகள் பார்த்து பகுத்தறிந்து கொள்ளுங்கள்!
இதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்..
தமிழ் தான் புரியவில்லை என்றால் கீழ்காணும் ஆங்கிலத் தளங்களில் இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவித்தலை தயவுசெய்து வாசித்துப் பார்த்து விளக்கிக் கொள்ளுங்கள்.
No ceasefire in Sri Lanka - Military
Military spokesman Udaya Nanayakkara speaking to the Daily Mirror ascertained that the government has not declared a ceasefire. He clarified that only the use of heavy weapons and combat aircraft will be halted. His comment came after some International Media claimed that Sri Lanka has declared a ceasefire with the LTTE.
Further the Defence Ministry in a statement on its web site called the misinterpretation a 'Media illusionists' twist of the government statement.
More links:
உத்தியோக பூர்வமாக இலங்கை அரசு, அமைச்சு, இராணுவம் சொன்ன பிறகும் தெளிவில்லையா? இப்போது சொல்லுங்கள் நேற்று முழுவதும் 'இலங்கையில் யுத்த நிறுத்தம்' என்று வாய் கிழிய சொல்லிக் கொண்டிருந்த இந்திய ஊடகங்கள்,அமைச்சர்கள்,அரசியல்வாதிகள்,திமுகவினரை என்ன பெயர் கொண்டு அழைத்தல் தகும்? இவர்கள் முட்டாளாகினரா? அல்லது மக்களை முட்டாளாக்கினரா?
கலைஞர் ஐயாவின் அவசரத்துக்கு இலங்கை அரசு ஆறுதல் அறிவித்தலைக் கொடுக்காது என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளுக்கே Mind your own business சொன்னவர்களாயிற்றே நம்ம இலங்கை அரசினர்.. கலைஞர் ஐயா (இலங்கையின் பார்வையில் ஐவரும் ஒரு அரசியல் கோமாளியே தான்) எம்மாத்திரம்..
இப்படி ஏதாவது சொல்லப்போனால் -
ஜெயலலிதா வருவார் உங்களுக்கு கேட்பதெல்லாம் தருவார் என்று முத்திரை குத்தவும் ஒரு 'முழுக்கத் தெரிந்த' புத்திஜீவி கூட்டம் கண்ணுக்கு விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு காத்துக் கொண்டிருக்கிறது என்றும் எனக்குத் தெரியும்!
எனக்கென்றால்(எம்மில் பலருக்கும் தான்) இந்தியா தமிழக அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை போய் எவ்வளவோ காலம்.
ஏதோ நடத்துங்க... நடத்துங்க...
ஆனால் எம்மையும் - தமிழக அப்பாவிகளையும் (அப்பாவி போல் நடிப்பவர்களையல்ல) இளிச்சவாயர்கள் என்று நினைத்து ஏமாற்றி விடலாம் என நினைக்காதீர்கள்!
இது தமிழக அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல.. சில வால் பிடிக்கும் பதிவர்களுக்கும் சேர்த்து தான்.. பூனைகள் கண்களை மூடிக் கொண்டால் எங்கள் உலகங்கள் இருண்டுபோவதில்லை..