கிரிக்கட் ரசிகர்களுக்கு மட்டும்

ARV Loshan
14

ஒரேநாளில் நான்கு சாதனைகள் -  ஐந்து மைல் கற்கள்.

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கராச்சி டெஸ்ட் (முதலாவது டெஸ்ட்) போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் தான் இத்தனை பரபரப்புக்களும்.

முதல் நாளிலேயே ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி அண்மைய ஒரு மாத காலமாக இந்திய அணியிடம் வாங்கிக் கட்டியதை எல்லாம் பரிதாபமான பாகிஸ்தான் அணிக்குத் திருப்பிக் கொடுத்தது. இன்று ஆரம்பிக்கும் மூன்றாவது நாளிலும் முரளி & மென்டிஸ் மற்றும் குழுவினர் விட்ட இடத்திலிருந்து தொடருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய நாளில் நிலைநாட்டப்பட்ட புதிய சாதனைகள் - 

கராச்சி தேசிய மைதானத்தின் பெறப்பட்ட அதி கூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கை- 644/7.

முன்னைய சாதனை 2006ஆம் ஆண்டில் பாகிஸ்தானிய அணி -  இந்திய அணிக்கெதிராக பெற்ற 599/7  ஓட்டங்கள்.

4வது விக்கெட்டுக்கான உலக சாதனை இணைப்பாட்டம்.
மகேல ஜெயவர்த்தன & திலான் சமரவீர 437 ஓட்டங்கள்.

52வருடகாலம் இருந்த முன்னைய சாதனை
1957இல் இங்கிலாந்தின் பீட்டர் மே & M.C.கௌட்ரி மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராகப் பெற்றது 411 ஓட்டங்கள்.

இதன்மூலம் தற்போது துடுப்பாட்ட இணைப்பாட்டங்களில் 2ஆம்,3ஆம்,4ஆம் விக்கெட்டுக்களுக்கான உலக சாதனைகளும் இப்போது இலங்கையின் அணியின் வசம்.

இதிலே மிக அதிக ஓட்டங்கள் பெறப்பட்ட முதலிரு உலக சாதனை இணைப்பாட்டங்களும் இலங்கை அணிக்குரியதே 
மகேள ஜெயவர்த்தன & குமார் சங்ககார 2006இல் தென் ஆபிரிக்க அணிக்கெதிராக 624.
சனத் ஜெயசூரிய & ரொஷான் மஹாநாம -1997இல் இந்தியாவுக்கெதிராக 576.

கராச்சி தேசிய மைதானத்தில் பெற்றப்பட்ட எல்லா விக்கெட்டுக்களுக்குமான இணைப்பாட்டம்.
முன்னைய சாதனை 
ஆமிர் சொகைல் & இஜாஸ் அகமெட் 1997இல் மேற்கிந்தியத்தீவுக்கேதிராக 298 ஓட்டங்கள்.     

அது போல இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையும் இப்போது இலங்கையின் வசம்.
முன்னைய சாதனை 2000ஆம் ஆண்டில் பாகிஸ்தானிய அணி காலி மைதானத்தில் பெற்ற 600/8  ஓட்டங்கள்.

மைல் கற்கள்

நேற்று முன்தினம் மகேல தனது 8000 ஓட்டங்களைக் கடந்தார். (இலங்கையின் முதலாமவர்;உலகளாவிய ரீதியில் 20வது) 

நேற்று திலான் சமரவீர டெஸ்ட் போட்டிகளில் 3000 ஓட்டங்களைக் கடந்தார் (வீட்டிலே முதல்நாள் திலான் சமரவீர ஆடுகளத்துக்கு வந்தநேரம் அப்போது அவர் 2800 ஓட்டங்களில் இருந்தவேளை எனது தம்பியிடம் வேடிக்கையாக சமரவீரவின் 3000 ஓட்டங்கள் கராச்சியில் தான் என்று மூக்குசாத்திரம் சொல்லியிருந்தேன்.)

மகேல சமரவீர இருவரும் வெளிநாடொன்றில் தமது முதலாவது இரட்டைச் சதங்களைப் பெற்றனர். இலங்கை அணியின் சார்பில் வெளிநாட்டு மண்ணில் ஓரே இனிங்சில்,ஓரே டெஸ்டிலும் கூட இரு வீரர்கள் இரட்டைச் சதங்கள் பெற்ற முதல் தடவை இது.

சமரவீரவின் அதிக பட்ச டெஸ்ட் ஒட்ட எண்ணிக்கை நேற்றுப் பெற்ற 231! 

முரளியின் பந்துவீச்சில் மகேல எடுத்த 70வது பிடி! 
இந்த இருவரது இணைப்பே விக்கெட் காப்பாளரல்லாத களத்துடுப்பாட்ட வீரரும் (Non wicket keeping fielder) பந்துவீச்சாளரும் இணைந்து அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய சாதனையின் சொந்தக்காரர்கள்!

மகேலவின் ஆட்டம் அவர் மீதான கடுமையான விமர்சனம் தொடுத்தோருக்கும் அழுகுணி அரசியலாட்டம் ஆடித் தலைமைப் பதவியை அவர் விட்டு விலகுவதாக அறிவிக்க சதி புரிந்த சிலருக்கும் கன்னத்தில் விட்ட அறைபோல இருந்திருக்கும்.


ஆங்கிலத்தில் 'Form is temporary but Class is permanent' என்பதை மகேல நிரூபித்துள்ளார்.

இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிக்களையும் வென்று நாடு திரும்பிய பின் (பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது) ஜனாதிபதி மகேலவை அழைத்து (அவருக்கு இருக்கும் 'பிஸி'யான வேலைகளில் மத்தியிலும்) மகேலவைத் தொடர்ந்தும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராகத் தொடரச் சொல்வார் என்று நான் நினைக்கிறேன்!

பார்க்கலாம் நடக்குதா என்று!

 

Post a Comment

14Comments

Please Select Embedded Mode To show the Comment System.*