
இலங்கையின் சுதந்திர தினக்கொண்டாட்டங்கள்; இப்பொழுதே ஆரம்பித்துள்ளன. அர தினைக்கள, அமைச்சுக் கட்டடங்களில் வாழ்த்துப் பதாதைகள், 'பெரியவர்கள்' சிரிக்கும் சுவரொட்டிகள் மற்றும் இரவு நேரங்களில் நகரத்தையே ஒளிமயமாக்கும் மின்விளக்குத் தோரணங்களும், அலங்காரங்களும்!
இதிலே தனியார் கட்டடங்கள் மற்றும் இதர கட்டடங்களையும் இவ்வாறு இரவு நேரங்களில் அலங்கரித்து 61வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது உள்நாட்டு விவகார அமைச்சின் உத்தரவு வேறு.
உலகம் முழவதும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலைகளைக் குறைப்பதில் மிகுந்த சிரமப்பட்டு அண்மையில் தான் நீதிமன்ற உத்தரவின் பின்னர் அரசு கருணை காட்டிக் கொஞ்சமாய் குறைத்துள்ளது.
மின்சாரக்கட்டணங்கள் மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ள நிலையில் இப்படிப்பட்ட ஆடம்பர, அனுஷ்டானங்கள் தேவையா?
ஒரு பக்கம் 'தேசத்தின் மகுடம்' என்ற பெயரில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாபெரும் கண்காட்சி. மறுபக்கம் 4ம் திகதி வருகிற சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக முப்படைகளின் அணிவகுப்புக்களுக்கான ஒத்திகைகள் என்று முக்கியமான வீதிகள் எல்லாமே பாதுகாப்புக் காரணங்களுக்காக திடீர், திடீரென்றோ மூடப்படுவது இந்த வருடமும் வழமையே.
தீவின் ஒரு பகுதி (நாட்டிலும் தானே!?) யுத்தத்தில் இருக்கு, தலைநகரத்தில் பாதுகாப்பு கட்டாயம் தானே? அதிலும் ஒரு நாட்டின் மிக முக்கியமான தினமான சுதந்திர தினத்துக்கு என்று வரும்போது இன்னும் அத்தியாவசியம் தான். மக்கள் கிடக்கிறார்கள் மக்கள்.
நாடு மக்களுக்கு எவ்வளவோ பண்ணும் போது – மக்கள் இதைக்கூட சகித்துக்கொள்ள மாட்டார்களா?
காலி முகத்திடலில் தான் ஜனாதிபதி கலந்துகொள்ளும் மாபெரும் பிரதான சுதந்திரதின விழா.. இம்முறை இத்தனை மாபெரும் பிரம்மாண்ட வெற்றி விழாவாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெறுகிறதாம்.. இதனால் வழமையான சுதந்திர தின காலகட்டங்களை விட அதியுச்ச ஏற்பாடுகள்.. மக்களுக்கு ரொம்பவே சந்தோசமுங்க..
கொண்டாடுவோம்.. எல்லோரும் இலங்கையின் சுதந்திர தினத்தை..
வடக்கு மக்கள்? அவர்களும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறார்களாமே.. பாருங்கள் இணையத் தளங்கள்,பத்திரிகைகள், தமிழகம்,வெளிநாடுகளில் நடக்கும் மக்கள் பேரணிகள்,ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் சொல்லுதே.. பிறகென்ன அவர்களும் சந்தோசமா இந்தக் கொண்டாட்டங்களில் இணையலாம் தானே..
தமிழகத்தில் கடையடைப்பு,பொது வேலை நிறுத்தத்துடன்... இலங்கையில் எல்லோரும் ரொம்பவே மகிழ்ச்சியுடன்.. (இவ்வளவும் தான் இலங்கையில் அதுவும் கொழும்பில் இருந்து என்னால் எழுத முடியுமப்பா.. வெளிநாட்டில இருக்கிற நீங்கள் எதோ,பார்த்து கீத்து எழுதுவதை எழுதுங்க.. )
வைரமுத்து சொன்ன வரிகள்..
'பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்தபோது நாம் கட்டி இருந்த கோவணமும் களவாடப் பட்டது...'
கஞ்சிபாய் சொல்கிறார்.. நம்ம கோவணங்கள் எப்போதோ களவாடப் பட்டு விட்டன.. இப்போது எங்கள் அறுனாக்கொடிகளையும் உருவியாச்சு என்று..
உங்களுக்கு ஏதாவது புரியுது? எனக்கென்றால் ஒன்றுமே புரியல்ல..