நேற்று முன்தினம் சனிக்கிழமை பெப்ரவரி 14 என்னைப் பொறுத்தவரையில் ஒரு பரபரப்பான நாள்!
3 in 1 என்று சொல்லக்கூடிய விதத்தில் ஒரே நாளில் மூன்று நிகழ்வுகள்.
1. உலகளாவிய ரீதியில் காதலர் தினம்
2. இலங்கையில் வடமேல் மாகாண மத்திய மாகாணத் தேர்தல்கள்
3. நான் பணிபுரியும் வெற்றி எப்.எம் வானொலியில் முதலாம் ஆண்டு நிறைவு.
காதலர்தினம் அண்மைக்காலத்தில் தான் மேலைத்தேயங்களிருந்து நாம் இரவல் வாங்கி இப்போது வருடத்தின் முக்கியமான தினங்களுக்குள் ஒன்றாக மாற்றியிருக்கும் ஒரு காதலர் திருவிழா!எனது பாடசாலைக் காலத்திலேயே தான் இந்த Valentines day எனப்படும் காதலர் தினம் இலங்கையில் பிரபலமாகத் தொடங்கியது என்று நினைக்கிறேன். அந்த வாரம் முழுவதுமே ஒரே களேபரம் தான்.. உற்சாகமும்,ஆர்வமும் கரைபுரண்டோடும்.. ஒரே நாளில் சிலவேளை ஏமாற்றத்தோடு முடிந்து போவதும் உண்டு..
அது எல்லாம் ஒரு காலம் என்று சொல்லுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.. இன்னும் இளமை வற்றிவிடவும் இல்லை.. அதே வேளையில் இப்போதும் கூட இன்னும் பலபேரை நான் Valenties day card உடனும்,பூங்கொத்துக்களுடனும், ஆர்வத்துடனும் அலையும் பல நண்பர்களையும், இந்தக் கால மாணவர்களையும் பார்ப்பதில் ஒரு சுவாரஸ்யம் தான்..
இணை யத்தளத்தில் தற்செயலாகப் பார்த்த ஒரு அழகான படம்.. காதலில் பிஞ்சு உள்ளங்களோடு பரிமாறிக் கொள்ளப்படும் இதயமும்,ரோஜாவும்..
எனினும் பொதுவாகப் பார்க்கும் போது, காதலிலே திளைத்து, காதலாலேயே பல சாம்ராஜ்யங்களையும்,இலக்கியங்களையும் உருவாகிய எமது தமிழ் இனத்துக்கே காதலர் தினம் பெப்ரவரி மாதத்திலே தான் வருகிறது என்று மேலைத் தேயம் கற்றுத் தருகிறது..ஒரு விளம்பர யுக்தியாக,சந்தைப்படுத்தல் தந்திரமாக இந்தக் காதலர் தினத்தை பயன்படுத்தி இளைஞர் யுவதிகளை சுண்டி இழுப்பது தான் இந்த நாளின் முக்கிய நோக்கமே தவிர, இந்த நாளில் தான் எங்கிருந்தோ காதல் தேவதைகளோ,தேவனோ வந்து காதலை ஆசீர்வதித்து காதலை பிறப்பிப்பார்கள் என்று நம்ப நான் தயாரில்லை..
பெப்ரவரி மாதம் ஆரம்பித்த நாளிலே இருந்து வரும் வாழ்த்துக்கள் தாங்கிய மின்னஞ்சல்கள்,smsகள் என்று எல்லாமே pink,சிவப்பு நிறங்களிலும் வந்து களைகட்டுவது ஒரு கிளர்வு தரும் விடயம் தான்.. அதுபோல உலகில் எப்போது பேசினாலும்,எழுதினாலும்,வாசித்தாலும் அலுக்காத ஒரே விடயம் காதல். எனினும் இந்தக் காதலர் தினக் காலங்களில் இது கொஞ்சம் over dose என்றே எண்ணத் தோன்றுகிறது.
கண்றாவியாக கண்ணீரோடும் தீவாக மாறிப்போன எமது நாட்டில் எதற்கு இந்தக் காதலர் தினக் கொண்டாட்டங்கள்?
போர்க்களங்களின் மத்தியிலும் காதல் பூக்கும் தான்.. ஆனால் எறிகுண்டுகள் ஒருபக்கம் வீழ்ந்துகொண்டிருக்க,பட்டினியால் ஒரு பகுதி செத்துக் கொண்டிருக்க,அங்கங்கள் கிழிந்தும்,எரிந்தும் ஒரு பகுதி மக்கள் வேதனையோடு இருக்க மறுபக்கம்,பூச்செண்டு,புத்தாடை,களியாட்டங்களோடு யாராவது காதலர் தினம் கொண்டாடி இருந்தால் உலகிலேயே கொடுமையான மனதுடையவராக அவரையே நாங்கள் கருதிக் கொள்ளலாம்.
இம்முறை இலங்கையில் மக்கள் எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளுக்குள்,மன வேதனையான பொழுதுகளில் எங்கள் வானொலியிலாவது காதலர் தின, மற்றும் எமது வெற்றி வானொலியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்ப்போம் என்று நானும் எனது வெற்றி அறிவிப்பாளர் குழுவினரும் முடிவெடுத்தோம்.காதலர் தினமும்,எமது வெற்றி வானொலியின் முதலாவது பிறந்தநாளும் ஒரே நாளில் வருவதனால்,அதுவும் சனிக்கிழமை வருவதனால் பெரிதாக ஏதாவது செய்யலாம் என்று எமது நிறுவனம் ஏற்பாடுகள் செய்தவேளையில், நாட்டின் நிலை,மக்களின் மனநிலை,எங்கள் கருத்து போன்றவற்றை எடுத்துக் கூறி இந்த வருடம் வேண்டாம் கொண்டாட்டங்கள் என்று நிறுத்தினோம்.
சிங்களவராக இருந்தபோதும் புரிந்துகொண்டார்கள்.ஒருபக்கம் இராணுவ வெற்றிகள் குவிந்து வரும் நேரம்,புரிந்துகொண்ட அவர்கள் அமைதியாக எமது முதலாவது ஆண்டு நிறைவை கொண்டாட எமக்கு அனுமதித்தது பெரிய விஷயம்.
எங்கள் மக்கள் துன்பத்திலும்,பட்டினியிலும் மரித்து வரும் நிலையில்,தீக்குளிப்புக்கள் தமிழகம்,மலேசியா,ஜெனீவா என்று பரவி வரும் நிலையிலும்,இன்னமும் கொண்டாட்டங்களையும்,விழாக்களையும் ஆடம்பரமாக கொண்டாடிவரும் நம்மவரோடு ஒப்பிடும்போது,எம் வானொலியின் உரிமையாளர்கள் எவ்வளவோ மேல்.(அரசியலில் சிறிதும்,நேரடியாக இவர்கள் சம்பந்தப்படவில்லை என்பதை இங்கே சிலபேருக்கு சொல்லியே ஆகவேண்டும்.. காரணம் அந்த சிலபேர் எமது வானொலியின் உரிமையாளர்கள் என்று நினைத்திருப்போர் ரொம்பப் பெரியவர்கள்.. அவர்கள் அல்ல இவர்கள்)
14ஆம் திகதி இரவு வெற்றியின் பிறந்தநாள் சிறப்பு நினைவூட்டல் நிகழ்ச்சியின்போது கலையகத்தில் வெற்றிக் குழுவினர்.
அத்துடன் தேர்தல் முடிவுகளை அறிவிக்க விசேட ஒலிபரப்பும் இருந்தாலும், இம்முறை வழமையான தேர்தல் பரபரப்பு எதுவுமே இல்லை..ஆளும் கட்சி இலகுவான வெற்றியை இரு மாகாணங்களிலும் பெற்றுவிடும் என்பது அனைவருக்குமே தெரிந்தது தானே..
காதலர் தினத்துக்கான சில பெயர் சொல்லும் நிகழ்ச்சிகளோடும்,எங்கள் ஓராம் ஆண்டு நிறைவை முன்னிட்டான சில ஞாபகமூட்டல் நிகழ்ச்சிகளோடும் தேர்தல் ஒலிபரப்புக்குத் தாவினோம்.
எங்களது நிகழ்ச்சிகளில் இந்த ஒரு வருடத்தில் நாங்கள் கடந்து வந்த பாதையை ஞாபகப்படுத்திய போது, நிறையப்பேருக்கு ஒரே ஆச்சரியம்..வெற்றியின் ஆரம்பம் இப்படித் தானா என்று.. காரணம் நாங்கள் எதுவுமே இல்லாமல்,ஒரு ஏழ்மை நிலையில் தான் எமது ஒலிபரப்பை முதலில் ஆரம்பித்தோம்.. ஒரு கணினி,உருப்படி இல்லாத ஒலிவாங்கியுடன் ஆரம்பித்த எமது பயணம் தான் இப்போது பெயருக்கேற்றது போல வெற்றியாக மாறி நிற்கிறது என்பது Rags to Riches எனும் விதத்தில் எங்களுக்கும் பெருமை தான்.
பரிசுகள்,சினிமா நட்சத்திரங்களின் வாழ்த்துக்கள் கேட்கத் தான் நேயர்கள் என்ற நிலையை எமது பிறந்த நாள் கொண்டாட்டம் மூலமாகவும் கொஞ்சம் மாற்றிக் காட்டினோம். இலங்கையின் நிலை உணர்ந்து எங்கள் அமைதியான சிறப்பு நிகழ்ச்சிகளோடு இணைந்து நிலையுணர்ந்து நடந்துகொண்ட நேயர்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்களே..
தமிழகத்திலேயே கொந்தளித்து குமுறி எங்கள் அன்பு உறவுகள் கவலைப்படும்போது நம்மவர்கள் இதுகூட செய்யாவிட்டால் எப்படி...
தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது போலவே ஜனாதிபதிக்கும்,ஆளும் கட்சிக்கும் மாபெரும் வெற்றியாக அமைந்தன.வடக்கு முனை யுத்த வெற்றிகள் தந்த பரிசுகள் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர்.வெகு விரைவில் இலங்கையின் மொத்த எதிர்பார்ப்பைக் காட்டும் மேல் மாகாணத்தின் தேர்தலும் நடத்தப்பட உள்ளது.. அதிலும் 'மாபெரும்'வெற்றி கிடைத்தால் பொதுத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பும் வெகுவிரைவில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது..
நடக்கட்டும் நடக்கட்டும்..
அங்கே வேட்டுக்கள் வெடிக்க வெடிக்க இங்கே வோட்டுக்கள் குவிகின்றன..