அன்று நான் ரசித்த A.R.ரஹ்மான்

ARV Loshan
28


திரைப்பாடல்களை நான் ரசிக்க ஆரம்பித்தது எந்த வயதில் என்று சரியாக ஞாபகமில்லாவிட்டாலும் 5 – 6 வயதுகளிலேயே அப்போது வானொலிகளில் அதிகம் ஒலிபரப்பாகி வந்த 'பருவமே புதிய பாடல்பாடு' -நெஞ்சத்தைக் கிள்ளாதே, 'மழையே மழையே' - அம்மா, 'ஐம்பதிலும் ஆசை வரும்',ஒரு தலை ராகம் படப் பாடல்கள்  என்பவற்றை ரசித்து முணுமுணுத்தது இப்போதும் மனதுக்குள் ஞாபகம் இருக்கிறது.

பாடல் இசை பாடக பாடகியர் பற்றி நன்கு தெரிய ஆரம்பித்த பின்னர் முதலில் நான் ரசிக்க ஆரம்பித்தது SPBஇன் குரலைத்தான்! இப்போது வரை எத்தனை நூறு குரல்கள் வந்தாலும் SPBஇன் குரலில் பாடலொன்றைக் கேட்பது போல ஒரு சுகானுபவம் எனக்கு வேறுயார் குரலிலும் கிடைத்ததில்லை.

இப்போதும் SPBஇன் குரலில் பாடல் தராமலிருக்கும் புதிய இசையமைப்பாளர்களை மனதிற்குள் வைவதும் உண்டு. அதுபோல SPB பாடாத சில புதிய பாடல்களை மனதிற்குள்ளேயோ வெளியேயோ நானே பாடி (யாரும் கேட்காதீங்க..அதுக்குப் பிறகு பாடல்களே உங்களுக்குப் பிடிக்காமல் போல்வரும் என்று யாராவது வதந்தினால் நம்பாதீங்க..) SPBஇன் குரலில் அந்தப் பாடல் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்வதும் உண்டு.

கவிதைகளை ரசிக்கத் தொடங்கிய பின் வைரமுத்துவின் மீது பிரியமும் மதிப்பும் ஏற்பட்டது. வைரமுத்துவின் பாடல்களில் ரசிப்பு ஏற்பட அப்போது தனியான இசை ராஜாங்கம் நடாத்தி வந்த இளையராஜாவும் முக்கிய காரணம்!

இளையராஜா & வைரமுத்து இணைந்த பொற்காலத்தில் பாடல்கள் அத்தனையினதும் ரசிகன் நான்! இன்று வரை ஒரு வரி மறக்காமல் ஞாபகம் வைத்துள்ளேன். அந்தக்கால இளையராஜாவின் இசை ரசிகன் என்று சொல்வதில் இன்னமும் எனக்கும் பெருமை!

பின் வந்த காலத்தில் இளையராஜாவின் monopoly பிடிக்காமல் போனாலும் வைரமுத்து - இளையராஜாவின் பிரிவால் இசைஞானி மீது பிடிப்புக் குறைந்தாலும் கூட இலுப்பைப்பூ சர்க்கரைகளை ரசிக்கத் தோன்றாமல் இளையராஜாவின் இசையைத் தான் ரசித்துக் கொண்டிருந்தேன்.

இடையிடையே வந்த ஒரு சில தேவா,S.A.ராஜ்குமார்,வித்யாசாகர் இசைகளும் மனதைக் கவரவே செய்தன.

90களில் ரோஜாவுடன் வந்த A.R.ரஹ்மான் இசையலையில் அப்படியே ரஹ்மான் ரசிகனாக/வெறியனாக மாறியிருந்தேன்.

அப்படியிருந்தும் தேவர்மகன் பாடல்களையும் ரோஜா பாடல்களையும் கொண்டிருந்த ஒரு ஒலிப்பதிவு நாடாவை (CASSETTE) முதலில் போட்ட போது அவற்றில் நான் கூடுதலாக ரசித்தது இஞ்சி இடுப்பழகி மற்றும் போற்றிப் பாடடி ஆகியவற்றை தான்!

'சின்னச்சின்ன ஆசை' பாடல் பற்றி எனது நண்பர்களுக்கு நான் சொன்ன முதல் விமர்சனம் 'யாரோ சின்னப் பையன் Nursery Rhymes மாதிரி இசையமைத்திருக்கின்றான்.' எனினும் பின்னர் ரஹ்மானை முதலில் ரசிக்கத் தூண்டியதும் வைரமுத்துவின் வரிகள் தான்!

'காதல் ரோஜாவே' பாடலில் 'முள்ளோடுதான் முத்தங்களா' வரிகள் தான்!

ஆச்சரியம் பாருங்கள் - அந்தப்பாடலும் ரஹ்மானின் இசையில் - SPB & வைரமுத்து.

ரஹ்மானின் அத்தனை cassettes,cds தேடிப் பிடித்து வாங்கி,சேகரித்து வைப்பதே அப்போது என்னுடைய முதல் பொழுதுபோக்கு. ரோஜா,இந்திரா,பாம்பே,டூயட்,காதலன்,gentleman,மனிதா மனிதா என்று ரஹ்மானின் பாடல்கள் கேட்டுக் கேட்டு என் walkman பழுதாய்ப் போனதும் உண்டு. 


ரஹ்மானின் ஒவ்வொரு புது நுட்பங்களையும், புதிய இசைப் பாணிகளையும் ரசிப்பதும் ,ஒத்த அலைவரிசை உடைய நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வதும் எனக்குத் தனியான மகிழ்ச்சி தரும் விடயங்கள். 

ரஹ்மானின் இசைக்கு முன்னால் மற்ற எல்லோருமே ஏனோ ரொம்பப் பின்னாலேயே நிற்கிற மாதிரி ஒரு தோற்றப்பாடு என் மனதிலே இருந்து வந்தது.. ரஹ்மானின் பாடல்கள் பிடிக்க இன்னொரு காரணமும் இருந்தது எனக்கு பின்னரே உணரக்கூடியதாக இருந்தது.

அந்தக் கால கட்டத்தில் ரஹ்மானின் இசையில் பெரும்பாலான பாடல்களை எழுதிவந்தவர் வைரமுத்து. இன்று வரை ரஹ்மானின் மெட்டுக்களுக்கு  வைரமுத்துவின் சொற்கட்டுக்கள் மட்டுமே சரியாகப் பொருந்தி சுவை தருவதாக நான் கருதுகிறேன்.அவருக்கு நிகராக வாலியை வேண்டுமானால் சொல்லலாம்.

எப்போது ரஹ்மானுக்கும்,வைரமுத்துவுக்கும் இடையில் பிளவு ஏற்படுமளவுக்கு முறுகல் வந்ததோ- 

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இசை வெளியீட்டு விழாவில் வரிகளின் இனிமையை இசை மேவுவதாக வைரமுத்து குறைப்பட்டதை அடுத்தே இந்த முறுகல் தோன்றியது என்று நான் அறிந்தேன்.

அன்றிலிருந்து ரஹ்மானின் இசையில் வேறு பலரும் பாடல்கள் எழுத ஆரம்பித்தனர்.தெனாலி தான் ஆரம்பம் என்று நம்புகிறேன். அந்தப் படம் கமலுக்காகப் பிடித்ததே தவிர பாடல்கள் எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை.. (வைரமுத்து பாடல் எழுதாது தான் காரணம் என்று நினைக்கிறேன்)

ஏனோ அதன் பின்னர் ரஹ்மானின் இசைப் பாணியும் மாற்றம் பெற ஆரம்பித்தது.அவரது தேடல்கள் உலக தரத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது.அவரது அந்த மாற்றமும்,தெனாலிக்குப் பிறகு வெளிவந்த அவரது பாடல்களின் வித்தியாசத் தன்மையும் என்னை ஏனோ ரஹ்மானிடத்திலிருந்து அன்னியப் படுத்தியது போலவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

ரஹ்மான் இசையமைத்த அநேக மணிரத்னத்தின் படங்கள் ஹிந்திக்கும் சென்றதால் அல்லது அங்கிருந்து வந்ததால் இந்தித் தாக்கம் தமிழின் தனித்துவத்தைக் குறைத்திருக்கவும் கூடும். 

நான் ரஹ்மானின் இசை எனக்குப் பெரிதாகப் பிடிக்காமல் போனது என்று சொல்கிறேனே தவிர, எந்த விதத்திலும் அவரது இசைத் தரம் குறைந்துவிட்டது என்று எங்கேயுமே சொன்னதுமில்லை;சொல்லவும் இல்லை.

அதற்குப் பிறகு நான் ரஹ்மானை ரசித்தபோதே,மனதில் இடையிடையே சாரலாயும்,தனது சில அதிரடி,மேற்கத்தியப் பாணியிலான இசையினாலும் தனக்கென ஒரு இடத்தை எடுத்துக் கொண்ட வித்யாசாகரின் இசையாலும்,மெட்டுக்களாலும் கவரப்பட்டேன்.

இசைஞானி,ரஹ்மானுக்குப் பிறகு யாருமே தொடாத இசையின் நுண்ணிய,மென்மையான பிரதேசங்களைத் தொட்டு,மனதில் சிலிர்ப்பூட்டியவர் வித்யாசாகர் தான் என்று அடித்து சொல்லத் தயார்.ஆனால் பாவம் ஏனோ இன்னமும் புகழ் வெளிச்சம் பெரிதும் படாத ஒருவராகவே இருந்து வருகிறார். 

இந்தியத் திரை இசையுலகின் மிகப் பெரிய,பரிதாபமான under rated musician வித்யாசாகர் தான். (இவர் பற்றி எழுத வேண்டும்,எழுதவேண்டும் என்று பதிவு போடத் தொடங்கிய நாளில் இருந்தே யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.. ஒன்றில் நேரம் இருக்காது;இல்லையென்றால் சோம்பல் விடாது)

இன்னமும் ரஹ்மானை ரசிக்கிறேன்.. முன்பு 90,2000களில் ரசித்தது  போல,எல்லாப் பாடல்களையும் அல்ல..ஒரு சில பாடல்களே மனதுக்குப் பிடித்து இருக்கிறது. ரஹ்மானின் தீவிர ரசிகர்கள் இத்தனை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.. ஆனாலும் அவரது புதிய முயற்சிகள் வியப்பை ஏற்படுத்துவதையும்,சாதனைகள் எங்களுக்குப் பெருமை தருவதையும் யாரும் மறுக்க முடியாது.

ஆனால் தனியே தமிழில் ரஹ்மான் லயித்திருந்தபோது தந்த இசை இனிமையின் தனித்துவம் ஏனோ இப்போது இல்லை என்று நான் கருதுகிறேன்.ஆனால் இந்த ரசனை மாற்றம் அவர் உயரத்துக்கு நான் இல்லையோ என்பதும் காரணமாக இருக்கலாம்.

அவர் ஒஸ்கார் வெல்வதற்கும்,இதுவரை வென்ற சர்வதேச விருதுகளுக்கும் இந்த இடைவெளியும்,ரஹ்மானின் புதிய கால மாற்றத்தினாலான தேடலுமே காரணமாக இருக்கலாம்.  

சர்வதேச விருதுகள் ரஹ்மானைத் தமிழில் இருந்து அந்நியப்படுத்தி,பெரிய இடைவெளியைத் தந்து விடுமோ என்று உண்மையாகவே நான் கவலைப்படுகிறேன்.அதற்காக அந்த கட்டுக்கடங்கா இசைப் புயலை எம் சுயநலத்துக்காக தமிழ் என்ற வட்டத்துக்குள்ளேயே வைத்திருப்பதும் நல்லதில்லையே..

எத்தனையோ புத்தம் புதிய பாடல்களை தினந்தோறும்,ஒலிபரப்பியும்,கேட்டும் வந்தாலும், இன்றும் எனக்குப் பிடித்த பாடல்களாக நான் ரசிப்பதும் உருகுவதும் எண்பதுகளின் இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களும்,ரஹ்மானின் ஆரம்பகால மெட்டுக்களும் தான்..

இப்போதும் எனது செல்பேசியில் வரும் அழைப்பொன்று "வெண்ணிலாவின் தேரிலேறி.." என்று ரஹ்மானும் நானும் இணைந்திருந்த (!?)அந்தக் காலத்தை ஞாபகப்படுத்துகிறது. 
   


 

Post a Comment

28Comments

Please Select Embedded Mode To show the Comment System.*