எல்லாப் புகழும் ஒஸ்கார் ரஹ்மானுக்கே..

ARV Loshan
25

நேற்றைய நாள் உலகத் தமிழர் எல்லாருமே தமிழராய்ப் பிறந்ததற்கு ஒரு தடவையாவது பரவசமும் பெருமையும் பெற்றிருக்கக் கூடிய ஒருநாள்!

'ரோஜா' திரைப்படத்தின் பாடல்கள் மூலமாக கீ போர்டும் கையுமாக புதியதொரு இளம் மந்திரவாதியாக ஆரம்பித்த ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இளைஞன் உலக மகா  இசைக்கலைஞனாக 'ஒஸ்கார்'என்ற இசைமகுடம் சூடிக்கொண்டநாள்!

கேட் வின்ஸ்லட் என்ற பிலபலமான ஹொலிவூட் / பிரித்தானிய நடிகை ஒரு தடவை இறுதிச் சுற்று வரை நியமனம் பெற்று இம்முறையே விருது கிடைக்க மெரில் ஸ்டீரிப் என்ற நடிகை 15 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்க(இரு தடவையே இவர் வென்றிருக்கிறார்) இந்தியாவில் புறப்பட்ட இசைப்புயல் ஒரே தடவையில் ஒரே படத்தில் இரு 'ஒஸ்கார்' விருதுகளை வென்று வந்திருக்கிறார்!

உலகம் முழுவதும் ஏ ஆர் ரஹ்மானை கொண்டாடுகிறது. 

இந்தியா முழுவதும் இவரது பெயரை உச்சரித்து உச்சரித்து உருகிப் போகிறது!

மேடையிலே ரஹ்மான் உச்சரித்த 'எல்லாம் புகழும் இறைவனுக்கே'

மத அடையாளம் கடந்து – எல்லாத் தமிழ்பேசும் இதயங்களிலும் தந்த புல்லரிப்பும் புளங்காகிதமும் இருக்கிறதே இந்த ஜென்மத்துக்குப் போதும்!

இலங்கையிலே நாம் வாழும் பிரச்சனைகளின் சூழல் கூட மறந்து போய்த் தமிழையைப் பிறந்ததற்குப் பெருமையடைந்த போது தந்த ரஹ்மானுக்கு மனதால் நன்றிகள் சொன்னேன்!

உலக நட்சத்திரங்கள் அனைவரும் கூடியிருந்த KODAK அரங்கில்,இன்னும் பல கோடி மக்களின் உலகம் முழுவதும் பார்த்திருக்க,ரஹ்மான் தனது பாடலையும் பாடி,அன்னைக்கு அர்ப்பணித்து,அனைவருக்கும் நன்றி சொல்லி உலகின் அதி உயர் திரை விருதுகளை இரு தடவை அள்ளிக்கொண்ட போது எண்பது ஆண்டுகால ஒஸ்கார் சரித்திரத்தில் தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய தருணம் அதுதான்.

கமல் சொன்னது போல இது உலக தரம் என்பதை விட உலகிலே திரை,இசை மற்றும் திரையிசை மூலமாக ஆதிக்கம் செலுத்திவரும் அமெரிக்கத் தரமான விருது எம்மைத் தேடி வந்திருப்பதாக எண்ணிக் கொண்டாலும்,ஒரு தமிழருக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. 

எனினும் தமிழ் திரைப்படம் ஒன்றின் தமிழ்ப்பாடல் மூலமாக எங்கள் ரஹ்மான் எப்போது இந்த விருதை அள்ளிவருவார் என்ற ஏக்கம் எழாமலும் இல்லை.. ஜயகோவுக்கு கிடைத்ததற்குப் பதிலாக ஓ ஷயாவுக்கு கிடைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நாங்கள் மகிழ்ந்திருப்போம். மாயா/மாதங்கி ரஹ்மானோடு சேர்ந்து உருவாகிய பாடலாச்சே..

ரஹ்மானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து அவரது திறமை,கடுமையான உழைப்பு,புதிய தேடல்களுக்கு நன்றிகளை சொல்லிக் கொள்வதோடு,அவரது நன்றி மறவாமையும்,தன்னம்பிக்கை,தன்னடக்கம் ஆகியவை இன்னும் மேலே மேலே ரஹ்மானை உயரத் தூக்கி செல்லும் என்றும் குறிப்பிட்டே ஆகவேண்டும். 

இன்றைய என் பதிவில் ரஹ்மான பற்றிய எனது மேலும் சில எண்ணக் குறிப்புக்களைப் பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன்..

மற்ற இசையமைப்பாளர்களிடம் இருந்து ரஹ்மானை வேறுபடுத்திய விடயங்கள் மற்றும் ரஹ்மான் தமிழ் திரையிசையில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்று நான் கருதும் விடயங்கள்..

இதில் யாருக்காவது மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் அல்லது நான் குறிப்பிடாமல் விட்ட விடயங்கள் என்று நீங்கள் கருதுபவை இருந்தால் பின்னூட்டங்கள் மூலமாக அறியத் தாருங்கள்..

  ரஹ்மான அளவுக்கு வேறெந்த இசையமைப்பாளரும் இத்தனை அதிக புதிய பாடக,பாடகியரை அறிமுகப்படுத்தவில்லை..
ரோஜாவில் ஹரிஹரநொடு ஆரம்பித்த இந்த நீண்ட பட்டியல் இறுதியாக வெளிவந்த டெல்லி 6 வரை தொடர்கிறது..

ரஹ்மானின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அநேகர் (எல்லோருமே என்றுகூட சொல்லலாம்) மிகப் பிரபலமானவர்களாகவும்,ஏனைய எல்லா இசையமைப்பாளரின் இசையிலும் பிரகாசிக்கின்றார்கள் எண்பது குறிப்பிடத் தக்கது.

மிகச் சிறந்த உதாரணங்கள்

ஹரிஹரன்,உன்னி கிருஷ்ணன்,ஸ்ரீநிவாஸ்,ஹரிணி,கார்த்திக்,ஷங்கர் மகாதேவன்,அனுராதா ஸ்ரீராம்,சுபா.. இப்படியே இன்றைய சின்மயீ, நரேஷ் ஐயர்,பென்னி தயாள் வரை வரும்..

அத்துடன் ரஹ்மான் தமிழுக்குக் கொண்டுவந்த ஹிந்தி பாடக,பாடகியரை தங்கள் ஆஸ்தான பாடகராக்கிக் கொண்ட ஏனைய இசையமைப்பாளர்களும் உண்டு..

இந்த ஏராளம் புதிய குரல்கள் மூலமாக தமிழ்த் திரையிசையுலகில் இருந்துவந்த Monopoly உடைந்தது;பாடல்களுக்கும் புத்துணர்ச்சி பிறந்தது.

சுக்விந்தர்,உதித்,மதுஸ்ரீ என்று இந்தப் பட்டியலில் இருப்போர் ரஹ்மானின் இசையில் பாடும்போது தமிழை பிழையில்லாமல் பாடுவதையும்,தேவா,யுவன்,ஸ்ரீக்காந்த் தேவா போன்றோரின் இசைகளில் பாடும்போது தமிழ் சொற்களை கடித்து இம்சிப்பதையும் பார்க்கும்போது, ரஹ்மான் தனது ஒவ்வொரு பாடலிலும் காட்டும் அக்கறை புரிகிறது.

இளைய தலைமுறையாக இருந்தாலும்,புதிய பாடக பாடகியரை ரஹ்மான அறிமுகப்படுத்தினாலும் கூட,இன்றைய இசையமைப்பாளர்களில் ரஹ்மான் அளவுக்கு எந்த ஒரு இசையமைப்பாளரும் மூத்த பாடக,பாடகியரின் குரல்களை அதிகளவில் பயன்படுத்தியவர் எவரு யாருமே கிடையாது..

பீ.சுசீலா(கண்ணுக்கு மையழகு)
டி.கே.கலா(குளிச்சா குத்தாலம்)
கல்யாணி மேனன்(முத்து படப்பாடல்)
சீர்காழி சிவ சிதம்பரம் (ஓடக்கார மாரிமுத்து,அம்மி மிதிச்சாச்சு)
டி.எல்.மகராஜன்(நீ கட்டும் சேலை)
M.S.விஸ்வநாதன் (மழைத்துளி மழைத்துளி)

இன்னும் SPB,K.J.யேசுதாஸ்,மலேசியா வாசுதேவன்,S.ஜானகி,ஜெயச்சந்திரன் போன்றோரை எல்லாம் எண்ணிக்கை இல்லாத அளவுக்கு ரஹ்மான் பயன்படுத்தி ரசிகர்களுக்கு விருந்தளித்திருக்கிறார்.

மேற்குறிப்பிட்ட மூத்த தலைமுறையினரில் பலபேர் நீண்ட காலம் பாடாமல் இருந்தோர் என்பதும் முக்கியமானது..

எனது ஒரே ஆதங்கம் வெண்கலக் குரல் TMSஐயும் ரஹ்மான் ஒரே தடவையாவது ஏதாவது ஓர் பாடலில் பயன்படுத்தி இருக்கலாம் எண்பது தான்.. பொருத்தமான இடம் வரும் வேளை ரஹ்மான் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கிறேன்.

பல கர்நாடக சங்கீத பின்னணி உடையோர் ரஹ்மான் மூலமாகவே திரையிசை உலகுக்குள் நுழைந்து தரம் மாறாமல் ஜோலிக்கின்றார்கள். 

அந்தந்த SPECIALISTகளை குறித்த பாடல்கள் மூலமாகத் தரும் திறமையும்,கைவண்ணமும் ரஹ்மானின் பிறவி ஞானம் என்றே சொல்லவேண்டும்.

மழலைகளின் குரலுக்கு M.S.ராஜேஸ்வரியையும்,ஜானகியையுமே பலர் பயன்படுத்தி இருக்க,ரஹ்மான் தான் மழலை மாறாத G.V.பிரகாஷின் குரலை அறிமுகப்படுத்திய விதம் தமிழ் திரை இசையில் ஒரு மாற்றத்தின் ஆரம்பம் என்றே சொல்லவேண்டும்.  

ஹிந்தி,ஆங்கிலப் பாடல்களில் எமது தமிழ் இளைய தலைமுறை மோகம் கொண்டு அலைந்த காலம் போய் தமிழ் பாடல்களைப் பிற மொழிபேசுவோரும் முணுமுணுக்க முக்கியமான காரணம் ரஹ்மான் என்றால் அது மிகையல்ல.

இளையரஜாவுக்கு அடுத்தபடியாக பின்னணி இசைக்கு (BGM) அதிக சிரத்தை எடுத்து,பின்னணி இசையைக் கூர்ந்து அவதானிக்க வைத்தவர் ரஹ்மான் மட்டுமே. 
ரஹ்மானின் இசையில் வந்த ரோஜா,பாம்பே,உயிரே,என் சுவாசக் காற்றே,இருவர்,ரங்கீலா,கண்டு கொண்டேன்,திருடா திருடா, இன்றைய Slumdog Millionaire படங்களின் பின்னணி இசைகள் மெய் சிலிர்க்க செய்யும் உலகத் தரம் வாய்ந்தவை.

நாதஸ்வரம்,பறை,தவில்,புல்லாங்குழல்,Saxophone என்று எத்தனையோ வாத்தியங்களை ஒரிஜினல் வடிவம் மாறாமல் பரிமாணங்கள் பல மாற்றி தனது பாடல்களில் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி (BGM இலும் கூட) பல இசை விற்பன்னர்களை ஆச்சரியப்படுத்தியவரும் ரஹ்மானே..

டூயட் மறந்து போகுமா??

இளையராஜாவின் பின்னர் பாடல்களின் மூலமாக சாதரண திரைப்படங்களை வெற்றித் திரைப்படங்களாக மாற்றியவர் இசைப் புயல் ரஹ்மான்.ஓடவே இயலாத நோண்டிக் குதிரைத் திரைப்படங்களையும் பல சந்தர்ப்பங்களில் ரஹ்மானின் பாடல்கள் ஒட்டியிருக்கின்றன.

மிக நீண்ட காலத்தின் பின்னர் கவிதை வரிகளையும்,பாடல் வரிகளையும் கூர்ந்து அவதானித்து ரசிக்க வைத்தது ரஹ்மானின் வருகைக்குப் பின்னரே.. (வைரமுத்துவின் மீதான எனது அபிமானத்தின் காரணமாக எனது தனிப்பட்ட கருத்தாகவும் இது இருக்கலாம்)

ராப்,ஜாஸ் என்று புதிய இசை வடிவங்களை ரஹ்மான் தமிழில் பிரபல்யப் படுத்தி இசைக்கு இளைஞர்களை அடிமையாக்கினதோடு ஏனைய எல்லா இசையமைப்பாளர்களும் அவ்வாறு செய்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குள்ளாகினர்.
ராஜாவே தனது இசைப்பாணியை மாற்றியே ஆகவேண்டி வந்தது.. ராஜாவின் மகன் யுவனோ இன்னொரு ரஹ்மானாக ஆகிவிட்டார்.

ரஹ்மானின் ஆரம்பத்தில் 'கம்பியுட்டர் இசை தானே.. A.R.ரஹ்மானிடம் எந்த சுய திறமை இல்லை' என்று எழுந்த புழுக்க விமர்சனங்கள் பொய்த்துப் போன விதம்..

இதற்கான முக்கிய காரணம் ரஹ்மானின் ஆழ்ந்த இசைஞானம்,இசை நுணுக்கங்கள் பற்றிய தெளிவான அறிவு,நவீன தொழினுட்பங்களை நுணுக்கமாக தமிழ் திரையிசைக்குள் நுழைக்கத் தெரிந்த புத்திஜீவித்தனம். 

அவ்வளவு தூரம் இயற்கையையும் பாடல்களிலும்,இசையிலும் பங்குபற்ற செய்தார். இயற்கையின் ஒலிகளை ரஹ்மான் தொழிநுட்பம் மூலம் இசையில் இணைத்த புதிய புரட்சியை நிகழ்த்தியதன் மூலம் ஒரு புத்துணர்ச்சி அலையை ரஹ்மான் உருவாக்கியிருந்தார்.

A.R.ரஹ்மானின் வரவின் பின்னர் தான் உயர் தொழிநுட்ப சுத்தங்களும்,நுணுக்கங்களும் பாடல்களிலும்,பின்னணி இசையிலும் எதிர்பார்க்கப் பட ஆரம்பித்தன.

திரையிசையல்லாத Album பாடல்களுக்கும் மவுசு ஏற்பட ரஹ்மானே முக்கிய காரணம். 

கர்நாடக,கிராமிய இசைகளிலும் தனது ஆழ்ந்த அறிவைப் பயன்படுத்தி A.R.ரஹ்மான் பாடல்கள் தந்தது இளைய தலைமுறையினரையும் அவை பற்றி திரும்பிப் பார்க்கவைத்த பங்களிப்பும் ரஹ்மானுக்கு உள்ளதென்பதும் உண்மையே.

புயலாக ஆரம்பித்ததனால் 'இசைப் புயல்' என்று பெயர் சூட்டப் பட்டு விட்டாலும்,இனி யாராவது ரஹ்மானுக்கு பொருத்தமான இன்னுமொரு பட்டம் சூட்டினால் நன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். (ஒஸ்கார் நாயகன் பரவாயில்லையா???- கமல் கோபிப்பாரா?)

இன்னொரு சந்தோசம்.. முன்பிருந்தே எனக்கு இருக்கும் தனிப்பெருமை - நம்மோட இனிஷியலும் இசைப்புயலின் இனிஷியலும் ஒன்றே.. A.R.  

    

 

  



Post a Comment

25Comments

Please Select Embedded Mode To show the Comment System.*