September 23, 2008

நேற்று இரவு..............


நேற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு இரவு நேரம் ஒலிவாங்கியின் முன் உட்காரும் வாய்ப்புக் கிடைத்தது. எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று, முன்பு சூரியனில் இருக்கும் போது நேற்றைய காற்று, பின் இப்போது காற்றின் சிறகுகள். காரணம் எனது காலை நேர நிகழ்ச்சிகளை எவ்வளவு தான் நான் விரும்பி கலகலப்பாக தொகுத்து வழங்கினாலும் கூட , பல பேர் அதை ரசித்தாலும் கூட,இரவு நேரங்களில் தான் பலரும் ஓய்வாக,ஒன்றாக இருந்து ரசித்து,அனுபவித்துக் கேட்க முடியும்.அடுத்து நானும் கொஞ்சம் அனுசரணையாளர்கள், விளம்பரங்கள், மணித்தியாலத்தின் பாடல்கள் இன்றி என் மனதுக்கு மிகப் பிடித்த இடைக்கால இனிய பாடல்களை ஒரே தொகுப்பாக தரமுடியும்.(இடை நடுவே என் மனதில் தோன்றுகிற கவிதைகள் போன்றவற்றை சொருகி, நேயர்களை சோதிக்கவும் முடியும்) இதற்காகவே நான் எனது தூக்க நேரத்தையும் குறைத்து இரவு நேர நிகழ்ச்சி செய்து மணிக்கு வீடு போய், மறுபடி அதிகாலை ஐந்து மணிக்குக் காலை நிகழ்ச்சிக்கு வருவதுண்டு.

இந்த வாய்ப்பு நான் நண்பர் தாஸ் குடும்பம் மற்றும் என் மனைவி,மகனுடன் நுவர எலியவுக்கு வார இறுதி பயணம் போனதால் கிடைத்தது. விரும்பியோ விரும்பாமலோ சுபாஷுக்கு எனது விடியலைத் தொகுத்து வழங்க ஒரு வாய்ப்பைக் கொடுத்து விட்டு, நான் இரவு நேரம் காற்றின் சிறகுகளைக் கைப்பற்றிக் கொண்டேன்.எவ்வளவு தான் பயணக் களைப்பு இருந்தாலும், என்னுடைய தேடி எடுத்த பாடல் தெரிவுகளை நானே என் நிகழ்ச்சியில் பயன்படுத்த வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தேன்...

நேற்றைய இரவு நிகழ்ச்சியில் பொருத்தமான சோக,தத்துவ பாடல்களுக்கிடையில் நான் படித்து,ரசித்த நானே கிறுக்கிய சில வரிகளை (கவிதைகளா என்று நீங்க தான் சொல்லணும்) சேர்த்துக் கொண்டேன்.. அவற்றை இங்கே தந்து உங்களையும் கொஞ்சம் சோதிக்கலாம் என்று ஒரு உலக மகா ஆசை..

காதல் - விரும்பியும் வரலாம்; விரும்பாமலும் வரலாம்.
காதல் தோல்வி விரும்பாமலே வரும்
விரும்பி வந்தால் அதன் பெயர் தோல்வியல்ல.. துரோகம்
------------------
காதலின் தேடல் இளமையில்…
அன்பின் தேடல் முதுமையில்…
வாழ்கையின் தேடல் எளிமையில்…
பதவியின் தேடல் தலைமையில்…
இன்பத்தின் தேடல் பன்மையில்…
துன்பத்தின் தேடல் பொருமையில்…
சந்தோஷத்தின் தேடல் பெருமையில்…
கோபத்தின் தேடல் வன்மையில்…
வெற்றியின் தேடல் வலிமையில்…
தோல்வியின் தேடல் வெறுமையில்…
உண்மையின் தேடல் பொய்மையில்…
பொய்யான தேடல் உண்மையில்… …முடிந்தது
-------------------------
காதலெனும் ஆற்றில் இறங்குமுன்
பெண் மனதின் ஆழம் பார்..
அளவுகோல் உன் காதல்..
அளவுகோல் தப்பானால் ஆழமும் தப்பாகும்.
ஆள் முழுகி அவதிப்படவும் நேரிடும்.
----------------------
பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், அத
கிடைத்தபின் பிடிப்பதில்லை.
கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அத
பிடித்தபின் நிலைப்பதில்லை!!!

நினைப்பதெல்லாம், நடப்பதில்லை …
நடப்பதெல்லாம், பிடிப்பதில்லை …
பிடிப்பதெல்லாம், நிலைப்பதில்லை, …
நிலைப்பதெல்லாம், நல்லதாய் இருப்பதில்லை …
நல்லதெல்லாம், நாம் என்றுமே நினைப்பதில்லை …
அதனால் … நினைப்பதெல்லாம், நடப்பதில்லை.
-------------------------
உடலின் ஓட்டைகள் ஒன்பது அடைப்படும்வரை
நாம் கட்டும் கோட்டைகள் ஏராளம்.
மனத்தால்,மணலால் கட்டி இடிபடும் ஒவ்வொன்றாக ..
இதயம் இடிபடுவது ஏக்கம் தான்..
அதற்காக கட்டுவதை நிறுத்துவதா?
இடிபட இடிபட புதிது,புதிதாய்..
மனது கிழிபட,கிழிபட
புது,புது எண்ணங்கள்..

ஆனால் வாழ்க்கையில் உண்மையான காதல் மட்டும் ஒன்றே ஒன்று..
--------------------------
பொய்யே பொய்யாகிவிடும்,
சிறிதளவும் உண்மை இல்லா விட்டால்.
உண்மையும் பொய்யாகிவிடும்,
கடுகளவும் பொய் இருந்து விட்டால்.
இது பொய்யில் உண்மை, அது உண்மையில் பொய்
------------------------------
கடவுளிடமே கேள்வி கேட்கும் துணிச்சல் இருந்தும்,
இன்று கண்ட கண்டவர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டி இருக்கிறது..
இது காலத்தின் கட்டாயம்.
கடவுளின் நிர்ப்பந்தம்..
அதனால் தான் கடவுள் தினம்,தினம் எங்களிடம் வசவு வாங்குகிறான்..
----------------------
அன்பு ஒரு போதும் கேட்பதில்லை
எபோதும் கொடுக்கும்
-------------------------
சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது,
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
கோழைக்குக் காதல் என்ன..
ஊமைக்கு பாஷை என்ன..
காட்டாத காதல் எல்லாம் மீட்டாத வீணையைப் போல்..

உன் வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட,
முன்வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே..

- வாலிபக் கவிஞர் வாலி
------------------------------
எல்லோரும் ராஜாக்கள் தான் இங்கே..
ஆள்கிறோம் எங்கள் ராஜாங்கங்களை ஆள்கிறோம்..
அது சரி, எங்கள் நாட்டை ராமன் ஆண்டால் என்ன
ராவணன் ஆண்டால் என்ன..
நாங்கள் ராமரா அல்லது ராவணரா என்பதை முதலில் பார்ப்போம்..
----------------------------------
எல்லாம் வரும் வரும் என்ற நம்பிக்கை தான் எங்கள் வாழ்க்கையை ஓட்டும் மிகப் பெரிய இயந்திரம்..

குணா திரைப்படத்தில் வரும் (இங்கேயும் ஒரு வரும் ) உன்னை நான் அறிவேன் பாடலுக்காக..
(அந்தப் பாடலின் ஆரம்பத்தில் கமல் பேசும்போது அடிக்கடி சொல்கின்ற வரும்,வரும் என்பதற்காக)
----------------------------
அடிகள் பார்த்து வாழ்ந்த காலம் மாறி,
இப்போது எங்கே போனாலும்
அடிபட்டே வாழும் இனமாக எம்மினம்
கதை முடிந்தால் பிடி சாம்பர் தான் எஞ்சும்..
இருக்கும் காலம் வரை புரிந்து கொண்டு
உறவுகளுடன் வாழ்வோம்

- செம்பருத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற நடந்தால் இரண்டடி .. பாடலுக்காக எழுதியது
----------------------------
சுதந்திரம் இல்லாத தேசம் ,
உயிர் இல்லாத உடலைப் போன்றது.

உண்மை நட்பு இல்லாத நிலையே,
மிகக் கொடிய தனிமை !

எவளவு பெரிய நல்ல பண்பும்
கோபத்தால் அழிக்கப்படுகிறது

நாணயமாக நடப்பவர்கள்,ஒளிக்கும்
இருளுக்கும் அஞ்சுவதில்லை

ஆலோசனையோ உப்போ வேண்டப்பட்டால்
ஒழிய வழங்கப்படக்கூடாது

சுதந்திரம் என்பது ஒற்றுமை உணர்வு
- பறிக்கப்படும் வரை!!!
பறவைகளுக்கு சிறகும்,
மனிதர்களுக்கு உணர்வும்..

அம்மா
மூன்றெழுத்தில் உலகம்
மூன்றெழுத்தில் உண்மை
மூன்றெழுத்தில் அன்பு
மூன்றெழுத்தில் உலகில் உள்ள அனைத்தும்


பிள்ளைகள் எமக்கு தெய்வங்கள் தந்த வரங்கள்..
நாம் எம் பிள்ளைகள் மீது காட்டும் அன்பு தான்
எம் பெற்றோர் எம்மீது காட்டியது எனப் புரியும் போது,
பெற்றோர் மீது மேலும் மதிப்பும்,பாசமும் கூடுகிறது.


காதலர்கள் பேசப்படாவிட்டாலும்
காதல்கள் பேசப்படுகின்றன
காதலர்கள் பிரிந்தாலும்,சேர்ந்தாலும்
காதல்கள் தோற்றுவிடுகின்றன..

வெற்றி என்பது...

பல முயற்சிகளின் விளைவு
பல படிகள் தாண்டிய முயற்சி
பயிற்சிகளின் உச்சக் கட்டம்..
வேதனைகளை சாதனைகளாக்கிய விதம்.
சோதனைகளின் விளைச்சல்..5 comments:

ஆதிரை said...

//கடவுளிடமே கேள்வி கேட்கும் துணிச்சல் இருந்தும்,இன்று கண்ட கண்டவர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டி இருக்கிறது.. இது காலத்தின் கட்டாயம்.கடவுளின் நிர்ப்பந்தம்..அதனால் தான் கடவுள் தினம்,தினம் எங்களிடம் வசவு வாங்குகிறான்.

மனதைத் தொட்டது வானொலியில் கேட்கும் போதும், இங்கு படிக்கும் போதும்....


//அடிகள் பார்த்து வாழ்ந்த காலம் மாறி, இப்போது எங்கே போனாலும் அடிபட்டே வாழும் இனமாக எம்மினம் கதை முடிந்தால் பிடி சாம்பர் தான் எஞ்சும்..இருக்கும் காலம் வரை புரிந்து கொண்டுஉறவுகளுடன் வாழ்வோம்.

இங்குதான் பார்க்கின்றேன். இரவு 11.30க்கு பின் ஒலித்திருந்தால் கேட்பதற்கு நித்திரை விட்டுவைக்கவில்லை. எம்மினம் கதை முடிந்தால்...???? ஏனையா இப்படி ஒரு சந்தேகம்?

ARV Loshan said...

//அடிபட்டே வாழும் இனமாக எம்மினம்
கதை முடிந்தால் பிடி சாம்பர் தான் எஞ்சும்..
இருக்கும் காலம் வரை புரிந்து கொண்டு
உறவுகளுடன் வாழ்வோம்//

இப்படித் தான் அமைத்திருந்தேன்.. இனமாக கருதாமல் தனித்தனியாக எம் கதை முடிந்தால் எனத் தான் பார்க்க வேண்டும்..
நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும்

சயந்தன் said...

ஆனால் வாழ்க்கையில் உண்மையான காதல் மட்டும் ஒன்றே ஒன்று.. //

மற்றதெல்லாம் பொய்யா ?
இதைக் கேட்டால் மற்றவர்களின் மனது எவ்வளவு வருந்தும் ?
எல்லாக் காதல்களும் உண்மைதான். அந்த அந்த நேரங்களில் :)

Reshzan said...

என்றும் உற்சாகமாக காலையில் கேட்கும் குரல்
நீண்ட நாட்களுக்கு பிறகு மென்மையா குரல் அழகிய தமிழ்
என்ன அருமையாக இருந்தது.
தொடர்ந்தும் சில நிகழ்ச்சிகள் கேட்க வேண்டும்.
" அவள் வாசம் பட்ட
காற்றை மட்டுமே
என் சுவாசத்திற்கு அனுமதிக்கின்றேன்"
என் கவிதையின் சில வரிகள் அண்ணா

வந்தியத்தேவன் said...

ஓ நுவரேலியாவிற்க்கு போனதாலா நேற்று நீங்கள் விடியலுக்கு வரவில்லை. சந்துருவும் நல்லாச் செய்தார் என்ன உக்களைப்போல் இடையிடையே மனதை கொள்ளைகொள்கின்ற இடைக்காலப் பாடல்களை ஒளிபரப்பவில்லை.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner