September 17, 2008

சாமர வெளியே....


அப்பாடா.. ஒரு மாதிரியா சாமர சில்வாவை (Chamara Silva) அணியில் இருந்து வெளியே அனுப்பிடாங்கப்பா.

கனடாவில் இடம்பெறவுள்ள 4 நாடுகள் பங்குபற்றும் 20-20 சுற்றுப் போட்டிகளுக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப் பட்டுள்ளது. சாமர அண்மைக்கால மோசமான ஆட்டங்களுக்குப் பிறகு அணியை விட்டு நீக்கப் படுவார் என்பது அனைவரும் எதிர்பார்த்ததே.(கடைசியாக அவர் விளையாடிய 11 இன்னிங்சில் ஒரேயொரு தடவை மட்டுமே அரைச் சதத்தை தாண்டியுள்ளார். அதிலும் இந்தியாவுடன் சாமர பெற்ற இறுதி 3 ஓட்டங்கள் 0,0,1 )ஆனால் அண்மையில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நானூறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நான்காவது பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் பதிவு செய்த வாசையும் (Chaminda Vaas)அணியியை விட்டுத் தூக்கி விட்டார்கள்.(20-20 இற்கு இவர் தேவையில்லை என்பதோ அல்லது இளையவர்கள் பக்கம் பார்வையைச் செலுத்தவோ காரணமாக இருக்கலாம்)
சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ள முரளிதரனும்,அண்மையில் ஆஸ்திரேலியாவில் விரலில் சத்திர சிகிச்சை செய்துகொண்ட குமார் சங்கக்காரவும் தெரிவில் சேர்த்துக்கொள்ளப் படவில்லை. காயத்திற்கு உள்ளாகி எட்டு மாதங்களாக போட்டிகள் எவற்றிலும் பங்கு கொள்ளாமல் இருந்த சகல துறை வீரர் பார்வீஸ் மஹ்ரூப் அணிக்குத் திரும்பியுள்ளார். (அண்மையில் விருது வழங்கிய நிகழ்வில் மஹ்ரூப் உலக ஒரு நாள் சர்வதேச அணியில் ஆச்சரியமான விதத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)இவரது வருகை நிச்சயம் அணியைப் பலப்படுத்தும்.

இந்திய அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசத் தொடரில் விளையாடிய வீரர்கள் தவிர புதிதாக அணிக்குள் மூவர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் தரப் போட்டிகளிலும், ஏ அணிகளுக்கான போட்டிகளிலும் பிரகாசித்த திலின கண்டம்பி(இலங்கை ஏ அணியின் தலைவராக தென் ஆபிரிக்காவில் ஒரு கலக்கு கலக்கியவர், 77.16என்ற சராசரியில் 463 ஓட்டங்கள், முன்பு 4 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.), ஜீவந்த குலதுங்க (34 வயதாகும் இந்த நுட்பமான துடுப்பாட்ட வீரர் தனது 18 வருட முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ந்து சிறப்பாக ஓட்டங்கள் குவித்து வந்த போதும் முதல் தடவையாக இலங்கை சிரேஷ்ட அணிக்கு அழைக்கப்படுகிறார். அண்மையில் இடம்பெற்ற மாகாண மட்ட 20-20 சுற்றுப் போட்டியில் வயம்ப அணிக்குத் தலைமை தாங்கி வெற்றி பெறச் செய்தவர்.),சகலதுறை வீரர் டில்கார லொக்குஹெட்டிகே (வயதாகும் இவர் ஏற்கெனவே இல் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்,அதிரடித் துடுப்பாட்டத்துக்கும் பேர் போன ஒருவர்).

சங்கக்கார இல்லாத காரணத்தால் டில்ஷான் விக்கெட் காப்பாளராகக் கடமை ஆற்றவுள்ளார்.(எத்தனை பிடிகளை விடுவாரோ? எத்தனை பய் -BYE கொடுப்பாரோ?)அனுபவமும்,இளமையும் கலந்த கலவையாக கனடா செல்லும் இலங்கை அணி எப்படி விளையாடும் என்பது இப்போதே ஆர்வத்தைத் தூண்டுகிறது.
கடந்த வருடம் நடந்த 20-20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு இலங்கை அணி எந்தவொரு 20-20 போட்டியிலும் விளையாடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது (போதிய பயிற்சி இல்லை என்ற காரணம் இப்பவே ரெடியுங்கோ .. அணித் தலைவரே இந்த 20-20 போட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கச் சொல்லிக் கோருவதும் இதற்கான காரணமோ தெரியல)

இலங்கை அணியுடன் போட்டிகளை நடாத்துகின்ற கனடா,பாகிஸ்தான்,ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்குபற்றுகின்ற இந்தத் தொடர் கனடாவின் டோரோண்டோவில் (MAPLE LEAF மைதானத்தில் ) எதிர்வரும் மாதம் 10 முதல் 13 வரை இடம்பெறவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளும்,பங்களாதேஷும் பங்குபற்றுவதாக இருந்தபோதும் சில,பல காரணங்களால் விலகிக்கொண்டன.

இப்போதே சொல்லி வைக்கிறேன் இலங்கை-பாகிஸ்தான் இறுதிப் போட்டியைப் பார்க்கத் தயாராகுங்கள்.(இது சின்னப் புள்ளைக்கும் தான் தெரியுமே)

Sri Lanka Squad: Mahela Jayawardene (capt), Sanath Jayasuriya, Mahela Udawatte, Chamara Kapugedera, Jehan Mubarak, Tillakaratne Dilshan (wk), Jeevantha Kulatunga, Farveez Maharoof, Nuwan Kulasekara, Thilina Thushara, Ajantha Mendis, Thilina Kandamby, Dilhara Fernando, Dilhara Lokuhettige, Kaushalya Weeraratne.

4 comments:

ISR Selvakumar said...

அவனை எடுத்திருக்கலாம்பா, இவனை ஏன்பா சேர்த்தீங்க . . .

இரசிகர்களின் கிரக்கெட் புலம்பல்களும், ஆச்சரியங்களும் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதான்.

யோ வொய்ஸ் (யோகா) said...

சாமர சில்வா அணியை விட்டு விளக்கியது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடியதுக்கு எவ்வளவு தான் நன்றி செலுத்துவது. மஹ்ரோப் டீம்க்கு வருவது எதிர்பார்பை கூட்டி இருக்கு அவர் 20 20 டீமுக்கு கட்டாயம் தேவை, அவர் மக்ராதிடம் பழகிய techniques இங்கு காட்ட வேண்டும். மேலும் மஹ்ரோப், துஷார ஆகிய இரு சகல துறை ஆட்டகாரர்களின் பட்டிங்கை காண ஆவலாக இருக்கிறேன்..

ARV Loshan said...

எல்லா நாட்டுத் தெரிவாளர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே.. சில நேரங்களில் நாங்களே தேர்வாளர் ஆகிடலாம்னு தோணும். நம்ம வாக்காளர்கள் எவளவோ பரவாயில்லை... ஹீ ஹீ

Anonymous said...

என்னதான் இருந்தாலும் இலங்கைக்கு வெளியே அதிகளவு இலங்கைத் தமிழர் வசிக்கும் நாடு ஒன்றிற்கு வந்து அதில் முரளிதரனையும் கூட்டி வந்து அதை கனடாவில் வாழும் தமிழர்கள் எதிர்ப்பதனால் வரும் பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு முரளிதரனையும் நீங்கியுள்ளார்கள் என்றே கொள்ளலாம். அரசியல் பிரச்சாரத்தில் எப்போதும் சிங்களவன் நன்றாகத்தான் சிந்திக்கின்றான்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner