September 10, 2008

மகாகவி பாரதி.. நீ ஒரு அக்கினிக் குஞ்சு


நாளை (11.09.2008) மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு தினம்.. என்னை மிகப் பாதித்த கவிஞர்களில் முதன்மையானவன் இந்த பாரதி.அவனது படைப்புகளில் என்னைக் கவர்ந்த ஒரு சிலவற்றை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அச்சமில்லை
(பண்டாரப் பாட்டு) 
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 1 கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 2
-----------------------------------------------------------
உறுதி வேண்டும்  
மனதி லுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும். 
-------------------------------------------

ஆத்ம ஜெயம்  
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ?-அட மண்ணில் தெரியுது வானம்,அதுநம் வசப்பட லாகாதோ? எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங் கிறுதியிற் சோர்வோமோ?-அட, விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு ப்ராசக்தியே! 1 என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள், எத்தனை மேன்மைகளோ! தன்னை வென்றாலவை யாவும் பெறுவது சத்திய மாகுமென்றே முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள் முற்றுமுணர்ந்த பின்னும் தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு தாழ்வுற்று நிற்போமோ? 2
-----------------------------------------------------------

சென்றது மீளாது 
சென்றதினி மீளாது மூடரே!நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம். இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர் எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா. ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன்; சீருக் கெல்லாம் முதலாகும் - ஒரு தெய்வம் துணைசெய்ய வேண்டும்.
--------------------------------------------------------- 

ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா களிப டைத்த மொழியினாய் வா வா வா கடுமை கொண்ட தோளினாய் வா வா வா தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா ஏறு போல் நடையினாய் வா வா வா மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு வேதமென்று போற்றுவாய் வா வா வா பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா நோய்க ளற்ற உடலினாய் வா வா வா தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த் தேசமீது தோன்றுவாய் வா வா வா இளைய பார தத்தினாய் வா வா வா எதிரிலா வலத்தினாய் வா வா வா ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும் உதய ஞாயி றொப்பவே வா வா வா களையி ழந்த நாட்டிலே முன்போலே கலைசி றக்க வந்தனை வா வா வா விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல் விழியி னால் விளக்குவாய் வா வா வா வெற்றி கொண்ட கையினாய் வா வா வா விநயம் நின்ற நாவினாய் வா வா வா முற்றி நின்ற வடிவினாய் வா வா வா முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா கருதிய தியற் றுவாய் வா வா வா ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம் ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா
----------------------------------------------------------  
 
செந்தமிழ் நாடு 
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்) காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி - என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்) முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் எத்தனையுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்) கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்) வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) சிங்களம் புட்பகம் சாவக - மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்) விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர் பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்) சீன மிசிரம் யவனரகம் - இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

----------------------------------------------------

தமிழ்மொழி வாழ்த்து  
தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே  
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே!  
வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழிய வே! 
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே!  
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!  
என்றென்றும் வாழிய வே!  
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையக மே! 
தொல்லை வினை தரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நா டே!  
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி யே!  
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே! 

---------------------------------------------------

சுதந்திரப் பயிர்  
தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ? எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ? ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ? கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ? எந்தாய்! நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ? இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ? அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ? வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ ?எந்தை சுயா தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே? நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய் வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ? பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்? பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே? நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால், என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ? இன்று புதிதாய் இரக்கின்றோ மோ? முன்னோர் அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ? நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால் ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே.

-------------------------------------------------------

சுதந்திர தாகம்  
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னைகை விலங்குகள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே! ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே! வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ? மெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ? பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ? பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ? தஞ்ச மடைந்தபின் கை விடலோமோ? தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ? அஞ்சலென் றருள் செயுங் கடமை யில்லாயோ? ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ? வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனோ! வீர சிகாமணி! ஆரியர் கோனே! -----------------------------

நடிப்பு சுதேசிகள்  
(பழித்தறிவுறுத்தல்)  
கிளிக்கண்ணிகள்  
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி. கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! நாளில் மறப்பா ரடீ சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே! அகலிகளுக் கின்ப முண்டோ ? கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற பெண்களின் கூட்டமடீ! - கிளியே! பேசிப் பயனென் னடீ யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார், மந்திரத் தாலே யெங்கும் - கிளியே! மாங்கனி வீழ்வ துண்டோ ! உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும் செப்பித் திரிவா ரடீ! - கிளியே! செய்வ தறியா ரடீ! தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே! நம்புத லற்றா ரடீ! மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதைகள் போலு யிரைக் - கிளியே பேணி யிருந்தா ரடீ! தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே அஞ்சிக் கிடந்தா ரடீ! அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும் உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே ஊமைச் சனங்க ளடீ! ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா மாக்களுக் கோர் கணமும் - கிளியே வாழத் தகுதி யுண்டோ ? மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும் ஈனர்க் குலகந் தனில் - கிளியே! இருக்க நிலைமை யுண்டோ ? சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல் வந்தே மாதர மென்பார்! - கிளியே! மனத்தி லதனைக் கொள்ளார் பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் பழமை இருந்த நிலை! - கிளியே! பாமர ரேதறி வார்! நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத் தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே! சிறுமை யடைவா ரடீ! சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் சிந்தை இரங்கா ரடீ! - கிளியே! செம்மை மறந்தா ரடீ! பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல் துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே! சோம்பிக் கிடப்பா ரடீ! தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார் வாயைத் திறந்து சும்மா - கிளியே! வந்தே மாதர மென்பார்!

-----------------------------------

பாரதி -- ஒரு சிறு குறிப்பு 

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் சமஸ்தானத்தால் வழங்கப்பட்டது.

பாரதிக்கு முன்னால் தமிழ்க் கவிதையானது ஆதீனங்களிலும் , குறுநில மன்னர்களின் அரண்மனைகளிலும் , எடுத்த மாத்திரத்தே எதுகை, மோனைகளை தம்வசப்படுத்தி கவிபாடவல்ல பண்டிதர்களிடத்திலும் சிறைப்பட்டுக் கிடந்தது.

கிடக்கவே அந்தக் கவிதைகளின் பாடுபொருளும் தெய்வங்களாகவும், குறுநிலமன்னர்களாகவும் , அவர்களுக்கு இன்பம் ஊட்டவல்ல வஸ்துக்களாகவும் இருந்ததைக் காண்கிறோம். எண்ணில் அடங்காத் தலபுராணங்கள் எழுந்ததும் இக்காலங்களில்தான்.

இதற்குப் பல நூற்றாண்டுகளின் முன்னர் தமிழ்நாடு மாபெரும் கவிஞர்களும், மனிதாபிகளுமான வள்ளுவர், கம்பர், இளங்கோ, அவ்வையார், ஆழ்வார்கள், நாயன்மார்கள், தாயுமானவர் போன்றோரை பெற்றிருந்தது.

இவர்களை இழந்துவிடாமல் அதேசமயம் தன் காலத்தின் தேவைகளுக்கு இலக்கியத்தை, மொழியை ஆட்சிப்படுத்தவேண்டிய காலத்தின் முத்திரையை பாரதி பதித்தார். இதுவே இவரை பிறரில் இருந்து வேறுபடுத்தி மக்கள் கவியாக, மகாகவியாக, மறுமலர்ச்சிக்கவியாக, தேசியக்கவியாக, மானிடத்தின் குரலாக, பர்ணமிக்க வைத்தது.

"கலைத் துறையில் துணிவோடிருப்பது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் அற்பமானவற்றைத் தவிர வேறு ஆர்வமாஃனவை எதையும் நீங்கள் படைத்துவிட முடியாது " என்று கூறினார் லியோ டால்ஸ்டாய். இதற்குத் துணிவுவேண்டும். பாரதியிடம் இருந்த துணிவாற்றலே தன் சாதியையும் சமுகத்தையும் எதிர்து நின்று கவிதைபாட முடிந்தது.

'உலகின் ஒப்புக்கொள்ளப்படாத சட்டவரைஞர்களே கவிஞர்கள் " என்றான் பாரதியால் போற்றப்பட்ட ஆங்கிலக்கவிஞர்களில் ஒருவரான ஷெல்லி. வேதாந்தக்கனியான பாரதியோ

எனக்குத் தொழில் கவிதை , நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் எனப் பாடுகின்றார். தன்வினையை கருமயோகமாக மாற்றிய இவரது வெற்றியே இவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்துப்பார்க்கவும் இவரது மேதாவிலாசத்தை புரிந்துகொள்ளவும் வழிசமைக்கின்றது எனலாம்.

இந்தப் பிரபஞ்சத்தை தன்வசப்படுத்தும் சக்தி மனித ஆற்றுலுக்கு உண்டு என்பதை இவரது படைப்புக்கள் அனைத்திலும் பரக்கக்காணலாம். இதனால் தான் ' எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா " என்றும் "நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம் " என்றும் பாடிய கவிஞனே ' தனியொருவனுக்கு உணவில்லையெனின் இந்த சகத்தினையே அழித்துவிட " துணிகின்றான்.

அவ்வப்போது பிரபஞ்சத்தின் அழகில்மயங்கி பரவசப்படும் கவிஞன் அந்தப் பரவசத்தின் மத்தியிலும் தூக்கிய கொடியை கீழே போட்டுவிடவில்லை.

இவரது அற்புதமான ஞானரதம் என்னும் படைப்பு இதற்கு சான்றுபகர்கின்றது. தேசபக்தியே தெய்வபக்தியாகி தேசத்தின் விடுதலையே எல்லாவிடுதலைகளுக்கும் ஆதாரம் என்பதில் அவன் என்றுமே தளம்பியதில்லை.

இத்தாலியப் பெரும் கவிஞனான தாந்தே தனது Divine Comedy என்னும் அமரகாவியத்தில் நரகலோகம், சுத்திகரிப்பு உலகம், சுவர்க்கம் ஆகிய மூன்று உலகத்திலும் பிரவேசிக்கின்றான்.

இந்தப் பயணத்திற்குத் துணையாக வேர்ஜில் என்னும் கவிஞனையும் தன்காதலான பியற்றீசையும் துணைகொள்கின்றான். பாரதியும் தன் ஞானரதத்தில் ஏறி உலகை வலம்வரத் துணிந்தபோது காளிதாசனையும் ஏதாவது ஓர் உபநிடதத்தையும் படிக்க விளைகின்றான். ஞானம், அழகு என்னும் படிமங்களின் துணைகொண்டு பிரபஞ்சத்தினை அனுபவிக்க இரு கவிஞர்களும் துணிகின்றனர்.

"ஞானரத" த்தில் ஏறிக்கொண்டு உலகின் துன்ப துயரங்களில் இருந்து விடுபட்டு மேலும் மேலும் பறந்து செல்கிறான் கவிஞன். அங்கு தர்மலோகத்துள் தர்மராஜாவின் முகத்திலும் இந்திய விடுதலைக்காக தீவிரவாதத்தைக் கைக்கொண்ட பாலகங்காதர திலகரின் சாயலையை தரிசிக்கின்றார். ' மோகமான பரவசத்தில் " ஒரு கணம், மறுகணம் பூமியல் வந்து விழுகின்றான்.

இன்று இத்தனை ஆண்டுகளின் பின்னரும் பாரதியின் குரல் தமிழ்கூறும் நல்லுலகம் எங்கணும் ஒலித்தபடி இருப்பதன் மகிமைதான் என்ன.

அவரால் வாஞ்சையோடு தம்பி என்று அழைக்கப்பட்ட பரலை நெல்லையப்பபிள்ளை 100 ஆண்டுகளுக்கு முன்னரே கண்ணன் பாட்டிற்கு எழுதிய முகவுரையில் ' பாரதியார் பாடல்களின் பெருமையைப் பற்றி யான் விரித்துக் கூறுவதென்றால், இந்த முகவுரை அளவுகடந்து பெரிதாய்விடும். ஒரு வார்த்தைமட்டும் கூறுகின்றேன். இந்த ஆசிரியன் காலத்திற்குப்பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப்பின், இவர் பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான் இப்பொழுது காண்கின்றேன் " எனக் கூறியுள்ளதை நினைவுகொள்கின்றேன்.

 பாரதியாரின் கீதம் தமிழுக்கு உயிர்கொடுத்தது. அடிகளை எவராவது பாடினால் உடனே புரட்சி ஏற்பட்டுவிடும் .

' இளங்கோவடிகள், கம்பர் என்னும் மலர்களைத் தந்த தெய்வத்தரு " ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்தபின்னர் வாராத வந்த செல்வத்தைப்போலப் பாரதியார் என்னும் மலரை அளித்திருக்கின்றது. இம்மலரை நாம் பிறர் சொற்கேட்டுத் தோற்றுவிடுவோமோ " என ஏங்கினார் விபலானந்த அடிகளார்.

' புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி, மண்ணைத்தெளிவாக்கி, நீரல் மலர்ச்சிதந்து, விண்ணை வெளியாக்கி " இவன் செய்த விந்தைக் கவிகள் எம் இனத்தின் சொத்து.  நாம் உலகிற்கு வழங்கக்கூடிய செல்வம். மண்ணிலே வேலிபோடலாம், வானத்திலே போடலாமா? போடலாம் என்கிறான் ராமகிருஸ்ணமுனி. ' மண்ணைக் கட்டினால் வானைக்கட்டியதாகாதா? மண்ணிலும் வானம்தானே நிரம்பியிரக்கின்றது " என்கிறார் பாரதி. வானத்தை இவ்வுலகில் இருந்தபடியே தீண்டுகிறான் கவிஞன். இதனால் தான் இவனது கவிதைக் கூட்டிற்கு ' கள்ளும், தீயும், காற்றும் ,வானவெளியும் " கலவைகளாகின்றன.

பாரதி ஆய்வில் தம்மைப் பறிகொடுத்தவர்களில் ஒருவரான டாக்டர் எல். புச்சிக்கினா ' பாரதி தம் ஆத்மாவைச் செம்மைப்படத்திக் கொள்ளும் பயிற்சியை மேற்கொண்டது இநத உலகைத் துறப்பதற்காக அல்ல் மாறாக அதற்கு மேலும் தகுதியாவதற்காகவே, தமது தாய்நாட்டின் தேசிய,சமுக விடுதலையை எய்த வேண்டிய உன்னதமான பணிக்குத் தம்மைத் தகுதியாக்கிக் கொள்வதற்காகவேதான் " எனக் கூறியுள்ளமை மனம்கொள்ளத்தக்கது.

" சொல்லடி, சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ ? – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே....."

சாவின் பிடியிலும் காலனை அழைத்து அவனைக் காலால் உதைத்த இந்த அமர கவி காலத்தைக் கடந்து தான் வாழ்வேன் என உறுதியாக நம்பினான். அவனுக்கு அதற்கான உரிமை முற்றிலும் இருந்தது. ஏனெனில் தனக்கு முன்பிருந்த கவிச்செல்வம் எல்லாவற்றையும் தனதாக்கி, நன்மையும் அறிவும் எங்கிருந்தாலும் அவற்றை தன்வசப்படுத்தி ,பிறநாட்டுக் கவிஞர்களான ஷெல்லி, கீட்ஸ், பைரன் (ஆங்கில ) எமில் வர்ஹரன் (பெல்யியம்) விட்மன், மிஸ் ரீஸ் (அமெரிக்க) மற்றும் தன்காலத்தைச் சார்ந்த யப்பானிய கவிஞனின் ஆங்கிலக் கவிதைகள் என எங்கும் எதிலும் அவன் பார்வை பட்டுத்தெறித்ததை அவனது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் காணமுடிகின்றது.

இலக்கியத்திற்குரிய சமுதாயப் பணியையும் , காலத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அதன் தாற்பரியத்தையும் எந்தவொரு இந்தியக் கவிஞனும் கூறாத வகையில் :

" காலத்திற்கேற்ற வகைகள் – அவ்வக்
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய் – எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை " எனக் கூறியுள்ளமை வியப்பைத் தருகின்றது. இருப்பினும் இவனது கவிதைபின் பொருளே மனிதன் என்பதால், இவன் கூறிய நிலைக்கு மானிடம் நகரும் வரை அந்த வரலாற்றின் முடிவுவரை இவனது கவிதைகள் உயிரோடு உலாவும்.

இந்த இடத்தில் வோல்ராயர் (Voltaire ) என்னும் அறிஞனைப் பற்றி விக்ரர் ஹீயுகோ  (Victor Hugo -1802-1885)என்னும் இன்னோரு பிரான்ஸ் நாட்டு அறிஞன் கூறிய

" ....He was more than a man, he was an age. He had exercised a function and fullfilled a mission. He has been evidently chosen for the work which he had done by the supreme will, which manifest itself as visibly in the laws of destiny as in the laws of nature ..."

" இவன் ஒரு மனிதனிலிலும் மேலானவன். இவன் ஒரு யுகம். இவன் ஒரு வினையைச் சாதித்து அதன் முலும் ஒரு இலட்சியத்தை நிறைவேற்றினான். உன்னதமான சக்தியின் ஆற்றலால் இவன் செய்த செயலுக்காகத் தெரிவுசெய்யப்பட்டவனே இவன். இது இயற்கையின் விதிகளைப்போன்ற காலத்தின் விதியாகும் . "

என்னும் வார்த்தைகள் எங்கள் பாரதிக்கும் பொருந்தும். தமிழ் மக்கள் செய்த தவப்பயனால் வந்துதித்த இந்தக் கவிஞனால் இந்த புதுயுகத்து மொழியாகத் தமிழ் பின்வந்தோருக்கு ஆதர்சமாக அமைந்தது. புரட்சிக்கவி பாரதிதாசன் கூறியது போல், இவன் ஓர் பைந்தமிழ் தேர்ப்பாகன்.

1 comment:

chinathambi said...

Nice post...
Download Bharathiar song Mp3
http://chinathambi.blogspot.com

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner