இவற்றை முன்னிட்டு விஷேட நிகழ்ச்சிக்கு தயார் பண்ணிக் கொண்டு காலை நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கும் போது, இந்த இரு நிகழ்வுகளை விட மிக முக்கியமான ஒரு தினத்தைப் பற்றி எனக்கு ஒருவர் ஞாபகப் படுத்தினார்.
அது தான் தமிழ் பேசும் மக்கள் செய்த தவப்பயனின் காரணமாக தமிழ்த் திரையுலகத்துக்குக் கிடைத்த தவப் புதல்வி ஸ்ரேயா அவர்களின் பிறந்த தினமாம். அடடா மறந்திட்டீங்களே என்றார்.. பாரதி எங்கே, இந்த பாதி ஆடைப் பைங்கிளி (அடடா கவிதை மாதிரி வருதே..) எங்கே..
வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அந்த மிக முக்கிய தகவலை வானொலியில் சொன்னேன். பாரதியைப் பற்றி ஞாபகப் படுத்தி வந்த அதேயளவு smsகளும்,தொலைபேசி அழைப்புகளும் அந்த தலுக்கழகிக்கும் வந்தன.
என்ன செய்தாய் பாரதி நீ எம் தமிழ் சாதிக்கு இவர்கள் உன்னை ஸ்ரேயாவை விட ஞாபகம் வைத்திருப்பதற்கு? நீ அறை குறை ஆடையோடு வந்து இடுப்பாட்டினாயா? அல்லது இடை,தொடை காட்டினாயா? காசுக்காக காமெடி நடிகனின் கட்டிலில் தான் புரண்டாயா?
குஷ்பு,நமீதாவுக்கு கோவில் கட்டிய நாட்டவரின் அயல் நாட்டவரன்றோ?
வந்த கோபத்தில் ஒரிரன்று கடுமையான வார்த்தைகளை நிகழ்ச்சியில் உதிர்த்த பிறகே கொஞ்சம் சாந்தமாகி,யோசித்துப் பார்த்தபோது சினிமா நட்சத்திரங்களை கடவுளாக மாற்றியது இந்தியத் தொலைக்காட்சிகள்,பத்திரிகைகள் மட்டுமன்றி நாமும் தான் என்பது உறைத்தது.
அந்த வரலாற்றுத் தவறுகளை நான் எப்போதும் செய்தவனல்ல (நான் சார்ந்திருந்த ஊடகங்கள் செய்த போதும் கூட).என் பதவிக் காலத்தில் இது போன்ற தனி நபர் வழிபாடுகளைக் கூடியளவு குறைத்தே இருக்கிறேன். (சூரியனில் முடியுமானவரை )
வெற்றி ஆரம்பித்த பிறகு சினிமா நட்சத்திரங்களை மையப் படுத்தி எந்த நிகழ்ச்சிகளையும் அமைக்கவில்லை. பூனைக்கு மணி கட்ட நாம் தயாராகி விட்டோம். ஆனால் இந்திய சினிமாவோடு ஊறிப்போன நேயர்கள்?