10 ஆண்டுகள்... சாதனை? பகுதி 1

ARV Loshan
6
வருகின்ற அக்டோபர் முதலாம் திகதியுடன் நான் இந்த ஒலிபரப்புத் துறைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகின்றன.. 
எமக்கு முதலிலேயே இந்த துறையில் சாதித்துக் காட்டிய பல ஜாம்பவான்களுடன் ஒப்பிடும் போது இது மிக மிக சொற்ப காலமாக திரிந்தாலும் கூட, எமது தலைமுறையின் காலகட்டத்தில் என்னைப் பொறுத்தவரை இது ஒரு சாதனை தான்..


என்னுடன் சம காலத்தில் ஒலிபரப்புத் துறையில் பயணத்தை ஆரம்பித்த பலர் இப்போது பல்வேறு நாடுகளில்.. நிறையப் பேர் வேறு வேறு துறைகளுக்கு மாறி விட்டார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே இன்னும் தொடர்ந்து இலங்கையில், இதே ஊடகத் துறையில் இருக்கிறார்கள், இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.நாட்டு சூழ்நிலை, வீட்டு (பொருளாதார ) சூழ்நிலை, வெட்டுக்கள் கொத்துக்கள் (நாங்க பார்க்காததா?), நின்று பிடிக்க முடியாமை.. என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ..

அது போல கொஞ்சம் ஆராய்ந்து பார்த்த வேளையில் எனக்கு இன்னுமொரு விஷயமும் புரிந்தது.. முழு நேரமாக இவ் ஊடகத் துறையைத் தெரிவு செய்த சம காலத்தவர்களில் நான் மட்டுமே இப்போது தனியாக தொடர்ந்தும் நீடித்திருக்கிறேன்.சாதாரண (நிகழ்ச்சி தொகுப்பாளன்)ஆக ஆரம்பித்த என் பயணம் இன்று முகாமையாளராக (எனக்கு மேல் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவில் யாரும் இல்லாததால் பணிப்பாளர் என்றும் சொல்லலாம் ) தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இது வரை பணி புரிந்த இடங்களை விட இந்த நிறுவனம் மிக வித்தியாசம்.. அளவுக்கு மேற்பட்ட மரியாதை (மிகப் பெரியவர் முதல் அடி மட்டம் வரை இதமாக பேசுவதும் , Good morning தேடி வந்து சொல்வதில் இருந்து நாள் தவறாமல் கொடுப்பனவு கொடுப்பது வரை அப்படி எதாவது petty cash மூலம் எடுப்பதாக இருந்தாலும் தொலை பேசி மூலம் அழைத்து எடுத்து செல்லுமாறு சொல்வதும் அடங்கும் ) தேவையானவற்றை உடனடியாக வழங்குவது, எங்கள் (தமிழ் பேசுவோர்) உணர்வுகளை புரிந்து கொள்வது, இன்னும் பலப்பல.. இது எங்களுக்கு (குறிப்பாக என்னுடைய சக ஊழியர்களுக்கு ) ரொம்பவே புது அனுபவம்.

எனவே வெற்றியில் இலகுவாக எங்களை ஈடு படுத்திக் கொள்ள முடிகிறது. களைப்பின்றி மேலதிக அழுத்தங்கள் இல்லாமல் நீண்ட நேரம் வேலை செய்யவும் முடிகிறது.. (எப்ப வந்து பெரியவன் திட்டுவான் எதற்கு திட்டுவான் என்ற பயம் இல்லை என்கிறார் சக நண்பர் ஒருவர் ;) )
A/L பரீட்சை எழுதிய பிறகு1998 ல் (இரண்டாவது தடவை தான் !!!) வீட்டில் அடுத்த கட்டமாக உயர் கல்விக்கு ஆஸ்திரேலியா செல்ல ஆலோசனை செய்து முதல் கட்டப் பணமும் செலுத்திய பிறகு தான் எழில் அண்ணா மூலமாக என்னுடைய ஊடகப் பிரவேசம் இடம் பெற்றது. (நான் ஒன்றும் இலட்சியமாக வைத்திருந்து கஷ்டப்பட்டு இத்துறையில் நுழைந்தவனல்ல ஆனாலும் பிடித்ததனாலேயே நிலைத்தேன் )

அப்பா, அம்மாவுக்கு பாதியிலேயே மேற்படிப்பு நிற்கப் போகிறதே என்ற கவலை இருந்தாலும் எனக்கு சொந்தக் காலில் நின்று உழைக்கப் போகிறேன் என்ற பெரிய பெருமை..(எனினும் என்னால் ஆஸ்திரேலியா போய் மேற்படிப்பு படிக்க முடியவில்லையே என்ற சின்னக் கவலை இன்னும் மனவோரத்தில் கொஞ்சம் உண்டு.. ஆனாலும் அந்தக் கால கட்டத்தில் நான் எடுத்த முடிவு சரியானது என்றே நான் கருதுகிறேன்.இன்னுமொரு கட்டுரையில் அந்தப் பின்னணி பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும்.)

முதல் மாத சம்பளம் ஒரு கடித உறையில் இடப்பட்டு தரப்பட்ட போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதற்கு முதலே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நாடகங்களில் பங்கேற்று சின்ன சின்ன ஊதியங்களைப் பெற்றிருந்தாலும், இது தான் என் முதல் மாதச் சம்பளமாக அமைந்தது.. (எவ்வளவு என்று சொல்லவில்லையே என்று கேட்பது புரிகிறது.. 7080 ரூபாய்.. அந்தக் கால கட்டத்தில் ஒரு executive salary என்று பல நண்பர்கள் வியந்தது ஞாபகம்.... )


இந்த ஷக்தி FM வேலைக்கிடையே நான் இலங்கைப் பாராளுமன்றத்தின் மொழிபெயர்ப்பாளர் (Interpreter - Tamil - English - Tamil ) தெரிவிலும் இரண்டாம் சுற்று வரை தெரிவு செய்யப் பட்டிருந்தேன்..எனினும் வானொலிச் சுவை பாராளுமன்றப் பணியை முந்தியது. அது மட்டுமன்றி யாழ்ப்பாணப் பின்னணி கொண்டிருந்த எனக்குப் பின்னாளில் சிக்கல் வராமலிருக்க பாராளுமன்றப் பக்கம் நுழையாமலிருப்பதே உத்தமம் என்று அப்பா,அம்மாவுடன் சேர்ந்து முடிவெடுத்தேன்.

2 மாதங்களுக்குள்ளே நிறைவேற்றதிகாரியாக (programme executive) பதவியுயர்வு கிடைத்தது.. ஷக்தியிலிருந்து வெளியேறும் வரை..2 பதவியுயர்வுகள், 3 தடவை ஊதிய உயர்வுகள்.திருப்திகரமான முறையில் நிகழ்ச்சிகள் செய்து நேயர்கள் மத்தியில் ஓரளவு தெரியப்பட்டவனானேன். ஒரு சில காலம் தொலைக்காட்சியிலும் கொஞ்சம் முகம் காட்டினேன்.. (எனினும் இன்று வரை வானொலியா தொலைக்காட்சியா என்று என்னைத் தெரிவு செய்யச் சொன்னால் என் தெரிவு வானொலி தான்.. வேலை செய்ய இலகு, மேக்அப் தேவையில்லை.. எந்த நேரமும் புன்னகை சிந்திக் கொண்டிருக்கத் தேவையில்லை)

2001 ஆண்டிறுதியில் நான் இரு வார விடுமுறையில் மலையகப் பக்கம் சுற்றிக் கொண்டிருந்த வேளையில் நடந்த சில மாற்றங்கள் (அங்கிருந்து இங்கே,பின் நான் இங்கிருந்து அங்கே ) யாரும் (நான் உட்பட ) எதிர்பாராதவை. எனினும் வழமை போலவே நான் வீட்டாருடன் கலந்து பேசி, துரித முடிவெடுத்து வருடத்தின் இறுதி நாள் என்னுடைய பதவி விலகல் கடிதத்தை நேரடியாக திரு.ராஜமகேந்திரனிடம் கையளித்து ஷக்தியிலிருந்து விடை பெற்றேன்.


அவர் ஒரு அற்புதமான நல்ல மனிதர்.. (என்னுடைய திருமணத்திற்கு அழைத்த நேரம், நேரில் வர முடியாவிட்டாலும் தன்னுடைய அன்புப் பரிசை தன் உதவியாள் மூலம் என் வீட்டிற்கே கொடுத்தனுப்பி தன் நல்ல குணத்தை வெளிப்படுத்தியவர்.
அப்போது நான் அவருடைய எதிர் நிறுவனத்திலே பணியாற்றிக் கொண்டிருந்த போதிலும் கூட.. எனினும் எனது அப்போதைய முதலாளி கையில் கூட அழைப்பிதழை பெற்றுக் கொள்ளவில்லை.. 
எங்கே நான் நீண்ட விடுமுறை எடுத்து விடுவேனோ என்று.. வாழ்த்தும் சொல்லவில்லை., தன் சின்னக் கைத்தடியை (!) அனுப்பியதோடு சரி..) 


ஆனாலும் அங்கு (சக்தி - MTV/MBC) பணி புரிகின்ற நேரத்தில் (இப்போதும் கூட அங்கு அது தான் வழமை என்று கேள்விப் பட்டேன்) அந்த நல்ல சாமியை அணுகுவதற்கு பல துஷ்ட,திமீங்கில பூசாரிகளைத் தாண்ட வேண்டி இருந்தது..


அவர் என்னை போக வேண்டாம் என்று தடுத்தாலும் என் தன்மானம் (இது தான் எனக்கும் இன்னும் பலருக்கும் அந்த நிறுவனத்திலே பல பெரிய பதவிகளுக்கு தடையாக அமைந்த விடயம்) இடம் தரவில்லை.. எனக்குக் கிடைத்திருக்க வேண்டிய பதவியில் வேறிடத்திலிருந்து வருபவர்கள் அமர்வதைப் பார்க்க எனக்கு மனம் இடம் தரவில்லை..
உண்மையில் அப்போது பலரும் நினைத்தார்கள் (திரு.ராஜமகேந்திரன் உட்பட)எனக்கு சூரியனிடமிருந்து பெரிய வெகுமதியோடு கூடிய அழைப்பு வந்துள்ளதென்று.. ஆனால் என்னுடைய அப்போதைய திட்டம் உடனடியாக ஷக்தியிலிருந்து விலகுவது மட்டுமே.. அதன் பின் கனடாவிலுள்ள என் மாமனார் (கனடாவில் ஒரு தொலைகாட்சி மற்றும் வானொலி நிலையத்தை அவர் இணைந்து நடத்திக் கொண்டிருந்தார் ) அழைத்தால் அவரிடம் செல்லலாம் என்று. 


எனினும் இப்போது போலவே அப்போதும் எனக்கு வெளிநாட்டு வாழ்கையை விட எங்கள் நாட்டில் இருப்பதே பிடித்திருந்தது..
என்னை அப்போது யாருமே தொடர்பு கொண்டிருக்கவில்லை.

Post a Comment

6Comments

Please Select Embedded Mode To show the Comment System.*