நாளாந்தம் புத்தம் புதிய திரைப்படங்கள் வெளிவருகின்ற காலத்திலே (கடந்த 10 ஆண்டுகளாகவே இந்தியாவில் புதிய தமிழ்த்திரைப்படங்கள் வெளிவருகின்ற அதே தினத்தில் இலங்கையிலும் அவை வெளியிடப்படுகின்றன ) சில வாரங்களுக்கு முதல் வெளியான ஜெயம்கொண்டான் திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கடந்த புதன்கிழமை தான் கிட்டியது.அதுவும் அன்றைய தினமே குறித்த திரையரங்கில் திரைப்படம் திரையிடப்படும் இறுதி நாளென்று நண்பர் விமல் சொல்லியிராவிட்டால் கிடைத்திராது .முன்பெல்லாம் அநேகமான திரைப்படங்கள் திரை இடப்படும் முதல் நாளே பார்த்து விடுபவர்கள் நாம்.(எவ்வளவு தான் என்னுடைய வானொலிக் கடமைகள் இருந்த போதும் இரவுகளை அட்ஜஸ்ட் செய்து பார்த்துவிடுவோம் ) எனினும் எனக்கு வாரிசொன்று வந்த பிறகு,மனைவியையும் என் குழப்படிகார மகனையும் விட்டு விட்டு இரவுகளில் படம் பார்க்க போவதென்பது சாத்தியமாகவில்லை ..என்னுடைய வாகன லிப்ட் கிடைக்காத காரணத்தாலும் , நான் இல்லாமல் பார்ப்பது சுவார்சயமாக இருக்காது என்றதனாலும் மற்றவர்களும் குறைத்துக் கொண்டார்கள் .இதனால் பல திரைப்படங்களைத் தவறவிட்டோம் . பின் dvd,vcdகளில் பார்ப்பதும் தள்ளிப் போய்விட்டது ..அண்மைக்காலத்தில் பார்த்தவை . . பில்லா ,தசாவதாரம் ,குசேலன் மற்றும் சரோஜா மட்டுமே .. இப்போது ஜெயம்கொண்டான்.
தூய,அழகான தமிழ்ப் பெயரே முதலில் என்னைக் கவர்ந்தது .இந்தத் திரைப்படப் பாடல்கள் எனக்கு ரொம்பவே பிடித்துப் போனவை . வித்யாசாகர் அனுபவித்து இசை வழங்கி இருந்தார்.சில விமர்சனங்கள் பிரமாதமாக எழுதி இருந்தாலும் ,ஒரு சில வலைப்பதிவுகள் தாக்கியும் இருந்தன .நல்ல கதையம்சமுள்ள படம் என்று அறிந்ததனால் ஆர்வத்துடன் பார்க்க உட்கார்ந்தேன் .முதல் காட்சிகள் நன்றாகவே இருந்தன.ஆனாலும் வினய்யின் வசனத்துக்கான உதட்டசைவுகளும் ,விவேக்கின் எரிச்சலான குறுக்கீடுகளும் எரிச்சலூட்டுவதாக எனக்குத் தோன்றின .அத்துடன் அழகான,கம்பீரத் தோற்றமுடைய வினயிற்கு ஏன் தான் அந்தத் தொங்கு மீசை கெட் அப்போ தெரியவில்லை. பொருந்தவே இல்லை.
முதல் காட்சிகளில் ஆரம்பித்த விவேக்கின் எரிச்சலூட்டும் குறுக்கீடுகள் படு சீரியசான காட்சிகளிலும் தொடர்ந்தது . சிரிப்பதற்குப் பதில் விவேக் அகப்பட்டால் கழுத்தை நெரித்து விடலாமா என்று தோன்றியது.உதாரணமாக வினயிற்கு தன்னுடைய இறந்து போன தந்தைக்கு ரகசிய மனைவி ஒருத்தி இருக்கிறார் எனத் தெரிய வரும் இடத்தில் ,வினய் கடும் அதிர்ச்சியோடு இருக்க ,விவேக் தன் மனைவியைப் பார்த்து "உன் அப்பனும் சண்டே வந்தால் காணாமப் போயிடுறான் , எதுக்கும் பார்த்துக்க"என்று சொல்கிற இடம்.சரோஜாவில் பிரேம்ஜி இதே போல் குறுக்கிடும் போது ரசிக்கக் கூடியதாக இருக்கிறது .. இதிலோ கொலைவெறி தான் வருகிறது.சின்னக் கலைவாணர் இனிப் புது வழிகளைத் தேடவேண்டும் .
பாவனா - கண்ணுக்கு குளுமை .முதல் படமான சித்திரம் பேசுதடியிலிருந்து இந்தப் படம் வரை கண்ணுக்குப் புலனாகிறது அவரது வளர்ச்சி. :) நடிப்பிலும் தான்.சுற்றி வரும் பூமி பாடலில் அழகான காட்சிகள் வந்தாலும் எங்கள் கண்கள் எங்கே அவற்றைப் பார்த்தன .ஆனாலும் கவர்ச்சியான உடைகளை அணியாமல் இருக்கும் அவரைப் பாராட்டலாம் .சொந்தக் குரலில் அவர் பேசி இருந்தாலும், கொஞ்சம் ஆண் தன்மை தெரிந்தாலும் ,அவரது கிராமியப் பேச்சு நடையும் ,குழைவான அசைவுகளும் , பேசும் கண்களும் அவற்றை மறக்கடித்து விடுகின்றன .அதிலும் நான் வரைந்து வைத்த சூரியன் பாடலில் பாவனாவை நன்றாகவே ரசிக்கலாம் .
IPLஇல் பார்த்த லேகாவா இவர்?கழுத்திலிருந்து கீழ் வரும் ஆடைகளில் பார்த்த இவரை இங்கே முழு ஆடையிலும் ,வில்லத் தனமான நடிப்பில் பிடிவாதத் தங்கையாகப் பார்க்கையில் தமிழுக்கு மற்றுமொரு நல்ல நடிகை கிடைத்துவிட்டார் என நினைக்கிறேன்.கோபப்படுவதிலாகட்டும்,கலங்குவதிலாகட்டும் கலக்குகிறார்.சிம்பு மிஸ் பண்ணிட்டீங்க....கெட்டவன் பட வாய்ப்பைப் பற்றி சொல்லுகிறேன்..
அந்த வில்லன் செல்வம் கலக்கி இருக்கிறார்.மிரட்டுகிறார்.பொல்லாதவனில் பார்த்த அதே பிரமாதம் .மனைவியுடன் கொஞ்சுவதிலாகட்டும் ,மற்றவர்களுடன் எரிந்து விழுவதிலாகட்டும் ,அமைதியாக கண்களாலேயே மிரட்டுவதிலாகட்டும் பின்னி எடுக்கிறார் மனிதர் .விஜய்,அஜித் தங்கள் படங்களில் பயன்படுத்தினால் சவாலான வில்லனைக் காட்டலாம் .ரசித்துப் பார்த்தேன்.
அதிலும் வில்லனுக்குக் காதல்,செண்டிமெண்ட் இப்போது கொஞ்சம் புதுசாக ஹிட் ஆகி வருகிறது.சரோஜாவிலும் வெங்கட்பிரபு இவ்வாறு காட்டி இருந்தார்.
ஹனீபா வருகிற நகைச்சுவை,வில்லத்தனம் கலந்த காட்சிகளை இயக்குனர் கண்ணன் அருமையாகப் பயன்படுத்தி இருந்தார். அந்த மதுரைக்கு ஒரு மகன் ,சென்னைக்கு ஒரு மகன் விஷயம் இயக்குனரின் நக்கல் தர்பார்.எத்தனை பேருப்பா கலைஞரை வம்புக்கு இழுக்கப் போறீங்க? (மதுரையில் இந்தப் படம் எப்பிடிங்க போகுது?)
கிருஷ்ணா வழமியான ஹீரோவின் நண்பன் வேஷம்.தீபா வெங்கட்,பின்னணிப் பாடகர் தேவன் ஆகியோர் இயக்குனரின் நண்பர்களோ தெரியவில்லை...
வித்தியாசமான கோணத்தில் கதையை கண்ணன்(இயக்குனர்) கொண்டு போனதால் முடிவும் வித்தியாசமாக இருக்கும் என்று பார்த்தால்,ஹீரோ விமானத்தில் ஏற ஒரு சில நிமிடங்கள் இருக்கும்போது,வில்லன் தங்கையைக் கடத்திப் பணயம் வைத்துக் கொண்டு கூபிடுகிறார் .பாவனா ,நண்பர்கள் தடுக்க,தடுக்க ஹீரோ தங்கையைக் காப்பாற்றப் போகிறார்.வில்லன்கள் இருக்கும் இடம் எப்போதும் போலவே கைவிடப்பட்ட ஒரு பழைய தொழிற்சாலை.(அங்கே தானே சண்டையின் போது அவசரத்துக்குப் பாவிக்க ஏதாவது இரும்புத் தடிகள் கிடைக்கும்)அவ்வளவு நேரமும் அமிர்தலிங்கம் வழியில் நின்று அகிம்சை,துஷ்டர்களிடம் இருந்து விலகி நடப்பது பற்றிப் போதனை செய்துவந்த ஹீரோ,இப்போதும் அதே வழியில் வித்தியாசமாக ஏதாவது செய்வார் என்று பார்த்தால், திடீரென நான்கைந்து அடிகள் வாங்கி,தன் தங்கையும் வில்லனிடம் அடி வாங்கி குருதி வழிகையில் பிரபாகரன் வழிக்கு(எத்தனை நாளைக்குத் தான் காந்தி ,சுபாஷ் சந்திரபோசையே சொல்வது ?) மாறுகிறார் .அடிக்கிறார்,வில்லனும் அடிக்கிறார். மாறி மாறி நடக்கும்
கை கலப்புக்குப் பின்,துப்பாக்கிகள் கைகள் மாறி,(அது சரி அடியாட்கள் இருக்கும் போதும் கூட,வில்லன் தனியாக ஒண்டிக்கு ஒண்டி தான் மோதுவாராம்..என்ன கொடுமை கண்ணன் இது?)கடைசியில்(வழமைபோல்)போலீஸ் வருகிறது.
ஹீரோவும் தன் பங்குக்கு தான் இதுவரை ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்த காரணங்களை விலாவாரியாக விளக்குகிறார் .தங்கையும் அண்ணனும் சேர சுபம்.
வித்தியாசமான முடிவைத் தருவார் என்று பார்த்தால் அட்சரம் பிசகாத தமிழ் சினிமா முடிவையே இயக்குனர் தந்திருக்கிறார்.ஏமாற்றி விட்டாயே ஜெயம்கொண்டான்....வீடு போகும் போது வாகனத்தில் ஏறியவுடனேயே நான் வரைந்து வைத்த பாடல்..முடிவு ஏமாற்றினாலும் பாவனா முன்னணி கதாநாயகி ஆகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று நினைத்தவாறே இயக்குனரைத் திட்டிக் கொண்டே வந்தோம்.