June 07, 2013

நிரூபித்த தவானும், நிறைவான இந்தியாவும் - ICC Champions Trophy - Game 1முதன் முதலாக 1998
இல் 
ICC Knock Out என்ற பெயரில் பங்களாதேஷில் இத்தொடர் ஆரம்பித்தபோது இவ்வளவு காலமும் இது பெயர்கள் பலப்பல மாறி (Mini World Cup, Champions Trophy) நீடிக்கும் என்றோ, அல்லது இப்போது வரவேற்பையும் வர்த்தக லாபங்களையும் அத்தோடு சேர்த்துப் பல வம்புகளையும் சேர்த்தே கொண்டு வந்திருக்கும் Twenty 20 போட்டிகள் ஆரம்பித்து ICC அந்தஸ்து பெறும் என்றோ, ஒரு நாள் கிரிக்கெட்டையும் டெஸ்ட் கிரிக்கெட்டையும் ஓரங்கட்டும் அளவுக்கு  என்றோ யாருமே நினைத்திருக்க மாட்டோம்.

 

ஆனால் நேற்று ஆரம்பித்துள்ள ஆறாவது சம்பியன்ஸ் கிண்ணத்தொடர் இத்தொடரின் இறுதி நிகழ்வாக அமைகிறது.

ஒவ்வொருவகை கிரிக்கெட் ஆட்டத்துக்கும் ஒரு மகுடம் என்று சர்வதேசக் கிரிக்கெட் பேரவை எடுத்திருக்கும் முடிவின் படியே Champions Trophy விடை கொள்ளப் போகிறது.ஆஸ்திரேலிய அணி (ஒருநாள்) உலகக் கிண்ணப் போட்டிகளில் Hat trick எடுத்தது போல சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலும் Hat trick அடிக்க ஆவல் கொண்டிருந்தாலும் ஆரம்பிக்க முன்னதாகவே பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா மற்றும் பயிற்சிப் போட்டிகளில் பெற்ற அபார வெற்றிகள் இரண்டின் பின் இந்தியா ஆகிய அணிகள் மீது அனைவரதும் பார்வை இருக்கிறது.இந்திய அணி நேற்றைய முதலாவது போட்டி வெற்றியின் பின்னர் தங்கள் தலை மேல் அந்த favourites என்ற மகுடத்தை உறுதியாக இப்போதைக்குத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்.

இந்திய அணித்தலைவர் இன்னும் வெல்லாத ஒரே மகுடம் இது என்பது நாங்கள் எல்லாரும் குறித்து வைக்கக் கூடிய ஒரு விடயம்.


​ஏற்கெனவே ஸ்மித், கலிஸ் ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்து ​சென்றுள்ள தென் ஆபிரிக்காவுக்கு டேல் ஸ்டெய்னின் உபாதையும் சேர்ந்துகொள்ள ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பாகவே தென் ஆபிரிக்கா நேற்றுத் தெரிந்தது.
ஆனாலும் விடாப் பிடியாக இந்தியா வைத்த பெரிய இலக்கை நோக்கி இறுதிவரை போராடியது, டேல் ஸ்டெய்ன் அணியில் மீண்டும் இணைந்துகொள்ளும்போது இந்த அணி ஆரம்பத்திலே அவர்களின் அணித்தலைவர் சொன்னது போல முதலாவது கிண்ணத்தை வென்ற தமது அணியை நிகர்க்கும் என்று நம்பக்கூடியது தான்.

இரண்டு விக்கெட் காக்கும் தலைவர்கள் மோதிக்கொண்ட போட்டி இது. இந்தத் தொடரில் விளையாடும் ஏனைய ஆறு அணிகளினதும் தலைவர்கள் விக்கெட் காப்பாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.(லூக் ரொங்கி தொடர்ந்தும் சறுக்கும் பட்சத்தில் பிரெண்டன் மக்கலம் நியூ ஸீலாந்து அணியை வழிநடத்தினால் ஒழிய.)

இந்திய அணி கடந்த மூன்று போட்டிகளிலும் கலக்கிய விதம் இந்த அணியின் மீது நம்பிக்கையைக் கொடுக்கிறது.
அணியின் சமபலத் தன்மை, பல்வகைமை, துடுப்பாட்ட வீரர்களில் முக்கியமானவர்களின் சிறப்பான Form, பல்வேறு பந்துவீசும் தெரிவுகள் என்று தோனிக்கு ஏகப்பட்ட வசதிகள்.

தினேஷ் கார்த்திக் பயிற்சிப் போட்டிகளில் அடுத்தடுத்துப் பெற்ற சத்தங்களும், கோஹ்லி, தலைவர் தோனி ஆகியோரின் சிறப்பான ஓட்டக் குவிப்புக்கள் ஒரு பக்கம் என்றால், நேற்று இந்தியா பரீட்சார்த்தமாக(?) செய்துபார்த்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி மாற்றம் ஆச்சரியப்படும் விதமாகப் பெரிய வெற்றியை அளித்துள்ளது.

இந்திய அணியின் முன்னைய அதிரடி நாயகனான செவாகுக்குப் பதிலாக அணிக்குள் அழைக்கப்பட்ட ஷீகார் தவான் தனது டெஸ்ட் அறிமுகத்திலேயே அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியவர்; எங்களை அசத்தியவர்.
மிக நீண்ட நாட்களாகவே தவான் மீது பெரும் எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. சரியான வாய்ப்பு ஒன்று கிடைத்தால் கலக்குவார்; நிரந்தர இடம் பிடிப்பார் என்ற நம்பிக்கையும் இருந்தது.
இதற்காகவே சச்சின், சேவாக், கம்பீர் எப்போது விலகுவார்கள் அல்லது விலக்கப்படுவார்கள் என்று காத்திருந்ததும் உண்டு.

நேற்றைய கன்னி ஒருநாள் சதம் மூலம், தன்னை இப்போது ஒரு நாள் போட்டிகளிலும் நிரூபித்துக் காட்டியுள்ளார் தவான். இவரது ஆக்ரோஷமான அணுகுமுறையும் நேர்த்தியான துடுப்பாட்டப் பிரயோகமும் இந்தியாவுக்குப் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும்.

மனிதரின் அந்த முறுக்கு மீசையும் மொட்டைத் தலையின் பின்னே குஞ்சம் போல் தொங்கும் pony tail முடியும், எந்த நேரமும் சிரித்த அந்த முகமும், ஒரு கெத்தான நடையும் ரசிக்கின்ற மேலும் சில விடயங்கள்.

ஆனால் ரோஹித் ஷர்மா நேற்று ஆடிய விதமும், அவரது அதிரடியும் ஆச்சரியம். உள்ளூர்ப் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிக் கஷ்டப்பட்டு அணிக்குள் இடம்பிடித்து, அதன் பின் தடுமாறி வெளியேற்றப்படும் ரோஹித்துக்கு நேற்று வழங்கப்பட்ட ஆரம்பத் துடுப்பாட்ட வாய்ப்பு இறுதியான ஒன்றாக இருந்திருக்கும்.
ஆனால் கிடைத்த வாய்ப்பைத் தனக்கான visiting card ஆக ரோஹித் ஷர்மா வெளிப்படுத்தி இருக்கிறார்.

ரோஹித் - தவான் சத இணைப்பாட்டம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய  துடுப்பாட்ட  ஜோடியானது இந்திய உபகண்டத்துக்கு வெளியே பெற்ற முதலாவது நூறு ஓட்ட இணைப்பாட்டம் ஆகியுள்ளது.

இந்தியா பெற்ற அந்த சிறப்பான ஆரம்ப இணைப்பாட்டத்தை தொடர்ச்சியாகத் தக்க வைத்துக் கொண்டு இறுதியாக ஜடேஜாவின் அதிரடி நிறைவு வரை கொண்டு சென்றது தான் முக்கியமானது.

300க்கு மேற்பட்ட எந்த இலக்குமே எந்த அணிக்கும் எந்த ஆடுகளத்திலும் சிறு அழுத்தத் தையாவது கொடுக்கக் கூடியது.

தென் ஆபிரிக்கா அனுபவஸ்தர்களை இழந்திருப்பதை மிக அதிகமாக உணர்ந்த தருணங்களில் ஒன்று நேற்று.
முதல் இரு விக்கெட்டுக்கள் போன பிறகு அதிரடிக்காக அனுப்பட்ட ரொபின் பீட்டர்சன்னும் தலைவர் டீ வில்லியர்சும் அபாரமாக ஆடி பெரிய இணைப்பாட்டம் புரிந்த பிறகும் நிதானமாக இணைப்பாட்டங்களை உருவாக்க வேண்டிய தருணத்தில் விக்கேட்டுக்களைத் தேவையற்ற விதத்தில் இழந்தது அணிக்கு மீண்டும் chokers பெற்றுத் தரும் மற்றொரு முயற்சி.

குறிப்பாக டேவிட் மில்லரினதும் பீட்டர்சன்னினதும் ரன் அவுட்டுகள்.

இந்த இடத்தில் தனது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிகள் விழுவதை உணர்ந்து தனது சுழல் பந்துவீச்சாளர்களை சாதுரியமாகப் பயன்படுத்தியதையும், அதற்கு மிக உதவியாக செயற்பட்ட துடிப்பான இந்தியக் களத்தடுப்பாட்டத்தையும் மெச்சியே ஆகவேண்டும்.

இறுதிவரை போராடிய ரயான் மக்லரெனுக்கு நல்ல துணை ஒன்று கிடைத்திருந்தால் தென் ஆபிரிக்கா ஆச்சரியமான வெற்றியொன்றைப் பதிவு செய்திருக்கலாம்.
சுவாரஸ்யம் என்னவென்றால் மக்லரென், பீட்டர்சன் ஆகிய இருவரும் தங்களது அதிகபட்ச ஒருநாள் ஓட்டங்களை நேற்றுப் பதிவு செய்துள்ளார்கள்.

பயிற்சிப் போட்டியில் தனது துல்லிய, சாதுரியப் பந்துவீச்சின் மூலம் கலக்கிய உமேஷ் யாதவ் நேற்றும் ஓட்டங்களைக் கொடுத்தாலும் தன்னிடம் விஷயம் இருக்கிறது என்பதைக் காட்டத் தவறவில்லை.

எனினும் ஓட்டங்கள் அதிகமாகப் பெறப்படும் பந்துகளைக் குறைப்பதில் இந்தியாவின் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுமே அடுத்த போட்டிகளில் கவனம் எடுக்கவேண்டும்.

இங்கிலாந்து ஆடுகளங்களில் தென் ஆபிரிக்காகடந்த  கடந்த சில ஆண்டுகளாகவே ஒருநாள் போட்டிகளில் அடைந்துவரும் தடுமாற்றங்கள் தொடர்கின்றன.
இந்தியாவுக்கு எதிராக சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் கண்டுள்ள மூன்றாவது தோல்வியுமாகும்.

தென் ஆபிரிக்காவுக்கு ஸ்டெய்ன் மீண்டும் வந்தால் All is well.
டீ வில்லியர்ஸ், அம்லா, டுமினி ஆகிய அனுபவம் வாய்ந்த மூவருடன், அடுத்த தலைமைத்துவத்துக்குத் தயாராகி வரும் பப் டூ ப்லெசிசும்  அனுபவம் குறைவான துடுப்பாட்ட வரிசையைத் திடப்படுத்தவேண்டும்.
அத்துடன் choking வியாதி மீண்டும் தொடராமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஆனால் இடிக்கு மேல் இடியாக நேற்றைய போட்டியில் உபாதைக்குள்ளான மோர்னி மோர்க்கல் தொடரிலிருந்து விலகியிருக்கிறார்.இது தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சை பலவீனப்படுத்தும். இவருக்குப் பதிலாக அண்மையில் நடந்த IPL தொடரில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணிக்காக சிறப்பாகப் பந்துவீசிய கிறிஸ் மொரிஸ்சேர்த்துக்கொள்ளப் பட்டுள்ளார்.


------------------

யார் தான் இந்த பாகிஸ்தான் அணியை favorites என்று சொன்னார்களோ... (தென் ஆபிரிக்காவை பயிற்சிப் போட்டியில் உருட்டி எடுத்த பின்னர் உலகமே நம்பிட்டுதோ?) எனது இந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பற்றிய முதலாவது இடுகை வர முதலே, நான் பாகிஸ்தானை வியந்து பேசியது வர முதலே, சுருண்டுள்ளது.
தனித்த ஒரு போராளியாக மிஸ்பா உல் ஹக் அடித்தாடிய விதம் ரசிக்க வைத்தது. 
அவரது ஆட்டம் இழக்காத 96க்கு மதிப்பு அதிகம்.
நாசிர் ஜாம்ஷெட்டின் அரைச் சதம் தவிர எந்தவொரு வீரரின் இணைப்பாட்டமும் இல்லாமல் சதத்தைப் பெறாமல், அணி 200ஐயும் கடக்க முடியாமல் திணறி வெறும் 170 மொத்த ஓட்டங்களை எடுத்து நின்றது பரிதாபம்.

இதுவரை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஓரளவு சிறப்பாகப் பந்துவீசி இருந்தாலும் கெய்லும் சாமுவேல்சும் ஆடுகளத்தில் இருப்பதால் கரிபியன் கப்பல் தடுமாறாமல் கரை சேரும் போலத் தெரிகிறது.

ஆனாலும் தன் தலைமைத்துவத்தாலும் அனைவரதும் நன் மதிப்பைப் பெற்றதாலும் உடைந்து, சிதறிக் கிடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஒன்று சேர்த்து, கட்டியெழுப்பி வெற்றிகளை சுவைக்க வைத்த டரன் சமியிடம் இருந்து தலைமைப் பதவியையும் பறித்து, இன்று அணியிலிருந்தும் தூக்கி இருப்பது அதிருப்தியாக இருக்கிறது.


No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner