June 09, 2013

பழங்கதையாகிப்போகும் நடப்புச் சம்பியன்களின் கனவு - ICC Champions Trophy - Game 3

நடப்புச் சாம்பியன்கள் மண் கவ்வுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தது நேற்று நடந்தது.

இறுதியாக தென் ஆபிரிக்காவில் நடந்த சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற அணியின் தரத்திலும் பலத்திலும் பாதியளவான ஆஸ்திரேலிய அணியே இப்போது இங்கிலாந்துக்கு வந்திருக்கிறது.

எவ்வளவுதான் பூசி மெழுகிப் போக்குக் காட்டினாலும் எவ்வளவு நாளுக்குத் தான் வலுவுள்ள அணி மாதிரியே நடிக்கிறது?

சரியான சமபல அணி இல்லாமல் முன்னைய ஆஸ்திரேலிய அணிகள் போல இந்த அணியால் தொடர்ந்து வெல்ல முடியாது என்பது நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராகக் கண்ட தோல்வி மூலம் மீண்டும் நிரூபணமாயுள்ளது.

ஆறு ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளைத் தொடர்ச்சியாக வென்று வந்த தொடர்கதையும் இடைநடுவே முற்றுப்புள்ளியிடப்பட்டுவிட்டது.

தலைவர் கிளார்க்கும் இல்லாமல் களமிறங்கிய அணி, தங்கள் பந்துவீச்சாளர்களை நம்பியிருந்தது இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தை உடைத்து வெற்றி இலக்கை இலகுவாக்குவாதற்கு.

ஆனால் இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தின் அனுபவம் நேற்று அதற்கு சரியான பதிலைக் கொடுத்தது.

இயான் பெல், தலைவர் அலிஸ்டெயார் குக், ஜோனதன் ட்ரோட், ரவி போபரா ஆகிய நான்கு அனுபவத் துடுப்பாட்ட வீரர்களும் சேர்ந்து இங்கிலாந்தின் மொத்த ஓட்டங்களான 259இல், 210ஐப் பெற்றிருந்தார்கள் என்பது எவ்வளவு தூரம் அனுபவம் நேற்று ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது என்பதைக் காட்டும்.

பெல் பெற்ற 91 ஓட்டங்கள் மிக மிகப் பெறுமதி வாய்ந்தவை. அவர் அமைத்த அடித்தளத்திலும் ஆரம்ப இரு சிறப்பான இணைப்பாட்டங்கள் மூலமாகவும் போபராவுக்கு அதிரடியாக ஓட்டங்களைக் குவிக்க வாய்ப்பு அமைந்தது.

ஆஸ்திரேலியப் பந்துவீச்சில் வழமையாக இருக்கும் அந்த ஆக்ரோஷம், வெறி, விட்டுக்கொடுக்காமை ஆகியன நேற்று காணவில்லை.

மக்காய், போல்க்னர் ஆகியோர் கொஞ்சம் கட்டுப்படுத்தினாலும் இங்கிலாந்தின் ஓட்ட எண்ணிக்கை form இல்லாத வோர்னர், நம்பகமான மத்திய வரிசை இல்லாத, அனுபவம் குறைந்த துடுப்பாட்ட வரிசைக்கு மிக சவாலானதாகவே இருந்தது.

நான் முன்னைய பதிவில் எதிர்பார்த்ததைப் போல ஜேம்ஸ் போல்க்னர் தன்னை ஒரு சகலதுறை வீரராக மிகச் சிறப்பாக நேற்று வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் வோஜஸ் ஏமாற்றினார். கிளார்க் குணமாகி அணிக்குத் திரும்ப வோஜஸ் இடம் விட்டு ஒதுங்க வேண்டியிருக்கும்.


ஜேம்ஸ் போல்க்னர் தன்னைச் சுற்றிலும் விக்கெட்டுக்கள் விழ,விழ நின்று பிடித்து அரைச் சதம் ஒன்றைப் பெற்று ஆஸ்திரேலியா தோற்றாலும் மிக அவமானகரமாகத் தோற்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்.

நேற்றைய போட்டியில் தலைமை தாங்கியிருந்த ஜோர்ஜ் பெய்லியும் சிறப்பாக ஆடி அரைச் சதம் ஒன்றை எடுத்துக்கொண்டார்.

ஆனால் ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சில் தனது கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டது.
முக்கியமாக மூன்று விக்கெட்டுகள் எடுத்த அண்டர்சன் மட்டுமில்லாமல், ப்ரோட், ப்ரெஸ்னன் ஆகியோரும் மிகச் சிறப்பாக ஆஸ்திரேலியாவை அடக்கியிருந்தார்கள்.

நேற்றைய வெற்றி இனி வரப்போகின்ற ஆஷஸ் தொடருக்கு முன்னதாகவே ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்து கொடுத்திருக்கும் மன ரீதியான முதல் தாக்கம்.


நேற்றைய இங்கிலாந்தின் வெற்றியும் இன்று இலங்கை நியூ சீலாந்துக்கு எதிராக சுருண்டிருப்பதையும் பார்க்கையில், பிரிவு Aயில் அரையிறுதிக்குத் தெரிவாகவுள்ள இரு அணிகளும் பெரிய சிக்கல்களை சந்திக்காது என்பதே.

கடந்த தசாப்த காலத்துக்கும் மேலாக ICC ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இரு அணிகளுமே அண்மைக் காலமாகத் தடுமாறி வருவது எதிர்காலம் நோக்கிய இலக்கில்லாமல்மூத்த வீரர்களை சரியாகப் பிரதியீடு செய்துகொள்ளவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயரற்சிப்பதிலேயே தடுமாறுவதால் அணி இலக்கில்லாத கப்பல் போல நிலையில்லாமல் அலைகிறது.

மஹேல, சங்கா, மாலிங்க, டில்ஷான், ஹேரத் போன்ற சில மூத்தவர்கள் மீதான அழுத்தம் அடுத்துவரும் இரு போட்டிகளில் இன்னும் அதிகமாக இருக்கும்.

இன்றைய போட்டி இனிக் கைவிட்ட கேஸ் தான்.

நியூ சீலாந்தின் கப்டில், டெய்லர் மற்றும் வேகப் பந்துவீச்சாளர்கள் மக்லேனகன், சௌதீ ஆகியோர் இருக்கும் சிறப்பான formஐ வைத்துப் பார்க்கையில் அரையிறுதி தாண்டியும் இவர்களது பயணம் நீடிக்கும் போலத் தெரிகிறது.

No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner