கந்தசாமி... என் பார்வையில் கலக்கல் சாமி..

ARV Loshan
71

கந்தசாமி - மூன்று வருட எதிர்பார்ப்பு, காத்திருப்பு, பிரமாண்ட பில்டப்புக்களுக்குப் பிறகு வெளிவந்துள்ள திரைப்படம்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் நீண்டகாலத்துக்கு முதலே வெளிவந்து பிரபலமாகி கொஞ்சம் ஓய்ந்து, தேய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், இதோ புலி வருது புலிவருது, இன்று நாளை என்று ஒரு மாதிரியாக வந்தே விட்டார் கந்தசாமி.

(என் கந்தசாமி பதிவும் இதோ,இதோ என்று இழுத்தடித்து தான் இன்று வருகிறது.. என்ன பொருத்தமோ?)

பாத்திரத்தேர்வு, கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றினால் விக்ரமில் இருக்கும் ஈர்ப்பு, சுசி கணேசனின் முன்னைய படங்கள் (விரும்புகிறேன், திருட்டுப்பயலே) ஏற்படுத்திய வித்தியாசமான எதிர்பார்ப்புக்கள் + கந்தசாமி பாடல்கள் (அநேனமானவை விக்ரம் பாடியதும் - குத்துப்பாடல் + melody இல்லாமல் தேவி ஸ்ரீ பிரசாத் பாணியிலேயே பாடல்கள்) என்பன என்னையும் கந்தசாமியை எதிர்பார்க்க வைத்தன.

எனினும் இவை மட்டுமல்லாமல் கந்தசாமியை நான் எதிர்பார்க்க இன்னுமொரு முக்கியமான காரணங்கள்.

எமது வெற்றி FM வானொலிதான் 'கந்தசாமி' திரைப்படத்தின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ வானொலி. அதற்காக நான் காகம் வெள்ளை என்று சொல்பவனல்ல – குசேலனுக்கும் நாம்தான் அனுசரணை வழங்கினோம். அதற்காக குசேலனை வெற்றிப்படம் என்று சொல்லிவிடமுடியுமா?

இன்னுமொன்று –
கந்தசாமி ஒரு Super Hero படம் என்று விளம்பரப்படுத்தியதும் மனதுக்குள்ளே ஒரு ஆசை எழுந்தது. தமிழில் மிக அரிதாகப் போயுள்ள அதீத சாகச, அபூர்வ சக்தி படைத்த (Super hero subjects)கற்பனை படமாக கந்தசாமி வராதா என்பது தான் அது!

ஆங்கிலத்தில் Super Man, Spider Man, Transformers, Terminator, Harry Potter போன்ற படங்கள் வந்தால் கொடி பிடித்து, மாலை போட்டு வரவேற்பு கொடுத்து, பின் தமிழிலும் மொழிமாற்றி சிலந்தி மனிதன் என்றும் மாயஜால மந்திர வலை என்றும் இஷ்டப்படி பெயரிட்டு வெற்றிவாகை சூடிப் பார்க்கும் எம்மவர் தமிழில் மட்டும் இப்படிப் படம் எடுத்தால் தயாரிப்பாளருக்கு துண்டையும் போட்டு, இயக்குனருக்கும் கதாநாயகனுக்கும் காதிலும் மூக்கிலும் புகை வரவும் பண்ணிவிடுகிறார்கள்..

இதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை.

ஆங்கில திரைப்படங்களோடு ஒப்பிடும்போது தமிழ்ப் பக்கம் தொழிநுட்ப வளர்ச்சியும், தயாரிப்பு செலவும் மிகப் பின் தங்கியிருப்பது பிரதான உறுத்தும் காரணம்..

தாணு தாரளமனம் படைத்தவர் என்பதாலும், சுசி கணேசன்,விக்ரமின் பரீட்சார்த்த முயற்சிகள் பற்றிய எனது நம்பிக்கையாலும், ஏற்கெனவே வெளியான பல புகைப்படங்களாலும் கந்தசாமி ஒரு Super hero subject தமிழ்ப் படமாக இருக்கும் என்று நம்பினேன்.

TV விளம்பரங்களில் பார்த்தது போலவும், பட ஆரம்பத்தில் சில காட்சிகளும் தமிழின் முதலாவது சூப்பர் ஹீரோ படமாக இந்தப் படம்தான் அமையுமா? என நம்பியிருந்தால் மன்சூரலிகானை முதல் காட்சியில் துவைத்துப்போட்ட அதே சேவல் - கொக்கரகோ மனிதன்தான் - IPS கந்தசாமி என்று காட்டும்போது எனக்கு கொஞ்சம் ஏமாற்றமே.

எனினும் அந்நியன் போல இருவேறு மனிதர்களல்ல - இருவரும் ஒருவரே. ஏன் சாமி ('சாமி' படமல்ல)அவதாரம் எடுக்கிறார். எப்படி கடவுள் அவதாரமெடுத்து ஊழல் ஆசாமிகள், மோசடிப்பேர்வழிகளை தண்டிக்கிறார் என்பதையெல்லாம் சஸ்பென்ஸ் இல்லாமலே காட்டுவதில் இயக்குனர் தனித்துத் தெரிகிறார்.

சஸ்பென்ஸ் வைத்துப்படமெடுப்பதை விட சஸ்பென்ஸ் எதுவும் இல்லாமல் இப்படிப்பட்ட நேர்க் கதைகளை வித்தியாசமாக எடுப்பது தான் சவால்.. எல்லாத் தோசைகளும் மாவால் தான்.. ஆனால் சில தோசைகள் மட்டும் தனிச் சுவையில்லை? அது போல..

கந்தசாமி அனைவரும் அறிந்த ரோபின்கூட் பாணியிலான ஒரு கதை.. காலாகாலமாக மலைக்கள்ளன் முதல் அண்மைய சிவாஜி வரை பல பேர் கையாண்ட கதை..தெரிந்த கதை தானே என்று யாராவது சிலர் யோசித்திருந்தால் குரு,ஜென்டில்மன்,ரமணா,அந்நியன்,சிவாஜி என்று இவை அனைத்துமே தோற்றிருக்கவேண்டுமே ..

எனவே சினிமாவைப் பொறுத்தவரை கதை என்பதற்கும் அப்பால் திரைக்கதையும் படமாக்கப்படும் விதமுமே மிக முக்கியமானவை.
சுசி கணேசனின் திரைக்கதை அவரது வழமையான படங்கள் போலவே விறுவிறுப்பாகவும், திட்டமிடப்பட்டும்,திசை விலகாமலும் இருப்பது கந்தசாமியின் பலம்.

படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் போல் தோன்றுவதும், மூன்று வருடம் படம் வருவதற்கு இழுத்ததும் படத்தின் சுவாரஸ்யத்தையும் விறுவிறுப்பையும் குறைத்தது உண்மை..

இவ்வாறான தனி மனித சாகசப் படங்களுக்கு வலு சேர்ப்பதே /கதாநாயகப் பாத்திரத்துக்கு பலம் சேர்ப்பதே பலமான ஒரு வில்லன் பாத்திரப் படைப்பு..

(ஆங்கிலத் திரைப்படங்கள் பாருங்கள்) அந்நியன்,சிவாஜியிலும் அந்தப் பலவீனங்கள் இருந்தாலும் ஷங்கரின் நுட்பம் அவற்றை மறைத்து விட்டன.

கந்தசாமியில் மூன்று வில்லன்கள்..

ஆசிஷ் வித்யார்த்தி கபடம்..பார்க்கையில் விக்ரமிடம் தோற்றுப் போகிறார்-இலகுவாக..
முகேஷ் ஏற்றுள்ள பாத்திரம் பிற்பாதியில் முக்கியம் பெறுகிற ஒரு மஜா வில்லன்.
மனிதர் அனுபவித்து செய்திருக்கிறார்.. (இதை எந்த அர்த்தத்திலும் படம் பார்த்தவர்கள் எடுத்துக் கொள்ளலாம்)
போக்கிரியில் பொறுக்கி இன்ஸ்பெக்டராக வரும்போதேஇன்னும் கொஞ்சம் பொறுப்பான(!) வில்லன் பாத்திரத்தை இவருக்குக் கொடுக்கலாமே என்று யோசித்தேன்..

மீனாகுமாரி பாடலில் குத்தாட்டம் போட்டுக் கலக்கி இருக்கிறார்.. (முமைத் கானையே பார்க்கவிடாமல் இவர் ஆடும் குத்தாட்டம் ரசனை)

ஆனால் இவரது வில்லன் பாத்திரத்தை(யாவது) இன்னும் கொஞ்சம் கனதியாக்கி இருக்கலாம்.. இதன் மூலம் கந்தசாமியின் பாத்திரத்தின் வீரியம் கூடியிருக்கும்.

அலெக்ஸ் மெக்சிகோவில் உள்ள பினாமியாக வருவது அவ்வளவு பொருந்தவில்லை..

படத்தில் ஹீரோ வில்லன்களின் சவால்களை கொஞ்சம் எளிதாகவே முறியடிப்பதால் சில காட்சிகள் உப்பு சப்பற்று போய்விடுகின்றன.கதாநாயகனின் பாத்திரப் படைப்பை மேலும் வலிமையாக ஒரு சாகச வீரனாகக் காட்ட இயக்குனர் முயன்ற காரணத்தாலேயே வில்லன்களை பல இடங்களில் டப்பாவாக்கி இருக்கிறார் என நினைக்கிறேன்.


மெக்சிகோவில் எடுக்கப்பட்ட படப்பிடிப்பு வேண்டுமென்றே வேறு வர்ணத்தில் எடுக்கப்பட்டுள்ளமை சிலபேருக்கு பிடிக்கவில்லை அல்லது புரியவில்லை.. (இதிலே சில பிரபல பதிவுலக விமர்சகர்களே கண்ணு நோவுது,தலை சுத்துது என்று சொல்வது அவர்களுக்கு வயது போய்விட்டதைக் காட்டுகிறதா தலைமுறை இடைவெளியா என்று புரியவில்லை)

இப்போதெல்லாம் பல தமிழ் படங்களில் இந்த வித்தியாசமான colour tonesஐப் பாவிப்பதன் மூலம் காட்சிகளின் களங்களில் வேறுபாடு ஏற்படுத்துவது தானே trend..

சுசி ஏற்கெனவே தனது 'திருட்டுப்பயலே' படத்திலும் இதே நுட்பத்தை மிக நேர்த்தியாகப் பயன்படுத்தி இருந்தார்.

ஆனால் மெக்சிகோ காட்சிகளை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக எடுத்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது..

ஊழல்,கறுப்புப் பணம், ரமணா பாணியிலான ஒரே பள்ளி மாணவர்கள்,புள்ளிவிபரங்கள் என்று பட்டியலிட்டே பார்த்தாலும் ஊழல் ஒழிப்பு CBIஇலிருந்து ஆரம்பிப்பதும்,போலீஸ் குழுவே நல்லது செய்பவனை/பவரை துரத்துவதும் புதுமை என்றால், CBIஇன் தலைவராக வரும் தெலுங்கின் முன்னாள் உச்ச நட்சத்திரம் கிருஷ்ணாவே (கன்னடப் பைங்கிளி சரோஜாதேவியின் காதல் புகழ்) இதற்கு உதவியளித்து ஊக்கப்படுத்துகிறார் என்பது தெரியவரும்போது கொஞ்சம் அதிர்ச்சி தான்..

வடிவேலுவை திணித்திருந்தாலும் கதையின் சம்பவங்களோடு அவரைப் பின்னி (பிரபுவும் மன்சூர் அலிகானும் அவரைப் பின்னுவது வேறு கதை) கொண்டு சென்றுள்ளார் சுசி கணேசன்.

வழமை போல அப்பாவியாக வடிவேலு அடிவாங்கினாலும் தண்ணீர் பீய்ச்ச பீய்ச்ச ஆடும் ஆட்டமும் அசைவும் ரகளை..

பிரபு இருக்கிறார் என்று மட்டும் தான் சொல்ல முடிகிறது.. இன்னும் கொஞ்சம் அவருக்கு வேலை கொடுத்திருக்கலாம்..(இந்தப் பாரிய உடலுக்கு இது கூடக் குடுக்கலேன்னா எப்படி?)

ஆசிஷ் வித்யார்த்தியின் அடிவருடி வழக்கறிஞராக வரும் Y.G.மகேந்திராவின் முகத்தில் தான் எத்தனை பாவங்கள்.. மனிதர் சின்னப் பாத்திரமே ஆனாலும் கலக்கி இருக்கிறார்..

ஸ்ரேயா ஒரு ஆங்கிலப்படங்களில் வரும் வில்லிகள் போன்றதொரு கவர்ச்சி நாயகி.. நிறையப் பேருக்கு ஸ்ரேயாவின் கவர்ச்சி பிடித்திருந்தாலும் அவரது நவீன நாகரிக நடை,உடையலங்காரம்,சிகை அலங்காரம் பிடிக்கவில்லை..

எனினும் சுப்புலக்ஷ்மி என்று அவர் ஏற்றுள்ள வில்லத்தனமான நவநாகரிக நங்கை ப் பாத்திரத்துக்கு அவரது கவர்ச்சியும் சிகை அலங்காரமும் ஆடை வடிவமைப்புக்களும் பெருமளவு பொருத்தத்தையும் படத்தின் செழுமைத் தன்மையையும் ஏற்படுத்தி இருந்தன.

நான் எப்போதுமே ஸ்ரேயாவின் ரசிகன் அல்ல..எவ்வளவு தான் அவர் கவர்ச்சியை வீசியெறிந்து அள்ளித் தூக்கி எங்கள் மீது வாரி இறைத்தாலும் நான் ஸ்ரேயாவை எப்போதும் ரசிப்பவன் அல்ல.. ஒரு சின்ன சில்க்கு, சோனா ரேஞ்சிலேயே அவரை நான் எப்போதும் கணிப்பதுண்டு..

ஆனால் கந்தசாமியின் சுப்புலக்ஷ்மியில் ஸ்ரேயாவை ஆங்கிலத் திரைப்படங்களில் வரும் ஒரு ஸ்டைலிஷ் வில்லியாகப் பார்கிறேன்.. ஒரு கெத்தும் திமிருமாக அவரது நடையும் சுசித்ராவின் ஆம்பிளைத்தனமான குரலும் சேர்ந்து அந்தப் பாத்திரம் உயிர்பெற்று நிற்கிறது.

விக்ரம் - உடல் மொழியாக இருக்கட்டும், நிமிர்ந்த நடையுடன் திமிர்த்துத் தெரியும் அந்த வீரமாக இருக்கட்டும், அளவான உதட்டசைவோடு தெளிவாகப் பேசும் வார்த்தைகளாகட்டும், சண்டைக்காட்சிகளில் கிளர்ந்து தெரியும் கட்டுடலாகட்டும் இந்தப் பாத்திரத்தில் இது போன்ற பாத்திரங்களில் அச்சாக வார்ப்பதற்கு இவர் மட்டுமே என்று நினைவில் நிற்கிறார்.

IPS கந்தசாமியாக வரும்போது இவரது ஆடைகளும் சேர்த்து மிக நேர்த்தியான பாத்திரமாக வடிவமைத்த இயக்குனருக்கும் பாராட்டுக்கள்.

சேவல் மனிதனுக்கும்,IPS கந்தசாமிக்கும் இவர் காட்டும் சின்ன சின்ன வேறுபாடுகளும் ரசனை. காசி,அந்நியன் போன்ற கனதிகளைத் தாங்கிய விக்ரமுக்கு இந்தப் படத்தின் பாத்திரங்கள் ஊதிவிட்டுப் போகக்கூடியவை தான்.

எனினும் சேவல் மனிதனாக வந்து வதம் செய்யும்போது காட்டும் உடல் அசைவுகள்,முகபாவ மாற்றங்கள் அற்புதம்..

விக்ரம் பெண் வேடத்தில் வந்து போடும் கூத்துக்களும் சண்டையும் ரசிக்க வைத்தாலும் பெண் வேடம் பொருந்தவில்லை என்றே சொல்லவேண்டும்.. மயில்சாமி குழுவினர் ஆண்தன்மை கொண்ட அந்தப் 'பெண்'ணைப் பார்த்து மயங்குவது கொடுமை.. ;)

காதல் காட்சிகள் வாய்க்கவில்லை.. ஸ்ரேயா ஒரு வில்லி போலவே தென்படுவதால் உண்மையாக அவர் காதல்வயப்ப்படும்போதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவது இயக்குனர் விட்ட ஒரு பலவீனம்.

விக்ரமின் நண்பர்கள் அறிமுகப்படுத்தப்படும் இடம்,விக்ரமின் அலுவலகத்துக்கு ஸ்ரேயா வரும்போது விக்ரம் மிக லாவகமாக கேள்விகளாலேயே பதிலளிப்பதும், மெக்சிகோ தடாகத்தில் லவ்வ்வுவது போல Laptopஇன் password அறிந்துகொள்வதும் இயக்குனரின் ஐடியாக்கள் பளிச்சிடும் இடங்கள்.

எனினும் திருட்டுப்பயலே திரைப்படத்தில் ஒளிப்பதிவில் அசத்திய wide angle ரவிச்சந்திரன்(பெயர் சரி என நினைக்கிறேன்) போல ஒருவர் கிடைத்திருந்தால் கந்தசாமி இன்னும் கொஞ்சம் பிரம்மாண்டமாக இருந்திருக்கும்.

ஏகாம்பரம் சில இடங்களில் தாணு செலவழித்த பிரம்மாண்டத்தைக் கொண்டுவரவில்லை என்றே நான் கருதுகிறேன்.

குறிப்பாக அலெக்ரா பாடலில் ஸ்ரேயாவின் குலுக்கல் தவிர வேறு எதுவும் ரசிக்கும் படியாக இல்லை.

ஆனால் ஒரே சிறிய துண்டோடு ஸ்ரேயா ஆடும் மியாவ் பாடலில் சும்மா கிறங்கடிக்கிறார்..எங்கே துண்டு கழன்று விடுமோ என்று நான் பதறிக் கொண்டிருக்க, என்னுடன் பக்கத்தில் இருந்து பார்த்த நண்பர் அந்தத் துண்டை ஊசி கொண்டு குத்தி இருப்பாரா இல்லை கயிற்றால் கட்டி இருப்பார்களா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே சிலுக்கு கதாநாயகியாக நடித்த படங்களை விட ஒரு கதாநாயகி படம் முழுவதும் கவர்ச்சியாக நடித்த ஒரே படம் கந்தசாமியாகத் தான் இருக்கவேண்டும்.

அநேகமான பாடல் காட்சிகள்,முகேஷின் நகரும் சொகுசு படுக்கை அறை பஸ் என்று எக்கச்சக்க பணத்தின் தாராளம் தெரிகிறது..

படமோ அதீத பணக்காரர், அவதிப்படும் ஏழைகள் பற்றி போதிக்கிறது.. செலவளித்து சொன்னால் தான் செலவழிக்காதே என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்வார்கள் போலும்..
சொல்லப்பட்ட புள்ளிவிபரங்கள் கொஞ்சம் போரடித்தாலும் மறுபக்க நிதர்சனம் நெஞ்சை உறுத்தியது.. தங்கள் பங்குக்கு இரு கிராமங்களை கந்தசாமி குழு தத்தெடுத்திருப்பது மகிழ்ச்சி தான்.. எனினும் இன்னும் என்ன செய்யலாம் என்று அவர்கள் இந்தியா சார்பாக நோக்கட்டும்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

படத்தின் ஆரம்ப எழுத்தோட்டத்திலிருந்து ஆரம்பிக்கிறது அவரின் இசை ராஜாங்கம்..

ஆரம்ப இசையே அதிரடியுடன் கனதியானது.. பின்னணி இசையில் பிரித்து மேய்ந்திருக்கிறார்..தசாவதாரம்,வில்லுக்கு பிறகு தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பின்னணி இசையில் ஹட் ட்ரிக் அடிக்கும் வாய்ப்பு.

சின்ன சின்ன விஷயங்களிலும் சிரத்தையாக மினக்கெட்டுள்ளார். பாடல்கள் எல்லாம் எப்போதோ பிரபலமானதால் அதுபற்றி நானும் மீள சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்.

நான் கவனித்த இன்னொரு விஷயம் விக்ரமின் தந்தையாரும் இந்தப்படத்திலே நடித்திருக்கிறார். முகேஷின் உதவியாளராக..

படத்தின் மிகப்பெரும் பலவீனமாக நான் கருதுவது சண்டைக் காட்சிகள்.. வேகமும் ஆக்ரோஷமும் போதாது.. நாடகத் தன்மையாக பல இடங்களில் தெரிந்தது.

என்னைப் பொறுத்தவரை இந்தத் திரைப்படத்தை நான் ரசித்தேன்.. அண்மைக்காலத்தில் நான் பார்த்த பல படங்களோடு பார்க்கையில் கந்தசாமி எனக்கு போரடிக்கவும் இல்லை,மோசமாகத் தெரியவும் இல்லை..

ஒட்டுமொத்தமாகப் பல பதிவரும் சேர்ந்து கந்தசாமியை மோசமாகவும் வில்லை விட மோசம் என்று முத்திரை குத்தியதும் பெரும் ஆச்சரியம்..(வில்லு பெட்டர் என்று சொன்னதெல்லாம் ரொம்பவே ஓவர்.. )

இவ்வளவுக்கும் நான் இலங்கையில் கந்தசாமி ஓடுகின்ற பன்னிரண்டு திரையரங்குகளிலும் கேட்டபோது வசூல் நிறைவாக இருப்பதாகவே சொல்கிறார்கள்..

இந்தியாவில் படம் தோற்றுவிட்டதாக சொல்லிக் கொண்ட பலபேருக்காக இன்று நான் பார்த்த ஒரு பதிவு..

சென்னை நகரில் ஒரே வாரத்தில் ரூ.1,73,43,778 லட்சம் வசூல் செய்துள்ளது விக்ரம் நடித்து வெளியாகியுள்ள கந்தசாமி.

தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு வசூல் சாதனை என படத்தின் சென்னை [^] நகர விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

21.08.2009 முதல் 27.08.2009 வரை ஏழு நாட்களில் கந்தசாமியின் மொத்த வசூல் ரூபாய் 1,73,43,778. தமிழ் சினிமா [^] வரலாற்றிலேயே முதன் முறையாக 18 திரையரங்கங்களில் ஒரு தமிழ் [^]ப்படம் திரையிடப்பட்டிருக்கிறது.

இப்போ என்ன சொல்லுறீங்க?

என்னைப் பொறுத்தவரை, இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால்,பாடல்கள் வந்த சூட்டுடனேயே இஅர்க்கியிருந்தால் மிகப்பெரும் வெற்றிப்படைப்பாக வந்திருக்கவேண்டிய கந்தசாமி, ஒரு சராசரி வெற்றிப் படமாக அமைந்துவிட்டது..

சுசி கணேசன் & விக்ரம் உங்களிடம் இருந்து மேலும் நிறையவே எதிர்பார்க்கிறோம்..


பி.கு - எழுத ஆரம்பித்து ஒருவாரத்துக்கு மேல் எடுத்துப் போடும் பதிவு இது.. இன்னும் விட்டால் இந்தப் பதிவு வேண்டும் என்று கந்தசாமிக் கடவுளுக்கு யாராவது துண்டு எழுதிப் போட்டிடுவாங்களோ என்று இன்று பதிவிட்டு விட்டேன்.

இது வக்காலத்தோ, உத்தியோகபூர்வ வானொலி என்பதற்காகவோ நான் வழங்கும் பதிவு அல்ல..
என் ரசனை இவ்வளவு தான் என்று நீங்கள் சொல்லலாம்.. இல்லையேல் மற்றவர்களின் ரசனை அவ்வளவு தான் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.. :)

கொஞ்சம் நீளமாக அதேவேளை மனதில் பட்டதை சொல்லும் பதிவு இது.. நிறையப் பேர் சொல்கின்றார்களே என்று ஆமாம் சாமி போடுவதில்லை நான்..

ரசனைகள் வித்தியாசப்படலாம்..
என்னுடைய 'கந்தசாமி'யை வாசித்த பிறகு மீண்டும் ஒரு தடவை கந்தசாமி பாருங்கள்.. புதிதாக தெரியும்..


Post a Comment

71Comments

Please Select Embedded Mode To show the Comment System.*