கொஞ்ச நாளாக கிரிக்கெட் பற்றி எதுவுமே பதியாமல் கை குறுகுறுத்தது..
பல விஷயமும் சேர்த்து ஒரு மசாலா படையல்..
முரளிக்கு முற்றுப்புள்ளி?
சமிந்த வாஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்து சில நாட்களுக்குள்ளேயே முரளியின் முற்கூட்டிய அறிவிப்பு. அடுத்த ஆண்டு எனினும் தனது வயதுக்கணக்கு, இலங்கை அணிக்கு இனிவரும் காலத்திலே காத்திருக்கும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை எல்லாவற்றையும் கணக்கிட்டே முரளி இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.
முரளி தற்போது கைப்பற்றியுள்ள டெஸ்ட் விக்கெட்டுக்கள் 770. அடுத்த ஆண்டு செப்டெம்பர் வரை இலங்கை அணிக்குள்ள டெஸ்ட் போட்டிகள் வெறும் 08. முரளிக்கு வயதும் 38 ஆகிவிடும்.
வம்பு தும்பில்லாமல் அவமானப்படாமல் விடைபெறலாம் என்றுதான் முரளி இந்த முடிவை முற்கூட்டியே அறிவித்திருக்கலாம்.
எனவே முரளியின் முன்னாள் போட்டியாளரான ஷேன் வோர்ன் முதல் இன்னும் பலர் (நாமும் தான்) எதிர்வு கூறிய 1000 டெஸ்ட் விக்கெட் என்ற இலக்கு சாத்தியப்படாது. எனினும் 800 நிச்சயம்!
இதை யாரும் இலேசில் எட்டமாட்டார்கள் என்பதும் நிச்சயம்.
ஆனால் இன்று முரளி பாகிஸ்தானிய வீரர்களுக்கு வசைபாடியது(sledging) போல் எப்போதுமே நான் பார்த்ததில்லை.. (முரளி நீங்களுமா? ஏன் இப்படி?)
பெரிய மனிதர்/தலைவர்
ஆஷஸ் தொடரில் வெல்வதற்கு பெரும் பிரயத்தனத்தை எடுத்துவரும் அவுஸ்திரேலியாவுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பெரும் இடியாக வந்த விஷயம் விக்கெட் காப்பாளர் பிரட் ஹடினின் விரல் முறிவு.
நாணயச் சுழற்சியும் முடிந்த பிறகு – மழைபெய்த ஈரலிப்பு காரணமாகப் போட்டி ஆரம்பிக்கத் தாமதமானபோது கிடைத்த நேரத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது தனது மோதிரவிரலை முறித்துக்கொண்டார் ஹடின்.
பொதுவாக நாணயச் சுழற்சியின் முன்னர் அணி அறிவிக்கப்படும். எக்காரணம் கொண்டும் நாணயச் சுழற்சியின் பின்னர் அணியில் மாற்றம் கொண்டுவர முடியாது.
எனினும் விக்கெட் காப்பாளர் விரல் முறிவு ஏற்பட்ட பிறகு 5 நாட்கள் டெஸ்ட் போட்டியில் தாக்குப்பிடிப்பது மிகச்சிரமம் என்று உணர்ந்த அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் டிம் நீல்சன் போட்டித்தீர்ப்பாளரிடம் கேட்டிருக்கிறார்.
எதிரணித் தலைவர் ஆட்சேபிக்காவிட்டால் ஹடினுக்குப் பதிலாக ஒருவரை மாற்றலாம் என்றிருக்கிறார் போட்டித் தீர்ப்பாளர்.
இங்கிலாந்து அணியின் தலைவர் அன்ட்ரூ ஸ்ட்ரோஸ் பெருந்தன்மையோடு வேறொருவரை மாற்றிக்கொள்ள அனுமதித்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் கிரஹாம் மனூ அறிமுகமானார்.
அவுஸ்திரேலிய பயிற்றுவிப்பாளர் நீல்சன் - இங்கிலாந்து தலைவரைப் புகழோ புகழென்று புகழ்கிறார்.
பின்னே... இதே இடத்தில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கி பொண்டிங் இருந்திருந்தால்...
Border vs Ponting
3வது ஆஷஸ் போட்டியில் முதல் இன்னிங்சில் பெற்ற 38 ஓட்டங்களோடு அவுஸ்திரேலியா சார்பாக அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்கள் பெற்றவராக சாதனை படைத்திருக்கிறார் ரிக்கி பொண்டிங்.
முன்னாள் அணித்தலைவர் அலன்போர்டர் வசம் இருந்த 11,174 ஓட்டங்கள் என்ற சாதனையையே பொண்டிங் முந்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச ரீதியிலும் அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்கள் குவித்தோர் வரிசையில் சச்சின், லாராவுக்கு அடுத்ததாக மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளார் பொண்டிங்.
அலன்போர்டர் (எப்போதுமே எனக்கு மிகப் பிடித்த கிரிக்கெட் வீரர்) பெற்றுக்கொண்ட பெருமளவான ஓட்டங்கள் போராடி, அணியைக் காப்பாற்ற வியர்வை சிந்திப்பெற்றவை. (அந்தக் காலத்தைய – 80, 90களின் அவுஸ்திரேலிய அணி பலவீனமானதாகவே இருந்தது. போர்டர் தான் அவுஸ்திரேலியாவைத் 90களின் நடுப்பகுதியில் சாம்பியன் அணியாக மாற்றிய உந்துசக்தி)
தோல்வியிலிருந்து அணியை மீட்கப் போராடியதும், பாடுபட்டு அணியை வெற்றி பெறச்செய்ததுமான போர்டரின் ஓட்டங்கள் பெருமளவான காலம் சாம்பியன் அணியாக இருந்த அவுஸ்திரேலியாவில் விளையாடிய பொண்டிங்கின் ஓட்டங்களைவிட மகத்துவம் வாய்ந்தவை என்பதே எனது எண்ணம்.
எனினும் பொண்டிங் இனிமேல் பெறப்போகும் ஒவ்வொரு ஓட்டங்களுமே கடும் உழைப்பின் சின்னங்களாக அமையும். தடுமாறும் அவுஸ்திரேலியாவைக் காப்பாற்றிக் கரைசேர்க்கவுள்ள தலைவனுடைய ஓட்டங்களல்லவா?
ட்வீட்டியதால் சிக்கல்
பல கிரிக்கெட் வீரர்கள் பதிவர்களாக இருக்கிறார்கள்.. இன்னும் பலர் facebook, twitter, myspaceபோன்ற நட்புறவுத் தளங்களில் இருக்கிறார்கள்.. (பல போலிகளும் இவர்களின் படங்களோடு உலா வருகிறார்கள்.. ஜாக்கிரதை)
இவர்களில் ஒருவர் தான் அவுஸ்திரேலியா இளம் வீரரான பில் ஹியூஸ்.
முதல் இரு போட்டிகளில் மோசமாக ஆடியதை அடுத்து இவர் அணியை விட்டு தூக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.
எனினும் அவுஸ்திரேலியா தேர்வாளர்கள் பற்றி யாராலும் சொல்ல முடியாதே..
ஆனாலும் அவுஸ்திரேலியா அணியிடம் இருந்து மூன்றாம் டெஸ்ட் போட்டிக்கான அணித் தேர்வு பற்றி எந்தவொரு தகவலும் வரும் முன்னரே, பில் ஹியூஸ் தனது ட்விட்டர் தளத்தினூடாக தான் நீக்கப்பட்ட செய்தியை கவலையுடன் அறிவித்து விட்டார்.
அணிக கூட்டம் நடைபெற்றவுடன் தனது கவலையைக் கொட்டி விட்டது இந்தப் பிஞ்சு.. (இப்போ தானே சர்வதேச அனுபவம் வருகிறது)
அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை வழமையாக என்றால் கடும் நடவடிக்கை எடுத்திருக்கும்.. எனினும் ஹியூசின் அனுபவமின்மை/பக்குவமின்மை கருதி ஒரு எச்சரிக்கையுடன் மன்னித்து விட்டார்கள்.
(அசின் ட்வீட்டுவது பற்றி சயந்தன் கண்டுபிடித்தார்.. ;) இப்போது ஹியூஸ் மற்றும் பல இங்கிலாந்து வீரர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.. வேறு யார் யாரெல்லாம் இருக்காங்கப்பா? நான் இருக்கேன், அதிஷா, கானா பிரபா,சயந்தன்,தமிழ்நெஞ்சம்,ரிஷான் ஷெரிப்,விமலா,டொன் லீ, வேத்தியன், சுபாங்கன், ஆதிரை, இப்படி ட்வீட்டும் பிரபலங்கள் நீளம்.. ;) )
இன்னொரு சுவாரஸ்ய விஷயம்..
பழிக்குப் பழி ?? & சந்தர்ப்பத்தில் சாதனை..
கடந்த சனியன்று இலங்கை பாகிஸ்தானிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது அனைவருக்குமே தெரியும்.
இந்தப் போட்டியில் சனத் ஜயசூரியவும் சங்கக்காரவும் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளையில் இருவருக்கிடையிலான தவறான புரிந்துணர்வால் சங்கக்கார ஆட்டமிழந்தார்.
சனத் & சங்கா
சனத் தான் தனது ஆட்டமிழப்புக்கு காரணம் என்பது போல புகைச்சலோடு குமுறிக் கொண்டே வெளியேறினார் சங்கா..
சனத்தும் அதே ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
இன்று இலங்கை அணியில் லசித் மாலிங்கவும், சனத் ஜயசூரியவும் இல்லை..
கேட்டால் ஓய்வாம்.. உண்மையா? ;)
(இதில் எந்த வித சிண்டு முடித்தலும் இல்லை..)
சனத்துக்குப் பதிலாக இன்று ஆரம்ப வீரராக களமிறக்கப்பட்ட மகேல ஜெயவர்த்தன சதம் அடித்துக் கலக்கி இருக்கிறார்..
(அடுத்த சிரேஷ்ட வீரர் ஓய்வா???)
இது மகேல இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பெற்ற சதம் மட்டுமல்ல.. இந்த மைதானத்தில் (தம்புள்ளை) பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களுமாகும்.
இதற்கு முதல் சனத் ஜெயசூரிய, ராகுல் டிராவிட் ஆகிய இருவர் மட்டுமே சதம் பெற்றிருந்தார்கள். மகேல இன்று முறியடித்ததும் சனத்தின் சாதனையை.
கிரிக்கெட்டில் தான் எத்தனை எத்தனை சுவாரஸ்யமும் திருப்பங்களும்...
அய்யய்யோ.. இப்போது தானே மனுஷனைப் பற்றி புகழ்ந்து பதிந்து கொண்டிருந்தேன்.. ஆட்டமிழந்திட்டாரே..
DPMD Jayawardene c Fawad Alam b Abdul Razzaq 123 (108b 14x4 1x6) SR: 113.88
ஆனால் இலங்கை வெல்லும் போல இருப்பதால் நிம்மதி.. மற்றும் ஒரு சரித்திரபூர்வ தொடர் வெற்றி..
படங்கள் - நன்றி cricinfo