இதாண்டா புட்சால்..

ARV Loshan
16

கொஞ்ச நாளாகவே வெற்றி FM வானொலியில் புட்சால்,புட்சால் பற்றியே பேச்சு.. நானும் அடிக்கடி Facebookஇலும் பற்றி சொல்லி இருந்ததால் சில நண்பர்கள் இதென்னடா புட்சால் என்று குழம்பிக் கேட்டிருந்தார்கள் ..

இன்று கிடைத்த இடைவெளியில் ஏதோ எனக்குத் தெரிந்தவரை, என்னால் முடிந்தவரை இந்த புட்சால்(Futsal) பற்றி...


இதாண்டா புட்சால்..

புட்சால் (Futsal) எனப்படுவது கால்பந்தாட்டத்தின் சுருக்க, விரைவு ஆட்டமாகும். பொதுவாக உள்ளக அரங்கங்களிடையே விளையாடப்படும் இந்த ஆட்டத்தின் பெயர் போர்த்துக்கீசிய & ஸ்பானிய மொழிகளிலிருந்து மருவிவந்துள்ளது.

Futebol de salao என்ற போர்த்துக்கீசிய சொல்லும், Futbol sala / de salon என்ற ஸ்பானியச் சொல்லும் குறிக்கும் பொருள் உள்ளகக் கால்பந்து.

1988 இல் ஸ்பெயின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சம்மேளனத்தில் இவ்வகை ஆட்டங்கள் அனைத்தையும் ஒரே உத்தியோகபூர்வ பெயரால் அழைப்பது என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அந்தப்பெயர் தான் Futsal (புட்சால்)

கூடைப்பந்தாட்டம் விளையாடும் மைதானம் அளவுக்கு சிறிய மைதானம். வழமையான கால்பந்தாட்ட கோல் கம்பங்களைவிட (Goal post )சிறிய கோல் கம்பங்கள். கால்பந்தைவிட அளவில் சிறிய அதிகம் மேலெழாத பந்து.

அணிக்கு ஐந்து பேர்... அதிலொருவர் கோல் காப்பாளர்.

மேலதிக வீரர்கள் ஏழுபேரில் விரும்பிய தடவைகள் மாற்றம் செய்யலாம். வழமையான கால்பந்தாட்டத்தில் ஒரு வீரர் மைதானம் விட்டு வெளியேறினால் (பிரதியீடு செய்யப்பட்டால்) மீண்டும் வந்து விளையாடமுடியாது.

ஆனால் புட்சாலில் ஒரு வீரர் எத்தனை தரம் விரும்பினாலும் வெளியே போகலாம்; ஓய்வெடுக்கலாம்; மீண்டும் விளையாட வரலாம்.

இவ்வளவுக்கும் விளையாடும் நேரம் மொத்தமே நாற்பத்தைந்து நிமிடங்கள் தான். கால்பந்தாட்டம் போல போட்டி மத்தியஸ்தர் இருப்பார். அவருக்குத் துணையாக துணை மத்தியஸ்தர்.

கால்பந்தாட்டம் போலவே அதையொத்த விதிமுறைகளும், சிவப்பு,மஞ்சள் அட்டை எச்சரிக்கைகள்,வெளியேற்றங்களும் உள்ளன.

முன்பு பல்வேறு அமைப்புக்கள் புட்சால் விளையாட்டை நிர்வகித்து வந்தாலும் இப்போது கால்பந்து போல இதனையும் FIFAஎன்று அழைக்கப்படும் சர்வதேசக் கால்பந்து சம்மேளனமே நிர்வகிக்கிறது.

பொதுவாக தரைகளில் இல்லாவிடில் செயற்கை மேற்பரப்புக்களில் விளையாடப்பட்டு வந்தாலும் சில நாடுகளில் செயற்கைப் புற்தரையிலும் விளையாடப் படுகிறது.

1930ஆம் ஆண்டளவிலே உருகுவே நாட்டைச் சேர்ந்த யுவான் கார்லோஸ் செரியாணி என்பவர் தான் முதன் முறையாக இந்த வகைப் போட்டிகளை கழகங்களுக்கிடையில் நடத்தி இருக்கிறார்.

பின்னர் பிரேசில்,ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற நாடுகளில் இது கடற்கரைகளில் வேடிக்கையாக பொழுதுபோக்காக விளையாடப்படும் beach football ஆகவும், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தெருவோரங்களில் விளையாடப்படும் street footballஆகவும் வளர்ச்சியடைந்து 1971ஆம் ஆண்டு முதலாவது உலகக் கிண்ணம் வரை சென்றது.

போட்டிகளை நடாத்திய பிரேசில் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றது.
எனினும் ஒழுங்கான அமைப்பு இல்லாததால் அடுத்த உலகக் கிண்ணம் 14 ஆண்டுகள் கழித்து 1985ஆம் ஆண்டே இடம்பெற்றது.

அதே ஆண்டிலிருந்து FIFA புட்சால் விளையாட்டை பொறுப்பேற்று வரிசைக்கிரமமாக உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்தி வருகிறது.

மாறி மாறி ஸ்பெயினும் ப்ரேசிலுமே உலகக் கிண்ணங்களை வென்றுள்ளன. 4 தடவை பிரேசில்.. இரு தடவை ஸ்பெயின் ..

எனினும் உலகில் முதல் பத்து நாடுகளில் மூன்று ஆசிய நாடுகளும் உள்ளன.. தாய்லாந்து, ஜப்பான், ஈரான்..

இலங்கையில் ஒரு சில ஆண்டுகளாக தான் இந்த புட்சால் பிரபலமடைந்து வருகிறது.

எனினும் உள்ளக அரங்கங்கள் எதுவும் இன்னமும் இல்லாததால் சாதாரண மைதானங்களில் மட்டுமே விளையாடப்பட்டு வருகிறது.

இம்முறை எங்கள் வானொலியினால் மேல் மாகாணத்தில் நடாத்தப் படும் மாபெரும் புட்சால் கிண்ணப் போட்டிகள் பற்றிய இந்தப் பதிவையும் வாசியுங்கள்..

இலங்கையில் கால்பந்தாட்டத்துக்கு இருக்கும் ஆதரவு ரசிகர்கள் மட்டத்திலேயே தவிர, அனுசரணை, விளம்பரதாரர் மட்டத்தில் மிகக் குறைவு..

அதனை மாற்றும் விதத்திலேயே தமிழ்பேசுவோர் அதிகமாக நேசிக்கும் இந்த விளையாட்டுப் பக்கம் எங்கள் பார்வையைத் திருப்பியுள்ளோம்..

நேர சுருக்கம், விறுவிறுப்பு,அதிக அணிகளை உள்ளீர்க்கலாம் போன்ற காரணங்களுக்காகவே வழமையான கால்பந்தை விட புட்சாலை நாம் தெரிவு செய்தோம்..
விரைவு, கால நேரம் கருதி சர்வதேச மட்டத்தில் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆட்டத்தை
பதினைந்து நிமிடங்களாக்கி இருக்கிறோம்..

இலங்கையில் உள்ளவர்கள், குறிப்பாக கொழும்பில் உள்ளவர்கள் இலவசமாக ஐந்து நாட்களும் இந்தப் போட்டிகளை ரசிக்கலாம்..

(நம்ம புல்லட் சொன்னது போல மினி பதிவர் கூட்டமும் போடலாம்.. அதிக நேரம் நான் மைதானத்திலே தான் நிற்பேன்.. ஒழுங்கமைப்பாளர் இல்ல?)

வந்தியத்தேவன் கேட்டது போல புட்சால் பற்றி விளக்கமாகவே சொல்லி விட்டேன்..
வாங்க இனி விளையாடலாம்.. பார்க்கலாம்..

Post a Comment

16Comments

Please Select Embedded Mode To show the Comment System.*