கலைஞர் TVயின் கயமையும், கொடுமைகளும்

ARV Loshan
42

நான் எப்போதுமே பார்க்காத/ பார்க்க விரும்பாத / வேறுவழியே இல்லாமல் கூட பார்க்காத ஒரு நிகழ்ச்சி தான் கலைஞர் TVயின் மானாட மயிலாட (நமீதா இருந்தும் கூட) எனினும் எப்போதாவது மிக போரடிக்கும் நேரம் சும்மா அலைவரிசைகள் மாற்றும் போது ஏதாவது சுவாரஸ்யமான பாட்டுக்கு நல்ல நடனம் போனால் கொஞ்சம் நிறுத்திப் பார்ப்பது உண்டு.

இந்த இடத்தில் ஒரு உண்மை. முன்பு ரம்பா நடுவராக இருந்த நேரம் அவருக்காகவே – ரம்பாவின் குழந்தைத்தனம், அந்த சிரிப்புக்காக (மட்டும்) அடிக்கடி (தொடர்ந்தல்ல) பார்த்துவந்தேன்.

நேற்று படு பிஸியான நான். காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்ட நான் இரவு 8 மணியானது மறுபடி வீடு திரும்ப சரியான உடல்களைப்பும், அயர்வும்.

எனினும் வெளிநாட்டிலுள்ள எங்கள் உறவினர் சிலர் மானாட மயிலாட நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்குப் போயிருந்ததாகவும், தங்களை இம்முறை நிகழ்ச்சியில் காட்டலாம் என்றும், பார்க்கும்படியும் சொல்லியிருந்ததால் சரி பார்க்கலாம் என்று பார்க்க ஆரம்பித்தேன்.

நான்கு பெரும் கொடுமைகள்.....

முதலாவது....
எப்போதுமே கண்ணில் காட்டாதளவு வெறுப்புத்தருகின்ற கலா, குஷ்பு குழுவினரின் முட்டாள்தனமான ரசனைகள், கைதட்டல்களும், மொக்கை நகைச்சுவைகளும், தாராளமாக அள்ளி வழங்கப்படும் புள்ளிகளும் மீண்டும் மீண்டும் எரிச்சலூட்டின.

இரண்டாவது.....

இதைத்தான் கயமை என்பேன்....

பருத்திவீரன் படக்கதையை உல்டா செய்து ஒரு ஜோடி ஆடியது. அதிலே படத்தில் வருகின்ற 'ஊரோரம் புளியமரம்' பாடலுக்கு அரவாணிகள் போலவே வேடமணிந்து சில ஆண்கள் (ஆண்கள்தான் என நம்புகிறேன்) ஆடியபோது (படத்திலும் அமீர் இவ்வாறு தான் காட்டியிருந்தார்*) ஏதோ பெரிய நகைச்சுவை பார்ப்பதுபோல கலா, குஷ்பு, அரங்கத்தில் இருந்த அத்தனை பேரும் சிரித்து ரசித்தனர்.

இதுவா ரசனை?
மனித ஜென்மங்களா இவர்கள்?
எந்த காலகட்டத்தில் வாழ்கிறார்கள்?

இதே கலைஞர் TV தானே - விஜய் TV தொடங்கி வைத்த 'ரோஸ்' நிகழ்ச்சியை வாங்கி – ரோஸை வாங்கி சமுதாய சீர்மை செய்கிறோம் என்று தம்பட்டம் அடிக்கிறது?

அதே தொலைக்காட்சியிலேயே அரவாணிகள் சமூகத்தை கேவலப்படுத்துவதா?

*அமீர் என்ற இயக்குநரும் சண்டியரையும் வன்முறையையும் வைத்து மசாலாத் தனமான 'காவியம்' படைக்கிறேன் - புதுமை தருகிறேன் என்று இரத்தமும், வன்முறையும் அரவாணிகளைக் கேவலப்படுத்தி குத்துப்பாட்டொன்றோடு திரைவியாபாரம் நடத்தியவர் தானே?

மூன்றாவது............
அதே பாடலில் அதே இருவர் – பெண் பெயர் பூஜா என்று நினைக்கிறேன். அவர் காட்டிய வன்முறையும் - ஆண் காட்டிய ஆண் ஆபாசமும்.

ஒரு மேடை – அதுவும் பல லட்சம் பேர் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தொடை காட்டி ஆடும் ஆட்டமும், அசிங்கமான நடன அசைவுகளும் ஆண்களிடமிருந்தென்றால், பெண்ணோ தன்னைக் கற்பழிக்கத் துரத்தும் ஆண்களிடம் அப்படியொரு கொடுமையான வன்முறை காட்டுகிறார்.

இறுதியாக ஆணில் பெண்மை, பெண்ணுள் ஆண்மை, காந்தி மகானின் மேன்மை என்று பினாத்தினார்கள்.

ஐயா சாமிகளா போதும்!

அது சரி கலைஞர் பெருமானின் வீட்டில் மானாட மயிலாட ஒளிபரப்பாகும் நேரம் வேறு அலைவரிசை தான் பார்ப்பார்களோ?

நான்காவது பெரும் கொடுமை...

நேற்றைய நிகழ்ச்சியில் நான் பார்த்த நேரத்திலே அந்தக் குறிப்பிட்ட வெளிநாட்டு உறவினர்கள் வரவேயில்லை...

ஹீம்ம்... இனி அடுத்த வாரமும் இதே போல இன்னொரு கொடுமையா?


Post a Comment

42Comments

Please Select Embedded Mode To show the Comment System.*