தப்பிச்சுக்கொங்கோ.. இன்று இரவு இந்திரலோகத்தில் நா அழகப்பன் வருகிறார்..

ARV Loshan
19



வழமையாக இந்திய தொலைக்காட்சிகளில் வருகின்ற 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக' விளம்பரம் பார்த்திருப்பீர்கள்...

இப்போது ஒரு வித்தியாசத்துக்காக தொலைக்காட்சிகளில் இன்று இரவு நீங்கள் பார்க்க முதல் இங்கே விமர்சனம் படிக்க..

இந்திரலோகத்தில் நா அழகப்பன்.

படத்தின் ஆரம்பப் பாடல் 'பொய்க்கால் குதிரையில்' பார்த்தபோது பாடலின் ஆரம்பக் கட்டம் குசேலன் ரஜினி பில்ட் அப்பை ஞாபகப் படுத்தியது.. (வடிவேலு இதில் நல்லா செய்தார்னு நக்கலா யாராவது சொன்னால் நாளையே நார்,நாரைக் கிழி வாங்குவீர்கள்)

கொடுமை என்னவென்றால் அழகான (இப்போதும் தான்) சுமித்ரா வடிவேலுவுக்கு அம்மாவாம்..

தாங்க முடியாத அளவு பிரசார நெடி.. இந்து மத,பாவ,புண்ணிய பாடம் நடத்துகிறார்கள்.. சிவராத்திரி,நவராத்திரி நாள் பார்த்து போட்டிருக்கலாமே சாமி..(அதுவும் கலைஞரில் போகிறது படம்)

வடிவேலுவின் முடியும்,முகம் நிறைய மேக்கப்பும்.. சகிக்கல.. இம்சை அரசனில் ஒரு ஹீரோவாக எழுந்தவர் ஏன் இதில் போய்க் கவிழ்ந்தார் என்பது நல்லாவே புரிந்தது.

நாசர் நீங்களுமா இதில்? பிரகாஷ்ராஜுக்கு விஜய் படங்கள் மாதிரி பாவம் நாசர்..
நாரதராக வந்து.. கொடுமை..

ஆனால் இந்திரலோகக் காட்சிகள் பிரமாதம்.. கிராபிக்ஸ் எவ்வளவு தான் கேவலமாக இருந்தாலும் கார்டூன் பார்த்த மகிழ்ச்சி.. பேசாமல் சௌந்தர்யா ரஜினிகாந்திடம் கொடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நல்லா செய்திருப்பார். இரண்டு,மூன்று டொல்பின்களையும் குதிக்கவிட்டு ஒரு தொழிநுட்பப் புரட்சியே நடத்தியிருப்பார்..

வடிவேலு திரையில் வந்தாலே அவரது அசைவுகளிலேயே சிரிப்பு வரும்.. (அண்மைக்காலமாக அதுவே கொஞ்சம் ஓவராப் போகுதோ என்று ஐயம் வருகிறது) இந்த இந்திர.அழகப்பனிலோ எதிலுமே சிரிப்பு வருவதாக இல்லை.. எரிச்சலோ எரிச்சல்..

பக்கம் பக்கமாக வசனங்கள்.. ஊரைத் திருத்தும் உரைகள்.. இதெல்லாம் வேறு ஒருவர் சொன்னால் பரவாயில்லை..அதுவே வடிவேலுவின் குரலில் கேட்டால்..?????

சில பாவ ,புண்ணிய உரையாடல்களைக் கேட்கும்போது,இயக்குனர் ராமண்ணா பழைய A.P.நாகராஜனின் கதையை சுட்டு வைத்திருந்து இப்போ படமா எடுத்திட்டாரோ என்று சந்தேகம் வருகிறது.. கதாகலாட்சேபம் கேட்கும் அனுபவம்..

இயக்குனர் இம்சை அரசன் வடிவேலுவைப் பார்த்து ரொம்பவே ஈர்க்கப்பட்டிருக்கிறார் போலும். கிடைத்த வடிவேலுவின் எல்லா call sheetsம் பயன்படுத்தும் ஆர்வத்தில் அழகப்பன்,இந்திரன்,எமதர்மன் என்று எங்கெல்லாம் வடிவேலுவைப் போட முடியுமோ அங்கெல்லாம் வடிவேலுவைப் பிடிவாதமாகப் பிடித்துப் போட்டு வேலை வாங்கியுள்ளார்;எங்கள் உயிரை வாங்கியுள்ளார்.

இந்திரலோகத்தில் நா.அழகப்பன்

ஆனால் இந்திரலோகம் போன பிறகு தான் ஒரு விதத்தில் படம் சூடுபிடிக்கிறது..

ரம்பையாக வரும் அந்த இளமை ததும்பும்,அழகு மங்கை உண்மையிலேயே ஒரு தேவலோக மங்கையாகத் தான் தெரிகிறார்.. அம்சம்..(நம்ம மானாட மயிலாட ரம்பா கூட ரம்பைக்கு இவ்வளவு பொருத்தமாக இருந்திருக்க மாட்டார்..)

ம்கூம்.. (எரிச்சல் பெருமூச்சு) வடிவேலுவுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா? அந்தக் கருத்த உடம்பில் மச்சம் எங்கேன்னு தேட வேண்டும்..

கதாநாயகி கவர்ச்சிக் கடல்/கவர்ச்சி மலை.. எப்படி வேண்டுமானாலும் வர்ணிக்கலாம்..
யாமினி ஷர்மாவாம் பெயர்.. யப்பா... இதுக்குப் பிறகு இவர் எங்கே போனார் என்ன ஆனார்? ஏன் என்று தெரியவில்லை..

போதாக் குறைக்கு சுஜா என்று இன்னொரு கவர்ச்சி வெடி..

சொதப்பல் படங்களையே தூக்கி நிறுத்தும் வடிவேலு தான் ஹீரோவாக இருந்தும், ஒருவருக்கு மூவராக இருந்தும் கவிழ்ந்து போனதில் இருந்து கதை, திரைக்கதையின் கிழிவு புரிந்திருக்கும்..

இந்தப்படம் வர முதலில் இது சின்னக் குழந்தைகளுக்கான படம் என்று வடிவேலு பேட்டி கொடுத்திருந்தார்.. குழந்தைகள் படம் பார்த்திருந்தால் ஒன்று பாதியிலேயே ஓடி இருப்பார்கள்.. இல்லை பேதியில் போயிருப்பார்கள்..

கோபிநாத்தின் ஒளிப்பதிவும், தோட்டா தரணியின் கலை அமைப்புக்களும் கொஞ்சம் ஆறுதல்கள்..

கொடுத்த காசுக்கு (லட்சக்கனணக்கான காசு 'வேற' விஷயத்துக்காக கொடுக்கப்பட்டதா ஒரு கிசுகிசு முன்பு வந்தது) வஞ்சகம் செய்யாமல் ஸ்ரேயா ஆடிவிட்டுப் போயிருக்கா..

கொஞ்சமும் சிரிக்க முடியலடா சாமி..
பேசாம திரைப்படத்துக்கு A சான்றிதழ் கொடுத்திட்டு பலான படமா மாத்தி இருக்கலாம்..

இதுக்குப் பிறகும் இன்றிரவு 'கலைஞர்' டிவியில் நீங்கள் இந்திரலோகத்தில் நா அழகப்பன் பார்க்கப் போறீங்களா?

பேசாமல் இலங்கை பாகிஸ்தானிய கிரிக்கெட் போட்டி பாருங்க.. இல்லேனா K டிவியில் மீண்டுமொரு தடவை வின்னர் காட்டுறாங்க..
இதே வடிவேலுவுக்காக ( மட்டும்) எத்தனை தடவை வேணும்னாலும் அந்தப் படத்தை ரசிக்கலாம்;சிரிக்கலாம்.

ஒரு சின்ன FLASH BACK...

இந்த விமர்சனம் இந்திய குடியரசு தினத்துக்காக முன்பொரு தடவை இதே படம் கலைஞர் டிவியில் காட்டிய போது எழுதியது. பின்னர் இதையெல்லாம் பதிவிடுவதா என்று கிடப்பில் போட்டது..

நேற்று 'கலைஞர்' விளம்பரம் பார்த்தபோது அப்பாவி தொலைகாட்சி ரசிகர்களைக் காப்பாற்றுவதற்காகவேனும் இன்று இதை தூசு தட்டிப் பதிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன்..

முன்பு எழுதிய சில ஆரம்ப வரிகள்..

நேற்று இந்தியக் குடியரசு தினம்..
வழமைபோல் இந்தியத் தொலைக்காட்சிகளைத் திறந்தால் சிறப்பு நிகழ்ச்சிகள் நிறைந்து கிடந்தன. ஒரு சில தவிர ஏனைய எல்லாமே திரைப்படங்களினதும் திரைநட்சத்திரங்களினதும் ஊர்வலம் தான்!

நான் மாலைக்கு மேல் தான் வீடு திரும்பினாலும் முதல் நாட்களில் பார்த்த விளம்பரங்களின் படி எந்தெந்த தென் இந்தியத் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைக் காட்டியதென்று நல்லாவே தெரிந்திருந்தது.பார்க்கப் போனால் விஜய் டிவி தான் கொஞ்சம் உருப்படியா குடியரசு தினத்தை ஞாபகப்படுத்தி நாளுக்குப் பொருத்தமா, நாட்டு மக்களுக்குப் பிரயோசனமா கொஞ்ச நிகழ்ச்சிகளையாவது தந்திருந்தது. மற்ற எல்லா டிவிகளும் வழயான பண்டிகை நாள் போல,சிம்பு,நமீதா,தனுஷ்,விஜய் என்று ஆளாளுக்கு யார் யார் கிடைத்தார்களோ அவரவரை வைத்து சினிமா ஷோ காட்டி இருந்தார்கள்..

எனக்கு கிடைத்த நேரத்தில் நான் வீடு வந்தபிறகு பார்க்கக் கிடைத்தது கலிஞர் மன்னியுங்கோ.. கலைஞர் டிவி காட்டிய இந்திரலோகத்தில் நா அழகப்பன். அதுசரி வடிவேலுவுக்கும் குடியரசு தினத்துக்கும் என்னய்யா சம்பந்தம்? ஒரு இலங்கையனா நான் இருந்தாலும் கேக்கலாம் தானே?

ஒருவேளை அடுத்தவருடம் வடிவேலுவுக்கும் பத்மஸ்ரீ கிடைக்குமோ என்னவோ? (அதுக்காக என்னை விஜயகாந்த் ஆதரவாளர் என்று தப்பாக நினைக்காதீங்க)

முன்பு திரையரங்குகளில் இந்தப்படம் ஓடியபோது நண்பர்கள் கூப்பிட்டபோதும் அப்போதிருந்த நேரமின்மை காரணமாகப் பார்க்கப் போக முடியவில்லை. எனவே சரி இன்றாவது பார்க்கலாம் என்று பார்க்க ஆரம்பித்தேன்..(கொழும்பில் இந்தப்படம் ஓடினதே ஒரு வாரமோ.இரண்டு வாரமோ தான்.. அதுவும் ஸ்ரேயா என்ன மாதிரி அந்தப்பாட்டுக்கு ஆடியிருக்கா என்று பார்க்கத் தானாம்)

ஒரு வேளை என்னுடைய பதிவின் படங்கள் பார்த்திட்டு யாமினி, ஸ்ரேயா, சுஜா பார்க்க இன்று கலைஞர் TV களை கட்டப்போகுதோ தெரியல..

Post a Comment

19Comments

Please Select Embedded Mode To show the Comment System.*