செல்லமாத் தட்டுங்க - மலேசிய அனுபவம்

ARV Loshan
22
இது என்னடா செல்லமாத் தட்டுங்க என்றாரே. ஏதாவது கில்மாப் பதிவான்னு நீங்க யோசிக்கலாம்.
ஒண்ணுமில்ல, மலேசியாவுக்கு அண்மையில் பயணம் போயிருந்தேன். அங்கே இரு வாரங்களுக்கு மேல் தங்கியிருந்த நேரம் கண்ட காட்சிகள்,அனுபவங்களைப் பதிவாக இடலாம் என்று தலைப்புக்கு யோசித்த போது தில்லாலங்கடி வடிவேலு ஞாபகம் வந்தார்.

அதான் கொஞ்சம் மலேசிய விஷயங்களை உங்களுடன் செல்லமாத் தட்டலாம் என்று..

             இரட்டையில் ஒற்றைக் கோபுரப் பின்னணியுடன் லோஷன் :)

சிங்கப்பூருக்கு அடிக்கடி போயிருந்தாலும் மலேசியா நான் போனது இதுவே முதல் தடவை.

சிங்கப்பூர் போய் அங்கிருந்து சொகுசுப் பேரூந்து மூலமாக மலேசியாவுக்குள் நுழைந்தோம்.

மனைவி, நான், மகன் எம்முடன் மனைவியின் சின்னண்ணனும் வந்திருந்தார்.
ஒரு பத்துப் பேர் ஒரு பிரம்மாண்டப் பேரூந்தில்.
சொகுசான பயணம். பாதைகளும் சீர் என்பதனால்.

சிங்கப்பூர் எல்லை தாண்டியபோதே இரு நாடுகளுக்குமிடையிலான பாரிய வேறுபாடுகள் தெரிகின்றன.
சிங்கப்பூர் வெளிநாட்டின் பாரிய முதலீடுகளுடன் மிக வேகமாக முன்னேறுவதையும் மலேசியா அண்மைக்காலத்தில் துரத்துவதையும் உணரமுடிகிறது.

வெளியே இருந்து பார்க்க மலேசியா ஒன்றுபட்ட அழகான நாடாகத் தெரிகின்றபோதும் உள்ளே நுழைந்து அவதானித்தால் பிளவுகள்,பிரச்சினைகள்,பேதங்கள் ஊடறுத்துத் தெரிகின்றன.
                   நாம் தங்கியிருந்த அழகான வீடு

நான் தங்கியிருந்தது மலேசியாவில் வளர்ந்துவரும் இளம் அரசியல்வாதி/தொழிலதிபர் வீட்டிலே.
இதனால் அங்குள்ள பிரபல இந்திய/தமிழ் கட்சியான மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி பற்றியும் பல உள்ளக விஷயங்கள் அறியக் கிடைத்தது.

அக் கட்சியினுள் இருக்கும் உட்கட்சி மோதல்களும் அண்மைக்கால கட்சியின் சரிவுகளும்,பத்திரிகையில் வரும் கோமாளித்தனமான அறிக்கைகளும் இலங்கை,தமிழக தமிழ்க் கட்சி அரசியல்களுக்கு எந்த வகையிலும் குறைந்தன அல்ல.
லாவகமாக நுழைந்து வெளியேறுவதிலும் சமாளிப்பதிலும் இவனும் ஒரு பக்கா அரசியல்வாதி  தான் :)

இன்னும் சில உதிரி தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியர்களின் வாக்குகளுக்காக பிரதிநிதித்துவம் என்ற பெயரில் அரசியல் செய்கின்றன.

ஒப்பீட்டளவில் குறைந்த தமிழ் சனத்தொகை இருந்தாலும் மூன்று தமிழ் பத்திரிகைகள்..
மூன்றுமே நல்ல விற்பனையாம்.

மலேசியாவில் பரந்துபட்ட வன்முறைகள்.. குறிப்பாக தமிழர் செறிந்து வாழும் இடங்களில் அதிகம்.
பத்திரிகைகளில் இவை நாளாந்தம் முழுப்பக்கங்களையும் பிடிக்கின்றன.

இரு முக்கிய தமிழ் வானொலிகள்..
THR RAAGAA, MINNAL FM.

இவற்றுள் ராகா மிகப் பிரபல்யம்.

தமிழர்களுக்கே உரிய உணர்வுகள் மேலிட சென்ற இடமெல்லாம் யுத்தம், ஈழத் தமிழர் நிலை, இலங்கை நிலைமை குறித்து அனுதாபம்+அக்கறையுடன் விசாரிக்கிறார்கள்.
ஊடகங்கள் பல கட்டியெழுப்பிய சில மாய விஷயங்களை நம்பியிருப்பவர்கள் நான் சொன்ன சில விஷயங்களை நம்ப மறுத்து பின் மௌனமாகிறார்கள்.
தமிழகம்,தமிழ் ஈழம் இரண்டுமே தங்கள் உறவு பூமிகள் என்கிறார்கள்.

மலேசியாவில் மிக ரசித்த ஒரு விஷயம் அந்த இயற்கை அழகும், அதை அனைவருமே சேர்ந்து பாதுகாக்கும் விதமும்.
கிட்டத்தட்ட முழுவதுமே மலைநாடாகத் தெரியும் மேட்டு நிலப் பிரதேசம்.. அதில் அமைக்கப்பட்டுள்ள வீதிகளும் கட்டடங்களும் கண்கவர்பவை.

நான் மனைவியுடன் பேசும்போது சும்மா வேடிக்கையாக கடித்தது - "இது மலேசியா இல்லை.. மலை ஏறுரியா? அல்லது மலை ஏரியா"

நாங்கள் இருந்தது செரேம்பன் பகுதியின் கொஞ்சம் பணக்காரப் பகுதியான பாயு ஏரிப் பகுதி. இயற்கையான அழகு சூழ்ந்த,தனிமையான நகரத்தை விட்டு கொஞ்சம் விலகிய பகுதி.
நாம் தங்கியிருந்த வீட்டுக்குப் பின்னாலேயே அழகான ஏரி.
                      பாயு ஏரிக்கரையில் என் மகன் 

பறந்து விரிந்த ஐநூறுக்கு மேற்பட்ட ஏக்கர் கொண்ட பிரதேசத்தில் மொத்தமாகப் பத்தே பங்களாக்கள்.வாகனம் இல்லாமல் அந்தப் பகுதியில் வாழ்வது ரொம்பவே சிரமம்.

பகலில் வெயிலும் இரவில் A/C போட்ட ஊருமாக இருப்பது நன்றாகவே பிடித்திருந்தது.

மலேசியாவில் பல வீட்டு சாப்பாடுகள் அவ்வளவு நாவுக்குப் பிடிக்கவிலை.
காரணம் தேங்காய்ப்பால்,உப்பு அறவே இல்லை/மிகக் குறைவு.உறைப்பு/காரமும் இல்லை.
ஆனால் வெளி உணவகங்களில் வெளு வெளு என்று வித விதமாக வெளுத்திருந்தோம்.
வித விதமாக உணவு உண்பதற்கு இருபத்து நான்கு மணிநேரமும் அநேகமான இடங்களில் உணவகங்கள் இருக்கின்றன.

எந்த நேரமும் அவை நிறைந்தே இருக்கின்றன. எல்லா நேரமும் யாராவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
எப்படித் தான் முடியுதோ?

சாப்பாட்டுக் கடை மலேசியாவில் எங்கு திறந்தாலும் வியாபாரம் கொடி கட்டுமாம்.நம் பெரிய புள்ளி நண்பருக்கு மொத்தமாக 36 உணவகங்களில் பங்குகள்/உரிமை இருக்கிறது.

           எப்படிப் பார்த்தாலும்,எங்கிருந்து பார்த்தாலும் அழகு - இரட்டைக் கோபுரங்கள் 

மலேசியாவில் கவனித்த இன்னொரு விடயம்.. பொதுப் போக்குவரத்தை நம்பி இருக்க முடியாது.சொந்த வாகனம் நிச்சயமாகத் தேவை.

 எனக்கு நம்ம நண்பரின் உதவியால் வாகன வசதியும் கிடைத்தது..
ஆசைதீர எல்லா விதமான வாகனங்களையும் (சொகுசு S series பென்ஸ் தொடக்கம்,Double Cab, Lorry வரை ;))மலேசியாவின் வீதிகளில் அங்கே இருந்த மூன்று வாரங்களும் ஓடித் திரிந்தது மறக்க முடியாதது.
                    'காடி' ஓடும் போதும் கையில் கமெரா :)

ஜென்டிங்,படு மலை (Batu Caves) போன்ற இடங்களுக்கும் நானே கார் செலுத்தியிருந்தேன்.
சாரதி அனுமதிப் பத்திரம் தேவையில்லையா என்று கொஞ்சம் சந்தேகமாகக் கேட்டேன்.
"நீங்க ரூல்ஸ் படி காடி(காடி என்று தான் கார்களை சொல்கிறார்கள் - மலாய்)ஓட்டுவீங்களா?அப்பிடின்னா எவனும் பிடிக்க மாட்டான்" - நண்பர்.
"அப்பிடியே உங்களை விசாரிச்சா நம்ம பேர சொல்லுங்க.. நம்ம பெயரையும் தெரியலையா, ஒரு பத்து வெள்ளியை போலீஸ்காரன் கையில வச்சிட்டுப் போய் கிட்டே இருங்க"

உண்மை தான் .. சில தமிழ்ப்படங்களில் காட்டுவது போல, மலேசியாப் போலீஸ் ஒன்றும் நேர்மையின் சிகரங்கள் அல்ல.. பணம் எதையும் அங்கே செய்கிறது.
ஐந்து கிராம் போதைவஸ்து வைத்திருந்தாலே தூக்கு எனக் கடுமையான சட்டம் இருக்கும் அந்த நாட்டில் நம் நண்பரின் தெரிந்த அரசியல் ஆளுமை மிக்கவர்களால் பெரிய,பெரிய குற்றங்கள் செய்தவர்கள் கூட சில ஆயிரம் வெள்ளிகளால் வெளியே வந்துவிடுகிறார்கள்.

தமிழர்கள் பலர் அங்கே தாதாக்களாகக் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.அல்லது இப்படி சொல்லலாம்.. தாதாக்களில் பலர் தமிழர்கள்.

கண்ணுக்கு முன்னா ஒரு கை வெட்டலையும், அசிட் அடித்த சம்பவத்தையும் பார்த்தேன்..
என்னடா இப்படிக் கொலை வெறியாகத் திரிகிறார்களே என்று கொஞ்சம் அரண்டு போனேன்.
பல்வேறு கோஷ்டிகள். வியாபாரம் செய்வதற்கு இப்படி ஏதாவது பக்கபலம் தேவை என்கிறார்கள்.

சில தமிழர் பிரதேசங்கள் வன்முறை நிறைந்த இடங்களாக இருக்கின்றன.நாங்கள் அங்கே இருந்த காலகட்டத்திலே தான் பிரபல பணக்காரப் பெண்மணி சொசிலாவதி என்பவர் இரு தமிழ் வழக்கறிஞ சகோதரர்களால் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டிருந்தார்.
அந்தக் கொலை விவகாரம் ஒவ்வொருநாளும் புதுசு புதுசா பூதாகாரமாக மாறிக் கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட இனப்பிரச்சினை ஒன்றுக்கே வித்திடும் போல இருந்தது.
காரணம் கொலைகாரர்கள் இந்தியர்கள்,தமிழர்கள்.
கொலை செய்யப்பட்டவர்கள் மலாயர்கள்.
இப்படி சிறு சிறு விவகாரங்கள் இப்போது உள்ளே புகைந்து கொண்டிருக்கின்றன.
சில சட்ட விவகாரங்களிலும் இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக படித்தவர்கள் ஒரு சிலருடன் கொஞ்சம் ஆழமாகப் பேசியபோது குமுறினார்கள்.

                  ஏதோ ஒரு கட்டடத்தின் அழகிய உட்புறம்.. 
             எனக்கு இது சொந்தமில்லை என்று சொன்னாலும் நம்பவா போறீங்க ;)

 பல மலாய் வார்த்தைகள் தமிழோடு கலந்ததைக் கண்டேன்..
காடி(கார்),திமாம்(எடை போடுதல்),லீமா(தேசிக்காய்)இப்படிப் பல..
ஆனால் மலேசிய தமிழர்கள் பலர் பேசும் தமிழும் அழகாக சுத்தமாக இருக்கிறது..

பசியாற, தாகம் தீர,வெந்நீர்,உலாப் போறீங்களா,மருத்துவர், இப்படிப் பல பல..
அவர்களது பேசும் பாணியில் கேட்க இன்னும் சுவையாக இருக்கிறது.

பொதுவாக சமயம்,கலை,கலாசாரம் பற்றிய அக்கறை,ஆர்வம் இருந்தபோதும் இவை அருகிவருவதாக சொல்கிறார்கள்.
ஆனால் பலரிடமும் அடுத்தடுத்த தலைமுறையைப் பற்றிய கவலை இருக்கிறது.

மிகப் பெரும் பணக்காரர்களாக உள்ள தமிழர்களையும் பார்த்தேன்.. அன்றாடம் பத்து வெள்ளி உழைக்க சிரமப்படும் சிலரையும் கண்டேன்.
பணம் இருந்தால் அனுபவிக்க ஒரு சொர்க்கபுரி மலேசியா என்பதில் ஐயம் இல்லை.

மலாய் பெண்கள் ஆண்களை விடத் தோற்றப் பொலிவாக இருக்கிறார்கள். சீனப் பெண்களில் கால் அழகும்,மலாய்ப் பெண்களின் கண் அழகும் சிறப்பு என நினைக்கிறேன்.
இஸ்லாமிய நாடு எனும்போதும் பொது இடங்களில் கட்டை உடைக் கலாசாரம் கலக்குகிறது.
இரவு விடுதிகளும் கோலாலம்பூரில் நிரம்பி வழிகின்றன.

அநேகமான சீனப் பெண்கள் இந்திய தமிழ் ஆண்களைக் காதல் செய்வதை விரும்புவதாக அங்கே இருந்தபோது ஒரு ஆங்கிலப் பத்திரிகைகளில் பார்த்தேன்.

பார்க்க இடங்கள் பலவும் கூட இருக்கின்றன.

 பார்த்த இடங்களில் லங்காவி + ஜென்டிங் பிரதேசங்கள் கண்ணிலேயே நிற்கிறது..
இது தவிர பட்டு முருகன் ஆலயத்துக்கு மனைவியை அழைத்து சென்றிருந்தேன்.. அந்த ஆலய அமைப்பும்,இயற்கையிலேயே உருவான மலை அமைப்புடன் கூடிய அழகும் கண்ணைக் கவர்ந்தன.


Petronas Twin Towers கட்டட அமைப்பின் உறுதி கண்டு வியந்தேன்.
நான் முன்பு கொழும்பு உலக வர்த்தக மையத்தின் 34 வது மாடியில் அலுவலகத்தைக் கொண்டிருந்தாலும், Petronas Twin Towers இன் நாற்பதாவது மாடியில் நின்று பார்த்தபோது (அதற்கு மேலே பார்வையாளருக்கு அனுமதி இல்லை) மேலேயும் சில அலுவலகங்கள் இயங்குகின்றன.
எல்லாத் தளங்களும் அலுவலகங்கள் இயங்குகின்றனவாம்.
                மலேசியாவின் உயரமான இடத்திலிருந்து.....

சில,பல பொருட்கள் மலேசியாவில் விலை மலிவு(மனைவி வாங்கி சேர்த்து, என் வங்கிக் கணக்கை முடித்த சோகக் கதையைக் கேட்காதீர்கள்). மேலும் சில பொருட்கள் நம்பி வாங்குவோரை ஏமாற்றிவிடும்..
உதாரணமாக புத்தம் புதிய நோக்கியா செல்பேசி ஒரே Shopping complexஇல் அருகருகே உள்ள கடைகளில் கிட்டத்தட்ட இருநூறு ரிங்கிட்டுக்கள் வித்தியாசம்.
சில இலத்திரனியல் பொருட்களில் ஏமாற்றி விடுவார்கள்.
ஆனால் சில அழகுசாதனப் பொருட்கள் மற்றும் இதர சில பொருட்கள் மலேசியாவில் இருந்தும் சிங்கப்பூரில் பின்னர் வாங்கலாம் என்று விட்டு சென்றால் அந்தப் பொருட்கள் அங்கே கிடையாது.
உதாரணமாக -
Perfumes, Adidas Special Edition Perfume, Shower Gel, Body spray

அந்த Adidas World cup football special edition Perfumery set வாங்காமல் விட்டுவிட்டேன் என்று மிகக் கவலைப்படுகிறேன்.

எல்லாம் சொல்லிட்டு செல்லமாத் தட்டுங்க பற்றி சொல்லாவிட்டால் சரியில்லையே.. (தில்லாலங்கடி பார்க்காத அப்பாவிகளுக்காக) Selamat Datang என்றால் மலாய் மொழியில் நல்வரவு/வணக்கம் என்று அர்த்தம்.

அடுத்த முறை மலேசியா செல்வதாக இருந்தால் லங்காவியில் இன்னும் கொஞ்ச நாள் நிற்கவேண்டும் என முடிவெடுத்துள்ளேன்.

இந்தப்பதிவில் நான் பகிர்ந்துள்ள விஷயம் எல்லாமே நான் அவதானித்தவை. மலேசியாவில் உள்ள நண்பர்கள் யாராவது இதிலே வேறுபட்ட/மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் எடுத்து சொல்லலாம்.

அப்பாடா.. ஒரு பயணக்கட்டுரையைத் தொடரும் போடாமல் பதிவாகப் போட்ட எனக்கு யாராவது விரும்பினால் விழாவும் எடுக்கலாம் ;)

இன்னும் சில சின்னச் சின்ன மலேசிய அனுபவங்களை நேரம் கிடைக்கின்ற பொழுதுகளில் பகிர்கிறேன்.

இப்போ செல்லமாத் தட்டுங்க.. வாக்குகளை ;)

பி.கு- இன்று பிறந்தநாள் கொண்டாடும் என் அன்புத் தம்பி செந்தூரனுக்கு இனிய வாழ்த்துக்கள்.

Post a Comment

22Comments

Please Select Embedded Mode To show the Comment System.*