இலங்கை கிரிக்கெட்டில் ஒரு விவகாரம் இப்போது பரபரவாகியிருக்கிறது.
இங்கிலாந்துக்கு அண்மையில் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணி சென்றிருந்தது. ஒரு நாள் தொடரில் இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னதாக நான்கு போட்டிகளில் ஒன்று மழையினால் பாதிக்கப்பட 2 -1 என்று முன்னிலையில் இருந்தது.
இறுதியான போட்டியில் இங்கிலாந்து அணியை 184 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்தும், மழை காரணமாகப் பாதிக்கப்பட்ட போட்டியில் இலங்கை எதிர்பார்த்ததை விட விரைவாக,குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்கு சுருண்டது.
இதை இங்கிலாந்து அணியே எதிர்பார்த்திருக்காது.
இப்போது இந்தத் தோல்வி பற்றி எழுந்திருக்கும் பர பர என்னவென்றால்,குறித்த நேரத்தில் இலங்கைக்கான விமானத்தில் ஏறுவதற்காக இலங்கை அணி வேண்டுமென்றே போட்டியில் விரைவாக விக்கெட்டுக்களை இழந்தது என்பதே.
அணி முகாமையாளராக சென்ற தேவராஜன் கொடுத்துள்ள அறிக்கை இதை மறைமுகமாக சுட்டுகிறது.
எனினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதை மறுத்துள்ளது.
சில பத்திரிகைத் தகவல்களின்படி அந்தக் குறித்த விமானத்தைத் தவறவிட்டிருந்தால் இன்னும் ஒருவாரம் கழித்தே இலங்கை அணி வீரர்கள் விமானம் ஏறி இருப்பார்கள் என்றும் இதற்காக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் எக்கச்சக்கமாக செலவிட நேர்ந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் இப்படித் தான் சூதாட்டம்,போட்டிகளை விட்டுக் கொடுத்தல் போன்றவை ஆரம்பிக்கிறது போலும்....
ஆனால் வளரும் பயிர்களையே களையாக்குகிறார்களே..
=================================
கொஞ்சக் காலமா நான் உட்பட எல்லா கிரிக்கெட் விமர்சகர்களாலுமே கிழித்துக் காயப்போடப்பட்ட பங்களாதேஷ் அணிக்கு வந்த ரோஷத்தைப் பாருங்களேன்.
வெட்டோரி,மக்கலம்,ரைடர்,டெய்லர்,டபி,மில்ல்ஸ் என்று அனைவரும் அடங்கிய பலம் வாய்ந்த நியூ சீலாந்து அணியைக் கூப்பிட்டு வைத்துக் கொத்திக் குதறி அனுப்பி விட்டார்கள்.
ஐந்து போட்டிகளில் எதையுமே வெல்ல முடியாமல் அவமானப்பட்டுப் போயுள்ளது நியூ சீலாந்து.
ஷகிப் - தலை தல தான் :)
ஷகிப் அல் ஹசன் தனியொருவராக விஸ்வரூபம் எடுத்து நியூ சீலாந்து அணியை வதம் செய்திருக்கிறார்.
முதல் போட்டியுடன் தலைவர் மோர்தசா காயத்துடன்(வழமை போல) நொண்டியடித்துக் கொண்டு விலகிக் கொள்ள ஷகிபின் ராஜநடை ஆரம்பித்தது.
71 என்ற சராசரியில் ஒரு அழகான சதத்துடன் 213 ஓட்டங்கள்.16க்குக் குறைவான சராசரியுடன் 11விக்கெட்டுக்கள்.
பேசாமல் பங்களாதேஷ் இனிமேலும் ஷகிபையே நிரந்தரத் தலைவராக நியமித்து விடலாம்.
அவர் வந்தால் அணி புது வேகமும் உத்வேகமும் பெறுகிறது.
யாராவது சொதப்பினால் கூட எந்திரன் சிட்டி போல தனி நபராக நின்று கலக்குகிறார்.
உலகக் கிண்ணம் சொந்த மண்ணிலும் இடம்பெறுவதால் பங்களாதேஷ் மீது மீண்டும் எதிர்பார்ப்பு கூடுகிறது.
ஷகிப் மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் பிரகாசிக்கக் கூடிய சிலரை இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்..
ருபெல் ஹோசெய்ன், ஷுவோ,இம்ருல் கயேஸ்,மீள் வருகை தந்திருக்கும் ஷஹ்ரியார் நபீஸ்,நிறைய நம்பிக்கை தரும் முஷிபுகூர் ரஹீம் மற்றும் சுனைத் சித்திக் ஆகியோர்.
நியூ சீலாந்து பாவம். வெட்டோரியின் கீழ் கட்டுப்பாடான அணியாக வளர்ந்து வந்த இந்த அணியில் தொடர்ந்து பிரகாசிக்கும் வீரர்கள் குறைவு. வெட்டோரி மட்டுமே எல்லாப் போட்டிகளிலும் தனியா ஜொலிக்கிறார். மற்றவர்கள் ஒவ்வொரு போட்டியில் சாம்பியனாகவும் ஏனைய போட்டிகளில் சொதப்பலாகவும் மாறி மாறி விளையாடுவது தான் பிரச்சினை.
ஐயோ அம்மா.. நான் இந்தியாவுக்குப் போக மாட்டேன்
ஆறு வருடங்களில் நியூ சீலாந்து முதல் தடவையாக தரப்படுத்தலில் ஏழாம் இடத்துக்கு வீழ்ந்திருகிறது.
இப்போது இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான அணித் தேர்வுக்கு முதலில் அவசர விசாரணை இடம்பெறுகிறது. இந்த மோசமான தோல்விக்குக் காரணம் தேடப் போகிறார்களாம்.
இந்தியாவுக்கு அடுத்த பலியாடுகள் வருகின்றன.
வெட்டோரி பாவம், திறமையான தலைவர். பதவி பறிபோகக் கூடாது.
==============================
தலைவராக இருப்பவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு என்னைப் பொறுத்தவரை சில உதாரணங்கள் உண்டு.. (கிரிக்கெட்டில் மட்டும்)
பாகிஸ்தானின் ஷோயப் மாலிக், அண்மையில் சல்மான் பட்,மிக முக்கியமாக மேற்கிந்தியத் தீவுகளின் க்றிஸ் கெய்ல்..
கெய்ல் - ஆடிய ஆட்டமென்ன
கெய்ல் ஒரு சோம்பேறித் தனமான தலைவர். களத்தடுப்பில் இருக்கையில் அவரைப் பார்த்தால் சொங்கித் தனமாகத் தோன்றும்.
அணியை உற்சாகப் படுத்தவும் மாட்டார்.
பந்துவீச்சு மாற்றங்களையும் ஏனோ தானோ என்றே செய்பவர்.
அவரது அதிரடித் துடுப்பாட்டம் மட்டும் ஒரு சில போட்டிகளைக் காப்பாற்றி வந்துள்ளது.
எனினும் டெஸ்ட் போட்டிகள் குறித்தான அவரது அணுகுமுறையும் பணம் பற்றிய அவரது பேராசையும் எனக்கு கெய்ல் மீது வெறுப்பையே தந்து வந்துள்ளது.
தலைவராக இருந்துகொண்டும் ஒப்பந்தங்களுக்காக அணியை வைத்து கிரிக்கெட் சபையுடன் பேரம் பேசுவது.ஓரிரண்டு தொடர்களைக் கைவிட்டு பெரும் புகழோடு ஒரு காலத்தில் விளங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியை பதினோருவரையே தேட வைத்துத் தவிக்கவிட்டவரும் இதே கெய்ல் தான்.
இவரது தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இருந்ததை விடக் கீழே போனதும்,ஒற்றுமை இல்லாமல் போனதும் தான் மிச்சம்.
ஏன் இவர் இவ்வளவு மோசமாக இருந்தும், முரண்பட்டு நடந்தும் தலைமைப் பதவியைத் தூக்காமல் விட்டு வைத்தார்கள் என்ற கேள்வி எனக்கு.
இப்போது தான் ஒப்பந்த சிக்கல் மீண்டும் எழுந்ததனால் தலைமைப் பதவியைப் பறித்திருக்கிறார்கள்.உப தலைவர் ட்வெய்ன் பிராவோவும் அம்போ..
ஆனால் இலங்கைக்கு வரப்போகும் குழுவில் இவர்கள் இருவரையும் சேர்த்திருப்பது வேறு யாரும் இவர்களைப் பிரதியிட இல்லையா?
( T20 போட்டிகளால் அளவுக்கதிகமான பிரபலமும் - over rated சாதித்தவற்றை விட சம்பாதித்தது கூடவும் கொண்டவருமான கீரன் பொல்லார்டையும் எனக்குப் பிடிப்பதில்லை)
புதிய தலைவர் டறேன் சம்மி ஒரு திறமையான சகலதுறை வீரர். தனது பிராந்திய அணியைத் திறம்பட வழி நடத்தியிருக்கிறார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அனுபவம் போதாது. இலங்கையுடன் இலங்கையில் நிச்சயம் தடுமாறுவார்.
பார்க்கலாம்.
அத்துடன் நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு வெள்ளை இன வீரர் உப தலைவராகிறார்.
ஆஸ்திரேலியாவில் பிராந்திய கிரிக்கெட் விளையாடியவரும் பெற்றோர் வழியாக மேற்கிந்தியத்தீவுகளுக்கு உரித்துடையவருமான பிரெண்டன் நாஷ் தான் அவர்.
சிறப்பாக ஆடிவரும் டெஸ்ட் வீரர்.
இனியாவது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் உருப்படட்டும்.
=======================
Flower - ஆறு வருடங்களுக்குப் பிறகு பூக்கவில்லை
பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சிம்பாப்வேயின் கிரான்ட் ப்ளவரின் மீள் வருகை ஏமாற்றம் தந்தது.
ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சர்வதேச அரங்குக்கு வருவது இலேசான ஒன்று அல்ல.
அதிலும் 39 வயதில்.
ஏன் இவருக்கு இந்த ஆசை என்று யோசித்தேன்.
பாவம். கொஞ்சம் தடுமாறி இருந்தார்.இரு போட்டிகளிலும் வெறும் 35 ஓட்டங்கள்.
ஒவ்வொரு போட்டியிலுமே ஒரு திறமையான இளம் வீரரின் இடம் ப்ளவருக்குப் போய்க் கொண்டிருந்தது.(Coventry,Masakadza)
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிம்பாப்வேயின் டெய்லர் வழமை போல் கலக்கி இருந்தார். டேய்பு கடைசிப் போட்டியில் மீண்டும் பழைய டேய்புவை ஞாபகப்படுத்தினார்.
முக்கிய சுழல் பந்துவீச்சாளர் ரே ப்ரைசை அணியிலிருந்து நீக்கிய தவறை உணர்ந்திருப்பார்கள்.
வழமையாக சிறப்பாக செய்யும் சுழல் பந்துவீச்சாளர்கள் இம்முறை சோபிக்கவில்லை.
மறுபுறம் தென் ஆபிரிக்காவின் அறிமுகங்கள் அசத்தினார்கள்.
வேகப் பந்துவீச்சாளர் தெரோன் மற்றும் துடுப்பாட்ட வீரர் கொலின் இங்க்ராம். எதிர்காலம் வலமாக இருக்கிறது இருவருக்கும் தென் ஆபிரிக்காவுக்கும்.
தெரோனின் யோர்க்கர் பந்துகள் துல்லியம்.
ஹாஷிம் அம்லா தொடர்ந்து ஜொலிக்கிறார். ICC விருது நழுவியது துரதிர்ஷ்டம்.
இறுதி ஒரு நாள் போட்டி நாளை மறுதினம்.சிம்பாப்வே ஏதாவது அதிசயம் நிகழ்த்துமா பார்க்கலாம்.
====================
பாகிஸ்தானிய கிரிக்கெட்டில் என்னப்பா நடக்குது?
தென் ஆபிரிக்காவுக்கான தொடருக்கு 17 பேர் கொண்ட குழு,..
ஹொங் கொங்கில் இடம் பெறும் தொடருக்கு அணித் தலைவர் ஷோயிப் மாலிக்.
இலங்கை இதற்காக தெரிவு செய்துள்ள குழு பலமானது.
தலைவராக ஜீவந்த குலதுங்க.
நவம்பர் ஆறு,ஏழாம் திகதிகளில் ஹொங் கொங்கில் இடம் பெறுகிறது.
======================
ஆஸ்திரேலிய - இந்திய ஒரு நாள் தொடர் இன்று தான் ஆரம்பிக்குது .. முதல் போட்டி தான் மழையால் கழுவப்பட்டு விட்டதே.
இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா வெல்லும் என்ற நம்பிக்கையில்லை. (கிளார்க்கை நான் நம்பவில்லை என்பதே சரி :))
ஆனால் இரு அணிகளின் இளையவர்களிடமும் நிறைய எதிர்பார்க்கிறேன்..
குறிப்பாக ஷீக்கார் தவான்,அஷ்வின்,பெர்குசன் & ஹெஸ்டிங்க்ஸ்..
அட இதப் பாருங்கப்பா.. நம்ம கிளார்க் அடிச்சு நொறுககிறார்.விக்கிரமாதித்தன் returns ;)
ஹசி form க்குத் திரும்புகிறார்.
ஜடேஜா,முனாப் படேல்,ரோகித் ஷர்மா ஆகியோர் குழுவில் இருந்தும் அணியில் செர்க்காமை, இந்தியா திருந்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
இரு அணிகளிலும் இன்று இரு அறிமுகங்கள்.
வாழ்த்துக்கள்.
===============
அன்றொரு பதிவில் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியது பற்றியும் எனது பந்துவீச்சு மோசமாகிப்போனது பற்றியும் புலம்பி வைத்திருந்தேன்.
எத்தனை பேர் கடின பந்து என்று 'பெரிதாக' நினைத்தீர்களோ?
வெறும் டென்னிஸ் பந்து விளையாட்டு தான்.
ஆனால் அந்தப் பின்னூட்டத்திலேயே அன்று மாலையே ஓரளவு சிறப்பாகப் பந்து விழுவது (line & length)பற்றி ஆறுதல்பட்டிருந்தேன்.
கடந்த ஞாயிறு நடந்த ஒரு போட்டியில் வீரகேசரி அணிக்கெதிராக ஒரு Hat trick எடுத்திருந்தேன்.
அதிலும் இரண்டு விக்கெட்டுக்கள் நேரடியாக விக்கெட்டைத் தகர்த்தவை.(bowled)
(நம்புங்கப்பா.. இதுக்காக வீடியோ எடுத்தா பதிவேற்றுறது?)
நம்ம சகா பிரதீப் மூன்று சிக்சர்களுடன் பத்துப் பந்துகளில் 32 ஓட்டங்கள் பெற்றும் வீரகேசரியின் வெற்றியை நம்ம வெற்றியால் தடுக்க முடியவில்லை. :(
அன்று நடந்த பரிசளிப்பு நிகழ்வில் அஜந்த மென்டிஸ் தான் பிரதம அதிதி. எனினும் இருட்டியதால் பரிசுகள் அளிக்கப்படவில்லை.
இன்று போட்டியை ஒழுங்குபடுத்திய கென்ட் விளையாட்டுக் கழகத்தினர் எனக்கான சிறந்த பந்துவீச்சாளர் விருதைக் கொண்டு வந்து கையளித்தார்கள்.
Best bowler award :) :) :)
தோற்றாலும் வெற்றி தான் !!!
(எங்கள் அணியே வெற்றி அணி தானே ;))