மெகா ஸ்டாரும் மேர்வின் மாமாவும்

ARV Loshan
21
சுவர்ணவாகினி தொலைக்காட்சியில் மெகா ஸ்டார் என்றொரு Reality show நடைபெற்று (சிங்கள மொழியில் தான்)நேற்று இறுதிப் போட்டி மிகப் பிரம்மாண்டமாக இடம்பெற்றது.
நாடு முழுவதிலும் பிரபலமான நடிக,நடிகையர்,பாடக,பாடகியர் மட்டுமல்லாது பிரபல,இளம் சிங்கள அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்ட போட்டி நிகழ்ச்சி இது.
பாடலும் ஆடலும் என்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அப்பாவி வாசகர்களின் smsகள் மூலமான வாக்குகள் அடிப்படியில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்காவிட்டாலும், அரசியல்வாதிகளும் வருவதால் அவர்கள் வரும் அங்கங்களில் நடக்கும் வேடிக்கை சுவாரஸ்யங்களுக்காகப் பார்ப்பதுண்டு.

நேற்று இறுதிப் போட்டி.. எனது அவதாரம் வானொலி நிகழ்ச்சிக்கிடையிலும் இடையிடையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இந்த பரபர அரசியல்வதிகளுக்கெல்லாம் இவ்வாறு ஆடவும் பாடவும், இதற்கென்று ஒத்திகை பார்க்கவும்,ஒளிப்பதிவுக்கும் எங்கிருந்து நேரம் வருகுதென்று நான் அடிக்கடி யோசிப்பதுண்டு.

               தயாசிறி ஜயசேகர - ஐ.தே.க வின் எதிர்காலம்???


அதிலும் நேற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவான நான்கு போட்டியாளர்களில் இருவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அண்மைக்கால துடிதுடிப்புப் பீரங்கியான தயாசிறி ஜெயசேகரவும், ஐ.தே.கவில் தேர்தலில் போட்டியிட்டு ஆளும் கட்சிக்கு மாறிய உபேக்ஷா ஸ்வர்ணமாளியுமே(பபா நாடகத்தால் பிரபலமான நடிகை/model)அவர்கள்.
இவர்களோடு நடிகரான சுரேஷ் கமகே என்பவரும்,பாடகரான அஜித் வீரசிங்க என்பவரும் போட்டியிட்டனர்.

அதிகளவு மக்கள் செல்வாக்கோடு கம்பீரமான தோற்றம் மற்றும் பாடும்,மக்களைக் கவரும் ஆற்றல்களால் தயாசிரியே இந்த இறுதிப் போட்டியில் வெல்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
பபாவின் கடைசி நேரக் கவர்ச்சி அலையும் தற்போது ஆளும் கட்சியில் இருப்பவர் என்பதும் அவருக்கும் வாக்குகளைத் தரும் என்ற பேச்சும் இருந்தது.
  உபேக்ஷா ஸ்வர்ணமாலி - ஆளும் பக்கத்திலே வளமான எதிர்காலம் :)

இறுதிப் போட்டிக்கான சிறப்பு நடுவர்களின் வருகையிலேயே பரபரப்பு தொற்றியது..

இலங்கை அரசியலின் பரபரப்பு சர்ச்சை நாயகனும், அண்மையில் மாமரத்தில் கட்டி அடித்த நாடாளுமன்ற தாதாவுமான மேர்வின் சில்வா MP அரங்கத்துள் பிரவேசிக்கும்போதே அதிரடியுடன் தான் வந்தார்.

வாசலில் அரைகுறை ஆடைகளுடன் வரவேற்புப் பணியில் ஈடுபட்டிருந்த நங்கையரை மேலும் கீழுமாகப் பார்த்தவர் நேரடி ஒளிபரப்பில்,"இப்படியான ஆடைகளில் பெண்களை நிறுத்திவைப்பது கலாசாரத்துக்கு ஒவ்வாது.உங்கள் தொலைக்காட்சிக்கு இது அழகில்லை" என்று நெத்தியடி கொடுத்தவர், "கட்சி பேதம் தாண்டி 'நடுவராக' இருப்பேன்" என்று அசத்திவிட்டு சென்றார்.
  மேர்வின் சில்வா - மெகா ஸ்டார் - அசைக்க முடியாத அதிரடி நாயகன்

அடடா மேர்வின் கலக்குறாரே என்று பார்த்தால்,மூன்று இடங்களில் முகம் சுளிக்க வைத்தார்..

1.தொகுப்பாளர் பிரபல நடிகர் கமல் அத்தாராச்சி இவரை 'அண்ணா' என்று கூறிப் பேச அழைக்க,நல்ல காலம் தன்னை மாமா என்று அழைக்கவில்லை என்று வேடிக்கையாக சொன்ன மேர்வின் சில்வா, நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று அசிங்கமாக சொன்னது..
"எனக்கு மகள் இல்லை என்பதால் கமல் என்னை மாமா என்று அழைக்கவில்லைப் போலும். நாளும் எனக்கும் உடலில் வலு இருக்கிறது.எனது மனைவிக்கும் அழகும் இளமையும் இன்னும் மிச்சம் இருக்கிறது.இப்போது விரும்பினாலும் மகள் ஒன்றைப் பெறலாம்"

2 .விறுவிறுப்புக்காக செட் அப் செய்யப்பட குழப்பம் ஒன்றில் பம்புவா என்ற பொதுவாக சிங்களவர் சபைகளில் பேசத் தயங்கும் வார்த்தையை உபயோகித்தது.

3 .உபேக்ஷா அழகாக சிங்களப் பாரம்பரியப் பாணியில் உடையணிந்து பாடல் ஒன்றைப் பாடி முடிக்க மேர்வின் அடித்த கமென்ட் "உபெக்ஷாவின் காலத்தில் நான் இளைஞனாக இருந்திருந்தால் மேலும் மகிழ்ந்திருப்பேன்" இத்தோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை.

வழியலாக உபெக்ஷாவிடம் தான் குழந்தையாக மாறிப் பால் குடிப்பதுகூட சுகானுபவமாக இருக்கும் என்று புலம்பி வைத்தார் அந்தப் பெரிய மனுஷன்.இவ்வளவுக்கும் சபையில் அவர் மனைவியும் அமர்ந்திருக்கிறார்.

ஆளும் கட்சி ஆச்சே.. அதுவும் இவரது அருமை,பெருமைகள் தெரிந்தவராதலால் உபேக்ஷா தடுமாறி,சங்கடத்துடன் சிரித்து மழுப்பினாலும்,தொகுப்பாளர் நகைச்சுவைக்காக இதை நாடாளுமன்ற உறுப்பினர் பேசினார் என்று சமாளித்தாலும்,அடுத்துப் பேச வந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும்,பெண் உரிமைகள் பற்றி அதிகம் குரல் கொடுப்பவருமான ரோசி சேனநாயக்க விடவில்லை.
சபையில் இவ்வாறான அசிங்கமாகக் கருத்துரைக்கக் கூடாது என்று கண்டித்தார்.
அவர் முடிக்க முதலே மேர்வின் சில்வா பாய்ந்துவிழுந்து (நாடாளுமன்றத்தில் நடப்பது போலவே) ரோசீயை அடக்கிவிட்டார்.

சபை முழுவதும் ஸ்தம்பித்துவிட்டது.

அதற்குப் பிறகு யார் நிகழ்ச்சியையும் முடிவையும் பார்ப்பார்.

நேற்றைய மெகா ஸ்டார் உண்மையில் மேர்வின் சில்வா தான்..

நேற்றைய இறுதியில் மேலும் சில சுவாரஸ்யங்கள்..

முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டீ சில்வா அதிதிகளில் ஒருவராக வந்து அமைதியாக இருந்தார்.

ஐ.தே.க அதிரடி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மை நேம் இஸ் கான் படப் பாடல் 'மித்துவா' வை அருமையாகப் பாடி நடித்தார்.

பபா உபேக்ஷா கவர்ச்சி உடை,கவர்ச்சி நளினங்களோடு அரபுப் பாடல் ஒன்றுக்குப் போட்ட ஆட்டம் ஒன்று போதும், உலகின் கவர்ச்சிகர நாடாளுமன்ற உறுப்பினராக அவருக்கு விருது கொடுக்கலாம்.(என்ன ஒன்று, மேர்வின் சில்வா பகிரங்கமாக உணர்ச்சிவசப்பட்டு விட்டார்)

 ஒவ்வொருவர் மேடைக்கு வரும்போதும் நோ நோ என்று எழும் சபையோரின் குரல்கள் தயாசிரிக்கு யெஸ் யெஸ் என்று முழங்கின..
சரி தயாசிறி இலகுவாக வென்று விடுவார் எனப் பார்த்தால்.. முடிவில் பெரிய சலசலப்பு..

பெரிதாக அறியப்படாத அஜித் வீரசிங்க வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
அறிவித்த விதத்திலேயே எக்கச்சக்க குளறுபடிகள் இருந்தது போலத் தெரிந்தது.
மேர்வின் சில்வா முகத்தில் அந்த வேளையில் ஒரு நக்கல்+மர்மப் புன்னகை.

நிறைய சிங்கள நண்பர்களுடன் பேசியபோது இது பற்றி கட்சி பேதம் தாண்டி அதிருப்தி தெரிவித்தார்கள்.

அதான் முதலிலேயே சொன்னேனே நேற்றைய மெகா ஸ்டார் மேர்வின் சில்வா தான் என்று..


*இது பற்றிய வீடியோ காட்சிகள் இணையமெங்கும் பரவிக் கிடக்கின்றன. என் முதுகு தாங்காது என்பதால் நான் இங்கே ஏற்றவில்லை. தேடிப் பார்த்து பயன்பெறுங்கள்.

*இத்தாலிய 'தீராத விளையாட்டுப் பிள்ளை' பிரதமர் சில்வியோஸ் பெர்லுச்கொனியின் நேற்றைய பேட்டி ஒன்றும் ஞாபகம் வந்தது..
"பெண்கள்,வேலை,விளையாட்டில் என் காதல் ஒரு போதும் ஓயாது"
அவருக்கு இப்போது வயது 74.

Post a Comment

21Comments

Please Select Embedded Mode To show the Comment System.*