இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் - லோஷன் பார்வை

ARV Loshan
16
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு முழுமையான அலசலை சுருக்கமாகத் தரவேண்டும் என்று எதிர்பார்த்திருந்தேன்.சில,பல வேலைகள் நேரமில்லாமல் செய்ய,ஒரு நாள் போட்டித் தொடர் ஆரம்பமாகிறதே என்று கவலைப்பட்டால் கொச்சியில் பெய்த மழை கொஞ்சம் என் பதிவுக்கு உதவியுள்ளது.


அன்புத் தம்பி 'அனலிஸ்ட்' கங்கோன் எனது வேலையை இன்னும் இலகுபடுத்தியுள்ளார்.

இந்திய அவுஸ்ரேலியத் தொடர் - என் பார்வையில்


தரவுகளைத் தேடிப்பிடித்து நுணுக்கமாகப் பதிவு போட சோம்பல் இடம் கொடுக்காது.
எனவே தரவுகள்+தகவல்கள்=முழுமை விவரம் அறிய கங்கோனின் பதிவை வாசித்து விட்டு இங்கே வாருங்கள்.


இந்தத் தொடர் மீது எனக்கு ஆரம்பிக்கையிலேயே பெரீய எதிர்பார்ப்பு இருந்தது.


சில காரணங்கள்


1 .சச்சின்+பொன்டிங் போட்டி.

இருவரும் அதிகூடிய ஓட்டக் குவிப்பில் போட்டி போட்டுக் கொண்டிருப்பது ஒருபுறம் சச்சினின் ரன் குவிப்பு form + விருது கிடைத்த காலகட்டம் & பொன்டிங் இந்திய ஆடுகளங்களில் தன்னை நிரூபிக்கக் கிடைக்கும் இறுதி வாய்ப்பு என்று உப காரணங்களும்.




2 . ஷேன் வோர்னுக்குப் (வோர்னும் பெரிதாக சாதிக்கவில்லை)பின்னர் இந்தியாவில் பிரகாசிக்கக் கூடிய ஒரு ஆஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளரை தேடிக் கொண்டிருந்தேன்.
(ம்ஹூம் ஹோரிட்சும் வாங்கிக் கட்டிக் கொண்டார்)


3. ஆஸ்திரேலியாவின் புதிய தலைமுறை வேகப்பந்துவீச்சு உலகின் பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைக்கு எதிராக என்ன செய்யும் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம்.


4 .ஹர்பஜன் தன்னை நிரூபிப்பாரா அல்லது ஓஜா தனக்கு நிரந்தர இடமொன்றைத் தேடிக் கொள்வாரா அல்லது அஷ்வினுக்கான இடம் ஒன்று வருமா என்ற ஒரு ஆசை.


5 . இந்தியா எப்படியான ஆடுகளங்களைத் தயார்ப்படுத்தி இருக்கிறது?


                                 இது நிச்சயம் ஜெயிக்கிற கூட்டம் !!!


விமர்சகர்கள் இந்தியாவுக்குத் தான் இத் தொடர் என்று அடித்து ஆணித்தரமாக சொல்லி இருந்ததை மனம் தொடர் ஆரம்பிக்குமுன்னரே ஏற்றுவிட்டது.
இதற்கு ஆஸ்திரேலிய அணியில் காணப்பட்ட சில ஓட்டைகள் முக்கிய காரணம்.
(பொன்டிங்கின் இந்திய ஆடுகள சறுக்கல், நோர்த்+ஹசியின் சொதப்பல்கள்,பிராட் ஹாட்டின் இல்லாமை,பந்துவீச்சின் மீது நம்பிக்கையின்மை.. இவையெல்லாவற்றையும் விட இந்தியாவின் சச்சின்+சேவாகின் விஸ்வரூபம்)


ஆனால் இறுதியாக இரண்டுக்கு பூஜ்ஜியம் என்று இந்தியா வென்ற போதும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் மிக முக்கியமாக முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இறுதிக் கட்டம் வரை ஆஸ்திரேலியா கொடுத்த சவால் மெச்சத்தக்கது.
இந்தியாவும் விமர்சகர்களும் நினைத்த அளவுக்கு இலகுவாக இத்தொடர் அமையவில்லை.


இத்தொடரின் விசேடமாக அமைந்தது என்று நான் நினைப்பது சச்சின் vs பொன்டிங் ஓட்டக் குவிப்பு தான்.
             இன்னும் எத்தனை சாதனைகள் இவர் வசமில்லை??


சச்சின் டெண்டுல்கர் இரு அரைச் சதங்களோடும், ஒரு இரட்டை சதத்துடனும் 403 ஓட்டங்களைக் குவிக்க, ரிக்கி பொன்டிங் மூன்று அரைச் சதங்களுடன் 224 ஓட்டங்களைக் க்வித்திருந்தார்.இந்த மூன்றில் ஒன்று சதமாக மாறியிருந்தால் ஒரு போட்டியின் முடிவாவது மாறக் கூடிய வாய்ப்பிருந்தது.


ஷேன் வொட்சன் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக தன்னைத் தொடர்ந்து சிறப்பாக நிரூபித்துவருவதை இந்தத் தொடரும் காட்டியுள்ளது.
இந்திய அணியின் ஒவ்வொரு போட்டிகளில் விளையாடிய லக்ஸ்மன்,புஜாரா,விஜய் ஆகியோர் சிறப்பாக அந்தந்தப் போட்டிகளின் வெற்றிகளுக்குத் துணைபுரிந்தனர்.

ஆஸ்திரேலிய அணியில் மார்க்கஸ் நோர்த் ஒரு அபாரமான சதத்தைப் பெற்றதும் டிம் பெய்னின் போராடிப் பெற்ற 92 ஓட்டங்களும் லக்ஸ்மன் வென்று கொடுத்த மொகாலி டெஸ்ட்டின் ஆட்டமிழக்காத 73 ஓட்டங்களுடன் ஒப்பிடக்க்கூடியவை.


லக்ஸ்மன் பற்றி நான் ஏற்கெனவே மொஹாலி டெஸ்ட் பற்றிய பதிவில் புகழ்ந்து தள்ளி விட்டேன்.


டிம் பெய்னின் துடுப்பாட்ட நுட்பங்கள் என்னைப் பெரிதும் ஈர்க்கின்றன.
பிராட் ஹடின் குணமடைந்து நேற்று தனது நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக அரைச் சதம் ஒன்றையும் பெற்று வெற்றியீட்டிக் கொடுத்துள்ள நிலையில் ஆஷஸ் தொடரில் பெய்ன் தனது இடத்தை ஹடினிடம் கொடுக்க நேரிடும் என்று தெரிகின்ற போதும், ஒரு சிறப்புத் தேர்ச்சி பெற்ற துடுப்பாட்ட வீரராக பெய்ன் அணிக்குள் வரலாம் என்று சொல்லும் அளவுக்கு அவரது temperament+foot work சிறப்பாக உள்ளன.
                                             No Pain(e) No gain !!! 


நோர்த் என்னைப் பொறுத்தவரை இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை. அவரிடம் தொடர்ச்சியாகப் பிரகாசிக்கும் தன்மை இல்லை.நியூ சிலாந்தில் வைத்தும் இந்தியாவில் வைத்தும் அணியில் இதோ இடம் போகப் போகிறது எனும் நிலை வந்த பிறகு தான் சதமடித்து துண்டு விரித்து இடத்தைக் காப்பாற்றிக் கொள்கிறார்.


32 இன்னிங்க்சில் ஐந்து சதம்,நான்கு அரைச்சதம் என்பது ஆஸ்திரேலிய அணியில் இருப்பதற்குப் போதுமானதில்லை என்றே நான் கருதுகிறேன்.


இவரை விட ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் பிராட் ஹோட்ஜை அணியில் வைத்திருந்துக்கலாம்.டெஸ்ட்.முதல் தரப் போட்டிகளில் மனிதர் ஓய்வு பெற்ற பிறகும் மட்டுப்படுத்தப்பட்ட,போட்டிகளில் வெளுத்து நொறுக்குகிறார்.


அடுத்த சொதப்பல் மைக்கேல் கிளார்க். இவரை விட இத்தொடரில் ஹில்பென்ஹோஸ்,ஹோரிட்ஸ் பெற்ற ஓட்டங்கள் அதிகம்.
வழமையாக சுழல் பந்துவீச்சாளருக்கு எதிராக உட்கார்ந்து ஓங்கி அடிப்பவர் இம்முறை பலியாடு போல மாறி மாறி உருட்டிப் பந்தாடப்பட்டார்.
அவரில் நான் ரசிக்கிற front foot drives, sweep, leg side flicks எதையுமே காணவில்லை.
சைமன் கடிச் சில இன்னிங்க்சில் நின்றுபிடித்தாலும் அவரது ஓட்டங்களோ,ஓட்டவேங்கமோ ஆஸ்திரேலிய அணிக்குப் பெரிதாக உதவவில்லை.

 மைக்கல் ஹசியும் ஏமாற்றமே.. நான் மிக ரசித்த Mr.Cricket வெகு விரைவில் இடத்தை இழப்பார் அல்லது ஓய்வு பெற அழுத்தப்படுவார் என்ற நினைப்பே மனத்தைக் கலக்கப்படுத்துகிறது.


ஆஷஸ் தொடருக்கு முன்னதாக தேர்வாளர்கள் கிளார்க்கை வெளியே அனுப்புவார்கள் என நான் நினைக்கவில்லை. ஆனால் ஹசி,நோர்த் ஆகியோர் போலவே கிளார்க்குக்கான விட்டுக்கொடுப்புக் கால எல்லையும் குறுகியதே.


டேவிட் ஹசி, கலும் பெர்குசன்,ஏட்ரியன் பின்ச், பில் ஹியூஸ் ஆகியோர் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்திய,இலங்கை அணிகளுக்கேதிரான ஒரு நாள் போட்டிகள் இவர்களின் போர்மில் மாற்றங்களைத் தந்தால் ஒழிய ஆஷசில் புதிய ஆஸ்திரேலியா இங்கிலாந்தை சந்திப்பதைத் தவிர்க்க முடியாது.



இந்திய அணியில் கங்கோன் தனது பதிவில் சொன்னதைப் போல விரேந்தர் சேவாக் இனி மேலும் தனது சில நுட்பங்களில் மாற்றங்களைக் கொண்டுவராவிட்டால் bodyline attack/Bouncers இனால் அடிக்கடி ஆட்டமிழக்கவேண்டி வரலாம்.


தலைவர் தோனியும் கம்பீரும் சறுக்கினார்கள்.ரெய்னா பெற்ற அந்த 86 ஓட்டங்களை விட மற்ற இரு இன்னிங்க்சிலும் தடுமாறி இருந்தார்.
புஜாரா மிகத் தெளிவான ஒரு நம்பகமான துடுப்பாட்ட வீரராக ஜொலிப்பார்.ஆனால் எப்போது இவருக்கான நிரந்தர இடம் கிடைக்கும் என்பதே கேள்வி.விஜய்க்கு சேவாக்,கம்பீரின் காயங்கள்,உபாதைகள் காரணமாக கிடைக்கின்ற டெஸ்ட் வாய்ப்புக்கள் போலத் தான் புஜாராவுக்குமா என்ற கேள்வியும் எழும்பாமல் இல்லை.
                          இந்தியாவின் இளைய எதிர்காலம் - விஜய் & புஜாரா 


விஜய் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தனக்கான படிக்கற்கள் போட்டுவருகிறார். கன்னி சதம் அபாரம்.
இப்போது எனக்குள்ள ஒரு கேள்வி டிராவிட்டின் ஓய்வின் பின் உடனடியான தெரிவு விஜயா? அல்லது புஜாராவா? 


இந்திய அணியின் மத்தியவரிசை என்ற கோட்டைக்குள் இடம் பிடிக்க தவம் செய்து போராட வேண்டியது இன்றும் தொடர்கிறது.
டிராவிடின் 77 ஓட்டங்கள் தவிர இந்தியப் பெருஞ்சுவர் ஓட்டை விழுந்த சுவராகவே தெரிந்தது.
புஜாராவின் புயல் வேகப் பிரவேசமும் டிராவிடை இனி மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்கலாம். 


புஜாராவைப் பற்றி கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்பே நான் 'அவதாரம்' நிகழ்ச்சியில் சிலாகித்துக் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் டெஸ்ட் அணிக்குள் இவ்வளவு சீக்கிரம் இடம்பெறுவார் என நினைக்கவில்லை.
பத்ரிநாத்,மனோஜ் திவாரி,விராத் கொஹ்லி ஆகியோர் தமது டெஸ்ட் கனவுகளைத் தற்காலிகமாகத் தள்ளி வைக்க வேண்டியது தான்.


பத்ரிநாத் இனி மற்றுமொரு கிரிக்கெட் துரதிர்ஷ்டசாலியாக கிரிக்கெட் வாழ்நாளைக் கழிக்க வேண்டியது தான்.. பாவம்.


சச்சின் - இவரைப் பற்றி எத்தனை தடவை தான் எழுதுவது? இனி என்னதான் எழுதுவது?
இந்தத் தொடர் சச்சினின் தொடர் என்று வருங்காலத்தில் பேசப்படலாம் - Botham's Ashes போல.


இத்தொடரில் சச்சின் தனது டெஸ்ட் வாழ்க்கையின் 14000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தார்.பெங்களூரில் பெற்ற இரட்டை சதமானது சச்சினின் 49 வது டெஸ்ட் சதமும், ஆறாவது இரட்டை சதமும் ஆகும்.
                              And now, all 5 are playing in the squad!!! 


இந்த கிரிக்கெட் கடவுளையா சிலர் ஓய்வு பெற சொல்லி, இளையோருக்கான முட்டுக்கட்டையாக வர்ணித்து சிறுமை செய்தார்கள் என்று கோபமாகவும் இருக்கிறது.
இந்த ஒரு வருட காலம் சச்சினின் பொற்காலம் என்று சொல்லலாம்.
இரு இரட்டை டெஸ்ட் சதங்கள் + அபூர்வமான ஒரு நாள் இரட்டை சதம்,ஆயிரக்கணக்கான ஓட்டங்கள், ICCயின் விருதுகள் என்று மனிதர் மீண்டும் இருபது வயது குறைந்தது போலத் தெரிகிறார்.
டென்ஷன் இல்லாமல் மிக இலகுவாக சச்சின் ஓட்டங்கள் குவிப்பதாகவும் தெரிகிறது.


இளையவர்கள் முரளி விஜய்,சுரேஷ் ரெய்னா,செடேஷ்வர் புஜாரா ஆகியோரோடு ஆடிய போது சச்சினின் இளமை அவர்களுடன் போட்டிபோட்டது விசித்திரமான வேடிக்கை.
இந்த மூவருக்கும் இரு தசாப்த அனுபவம் நிச்சயம் பல விஷயங்களை அந்த இணைப்பாட்டத்தில் வழங்கி இருக்கும்.


பந்துவீச்சாளர்களின் முழுப்பலம் இந்தியாப் பக்கம் இம்முறை வெற்றியை சரித்துக்கொண்டன.
சாகீர் கான் கூடுதல் விக்கெட்டுக்களை (12 )வீழ்த்தி இருந்தார். ஹர்பஜன் 11 விக்கெட்டுக்கள். ஆனால் இவர்களை விட அதிக சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி சிறப்பாக பந்துவீசியவர் பிரக்யான் ஓஜா(9 விக்கெட்டுக்கள்).




சாகிர் கான் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளார். ஆனால் முன்னைய சாஹீரின் புதிய பந்து வித்தையை இப்போது பார்த்தல் குறைந்துள்ளது.ரிவேர்ஸ் ஸ்விங்கைக் கூடுதலாகப் பயில்கிறாரோ?
இஷாந்த் ஷர்மா துடுப்பாட்ட வீரராக மிளிர்ந்த அளவுக்கு (இரண்டாம் இன்னிங்க்ஸ் பந்துவீச்சைத் தவிர) பந்துவீச்சாளராக இன்னும் பிரகாசிக்கலாம்.
ஹர்பஜன்+ஓஜா ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தியதைப் பார்த்தால் இன்னும் சாதகமான ஆடுகளங்கள் கிடைத்தால் நியூ சீலாந்து போன்ற அணிகளைத் துவைத்துப் பிழிந்து விடுவார்கள்.(ஏம்பா நம்ம அஷ்வினும் பத்ரி போலத் தானா? நல்ல காலம் ஒரு நாள் தொடரில் ஒட்டுமொத்த சீனியர்களும் ஓய்வெடுத்தது)


இதேபோல ஆஸ்திரேலிய அணியின் சார்பாகக் கூடுதல் விக்கெட்டுக்களை ஜோன்சன் வீழ்த்தி இருந்தபோதும் சிறப்பாகப் பந்துவீசி இந்திய துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தியவர் பென் ஹில்பென்ஹோஸ்.
இந்திய ஆடுகளங்களில் இவ்வளவு நெருக்கடியை உருவாக்க முடியுமென்றால் ஆஷசில் இங்கிலாந்துக்கெதிராக போல்லினஜ்ரும் முழு ஆரோக்கியத்துடன் திரும்புகையில் ஆஸ்திரேலியா சிறப்பாக செய்யும் என நம்பலாம்.
ஹோரிட்சும் இந்தியா தந்த பாடங்களோடு ஷேன் வோர்ன் தரும் உபதேசங்கள் மூலமாகவும் மெருகு பெறுவார் என நம்பலாம்.


    பொன்டிங் அண்ணே நானும் ஒரு Bowler என்று அடிக்கடி ஞாபகப்படுத்தவேண்டி இருக்கே.. 


பொன்டிங்கும் நெருக்கடியான நேரங்களில் இனியும் அணில் ஏறவிட்ட நாய் போலவோ,இடியே தலையில் விழுந்தது போலவோ முகத்தை வைத்திருக்காமல் வொட்சன்,கிளார்க்,கடிச்,நோர்த் போன்ற பல பகுதி நேரப் பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தி விக்கெட்டுக்களை எடுக்க முயற்சி செய்தல் வேண்டும்.


இக்கட்டான நேரங்களில் எல்லாம் போச்சே என்றிராமல் புதிய வழிகளைத் தேடுவதே தலைவனின் சிறப்பம்சம்.
ஆஸ்திரேலிய அணியின் தலைவரொருவர் அடிக்கடி தலை குனிவதும்,விரல் நகம் கடிப்பதும்,விரக்தியோடு நோக்குவதுமாக இருப்பதை பொன்டிங்கில் மாத்திரமே கண்டுள்ளேன்.
மாறவேண்டும்.
                               தலைவா மீண்டும் எழுவது எப்போது??


தோனியில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் கண்டேன்.வெற்றிக்கு முனையும் பாங்கையும் கண்டேன்.இஷாந்த்,லக்ஸ்மன் ஆகியோர் முதல் போட்டியை வென்று கொடுத்த உற்சாகம் தொற்றிக் கொண்டதோ?
ஆனால் துடுப்பாட்ட வீரராக இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்தாலே நெருக்கமான வெற்றிகளை இன்னும் இலகுபடுத்த முடியும்.
அண்மைக்காலமாக இந்திய அணியில் பார்க்கின்ற ஒரு ஆரோக்கியமான மாற்றம்,இறுதி வரை போராடுவது.


காலியில் கடைசி நாள் கடை நிலை வீரர்கள்+லக்சமனின் துடுப்பாட்டம் மற்றும், மொஹாலி இஷாந்த்+லக்ஸ்மன் இணைப்பாட்டம் நல்ல உதாரணங்கள்.
பெங்களூரில் பதினைந்து ஆண்டுகளாகப் பெறமுடியாத வெற்றியையும் பெற்றுள்ளது இந்தியா.


இருபத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி ஒரு தொடரில் தான் விளையாடிய அத்தனை டெஸ்ட்டிலும் (இரண்டாக இருந்தாலும் கூட) தோற்றிருக்கிறது.
போர்டர் கட்டியெழுப்பிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் சாம்ராஜ்யத்தில் அதிக தோல்விகளை பெற்று அவமானத்துக்குள்ளாகி வருகிறார் ரிக்கி பொன்டிங்.இனி ஒரு தடவை இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முடியுமோ தெரியாது. ஆனால் ஆஷஸ் தொடர் வெற்றி இப்போதைய ஆஸ்திரேலிய அணிக்கும் சோர்ந்து போயுள்ள பொண்டிங்குக்கும் உடனடித் தேவை.


இந்திய அணிக்கு.... எல்லாம் சரி, எப்போது UDRSஐ ஏற்றுக்கொண்டு ஆரோக்கியமான (முழுமையான )கிரிக்கெட் தொடர் ஒன்றை உள்நாட்டில் நடத்துகின்றீர்களோ அது மேலும் இந்தியாவின் பெருமையை உயர்த்தும்.
சச்சின் என்ற கிரிக்கெட்டின் மிக உயர்ந்த சாதனையாளரும் இந்த UDRSக்கு தடைக்கல்லாக இருப்பது மிகக் கவலையானதும் சச்சினுக்கு குறையைத் தருகின்ற ஒரு விஷயமாகவும் இருக்கிறது.


இந்தத் தொடர் இன்னும் முழுமை பெற்றிருக்கும் நடுவர்களின் தீர்ப்புக்களில் சர்ச்சைக்குரியவையும் தவறானவையும் UDRSஎனப்படும் தொலைக்காட்சி நடுவரிடம் மேன்முறையீடு செய்யப்படும் முறையினால் களையப்பட்டு/குறைக்கப்பட்டிருந்தால்.


BCCIக்கு -ஆரோக்கியமான கிரிக்கெட் சூழல் ஒன்று உருவாகி இருக்கும் நிலையில், IPL கலாசாரம்,ஒருநாள் பணக் குவிப்பு கோலாகலங்களை ஒரு புறம் தள்ளிவைத்துவிட்டு டெஸ்ட் போட்டிகளை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாகக் கொண்டு செல்ல தொடர்ந்து வழியமைக்கவேண்டும்.(பெங்களூரில் திரண்ட ரசிகர்களின் எண்ணிக்கை வரவேற்புக்குரியது)
அடிக்கடி இலங்கையுடன் ஒருநாள் தொடர்களில் ஆடாமல் இருத்தல் மிக அவசியம்.


பங்களாதேஷிடமே பரிதாபகரமாக வாங்கிக்கட்டிக் கொண்டு இந்தியாவை டெஸ்டில் எதிர்கொள்ள வரும் வெட்டோரியின் நியூ சீலாந்து அணியை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.


சச்சின் இன்னும் எத்தனை சாதனைகளுக்கு நாள் குறித்துவிட்டாரோ?

Post a Comment

16Comments

Please Select Embedded Mode To show the Comment System.*