சில சந்தோஷங்கள் + சில வருத்தங்கள்

ARV Loshan
31
இந்த ஓரிரு நாட்களில் மனசைப் பாதித்த சில விஷயங்கள்.. சந்தோஷங்களும் வருத்தங்களும்


மனசை நெகிழ்ச்சிப் படுத்தி மகிழ வைத்த விடயம் - சிலி சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பு


இரு மாதங்களாக நிலத்தின் கீழ் 700 மீட்டர் ஆழத்தில் சிக்குண்டிருந்த 33 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டெடுக்க நடத்தப்பட்ட பெரு முயற்சி உண்மையில் மனிதாபிமானத்தின் வெற்றியே தான்.


இந்த முயற்சியின் முக்கிய தருணங்கள் ஒவ்வொன்றையும் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது அதன் ஆபத்தும் கொஞ்சம் சறுக்கினாலும் உயிர்கள் போய்விடக் கூடிய சிக்கலும் உணரக் கூடியதாக இருந்தது.


எனது விடியல் நிகழ்ச்சி மூலமாக நேற்றுக் காலையில் முதலாவது நபர் மீட்கப்பட்டதை மகிழ்ச்சியோடு நேயர்களுக்கு அறிவித்தேன்.
இன்று காலை செய்தியறிக்கைக்கு முன்பதாக 33  வது நபர் பத்திரமாக பூமிப்பரப்புக்கு திரும்பிய தகவலையும் நானே அறிவிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.


இந்த மீட்பு நடவடிக்கையின் இறுதிக் கட்டமாக கீழே சென்று சுரங்கத் தொழிலாளர்களைக் காப்பாற்றி மேலே அனுப்பி வைத்த மீட்புப் பணியாளர்கள் அறுவரும் மேலே வரும் வரை மனசு பதைபதைத்துக் கொண்டிருந்தது.
ஒவ்வொருவராக ஒருவர் மட்டுமே வரக் கூடியதான அந்த சிறு கொள்கலன் (Phoenix Capsule) மூலமாக மேலே வந்தபோதெல்லாம் நிலைகொள்ள முடியாத ஒரு உணர்வு.


கூடி இருந்த மக்கள்,ஊழியர்கள், முக்கியமாக இந்த மீட்பு நடவடிக்கையை நேரில் வந்து மேற்பார்வை செய்து தானும் உணர்வுகளில் பங்கெடுத்த சிலியின் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஆகியோரைப் பார்த்தபோது ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் மனத்தால் இந்த மீட்பு நடவடிக்கையோடு இணைந்த்திருந்தார்கள் எனப் புரிந்தது.


சிக்குண்டிருந்த ஒவ்வொருவரும் மீட்கப்பட்டு வெளியே வந்த நேரம் மக்கள் அடைந்த உற்சாகம் தாங்களே அல்லது தங்கள் உறவினர்களோ வந்ததாக எழுப்பிய மகிழ்ச்சிக் குரல்களும் பாடிய பிரார்த்தனைப் பாடல்களும் மனிதாபிமானத்தை சத்தமாக சொல்லின.


சிலியின் ஜனாதிபதி ஒவ்வொருவரையும் ஆரத் தழுவி வரவேற்றதும் ,அவரது உணர்ச்சிமிக்க உரையும் இறுதி நபர் வெளியேறும் வரை காத்திருந்ததும் உணர்ச்சிப் பெருக்கால் கலங்கிய கண்களும் உண்மையான மக்கள் தலைவராக அவர் மேல் மதிப்பை உயர்த்தியுள்ளது.
                  முதலாவது தப்பியவரை ஆரத்தழுவும் அன்புத் தலைவன்.. 
Chile's President Sebastian Pinera embraces miner Florencio Antonio Avalos Silva after he was rescued from the collapsed San Jose gold and copper mine where he was trapped with 32 other miners for over two months near Copiapo in Chile. (AP Photo)


மீட்பு என்றால் இது தான்.. யாரொருவருக்கும் எந்த இழப்பும் வராமல்,நம்பிக்கை இழக்காமல் அத்தனை பேரையும் மீட்டு உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள்.
அவர்கள் அத்தனை பேருக்கும் குறிப்பாக தம் உயிரையும் பணயம் வைத்துக் கீழிறங்கி பொறுமையாக 33 பேரையும் மேலே அனுப்பிவிட்டு தாம் இறுதியாக வந்தார்களே.. அந்த அறுவருக்கும் ஒரு ராஜ வணக்கம்.


அதிலும் இறுதியாக மேலே வந்த மீட்பர்(இப்படி சொன்னாலும் தப்பில்லையே?) சுரங்கத்திலிருந்து புறப்படும்போதும்,மேலே வந்து காட்டிய திருப்தி கலந்த முகபாவம் ஒரு மொழி கடந்த கவிதை.


ஒவ்வொரு மனித உயிரின் மதிப்பையும் உணர்த்திய சிலி எங்கே? நாம் எங்கே?


உயிர்களின் மதிப்பு எமக்குத் தெரிவதில்லை.
உயிர்கள் மிக மலிவான இடங்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது மனம் நொந்துபோகிறது.


இதே சுரங்க அனர்த்தம் இலங்கையில் நடந்திருந்தால்?
நினைக்கவே பயமாக இருக்கிறது..
இந்த 33 பேரும் காணாமல் போனோரின் பட்டியலில் சேர்ந்திருப்பார்களோ? அல்லதுஉள்ளேயே கதை முடிந்திருக்குமோ?

அண்மையில் வாசித்த பள்ளிச் சிறுமி ஒருத்தியின் கொலை.
தந்தையே துன்புறுத்தி,வதைத்துக் கொன்றானாம்.


நேற்று தலவாக்கலையில் அணைக்கட்டின் மேல் இறந்துகிடந்த வாலிபன்.


கிளிநொச்சியில் இரு தற்கொலைகள்.. மீளக் குடியேறியோரின் மன விரக்தியின் அளவு அதிகரித்துக்கொண்டே போவதாக தகவல்கள் கூறுகின்றன.


இன்றைய சிலி சுரங்க மீட்பானது எனது மனது முழுவதும் இனம்புரியாத உற்சாகம்,மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
உயிர்கள் காப்பற்றப்ப்படும்போது ஏற்படும் இவ்வாறான மகிழ்ச்சி ஏன் எல்லோருக்கும் இருப்பதில்லை?


முதலாவது சுரங்கத் தொழிலாளி வெளியே மீட்கப்படும் காட்சி..





இந்த நிகழ்வோடு ஒப்பிடும்போது மிக சிறிய அளவிலான சில மகிழ்ச்சிகள்+வருத்தங்கள்...


மகிழ்ச்சிகள்..


இலங்கை குத்துச்சண்டை வீரர் மஞ்சு வன்னியாராச்சியின் தங்கப் பதக்க வெற்றி..
அவர் காட்டிய போராட்ட குணம்+விடா முயற்சி.. வென்ற பிறகு அவரில் தெரிந்த பெருமிதம்.
                                                         72 வருடங்களுக்குப் பின்னர் குத்துச் சண்டையில் தங்கம் 


37 வயதிலும் இளைஞரைஎல்லாம் தூக்கி சாப்பிடும் உற்சாகத்துடனும் உடல்வலுவுடனும் சாதனை மேல் சாதனையும் சதங்களும் குவித்துவரும் சச்சின் டெண்டுல்கர்.


எந்திரனில் வந்த சிட்டியுடன் ஓட்டக் குவிப்பில் சச்சினைப் போட்டியிட வைத்தாலும் சச்சின் ஜெயிப்பார் என்று இப்போது அவர் இருக்கும் form ஐப் பார்க்கையில் எண்ணத் தோன்றுகிறது.
அவரது ஆறாவது இரட்டை சதத்தை மகள் சாராவுக்குப் பிறந்த நாள் பரிசாக வழங்கியது அற்புதம்.
                                  கிரிக்கெட் உலகில் இரு தசாப்தங்களுக்குப் பிறகும் இன்னும் அசுர பசியுடன்.. 


இந்த அபார ஓட்டக் குவிப்பு சச்சினை நீண்ட காலத்துக்குப் பின்னர் (டெஸ்ட் துடுப்பாட்ட தரப்படுத்தலில் முதலிடத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
ஓய்வு பெற முதல் தனது சாதனையை இன்னொருவர் இனி எட்ட முடியாத ஒரு இடத்தில் கொண்டுபோய் வைத்துவிடுவார் போலத் தெரிகிறது.
நான் சச்சினின் ரசிகன் அல்லன். ஆனாலும் இந்த வயதிலும் அடித்தாடும் அவரது ஆற்றல் அசர வைக்கிறது.


எனக்குப் பிடித்த முரளி விஜயின் கன்னி சதம்.
விஜய் விளையாடிய (நான் பார்த்த)முதல் போட்டியிலேயே (சென்னை அணிக்காக விளையாடிய ரஞ்சி கிண்ணப் போட்டி ஒன்று என நினைக்கிறேன்) அவரது அணுகுமுறையும் தன்னம்பிக்கையும் பிடித்திருந்தன.
கிடைக்கும் வாய்ப்புக்களை எல்லாம் பயன்படுத்தி ஜொலிக்கிறார்.




பங்களாதேஷின் வெற்றியும் கலக்குகின்ற ஷகிப் அல் ஹசனும். தலைமைப் பதவி மீண்டும் வந்தவுடன் ஜொலிக்கிறார்.
இன்றும் சதமடித்துள்ளார்.
இன்றும் வங்கப் புலிகள் வெல்வர் போலத் தெரிகிறது.
வென்றால் சரித்திரம்.


வருத்தங்கள்..


                                                                          வேதனையும் சாதனையும்.. 


ஆஸ்திரேலிய அணியின் தொடர் தோல்வி.
எப்படி இருந்தவர்கள்????
இந்தியாவில் தொடர்ந்து பிரகாசிக்கத் தவறிய பொன்டிங் இம்முறை சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியும் தலைவராக அவரால் சாதிக்க முடியாமை.


என் செல்ல மகனுக்காக அவன் ஆசைப்பட்டு நாம் வாங்கிவைத்த சிறிய கைக்கடிகாரம் ஒன்று எப்படியோ பொதியொன்றில் தவறியது.
இன்னும் அவன் அதை ஞாபகம் வைத்து எம்மிடம் கேட்பது.


நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத்தொடங்கியுள்ளேன்(ளோம்). முன்பிருந்த அளவு கூட என் பந்துவீச்சு சீராக இல்லை.வயது ஏறுகிறதோ?


ஆனால் களத்தடுப்பு+துடுப்பாட்டத்தில் அது பெரிதாகத் தெரியவில்லையே,..
(மானத்தை வாங்குகிற மாதிரி நோ கொமென்ட்ஸ் ப்ளீஸ்.. ஹீ ஹீ)



Post a Comment

31Comments

Please Select Embedded Mode To show the Comment System.*