மொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு

ARV Loshan
80
என்ன ஒரு போட்டி,...
டெஸ்ட் போட்டிகள் இப்படி இருந்தால் யார் தான் ரசிக்கமாட்டார்கள்?
இன்று இடம்பெற்றுமுடிந்த மொஹாலி டெஸ்ட் போட்டிபற்றி இப்படித் தான் சொல்லவேண்டும்.

உலகின் மிக நெருக்கமான வெற்றிகளில் ஒன்றை இந்தியா இன்று பெற்றுக் கொண்டது.
ஒரு அணி ஒற்றை விக்கெட்டால் ஒரு டெஸ்ட் வெற்றியைப் பெற்ற பன்னிரெண்டாவது தடவை இதுவாகும்.இதற்கு முன் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை அணி தென் ஆபிரிக்காவை ஒரு விக்கெட்டால் வென்றிருந்தது.

மூன்றாவது நாளின் முடிவில் போட்டி வெற்றி தோல்வியற்ற சமநிலை முடிவை நோக்கி நகர்வதாக பிரபல விமர்சகர்கள் தமது கருத்துக்களை சொன்னபோதும்,ஆடுகளம் இன்று இறுதியாக அவர்களையெல்லாம் பொய்ப்பித்துள்ளது.

முடிவொன்று எட்டப்படும் என்று நேற்றைய ஆட்டமுடிவின் போது தெளிவாகத் தெரிந்தாலும் சச்சின் டெண்டுல்கர் ஆடுகளத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தபோதும் கூட ஆஸ்திரேலியாவுக்கே வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தன.

இன்று காலையிலிருந்து இந்திய அணியின் விக்கெட்டுக்களை ஒவ்வொன்றாக ஆஸ்திரேலியா பிடுங்கி எறிந்துகொண்டிருக்க இதோ ஆஸ்திரேலியா வெல்கிறது.. ஆனால் அது மதியபோசனத்துக்கு முன்னா தேநீர் பானத்துக்கு முன்னா என்று கேள்வியெழுப்பிய பலரில் நானும் ஒருவன்.

எட்டாவது விக்கெட்டாக ஹர்பஜன் ஆட்டமிழக்க நான் ஆஸ்திரேலியா வென்றதாக பதிவோன்றுக்கான ஆரம்பத்தின் தகவல்களையே சேகரிக்க ஆரம்பித்து மொஹாலியில் ஆஸ்திரேலியாவின் சரித்திரபூர்வ வெற்றி என்று ஆரம்பித்தே விட்டேன்.
இஷாந்த் ஷர்மாவும், முதுகு உபாதையினால் பலத்தில் பாதியாக இருந்த லக்ஸ்மனும் ஒன்றாக சேரும்போது இந்ததியாவின் அணித்தலைவரும் கூட நம்பிக்கையை முற்றாக இழந்துவிட்டிருப்பார்.
கையிலே இரண்டே இரண்டு விக்கெட்டுக்கள்.. வெல்வதற்கு 92 ஓட்டங்கள்.

தேவைப்பட்டால் மட்டுமே லக்ஸ்மன் துடுப்பெடுத்தாட வருவார் என்று நேற்று பெட்டி கொடுத்தவர் இதே இஷாந்த் ஷர்மா.. என்ன ஆச்சரியம் அதே இருவரும் ஜோடி போட்டு ஆஸ்திரேலிய அணியை கடுப்பேற்றி கிரிக்கெட்டையே வெறுக்க செய்யுமளவுக்கு ஒரு மறக்க முடியா இணைப்பாட்டம் புரிந்து போட்டியை மாற்றிவிட்டார்கள்.

இஷாந்த் ஷர்மா கடைசி இரு தொடர்களாக மிக சிறப்பான தடுப்பட்டப் பிரயோகங்களை வெளிக்காட்டி நின்று பிடிக்கும் பயனுள்ள ஒரு துடுப்பாட்ட வீரராக மாறி வருகிறார்.
காலி டெஸ்ட் போட்டியிலும் லக்ச்மனும் இஷாந்தும் நின்று பிடித்து ஆடிய இணைப்பாட்டம் யாருக்கும் இலேசில் மறக்காது.
இந்த மொஹாலி டெஸ்டின் முதலாம் இன்னிங்க்சிலும் இஷாந்த் Night watchmanஆக வந்து பெற்ற ஓட்டங்கள் 18உம் முக்கியமானவை.

                                           Mr.D (Dependable+Defensive) Ishanth 


பவுன்சர் பந்துகள், short pitch பந்துகளுக்குத் தடுமாறும் இந்திய துடுப்பாட்ட சிங்கங்கள்  இஷாந்திடம் கொஞ்சம் பயிற்சி எடுக்கலாம் தப்பில்லை.

லக்ஸ்மன் - மீண்டும் ஆஸ்திரேலியாவின் வில்லனாக. எத்தனை தடவைகள் இந்த அமைதியான துடுப்பாட்ட சிறிய சுவர்(பெரிய சுவர் ட்ராவிடாச்சே) ஆஸ்திரேலியாவின் வெற்றிகளைத் தடுத்திருக்கும்.

ஆனால் இன்றைய லக்ச்மனின் ஆட்டம் மிக சிறப்பானது. ஆட்டம் முழுக்க ஓட முடியாமல் சுரேஷ் ரெய்னாவின் ஊடாக ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டு எந்தவொரு சூழ்நிலையிலும் தளராமல் நிதானம் தவறாமல் வெற்றியை நோக்கி இந்தியாவை அழைத்துச் சென்றவிதம் போற்றுதற்குரியது.
                                                இந்தியாவின் மற்றொரு சுவர் !!!!
Hats off..

என்னைப் பொறுத்தவரை பந்துவீச்சில் மொத்தமாக எட்டு விக்கெட்டுக்களை சாகீர் கான் வீழ்த்தியிருந்தாலும் கூட, இஷாந்த் ஷர்மாவுக்கோ அல்லது லக்ச்மனுக்கோ போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை வழங்கியிருக்கலாம்.

காரணம் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி பக்கத்தில் என்று இருந்த Hopeless நிலையிலிருந்து இந்தியாவுக்கு மறக்கமுடியாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது ஒரு இமாலய சாதனை.

அதிலும் அனலாக வீசப்பட்ட யோர்க்கர்கள்+பவுன்சர்களை இருவரும் எதிர்கொண்டவிதம் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் அத்தனை பேருக்கும் பொறுமையின் பாடம்.

ஆனால் இன்று ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை போல்லின்ஜர் உபாதைக்குள்ளாகியது மிகப் பெரிய ஒரு பாதிப்பாக அமைந்தது.
சச்சின் உட்பட முக்கியமான மூன்று விக்கெட்டுக்களை எடுத்து உச்சக்கட்ட formஇல் அவர் இருந்த நேரம் அடி வயிற்று உபாதை அவரைத் தொடர்ந்து பந்துவீச விடாமல் செய்துவிட்டது.

ஹில்பென்ஹோஸ் மிக சிறப்பாக பந்துவீசி நான்கு விக்கெட்டுக்களை எடுத்தபோதும் லக்ச்மனை மட்டும் அவரால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது.முதலாம் இன்னிங்க்ஸின் ஐந்து விக்கெட் ஹீரோ மிட்செல் ஜோன்சனின் அஸ்திரங்களும் பயனற்றுப் போயின.

ஆனால் ரிக்கி பொன்டிங் ஷேன் வோட்சனைப் பயன்படுத்திப் பார்த்தது மிகத் தாமதமாக.
விக்கெட்டுக்களை அடிக்கடி உடைத்து உதவும் கிளார்க்,கட்டிச் ஆகியோரை ஏனோ பந்துவீச அழைக்கவே இல்லை.

முன்னைய ஆஸ்திரேலிய அணித் தலைவர்களான மார்க் டெய்லர்,ஸ்டீவ் வோ ஆகியோர் இப்படியான நெருக்கடியான சூழ்நிலைகளை அணுக்கும் முறையில் நிதானமும் பதறாத் தன்மையும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் சாதுரியமும் ரிக்கி பொன்டிங்கிடம் பல தடவைகள் இல்லாமல் இருப்பதை வெளிப்படையாகக் கண்டுள்ளேன்.
இன்றும் அப்படியே..
நகத்தைக் கடித்துக் கொண்டு டென்ஷன் பேர்வழியாக இருந்தார்.


                                   களிப்புடன் VVS.. கடுப்புடன் பொன்டிங்... 


நடுவர் பில்லி பௌடன் வேறு தனது பங்குக்கு ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடிக்க உதவி செய்தார்.
நேற்று ஹசியின் ஆட்டமிழப்பையும் இன்னும் ஒரு ஆட்டமிழப்பையும் கண்ணை மூடிக்கொண்டு தவறாக வழங்கிய பௌடன் (கம்பீரையும் பிழையாக ஆட்டமிழக்கச் செய்து ஓரளவு ஈடுகட்டிக் கொண்டாலும்) இன்று வெற்றிக்கு ஆறு ஓட்டங்கள் இந்தியாவுக்கு இருந்த நேரத்தில் வழங்கிய தீர்ப்பு படுபிழையும் போட்டியையே மாற்றியதாகவும் அமைந்தது.

ஒஜாவுக்கு ஜோன்சன் வீசிய பந்து நிச்சயமாக விக்கெட்டைத் தகர்க்கும் என அனைவருக்குமே தெரியும்.. அது துடுப்பில் படவில்லை என்பதும் தெரிகிறது.
பௌடன் அது துடுப்பில் பட்டு சென்ற பந்து என ஆட்டமிழப்பை வழங்கவில்லை.
அவருக்கு நல்ல கண்ணாடி ஒன்றை வாங்கிக் கொடுக்கவேண்டும். அல்லது கண் சத்திர சிகிச்சைக்கு அனுசரணை வழங்க வேண்டும்.

அந்தப் பந்து பற்றி Cricinfo தரும் விவரக் குறிப்பைப் பாருங்கள்.

58.2
Johnson to Ojha, 4 runs, 145.6 kph, Lbw Shout And oh boy what we get .. Four Over throws! That looked out. Billy reckons there was an inside edge. Was there some wood on leather? I am not sure there was anything at all. Oh well ... What an insane little game this is! It was a length delivery tailing in on the leg and middle stump, It looked as if it would have hit the leg and middle! Not given out by Billy. The ball rolled to point. Perhaps it was the pressure and the tension of the lbw appeal, Ojha gets outside the crease .. Raina asks him to get back .. he turns, North fires the throw and the ball misses the stumps and runs through the vacant covers. No Aussie fielder could back that up. But that throw was on. Had he hit - and he didn't miss by much - Ojha would have been run out. ..... And It has been given as an insideedge I can't confirm or deny that edge. Need a snicko. If you ask me on the basis of evidence given to us so far (a couple of replays, no snicko) there didn't seem to be any edge.

இறுதியாக வீசப்பட்ட ஜோன்சன் ஓவர் அப்படியொரு பரபர ஓவர்.இறுதியாக காலில் பட்ட பந்துக்கு விரைவாக ஓடி வெற்றிக்குத் தேவைப்பட்ட இரு ஓட்டங்களும்(LEG BYE) பெறப்பட்டன.
    

இந்திய வீரர்களின் கரைபுரண்ட உற்சாகமும் தோனி,டிராவிட்,சச்சின் ஆகியோர் முகத்தில் தெரிந்த நிம்மதியையும் விட லக்ச்மனின் முகத்தில் தெரிந்த தெளிவான ஒரு மகிழ்ச்சியும் அதை மீறி வெளியே தெரிந்த களைப்புடன் கூடிய களிப்பு ஒரு சிறுகதை.

பொன்டிங் +குழுவினர் கைக்கு வந்தும் வாக்குள் போகாத 'வட போச்சே' கதை தான்..

ஷேன் வோட்சனின் சதம்+அரைச் சதம் பற்றியும் சாகிர் கானின் அர்ப்பணிப்பான துல்லியமான இரு இன்னிங்க்ஸ் பந்துவீச்சுப் பற்றியும் சொல்லாவிட்டால் கிரிக்கெட்டின் சாபம் எனக்குக் கிட்டிவிடும்..
ஆனால் நான்கு நாடல் நடந்த எல்லாவற்றையும் இன்று ஒரே நாளின் பாதி ஆட்டவேளை முழுங்கிவிட்டது என்பதே உண்மை.

இதெல்லாம் கிடக்க,
கம்பீரின் அநியாய ஆட்டமிழப்பு பார்த்தும் இந்தியா திருந்தாதா? UDRSஐ ஏன்  இன்னும் போட்டிகளில் பயன்படுத்த மறுக்கிறது?/தயங்குகிறது?
ஆனால் UDRS இருந்திருந்தால் இன்று ஓஜா ஆட்டமிழந்திருப்பார். வெற்றியும் இடம் மாறியிருக்கும்..

இந்தியாவின் பணபலம் முன்னால் ICC மடங்கிவிடும்..ஆனால் எதிரணிகள் இனி மேலும் கட்டாயம் தொடர்களில் UDRS வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
ஆனாலும் நடக்குமா?

இந்தியா இன்றைய வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு தடவை தனது டெஸ்ட் தரப்படுத்தல்களில் முதல் நிலையை நிரூபித்துள்ளது.
அணியின் கட்டமைப்பும் உறுதியாகவே உள்ளது.

ரெய்னாவின் இரண்டாம் இன்னிங்க்ஸ் சறுக்கலும் மறுபக்கம் இராணி கிண்ணப் போட்டிகளில் நேற்று யுவராஜ் சிங் பெற்ற அதிரடி இரட்டை சதமும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான அணியில் மாற்றத்தைக் கொண்டு வருமா என்பது இன்று எனக்குள்ள சந்தேகம்.

இப்படிப் பதிவிட்டு விட்டு செய்திகளைத் தட்டினால் காயமடைந்துள்ள கம்பீர்,இஷாந்த் ஷர்மா ஆகியோருக்குப் பதிலாக தொடர்ந்து பிரகாசித்துவரும் தமிழக இளம் வீரர் அபினவ் முகுந்தும்,இளம் வேகப்பந்துவீச்சாளர் உனத்கட்டும் அணிக்குள் வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் விளையாடப் போவதில்லை.
முரளி விஜயும் ஸ்ரீசாந்தும் அடுத்த போட்டியில் விளையாடுவது நிச்சயம்.

மறுபக்கம் ஆஸ்திரேலியா அணி தலையைப் பிய்த்துக் கொள்ளவேண்டும்.
போல்லிஞ்சரின் காயம்,நோர்த்தின் தொடர் சறுக்கல் ஆகியன பொன்டிங்குக்கு தலைவலியாக அமையும்..

ஆனாலும் பொன்டிங் அடுத்த டெஸ்ட் போட்டி பற்றி மட்டும் நினைக்கட்டும்..
காரணம் தொடர்ந்து இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் பொண்டிங்குக்கு ஓய்வு வழங்கப்படுகிறது.
பொன்டிங் மட்டுமன்றி, ஷேன் வொட்சன்,மிட்செல் ஜோன்சன் இருவரும் கூட ஓய்வெடுக்கிறார்களாம்.

பலவீனமான அனுபவம் குறைந்த அணியை ஆஸ்திரேலியா இந்தியாவின் பலமான ஒருநாள் அணியிடம் பலிகொடுக்கப் போகிறதா?அல்லது புதிய புயல்கள் இந்தியாவை அச்சுறுத்துமா பார்க்கலாம்.

இப்போதைக்கு,
இரு அணிகளும் கொஞ்சம் ஓய்வெடுக்க, நாளை ICC விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக பெங்களூரில் இடம்பெறப் போகிறது.
கடந்த வருடப் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்திய வீரர்கள் பல விருதுகளை அள்ளி எடுக்கப் போகிறார்கள்.
முற்கூட்டிய வாழ்த்துக்கள்.

மொஹாலி போட்டி ஒரு விறுவிறுப்பு என்றால், மிர்ப்பூரில் வங்கப் புலிகள் நியூ சீலாந்து அணியை ஒன்பது ஓட்டங்களால் வென்றது இன்னுமொரு பரபரப்பு.
வெட்டோரி,மக்கலம் ஆகியோருடன்  மீண்டும் வந்த நியூ சீலாந்து அணியை உருட்டியுள்ளது பங்களாதேஷ்.

வெட்டோரி முன்னரே எதிர்வு கூறியது போல ஷகிப் அல் ஹசன் சகலதுறையில் கலக்கியுள்ளார்.
உலகக் கிண்ணம் நெருங்கிவருது.. மீண்டும் பங்களாதேஷ் உருப்படுமா?
சொந்த மைதானங்களிலாவது சிறப்பாக விளையாடட்டும்..


படங்கள் - வழமை போல நன்றி Cricinfo

Post a Comment

80Comments

Please Select Embedded Mode To show the Comment System.*