இந்த நாட்களில் கொஞ்சம் வாசித்தாலும் பின்னூட்டமிடவோ அல்லது நான் ஏதாவது பதிவிடவோ முடியவில்லை.
அடிக்கடி மின்னஞ்சல் மூலமாக நலம் விசாரித்த முகமறியா நண்பர்கள்+வாசகர்களுக்கு நன்றிகள்.
ஆனாலும் பயப்படாதீர்கள் பயணத் தொடர் என்று எதுவும் எழுதி அறுக்க மாட்டேன்.. (அப்பாடா தப்பினோம் என்று பலர் சொல்வது கேட்கிறது)
நீண்ட இடைவெளியின் காரணமாக பல விஷயங்கள் உங்களோடு பகிர்ந்துகொள்ள மனசில் இருக்கிறது.
எனவே சுருக்கமாக அங்கும் இங்கும் கொஞ்சம் கொஞ்சம்..
வைபொகிபே
வைரமுத்து..
எந்திரன் பாடல்கள் மூலமாக வைரமுத்து மீண்டும் சிலிர்த்து எழுந்திருக்கிறார்.
கலைஞரின் கவியரங்கங்களின் பிசியோ என்னவோ சில காலம் காணாமல் போயிருந்த வைரமுத்து ராவணன் பாடல்கள் மூலமாக மனங்களை மீண்டும் கொள்ளையடித்து தன்னிடத்தை மீண்டும் பிடித்தார்.
அதன் பின் எந்திரன்...
மூன்று பாடல்களும் முத்துக்கள்..
காதல் அணுக்கள் - அறிவியலையும் காதலையும் இணைத்து காதுகளிலும் மனதிலும் இன்பத்தேனை ஊற்றுகிறார்.
அரிமா - அக்கினி வரிகள். காமம் கலந்த காதலின் வீரியத்தை தமிழில் வடிக்கிறார்.
புதிய மனிதா - இலகு தமிழில் நெஞ்சைத் தொடும் விஞ்ஞானம்
எந்திரன் பாடல்களில் இசைப் புயலுடன் இணைந்து ஜெயித்த ராசிக்குப் பின்னர் மீண்டும் வைரமுத்துவின் காட்டில் தொடர் மழை.
ஆயிரம் விளக்கு - இசை ஸ்ரீகாந்த் தேவா
நகரம் - இசை தமன்.
கேட்டு ரசிக்கும்படியாக அத்தனை பாடல்களும் இருக்கின்றன..
இன்னொரு விஷயம், காதலர்களுக்கு மிகப் பிடித்த கவிஞர் தபூ ஷங்கர் வல்லக்கோட்டை படத்தில் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
அதில் ஒன்று எஸ்.பீ.பீ பாடும் "செம்மொழியே"
-------------------------------
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்
சர்ச்சைகள்,சந்தேகங்கள்,ஊழல் பிரச்சனைகளை எல்லாம் கடந்து போட்டிகள் ஆரம்பித்திருக்கின்றன.
இந்தியா ஆரம்பத்திலேயே சொன்னது போல இரண்டாம் இடத்தை நோக்கி உறுதியாக நகர்கிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா,சீனாவுக்கே ஈடுகொடுக்கும் ஆஸ்திரேலியாவை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நெருங்குவதாவது....
ஆனால் கனடாவும் இங்கிலாந்தும் இம்முறை வழமையை விடக் கொஞ்சம் பின் தங்கியே இருக்கின்றன.
மெய்வல்லுனர் போட்டிகள் வர இந் நாடுகளின் பதக்க வேட்டை தொடங்கும் என நினைக்கிறேன்.
ஆஸ்திரேலியா விளையாட்டுத் துறையில் அனைத்துப் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கான இன்னொரு காரணம் என நான் நினைப்பது, அதன் பல்வகைமை...
அனைத்து நாடுகளையும் சேர்ந்தோர் ஆஸ்திரேலியாவில் குடியேறி,அவர்களின் வம்சாவளிகள் ஆஸ்திரேலியர்களாக களமிறங்குவதைக் காண்கிறேன்.
Table tennis போட்டிகளில் சீனப் பெயர்கள் ஆனால் ஆஸ்திரேலிய அணி.. மல்யுத்தத்தில் அராபிய,கிரேக்க வீரர்கள் ஆனால் ஆஸ்திரேலிய அணி..
அடைக்கலம் வழங்கியதற்கு புண்ணியமாகத் தங்கங்கள்.
நேற்று இந்திய இலங்கை அணிகளுக்கிடையிலான டென்னிஸ் போட்டி பார்த்தேன்.
இந்தியாவின் டென்னிஸ் ஜாம்பவான்கள் லியாண்டர் பயஸ்+மகேஷ் பூபதியை எதிர்த்து இலங்கையின் இரு சிறுவர்கள்(பதினேழு மற்றும் பதினெட்டு வயதாம்).
அதிலொருவன் தமிழ்ப் பையன்.. தினேஷ்காந்தன்.
பயஸ்,பூபதிக்கு ஈடு கொடுத்துக் கொஞ்ச நேரம் ஆடியது திருப்தியாக இருந்தது.
இறுதியில் அனுபவம் ஜெயித்தது.
6-3 6-3 என்று இந்திய ஜோடி வென்றாலும் போராடித் தோற்ற இலங்கை இளைய வீரருக்கு வாழ்த்துக்கள்.
நேற்று ஜோடி சேர்ந்து துப்பாக்கி சுடலில் தங்கம் ஜெயித்த அபினவ் பிந்த்ராவும் ககன் நராங்கும் இன்று முறையே வெள்ளியும் தங்கமும் வென்றுள்ளார்கள்.(10 m Air Rifle)
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிந்த்ராவை நராங் முந்தியுள்ளார்.
இந்தியாவின் தங்கம் சுடும் இரு குழல் துப்பாக்கிகள்
இந்திய மல்யுத்த வீரர்கள் + துப்பாக்கி வீரர்கள் தங்கங்களாக வாரிக் குவிப்பது ஆச்சரியமென்றால் பார்வையாளர்களின் வருகை குறிவு இந்தியாவுக்கு தர்மசங்கடம்.
இலங்கைக்கு நேற்று பளு தூக்கலில் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.நீச்சலில் இலங்கை வீர,வீராங்கனைகள் சொதப்பியுள்ளனர்.
இனி வாய்ப்புக்கள் மெய்வல்லுனர் போட்டிகளிலும் சிந்தக விதானகே(பளு தூக்கல்) மூலமாகவும் தான்.
-------------------------
கிரிக்கெட் விருது
இன்று இரவு பெங்களூரில் நடைபெறவுள்ள ICC விருது வழங்கும் விழாவைப் பற்றி பெரிதாக எந்தவொரு பரபரப்புமே இல்லையே?
வழமையாக இருக்கும் தடபுடல் பரபரப்பு எதுவுமே இம்முறை இல்லை.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் தான் காரணமா?
இன்று முக்கியமான மிகப் பெரிய விருதுக்காக(Cricketer of the year) நான்கு பேருக்கிடையில் கடும் போட்டி நிலவுகிறது..
சச்சின்,சேவாக்,ஸ்வான்,அம்லா..
இன்னொரு சுவாரஸ்ய விஷயம் தென் ஆபிரிக்காவின் துடுப்பாட்ட வீரர் A .B .டீ வில்லியர்ஸ் ஒரு இசைக் கலைஞராக இன்று இரவு நிகழ்வில் கலக்கப் போகிறார்.கிட்டார் இசைத்து பாடப் போகிறாராம்.
இவர் என்னை பிரமிக்க வைக்கிறார்.
சிறப்பான துடுப்பாட்ட வீரர்.விக்கெட் காப்பாளர்,பதிவர்,ஹொக்கி,கோல்ப் விளையாடக் கூடியவர்.. இப்போது இசைக் கலைஞர்+பாடகர்.
டீ வில்லியர்சும் இசை சகா டூ ப்ரீசும்
இதுக்கெல்லாம் மேலே இன்னொரு செய்தியை வாசித்தேன்..
-------------------
பேடி
இன்று இரவு இடம்பெறும் விருது விழாவில் ICC Cricket Hall of Fame என்று சொல்லப்படும் வாழ்நாள் கிரிக்கெட் சாதனையாளர்களை உள்ளடக்கும் வரிசையில் சர்ச்சைக்குரிய இந்தியாவின் முன்னாள் தலைவரும் சுழல் பந்துவீச்சாளருமான பிஷன் சிங் பேடியையும் சேர்க்கிறார்களாம்.
முரளியைக் கண்டபடி விமர்சித்து சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டதால் வாங்கிக் கட்டியவர் முரளி இவரை 'Ordinary' என்று சொன்னதன் மூலம் வாய் மூடியானவர்.
சுழல்பந்து வீச்சாளராக இவரது பெறுபேறுகள் மெச்சத் தக்கது தான்.ஆனால் ICC Cricket Hall of Fame என்று வருகையில் கொஞ்சம் நடத்தையையும் பார்க்கலாமே.
இவருடன் இன்று இந்த கௌரவத்தைப் பெறுவோருடன் பார்த்தால் பேடி Ordinary தான்..
மேற்கிந்தியத் தீவுகளின் ஜோயேல் கார்னர், முன்னைய உலக சாதனையாளர் கோர்ட்னி வோல்ஷ்,பெண்கள் கிரிக்கெட்டுக்கு பெரும் சேவையாற்றிய முன்னாள் இங்கிலாந்து அணியின் தலைவி Rachael Heyhoe Flint மற்றும் மறைந்த இங்கிலாந்தின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் கென் பரிங்க்டன்.
இந்தியாவில் விழா நடப்பதால் இந்திய வீரர் ஒருவருக்குத் தான் வழங்கவேண்டும் என்றிருந்தால் வேறு எத்தனை சிறப்பு வாய்ந்த தகுதிவாய்ந்த முன்னாள் இந்திய வீரர்கள் இருக்கிறார்கள்?
ICC இன்னும் வளர இடமுண்டு.. ;)
-----------------------------
ஆசிரியர் தினம் இன்று இலங்கையின் பாடசாலைகளில் கொண்டாடப்படும் நேரத்தில்,
பாடசாலைக் காலத்தில் எனக்கான அடித்தளத்தை அர்த்தமுள்ளதாகவும்,ஆழமாகவும் ஏற்படுத்தித் தந்த என் அன்புக்குரிய ஆசிரியர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்துகொள்கிறேன்.
வெறும் நன்றிகள் சொல்லி நீங்கள் எனக்கு வழங்கிய அளப்பரியவற்றை சுருங்க அடக்கிக் கொள்ளமுடியாது.
இன்று எனக்குக் கிடைத்துள்ளவை,கிடைப்பவை அத்தனையும் நீங்கள் எனக்கு சிறுவயதில் வழங்கிய பயிற்சிகளாலும் பாடங்களாலேயுமே.